7. தமிழகப் பேரரசர்கள் மெச்சிய வேற்று மாநிலத் தளபதிகள்

வேறு மாநிலத்திலிருந்து வந்த தளபதியர் இருவரும் சோழர்தம் விசுவாசிகளாக இருந்து அறமும் மறமும் செழிக்க இருந்தமை கல்வெட்டுக்களால் புலனாகிறது.
7. தமிழகப் பேரரசர்கள் மெச்சிய வேற்று மாநிலத் தளபதிகள்

இடைக்கால வரலாற்றுப் பகுதியில், திறமை எப்பகுதியில் இருந்தாலும் மெச்சிப் போற்றப்பெற்றது. இதை அக்காலத்திய கல்வெட்டுகளை ஆராய்வதன் மூலம் தெள்ளென அறிய இயலும். அத்தகைய இருவர், சோழர்தம் தளபதிகளாகப் பணியாற்றியிருக்கின்றனர். அவர்கள் தம் வீரச்செயலாலும் அறக்கொடைகளாலும் அறமும் மறமும் திகழ இருந்தவர்கள். அவர்களைப் பற்றிய கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.

1. வெள்ளன் குமரன்

இவன், கேரளத்தின் நந்திக்கரைப் புத்தூரைச் சேர்ந்தவன். இவன் முதலாம் பராந்தகனின் இளவரசனாகிய இராசாதித்தியனுக்கு வலதுகரமாகத் திகழ்ந்தவன். அவனுடைய சரிதம், கிராமம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டின் வாயிலாகத் தெரியவருகிறது. அங்கு அவன், எந்தைக்கு ஒரு கற்றளி எடுப்பித்த செய்தியை அந்தக் கல்வெட்டு சுட்டுகிறது.

இந்தக் கல்வெட்டின் தமிழ்ப் பகுதி கலி வருடம் 4044 என்றும், கலி துவங்கியதிலிருந்து நாட்களின் எண்ணிக்கை 1477037 என்றும் தருகிறது. மேலும் இந்தக் கற்றளி ரேவதி நட்சத்திரமும் சனிக்கிழமையும் கூடிய நன்னாளில் எடுப்பிக்கப்பெற்றதாகவும் கூறுகிறது. மேற்கண்ட தகவல்கள் பொ.நூ. 943-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதிக்குச் சரியாகப் பொருந்தி வருகின்றன.

கல்வெட்டுத் தகவல்

வெள்ளன் குமரன் என்பவன் புத்தூரின் அணிகலனானவன். கேரளர்களில் சிறந்தவன். அவன் இராசாதித்தியனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதியானான். அவன் மந்தரமலையையொத்த ஒரு கற்றளியை சம்புவுக்கு எழுப்பினான். அந்தக் கற்றளி, பெண்ணை நதியின் கரையில் அமைந்தது. நவாக்கிரகாரத்தில் பிறந்த அந்த வெள்ளன் குமரன், புரமெரித்த பரமனை மகிழ்விக்கத் தன் மனத்தைப் போல ஒரு ஆலயத்தை எடுப்பித்தான்.

அவனுடைய இறுதிக் கால வரலாறு மிகவும் சுவையானது. ஏதோ காரணத்தால், அவனால் இராசாதித்தியன் மறைந்த தக்கோலப் போரில் பங்குகொள்ள முடியாமல் போனது. அந்த சலிப்பினால் துறவறம் மேற்கொண்டு திருவொற்றியூர் கோயிலில் பல திருப்பணிகளைச் செய்தான் என்று அவ்வூரிலுள்ள கல்வெட்டால் அறியமுடிகிறது. துறவறம் மேற்கொண்ட பிறகு சதுரானன பண்டிதனாக அங்குள்ள மடத்தில் இருந்து பல்வேறு கொடைகளைப் பெற்றிருக்கிறான்.

இப்படி சோழத் தளபதிக்கு ஆருயிர் நண்பனாக இருந்து அவன் இறந்துபட்டதும் துறவறம் ஏற்ற விசுவாசியாகத் திகழ்ந்த இவன் வந்தது கேரள நாட்டிலிருந்து.

2. அம்பலவன் பழுவூர் நக்கன்

இவன் குவளாலபுரத்தைச் சேர்ந்தவன். அது தற்போதைய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கோலார் ஆகும். இவன் உத்தமசோழனின் அவையில் படைத்தலைவனாகப் பணிபுரிந்தவன். உத்தமசோழனின் பட்டப்பெயரால் இவனுக்கு விக்கிரமசோழமகாராயன் என்னும் விருதுப்பெயர் வாய்த்தது. இவன் ராஜராஜனின் காலத்தில் இராஜராஜபேரரையன் என்னும் பெயரோடு திகழ்ந்தான். இவன் விசயமங்கலம் என்று வழங்கப்பெற்ற ஊரில் எந்தைக்கு ஓர் கற்றளி எடுப்பித்தான். அவ்வூர் தற்போது கோவிந்தபுத்தூர் என்று வழங்கப்பெறுகிறது. அந்தக் கோயிலிலுள்ள கல்வெட்டு அவன் புகழ்பாடுகிறது.  

கல்வெட்டுத் தகவல்

அம்பலவன் பழுவூர் நக்கன், குவளாலபுரத்தில் உயர்குலத்தில் தோன்றியவன். அவன் வள்ளற்றன்மையே வடிவெடுத்தவன். வீரமே உருவானவன். அழகிய மங்கையர் அவனை காமவேளாகக் கண்டனர். அறிஞர்களோ அறமே உருவெடுத்தவனென்று அறுதிசெய்தனர். அவன் தன் தோள்வலிகொண்டு விக்கிரமசோழமஹாராசன் என்னும் பட்டமெய்தினான். அவன் தன் அரசனின் 14-ஆம் ஆட்சியாண்டில் விசயமங்கலத்திலுள்ள சம்புவின் கோயிலைக் கற்றளியாக்கினான். அது வானவன் மாதேவி அக்கிரகாரத்தில் அமைந்தது. அதே அக்கிரகாரத்தைச் சேர்ந்த நெடுவாயில் என்னும் சிற்றூரை அக்கோயிலுக்கு அர்ச்சனை, உற்சவம் முதலியவற்றை மேற்கொள்ள வரியிலாத் தானமாக வழங்கினன்.

*

இவ்விதம் வேறு மாநிலத்தைச் சேர்ந்த இருவர் சோழர்தம் படைத்தளபதிகளாகி எந்தைக்குக் கோயிலும் எடுப்பித்த செய்தியைக் காணவியல்கிறது. இருவருமே பரகேசரி என்னும் பட்டமுடைய மன்னர்தம் கீழ் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக, வேறு மாநிலத்திலிருந்து வந்த தளபதியர் இருவரும் சோழர்தம் விசுவாசிகளாக இருந்து அறமும் மறமும் செழிக்க இருந்தமை கல்வெட்டுக்களால் புலனாகிறது. அந்தந்த மண்ணில் பிறக்காவிடினும் தான் பணிபுரிந்த அரசர்களுக்கு விசுவாசமாகத் திகழ்ந்து, மறச்செயலோடு அறச்செயலும் செய்து இலங்கியிருந்தமை மற்றவர்களுக்கும் பாடமாகத் திகழ்கிறதல்லவா..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com