22. கோயிலுக்கான நிலக்கொடை தொலைவில் இருந்தால்..

தகவல் தொடர்பு வளர்ந்திருக்கும் இன்றும்கூட, தொலைவில் உள்ள இதுபோன்ற நிலக்கொடைகளைக் கண்காணிக்கவோ அல்லது வருமானத்தைப் பெறவோ சற்றே கடினமாக..
22. கோயிலுக்கான நிலக்கொடை தொலைவில் இருந்தால்..

பக்தி மேலீட்டால் அன்பர்கள் தங்களின் விருப்பமான தெய்வங்களுக்குக் கொடைகளை அளிக்கின்றனர். அவர்கள் வெளியூரிலிருந்து வந்திருந்தால், தங்கள் ஊரில் உள்ள தங்களுடைய நிலத்தைத் தானம் செய்கின்றனர். ஆனால், தகவல் தொடர்பு வளர்ந்திருக்கும் இன்றும்கூட, தொலைவில் உள்ள இதுபோன்ற நிலக்கொடைகளைக் கண்காணிக்கவோ அல்லது வருமானத்தைப் பெறவோ சற்றே கடினமாக இருக்கும்நிலையில், அந்நாளில் அதுவும் அரசுகள் மாறும் நிலையில், தொலைவில் அமைந்த நிலக்கொடைகளைப் பராமரிப்பது மிகக்கடினம். இதற்குச் சில இடங்களில் தீர்வும் கண்டிருப்பதைக் காணலாம். சிக்கலில் உள்ள கோலவாமனப் பெருமாள் கோயிலில் ஒரு கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பொ.நூ. 1444-ஐ சேர்ந்தது. இலக்கண்ண தண்டநாயகன் என்னும் விஜயநகரத்து ஆட்சியாளரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது.

இந்தக் கல்வெட்டு, கோலவாமனப் பெருமாளுக்கு அந்த அதிகாரி கொடுத்த சிற்றாயநல்லூர் நிலக்கொடையானது தொலைவில் அமைந்திருப்பதால், அதனால் அந்த நிலத்துக்குப் பதிலாக சிக்கலிலேயே ஏரிக்கு அருகினில் வேறோர் நிலத்தை அளித்த செய்தியைத் தருவதுடன், அந்த நிலத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கும் தகவலும் நமக்குக் கிடைக்கிறது.

கோயில் ஸ்தானத்தாரக்குக் குடுத்த தர்ம்ம சாஸநம் தங்களுக்கு முன்பிலாண்டு திருவிடையாட்டம் சிற்றாயநல்லூர் தூரமுமாய் பண்டாரவாடை கூடிந நிலமுமாய் இவ்வூராகச் சென்றபடியாலே யிந்த சிற்றாயநல்லூர் பண்டாரவாடை மாத்தி இதுக்கு ப்ரதியான சேத்தி சோழமண்டல உசாவடி சிக்கல் நாடு வெண்ணைநல்லூருடையான் முதலியான அடைப்புக் குத்துகை ஆக கேயமாணிக்க வளநாட்டு சிக்கலில் நல்லாம்பிள்ளைபெற்றாள் ஏரிக்குக் கிழக்கு...

என்று கல்வெட்டு செல்கிறது.

அதாவது, கோயிலுக்கு தானமாகக் கொடுத்த நிலமான சிற்றாயநல்லூர் தூரமாகவும் பண்டாரவாடையாகவும், அதாவது குடியிருப்போடு ஒட்டியதாகவும் இருப்பதால், நல்லான் பிள்ளைபெற்றாள் ஏரியின் அருகே நிலமானது ஒதுக்கப்பெற்றதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கொடுக்கப்பட்ட கொடை தொலைவில் இருந்தால் அதனை மாற்றிய இதுபோன்ற கல்வெட்டுகள் பல உள்ளன. இதன் செய்தி ஒன்றுதான், கொடையானாலும் உடைமையானாலும் தொலைவில் இருப்பதை மாற்றி உடைமைகளை அருகில் வைப்பதே ஆட்சிப் பொறுப்புக்கும் பராமரிப்புக்கும் உகந்ததாக அமையும் என்பதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com