கெட்ட வார்த்தை பேசறதுன்னா என்னம்மா?!

‘லவ், கிஸ், டீச்சருக்குத் தெரியாம பாய்ஸ் கூடப் பேசறது, லவ் லெட்டர், பாப்பா எப்படிப் பிறந்ததுங்கற ஸ்டோரி, ஷிட்  இதெல்லாம் பேட் வேர்ட்ஸ்ம்மா.’
கெட்ட வார்த்தை பேசறதுன்னா என்னம்மா?!

சால்ட் சில்ட்ரன்... பெப்பர் பேரன்ட்ஸ் - 13

ம்மா... ஸ்கூல் வேன்ல ஹைஸ்கூல் அக்காஸ் எல்லாம் கெட்ட வார்த்தை பேசறாங்கம்மா... நான் பக்கத்துல போனாப் போனதும், உடனே நிறுத்திடறாங்க, கேட்டா நீ பழம், உனக்கொன்னும் தெரியாதுன்னு விஷமத்தனமா சிரிச்சுக்கறாங்க, ஏன், அப்படி இருக்காங்க?!

5 ஆம் வகுப்பு படிக்கும் நிம்மி, மாலை நேரத்தில் தன்னுடன் சேர்ந்து உட்கார்ந்து டி.வி பார்க்கும் அம்மாவிடம் இப்படிக் கேட்கிறாள்.

அம்மாவும், அவளும் பார்த்துக் கொண்டிருந்தது நேஷனல் ஜியாக்ரஃபிக் சேனல். காட்டில் தனித்தனியாக மேய்ந்து கொண்டிருந்த மலையாடுகளில் ஒன்றை கழுகு ஒன்று விருக்கென தூக்கிக் கொண்டு பறந்து கொண்டிருந்தது. முதலாடு... பலியாடு. முதல் பருந்துக்கு கிடைத்த வெற்றியைக் கண்டு மீண்டுமொரு பருந்தும் மலையாடுகளை இரை கொள்ளத் தாழப் பறந்து வந்தது. இம்முறை ஆடு தனியாகச் சிக்கவில்லை, ஜோடியுடனிருந்தது, ஆனாலும் பருந்து விட்டு விடுமா?! கூரிய நகம் கொண்ட காலிடுக்கால் இறுகப் பற்றி ஆட்டைத் தூக்கிச் செல்ல பிரம்மப் பிரயத்தனம் செய்தது. ஆடு முதலில் திகைத்தாலும், உடனிருந்த ஆட்டின் தைரியத்தால் பருந்துடன் எதிர்த்துப் போராடத் துணிந்தது. ஆடா, பருந்தா? எனும் ஜீவ மரணப் போராட்டத்தில் ஆட்டைக் கவ்விச் செல்ல முடியாமல் கடைசியில் பருந்து தோற்று வேறிடம் நோக்கிப் பறந்தது. முதலாடும் இவ்விதமே தப்ப வாய்ப்பிருந்தது. ஆனால், அதனால் அது ஏனோ, அப்போது மூர்க்கமாகப் போராடத் துணியவில்லை. காரணம் உடன் துணை இல்லாத காரணத்தால். 

ஆட்டுக்கு மட்டுமில்லை, மனிதர்களையும் தான் எடுத்துக் கொள்ளுங்கள். ஆபத்து காலங்களில் தனியே மாட்டிக் கொள்ளும் போது உண்டாகும் உதறல் குழுவாக மாட்டிக் கொண்டால் வருவதில்லை. இப்படி யோசித்துக் கொண்டிருந்த அம்மா, மகளின் பேச்சால் கவனம் களைந்து என்னடா குட்டி கேட்ட? என்று மகளைப் பார்க்கிறார்.

‘ம்ம்.. பழம்னா என்னன்னு கேட்டேன்.... ஹைஸ்கூல் கேர்ள்ஸ் என்னைப் பழம்னு கிண்டல் பண்றாங்கன்னு சொன்னேன்.’

அம்மாவுக்குச் சிரிப்பு வந்தது... சிரித்தால் நிம்மி கோபிப்பாள் என்பதால் அதை அடக்கிக் கொண்டு;

‘பழம்னா கெட்ட வார்த்தை இல்லையேடா... ரொம்ப நல்ல பசங்க, அப்பாவிப் பசங்க, அவங்களுக்கு பேட் வேர்ட்ஸ் எல்லாம் ஒண்ணுமே தெரியாதுன்னா அவங்களைத்தானே ஸ்கூல் டேய்ஸ்ல பழம்னு சொல்வாங்க. டீச்சர்ஸ்க்கு அந்த மாதிரி ஸ்டூடண்ட்ஸைத்தான் ரொம்பப் பிடிக்குமாமே?! அப்போ உன்னை உன்னோட டீச்சர்ஸ்க்கு ரொம்பப் பிடிக்குமோ?!’

‘ம்ம்... நான் தான் ரேங்க் ஹோல்ட்ராச்சே... என்னை எல்லா டீச்சர்ஸுக்கும் பிடிக்கும் தான். ஆனா அதுக்காக என்னை எதுக்கு இந்த கேர்ள்ஸ் பழம்னு சொல்லனும். ஐ ஹேட் பழம்! என்றாள் நிம்மி.’

