திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

30. சாதிப் பெயர் சொல்லித் திட்டினால்..

By முனைவர் க. சங்கரநாராயணன்| Published: 30th April 2019 10:00 AM

 

சாதிப் பெயரைச் சொல்லித் திட்டும் வழக்கத்தைக் காட்டிலும் தாழ்வான செயல் வேறு இல்லை. இந்த வழக்கம் வரலாற்றுக் காலத்திலும் பதிவாகியிருக்கிறது. இதற்கு மன்னவர்கள் எடுத்த நடவடிக்கைதான் இதற்குப் பதிலாக அமைந்திருக்கிறது. இப்படி ஒரு சுவாரசியமான தகவலை திருமலை நாயக்கரின் செப்பேடொன்று தருகிறது.

இந்தச் செப்பேடு, மதுரையை அடுத்த திருமங்கலம் அருகேயுள்ள மங்கலரேவு என்னும் ஊரில் கிடைத்தது. இதன் காலம் பொ.நூ. 1675 ஆகும். இந்தச் செப்பேடு சிறப்பான தகவலைத் தருகிறது.

சிந்து ரெட்டி என்பவன் தனக்கு உரிமையான ஊரை விற்க முன்வந்தான். சோலப்ப ரெட்டி என்பவன் அதனை வாங்க நினைத்தான். ஆனால் சிந்து ரெட்டியோ நீ குறவ ரெட்டி உனக்கு விற்கமாட்டேன் என்று சாதிப் பெயர் சொல்லி திட்டினான். இதனால் மனம் நொந்த சோலப்ப ரெட்டி, நன்மறம் என்ற ஊருக்கு திருமலை நாயக்கர் வந்தபோது அவரிடம் சென்று  முறையிட்டான். அப்போது, பாளையக்காரரான முத்துலிங்க தும்பிச்சி நாயக்கரை அழைத்து உண்மை நிலையை விசாரித்துத் தெரிந்துவரும்படி கட்டளையிட்டார். விசாரித்ததில், சிந்து ரெட்டி பெயரில் குற்றம் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவனுடைய வீட்டையும் சங்கிலி நிலமும் நஞ்சை நிலத்தையும் மட்டும் விடுத்து மற்றைய சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். சோலப்ப ரெட்டிக்கு சோலப்ப நாயக்கர் என்ற பட்டத்தையும் அளித்தார். நாட்டாமை, முதன்மை தீர்த்தம், திருமாலை பெறும் உரிமை ஆகியவற்றையும் வழங்கினார். இதற்கான ஆவணமாக இந்தச் செப்பேடு வழங்கப்பெற்றுள்ளது.

சின்னாரெட்டிப்பட்டி சிந்து ரெட்டி சுப்புலாப்புறத்தில் போய் ஊரைவிக்க போனான். அப்போது மேற்படியூர் சோலப்பரெட்டி நான் கிராமம் வாங்கிக் கொள்கிறேனென்று சொன்னான். உனக்கு விக்கிறதில்லையென்று குறவரெட்டியென்று சோலப்பரெட்டியைப் பார்த்து யிகள்ச்சியாய் சொன்னான்..

ராசாவானவர் முத்துலிங்கத்தும்பிச்சினக்கரை வறவளைச்சு யிருபேற் நாயத்தை பாற்ப்பதில் சிந்துரெட்டி பேரில் குத்தம் சுமந்து கட்டின வீடும் 3 சங்கிலி நிலமும் நஞ்சை நாலுகாணி வச்சு சீவனம் பண்ணிக்கொண்டிருக்கவும் சோலப்பரெட்டிக்கு சோலப்பனாக்கரென்று கற்த்தாக்களறிய பாளயக்காரறிய னாக்கமாரென்ற பட்டங்குடுத்தது சோலப்பனாக்கருக்கு நாட்டாமை, முதமை தீர்த்தம், திருமாலை சகலமும் தாம்பூரசாதின பட்டயத்தில் உத்தறவு..

என்பது செப்பேட்டு வரிகள்.

சாதிப் பெயர் சொல்லி திட்டியதைக் கேட்டும், உண்மை நிலையை விசாரித்து நீதி வழங்கிய பாங்கும், அதற்காக மற்றொரு சாதியினனுக்குப் பட்டமளித்து உரிமைகளையும் வழங்கி பிறர் போற்றவைத்த பாங்கும் வரலாற்றின் வண்ணங்களாக இன்றும் இந்தச் செயலில் செய்ய வேண்டிய முறையைப் பறைசாற்றுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

46. ஊரழிந்து ஆவணங்கள் அழிந்தால்..
45. பண்டைய ஆவணங்கள்
44. முன்னோர் வாங்கிய கடன்
43. ஊரைக் காக்கும் உயரிய எண்ணம்
42. விளையினும் கெடினும்..