திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

அதிகாரம் - 19. புறம்கூறாமை

By சிவயோகி சிவகுமார்| Published: 16th September 2018 10:00 AM

 

அதிகார விளக்கம்

அறம் இல்லாமல் தேவையில்லாததைச் செய்பவரும் புறம் கூறாமல் இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பதே நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியாத வார்த்தைகளைச் சொன்னாலும் பரவாயில்லை. ஆனால், பின்னால் புறம் பேசக் கூடாது. தன்னிடம் உள்ள குற்றத்தை நீக்க விரும்புவர் பிறரைப் பற்றி புறம் கூற மாட்டார். யாரோ ஒருவரிடம் உள்ள குற்றத்தைப் பார்ப்பவர், தன்னிடமும் குற்றம் இருக்கும் என்பதை நினைத்தால், வாழ்க்கையில் துன்பம் என்பது இராது.

 

181. அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.

நீதியைப் பேசாமல் தேவையற்றதைச் செய்யும் ஒருவன், அடுத்தவரைப் பற்றி அவதூறு பேசாமல் (புறம்கூறாமை) இருந்தால் இனிது.

 

182. அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை.

அறம் இல்லாததையும் தேவையற்றதையும் செய்வதைவிட தீங்கானது, புறம் பேசி பொய்யாக நகைப்பது.

 

183. புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.

புறம் பேசி பொய்யாக உயிர் வாழ்வதைவிட, மரணிப்பதே அறம் கூறும் நன்மையைத் தரும்.

 

184. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க 
முன்இன்று பின்நோக்காச் சொல்.

நேருக்கு நேர் நின்று ஒருவரின் கண்களைப் பார்த்து கடுஞ்சொல் சொல்வதுகூடத் தவறில்லை. ஆனால், ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி புறம் கூறக் கூடாது.

 

185. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும். 

ஒருவர் புறம் பேசும் தன்மையை வைத்து அவருடைய மனத்தில் அறம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

 

186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

பிறர் மீது பழிபோட்டுப் பேசுபவர், மற்றவர்களும் தன் மீது பழி சுமத்தும் நிலை ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
  

187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

நிறை சொல்லி நட்பை வளர்க்க இயலாதவர்கள்தான் குறைகளைச் சொல்லி உறவைப் பிரிப்பார்கள்.

 

188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

தனக்கு நெருக்கமானவர்களைப் பற்றி புறம் கூறும் பழக்கம் உடையவர்கள், தனக்கு நெருக்கம் இல்லாதவர்களைப் பற்றி என்னவெல்லாம் சொல்லமாட்டார்கள்?

 

189. அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப் 
புன்சொல் உரைப்பான் பொறை.

நீதியின் பொருட்டு இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகம், தனது பொறுமைக்குணத்தால் புறம் சொல்பவர்களையும் ஏற்றுக்கொண்டிருக்கிறதோ?

 

190. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பிறரிடம் உள்ள குற்றங்களைத் தேடிப் பார்ப்பவர், தன்னிடமும் குற்றம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் அவருக்குக் கெடுதல் வருமா?

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : திருக்குறள் திருவள்ளுவர் குறள் அதிகாரம் புறம்கூறாமை அறம் thirukkural thiruvalluvar adhigaram

More from the section

அதிகாரம் - 21. தீவினையச்சம்
அதிகாரம் - 20. பயனில சொல்லாமை 
அதிகாரம் - 18. வெஃகாமை
அதிகாரம் - 17. அழுக்காறாமை
அதிகாரம் - 16. பொறைஉடைமை