அம்மா, மகளின் மூக்கைப் பிடித்து ஆட்டி விட்டு;

‘கோபத்தைப் பார்... சரி, சரி அக்காஸ் எல்லாம் என்ன பேசிட்டு இருந்தாங்க, நீ போனதும் ஏன் பேச்சை நிறுத்தினாங்களாம்?’

‘அதான் எனக்குத் தெரியாதே, கேட்டா நீ பழம் உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சிரிக்கிறாங்க. ஆனா, என்னையா ஏமாத்தப் பார்த்தாங்க... எனக்கு தான் ஸ்வாதி சொல்லிட்டாளே; அவங்கல்லாம் பேட் வேர்ட்ஸ் பேசிப்பாங்க அதனால தான்னு!’

‘பேட் வேர்ட்ஸா... அப்படின்னா?’

‘நயன்த் படிக்கிற சுனந்தாக்காவுக்கு பிளஸ் ஒன் படிக்கிற விக்ராந்த் அண்ணா லவ் புரப்போஸ் பண்ணிருக்கானாம். இதை அவன் லெட்டரா எழுது ஜோஸ்னா கிட்ட கொடுத்தனுப்பி இருக்கான். அதைப் பத்தி தான் அவங்க எல்லாம் அப்பப்போ பேசிக்கிட்டு அதுக்கு பேட் வேர்ட்ஸ்னு கோட் வேர்ட் வேற வச்சிருக்காங்க.’

‘ஓ... வேற எதுக்கு, எதுக்கெல்லாம் பேட் வேர்ட்ஸ்னு கோட் வேர்ட் கிரியேட் பண்ணீருக்காங்கடா உங்க ஸ்கூல் கேர்ள்ஸ்?’

‘இன்னும் நிறைய இருக்கும்மா... எனக்கு எல்லாமே தெரியாது... ஆனா கொஞ்சம் தெரியும்.’

‘எங்க ஒன்னொன்னா சொல்லு.. பார்க்கலாம்.’

‘லவ், கிஸ், டீச்சருக்குத் தெரியாம பாய்ஸ் கூடப் பேசறது, லவ் லெட்டர், பாப்பா எப்படிப் பிறந்ததுங்கற ஸ்டோரி, ஷிட்  இதெல்லாம் பேட் வேர்ட்ஸ்ம்மா.’

இதுவரை புன்னகையுடன் மகளுடனான சம்பாஷனையைத் தொடர்ந்து கொண்டிருந்த அம்மாவுக்கு நிம்மி சொன்ன பதிலைக் கேட்டதும் சற்றே மனதில் ஒரு கவலை எட்டிப் பார்த்தது.

இந்தக் குழந்தைகள் அனிச்சம் மலர்களைப் போன்றவர்கள்.

இவர்களுக்கு இந்த வார்த்தைகளின் உண்மையான பொருள் தெரிந்திருந்தாலும் அவற்றின் மீது இந்த உலகம் கட்டமைத்துள்ள வெவ்வேறு விதமான இரட்டை அர்த்தங்களின் மூலம் அவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தமே இளம் உள்ளங்களில் தவறாகப் பதிந்து போகிறதே. உண்மையில் அவையெல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லையே! இதைப் புரியும் விதமாகச் சொல்லும் அவகாசம் இன்றைய பெற்றோர்களுக்கு இருக்குமா?! என்று தோன்றியது.

முதலில் அந்த அவகாசம் தனக்கு இருக்கிறதா? என்று சோதித்துப் பார்க்கும் எண்ணத்தில்;

‘நிம்மிம்மா, இதெல்லாம் பேட் வேர்ட்ஸ்ன்னு யாருடா சொன்னாங்க?’ என்றார்.

நிம்மி அம்மாவை முறைத்து விட்டு,

‘ம்மா, கேர்ள்ஸ் கும்பலா இருக்கும் போதே இந்த வேர்ட்ஸ்லாம் சொன்னா, அவ பேட் வேர்ட்ஸ் சொல்றாடீன்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்க, சிரிப்பாங்க, டூ விடுவாங்க’ அப்போ இது பேட் வேர்ட்ஸ் தான? குட் வேர்ட்ஸா இருந்தா அதை எல்லோர் முன்னாடியும் கத்திச் சொன்னாக்கூட பிரச்னையே இல்லையே?!’ 

குழந்தையின் பதிலில் திருப்தி அடையாத நிம்மியின் அம்மா, மகளுக்குப் புரியும் விதமாக குட் வேர்ட்ஸ், பேட் வேர்ட்ஸ் பற்றிச் சின்னதாகப் பாடம் எடுக்கலாமா என யோசித்தார். அப்புறம் அந்த முயற்சியைக் கைவிட்டு சற்றே யோசனையுடன் மகளை ஏறிட்டு;

‘ஓக்கேடா குட்டிம்மா, இதெல்லாம் பேட் வேர்ட்ஸ் தான், அப்படியெல்லாம் பேசற கேர்ள்ஸை நீ பொருட்படுத்தாத, நாம ஸ்கூல்க்கு எதுக்குப் போறோம், படிக்க, நல்ல விஷயங்களைக் கத்துக்க, நல்ல ஃப்ரெண்ட்ஸ் கூடப் பழக, இந்த உலகத்தை தெரிஞ்சுக்க இதுக்கெல்லாம் தானே?! ஸோ, நீ நல்ல பசங்களோட சேர்ந்து நல்லாப் படிச்சு நிறைய மார்க் வாங்கி ஸ்கூல் டாப்பர் ஆகனும்.’

