வரலாற்றின் வண்ணங்கள்

26. இரவிலும் அலுவல் பணி செய்தால்..

16th Apr 2019 10:00 AM | முனைவர் க. சங்கரநாராயணன்

ADVERTISEMENT

 

அலுவலகத்தில் பணி முடிவடையாதபோது சில சமயங்களில் இரவிலும் பணியைத் தொடரவேண்டி இருக்கும். பொதுவாக, எல்லா அலுவலங்களிலும் இது நடைபெறக்கூடியதுதான். இதனால், அலுவலகத்துக்கு கூடுதல் செலவுகள் ஏற்படக்கூடும். கூடுதல் நேரத்தில் செய்யும் வேலையால் கிடைக்கும் ‘லாபம்’ அல்லது ‘பலன்’ என்ன என்பதை வைத்தே அது சரியானதுதானா / தேவையா என்பதை முடிவு செய்யமுடியும். வரவைக் காட்டிலும் செலவு அதிகமானால், இத்தகைய அதிக அலுவல்களால் என்ன பயன். இதற்கான வண்ணமும் வரலாற்றின் பக்கங்களில் இல்லாமல் இல்லை.

நாகப்பட்டினத்தை அடுத்துள்ள செம்பியன்மாதேவியில் கயிலாயநாதர் கோயில் அமைந்துள்ளது. உத்தமசோழனின் தாயாரான செம்பியன்மாதேவியின் பெயரால் அமைந்த இந்த ஊரில் பல்வேறு கல்வெட்டுகள் பல்வேறு கொடைகளைக் காட்டி நிற்கின்றன. மூன்றாம் இராசராசனின் 18-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, அதாவது மிகச் சரியாக பொ.நூ. 1234-ஐ சேர்ந்த ஒரு கல்வெட்டு இதற்கான தகவலைத் தருகிறது.

அவ்வூர் சபையார் இரவும் பகலும் அம்பலத்தில் கூடியிருந்து ஊர்ப்பணிகளைப் பார்த்தனர். பல்வேறு செலவுகளும் உண்டாகி இரவு விளக்கெரிக்க எண்ணெய்க்காக அதிகமாக வரி வசூலிக்க வேண்டிய தேவையும் இதனால் உருவானது. ஆகவே சபையார் கூடி ஒரு முடிவெடுத்து, அன்று முதல் இரவு சபை கூடாது எனவும், பகலில் மட்டுமே பணிகளைச் செய்ய வேண்டும் எனவும் முடிவெடுத்தனர். இதற்கான ஆவணமாகக் கல்வெட்டு வெளியிடப்பெற்றிருக்கிறது.

ADVERTISEMENT

நம்மூர் இற்றை முன்பு பகலும் இராவும் அம்பலமிருந்து தர்ம கார்யங்களும் கடமைக்கார்யங்களும் கேட்டுப் போந்தமையில் இரவும் பகவும் ஏறினால் உபஹதியுமுண்டாய் அம்பலவிளக்கெண்ணைய்க்கு ஸபாவினியோகம் மிகுதிப்பட்டிருக்கையாலும் இன்னாள் முதல் இரா அம்பலமிருக்கை தவுந்து பகல் அம்பலமிருக்கக் கடவதாகவும்..

இவைதான் கல்வெட்டு வரிகள்.

இரவில் கூட்டம் கூடி தர்ம காரியங்களையும் கடமைகளையும் செய்து வந்தாலும், பல்வேறு செலவுகளும் அதிகரித்து எண்ணெய்க்கும் அதிகமாகச் செலவழிக்கவேண்டி வந்தமையால், இனி இரவுக் கூட்டங்கள் நிகழா என்று சபையார் எடுத்த முடிவு இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆகவே, உண்மையான அலுவல்களே இருந்தாலும் அதிக செலவாகும் இதுபோன்ற கூட்டங்களைத் தவிர்த்து மிகச் சரியான நிர்வாகத்தைத் தர சபையார் எடுத்த முடிவு இன்றைக்கும் பொருந்தும் வண்ணம் அமைந்த வரலாற்றின் வண்ணம்தானே..

Tags : கல்வெட்டு கூடுதல் அலுவல் நேரம் செலவுகள் ஊர்ச் சபை இராசராசன் செம்பியன்மாதேவி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT