29. வாரிசு கொலைக்குற்றவாளியானால்..

இன்றைய சூழ்நிலையில் சட்டத்துக்குப் புறம்பாகத் தோன்றினாலும், மானுடத்தின் பார்வையில் இதுதான் சரியான நீதி..
29. வாரிசு கொலைக்குற்றவாளியானால்..

நீதி என்பது சற்றே மாறுபட்டது. அன்றாளும் சட்டத்தின் கண்களுக்குத் தோன்றும் நீதி சமூக அளவில் மாறுபட்டதாகலாம். பொதுமக்களுக்குப் பொதுவாகத் தோன்றும் நீதி சட்டத்தின் கண்களில் வேறுபடலாம். ஆயினும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்கும் தறுவாயில் அவர்கள் மேலும் பாதிக்கப்படாமல் இருக்கும்வகை செய்வதே சரியான நீதியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஒரு விசித்திரமான வழக்கொன்று இடைக்கால வரலாற்றில் பதிவாகியுள்ளது. செங்கத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் அமைந்துள்ள அக்னீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள இரண்டாம் இராசேந்திரனின் கல்வெட்டு இதற்கான தகவலைத் தருகிறது. வெள்ளான் தருப்பேறுடையான் தாழிகோனன் என்பான், அங்கிருந்த வெள்ளாளர்களின் அவையாகிய சித்திரமேழிப் பெரியநாட்டாரிடம், நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறி முறையிட்டான். அவனுக்கு சங்கரத்தடிகள் மற்றும் பெரியான் என்ன இரு மகன்கள். அவர்கள் உழும் வேளையில் தம்பியைத் தமையன் சினந்து அடித்தான். தம்பியும் தமையனை எதிரடித்தான். அவன் அடித்த அடியில் தமையன் இறந்துபட்டான். இந்தச் செய்தியைத்தான் அந்த வெள்ளாளன் அவையில் முறையிட்டான். அவையோர் அவனிடம் வேறு மகன்கள் உண்டா என்று வினவினர். தானும் மனைவியும் மட்டுமே என்று விடையிறுக்கப்பட்டது. சொத்துண்டோ என்று வினவினர். சொத்தும் இல்லை என்றான் அந்த உழவன். அந்தச் சூழ்நிலையை ஆராய்ந்தனர் அவையோர். இரு மகன்களில் ஒருவனை மற்றவன் கொன்றான். இனி எஞ்சியிருப்பது ஒரே மகன். வேறு பொருளுமில்லை. கொன்றமைக்காக இவனுக்குக் கொலைத்தண்டனை விதித்தால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கே அநீதியாக அமையும். இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்த அவையோர், சூழ்நிலை கருதி அவனைக் கொல்லாமல் ஊர் இறைவனுக்கு விளக்கேற்றவும், இறுதிவரை பெற்றோரைக் காப்பாற்றவும் கூறி நீதி வழங்கினர். இதற்கான ஆவணமாக இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது.

தருப்பேறுடையான் தாழிகோனன் வந்து என் மகன் சங்கரத்தடியளும் என் மகன் பெரியானும் சூடுப்படுக்கிறிடத்து தம்பியை தமையன் அரிசப்பட்டு அடித்தான். அடிக்க, தம்பியும் தமையனையெதிரேயடித்தான். தம்பியடிப்பிச்ச அடியிலே தமையன் பட்டான். என்று வந்து சொல்ல உனக்கு இவ்விருவருமல்லாது மக்களுள்ளரோ வென்று கேட்க மற்று மக்களாருமில்லை இவர்கள் தாயுநானுமேயுள்ளோமென்று சொன்னான். சொல்ல அர்த்தந்தானுண்டோ வென்று கேட்க அர்த்தமுமில்லை என்றான். என்ன ஒருகுடி கேடானமையிலும் இவர்களை ரக்ஷிப்பாரிலாமையாலும் அர்த்தம் இலாமையிலுந் திருத்தாமரைப்பாக்கத்து திருவக்னீஸ்வரமுடைய மஹாதேவர்க்கு திருனந்தாவிளக்காக அரைவிளக்கு வைத்து வயஸ்பரிணதை சென்ற தாயையுந் தமைப்பனையும் ரக்ஷிப்பானாக. தம்ம நோக்க இவனிதற்கு படவேண்டா வென்று பெருக்காளர் விடுத்தமையில்..

என்பது கல்வெட்டு வரிகள்.

ஆக, சட்டத்தின் நீதி என்று ஒன்று இருந்தாலும் மானுடத்தின் நீதி என்பது வேறு. இதற்கான தண்டனையை அளித்தால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பாதிப்பாக அமையுமேயன்றி நீதியாக அமையாது. வயஸ்பரிணதை என்று குறிப்பிட்டிருப்பதால், பெற்றோர்களோ முதியவர்கள். பொருளும் அற்றவர்கள். ஆகவே மற்றொரு மகனை வைத்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியதே நீதி என்று அவையோர் எடுத்த முடிவு இன்றைய சூழ்நிலையில் சட்டத்துக்குப் புறம்பாகத் தோன்றினாலும், மானுடத்தின் பார்வையில் இதுதான் சரியான நீதி என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த வரலாற்றின் வண்ணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com