- என்று அந்த உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். என்னடா இது இந்த அம்மா, புத்திசாலித்தனமாகத் தன் குழந்தைக்கு விளக்கமளிக்கப் போகிறார், என்று எதிர்பார்த்தால் ‘டப்’ பென இப்படிச் சொல்லி முடித்து விட்டாரே என்று தோன்றுகிறதா?

ஆம் எனில்... பெற்றோர்களான நம்மில் பலரும் கூட நம் குழந்தைகளிடம் இப்படித்தானே பதில் அளிக்கிறோம்.

எங்கே குழந்தைகளுடன் பேசத் தொடங்கினால் இல்லாத, பொல்லாத விவகாரங்களை எல்லாம் அவர்களுக்கு விளக்க வேண்டி வருமோ! அதற்கெல்லாம் நமக்கெங்கே நேரமிருக்கிறது என்றெண்ணி எல்லா விஷயங்களையுமே, குழந்தைகளுடனான எல்லா உரையாடல்களையுமே பெரிதாக வளர்த்து விரித்துக் கொண்டே செல்லாமல் சுருக்கமாக முடித்துக் கொள்ளப் பார்க்கிறோம்.

அதனால் தான் நம் குழந்தைகளுக்கும் அதே விதமான கண்ணோட்டமே மனதில் பதிந்து போகிறது. எதையுமே ஐயம் திரிபர உணர்தல், உணர்த்துதல் என்று திருப்தி அடைய முடிவதில்லை.

வளர்ந்த பின் அவர்களாகப் புரிந்து கொள்ளட்டும் எனச் சில விஷயங்களைப் பற்றிய குழந்தைகளின் கற்பனைகளையும், யூகங்களையும் பெற்றோரான நாமே வளர்த்து விடுகிறோம்.

குழந்தைகளுக்கு இதெல்லாம் இப்போதே தெரிய வேண்டியதில்லை எனச் சிலவற்றைப் பற்றிய விவரங்களை குழந்தைகள் அறிந்து கொள்வதை நாமே தடை செய்து விடுகிறோம்.

இதெல்லாம் எங்கே போய் முடியக்கூடும் தெரியுமா?

குழந்தைகளை அரைகுறை ஞானத்தில் தான் கொண்டு விடும். 

அதனால் குழந்தைகள் எப்போதாவது பேட் வேர்டு என்று எதையாவது சொன்னார்களெனில் அதென்ன வார்த்தை எனக் கண்டறிந்து அதன் உண்மையான அர்த்தத்தை அவர்களுக்கு விளக்கி, உண்மையான லவ் என்றால் என்ன? அது எப்போது வந்தால் தனிமனித வாழ்க்கைக்கும், முன்னேற்றத்துக்கும் நல்லது என்பதையெல்லாம் விளக்கிப் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் நமது சினிமாக்கள் ‘லவ்’ என்றால் அது புனிதமானது, ‘அந்த புனிதப்பூ வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டும் தான் பூக்கும்’ என்று எந்த அபத்தக் கதைகளையாவது குழந்தையின் இன்னொசன்ட் மூளைக்குள் போகிற போக்கில் திணித்து விட்டுப் போய் விடக்கூடும்!

நேஷனல் ஜியாக்ரஃபிக் சேனலில் காட்டப்பட்ட பருந்துக்கும் நம்மூர் சினிமாக்களுக்கும் பெரிய வித்யாசங்கள் ஏதுமில்லை. நமது சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டி போன்ற சுட்டிக் குழந்தைகளின் அனிச்ச மலர் மூளைகளை அப்படியே லட்டு மாதிரி லவட்டிக் கொண்டு போகும் பருந்துகளாகத் தான் இன்றைய சினிமாக்கள் செயல்படுகின்றன. எனவே நமது குழந்தைகளை வலுவுள்ள ஆட்டுக்குட்டிகளாகத் தயார் செய்யும் கடமை நம்மைத் தவிர வேறு யாருக்கு இருக்கக் கூடும்?

ஆதலால், இனியாவது குழந்தைகள் உங்களிடம் எதையாவது கேட்கத் தொடங்கினாலோ, உரையாடத் தொடங்கினாலோ, அதை உரிய விதத்தில் செவி மடுத்து அவர்களுக்கு முழுமையான, திருப்தியான விளக்கம் அளிக்க முயற்சி செய்யுங்கள். குறைந்த பட்சம் குழந்தைகளின் பல விதமான சஞ்சலங்கள் அகன்று அவர்களது பாதுகாப்பு உணர்வும், மனத்திண்மையுமாவது உறுதிப்படும்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com