ரோஜா மலரே - 5

குழந்தையாக நடிப்பதற்கு என்னை விட்டால், வேறு ஒருவர் இல்லை என்பது போன்று அமைந்துவிட்டது. நடிகை சாவித்திரி அம்மாவுக்கு ஜூனியர் என்றால் நான்தான்.
ரோஜா மலரே - 5

பூஜை போட்ட புதிய படத்தின் பெயர் ‘சொர்க்க வாசல்’. இதன் இயக்குநர் ஏ.காசிலிங்கம். அதன் வசனகர்த்தா அறிஞர் அண்ணா. இந்தப் படத்தின் மிக முக்கிய அம்சம் ஒரு குழந்தையும் அந்தக் குழந்தையைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும்தான் கதையும், முழுப்படமும். குழந்தைதான் முக்கியமான கதாபாத்திரம் என்பதால், அறிஞர் அண்ணா ரொம்பவும் பிரியப்பட்டு அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒரு பெயரும் வைத்தார்கள். அதுதான் ‘மரகதமணி’. இந்தப் படத்தில் அன்று இருந்த எல்லாப் பெரிய நட்சத்திரங்களும் நடித்தார்கள். அரசராகப் பி.எஸ்.வீரப்பா நடித்தார். அதேபோன்று எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி, பத்மினி, அஞ்சலிதேவி எனப் பலர் நடித்தனர்.

சென்ட்ரல் ஸ்டுடியோ மிகவும் புகழ்பெற்ற ஸ்டுடியோ. அங்குதான் ‘மர்மயோகி‘, ‘ஜெனோவா’ போன்ற பல புகழ்பெற்ற படங்கள் எடுக்கப்பட்டன. நான் இந்தப் படத்தில் நடிக்கும்போதே அடுத்தப் படப்பிடிப்பு தளத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டு இருந்தார். படத்தின் பெயர் ‘நாம்’. ஜூபிட்டரோடு இணைந்து மேகலா பிக்சர்ஸ் எடுத்த படம். கலைஞர் வசனம் எழுதினார்.

வேறு படப்பிடிப்பு தளத்தில் ‘ஜமீன்தார்’ என்று ஒரு படம். அதில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் நடித்துக்கொண்டிருந்தார். இப்படி எல்லாம் புகழ்பெற்ற பலர் அன்று சென்ட்ரல் ஸ்டுடியோவில் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

அன்று குழந்தை நட்சத்திரமாக நடிக்க அதிகம் பேர் இல்லை. அது எனக்குச் சரியான வாய்ப்பாக அமைந்தது. பேபி சரோஜாவிற்குப் பிறகு குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்குச் சரியான குழந்தைகள் கிடைக்கவில்லை. நடிகர்களின் குழந்தைகள்கூட நடிக்க வராத காலம் அது. அந்த நேரம் பார்த்து நான் குழந்தையாக நடிக்க வரவே, எல்லோரும் என்னையே நடிக்க அழைத்தார்கள். நாளடைவில் நான் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக மாறத் தொடங்கினேன்.

குழந்தையாக நடிப்பதற்கு என்னை விட்டால், வேறு ஒருவர் இல்லை என்பது போன்று அமைந்துவிட்டது. நடிகை சாவித்திரி அம்மாவுக்கு ஜூனியர் என்றால் நான்தான். பத்மினி அம்மாவிற்கும் சிறுவயது குழந்தையாக நடித்தேன். பானுமதி அம்மாவிற்கும் அதே நிலைதான். சிறு வயது எஸ்.வரலக்ஷ்மி வேடத்திலும் நான் நடித்திருக்கிறேன். இப்படி நான் எல்லாப் படங்களிலும் குழந்தையாக, பிஸியாக நடித்துக்கொண்டிருந்தேன்.

‘சொர்க்க வாசல்’ படத்தில் என் பகுதி முடிந்தவுடன் நான் சென்னைக்கு வந்தேன். அதிலும் இந்தப் படம் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு நடித்துவிட்டுச் சென்னை வந்தேன். அந்தச் சமயத்தில் அந்தப் படத்தின் சில பகுதிகளை பார்த்த அறிஞர் அண்ணா, ‘‘இந்தக் குழந்தை ரொம்பவும் சிறப்பாக நடித்து இருக்கிறார். நான் சென்னையில் இருக்கும்போது கண்டிப்பாகக் கூட்டிக்கொண்டு வாருங்கள், நான் அந்தக் குழந்தையைப் பார்க்க வேண்டும்’’ என்று கூறினாராம். நேரில் என்னைப் பார்த்தபோது என்னிடம் இதையே சொல்லி மனதார பாராட்டினர் அறிஞர் அண்ணா.

படத்தின் கதைப்படி என் அப்பா பி.எஸ்.வீரப்பா. ஆனால், நான் அதிகமாகப் பாசம் கொண்டு இருப்பது கே.ஆர்.ராமசாமியிடம்தான். கோபித்துக்கொண்டு வெளியே செல்லும் அவர் எனக்காகத் திரும்பி வருவதுபோல் கதை இருக்கும். இதில் என் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும். அந்தப் படத்தில் எனக்கு இரு பாடல்கள் உண்டு ஒன்று.

ராஜா மகள் ராணி - புது

ரோஜா மலர் மேனி - மிக

பேஷான ஒரு மாமி

வரப் போறாள் பாரு நீ!

என்று கே.ஆர்.ராமசாமி பாடுவதுபோல் வரும். படத்தில் எனக்கு எல்லாமே கே.ஆர்.ராமசாமிதான் செய்வார். என்னைத் தலைக்குக் குளிப்பாட்டி, உடை உடுத்துவது, பின்னிவிடுவது, பாட்டுப் பாடி சாப்பாடு ஊட்டுவது, அழுதால் என்னைச் சமாதானம் செய்வது என்று அனைத்தும் செய்வதுபோல், கதையும் அவரது பாத்திரப் படைப்பும் அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் எனக்கு அம்மா கிடையாது. பத்மினி ஆஸ்தான நடனமணியாக வருவார். பத்மினியை கே.ஆர்.ராமசாமி காதலிப்பார். என அப்பா வேடத்தில் வரும் பி.எஸ்.வீரப்பாவும் பத்மினியை காதலிப்பார்.

‘நிலவே நிலவே’ என்று ஒரு பாடல் வரும். இந்தப் பாடலை கே.ஆர்.ராமசாமி பாடிய பிறகு நான் பாடுவேன். அன்று எனக்குக் குரல் கொடுத்தவர் யார் தெரியுமா? ஜூனியர் டி.ஆர்.ராஜகுமாரி என்று கூப்பிடுவார்கள். அவர்தான் எனக்குக் குரல் கொடுத்தார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் அவர் நகைச்சுவை வேடத்தில் நடித்திருப்பார். நானும் அவரும் பிற்காலத்தில் ‘கோடீஸ்வரன்’ படத்தில் ஒன்றாக நடித்திருக்கிறோம். சிவாஜி கணேசன் நாடகக் குழுவிலும் அவர் நடித்திருக்கிறார். அவர் சிறந்த நாடக நடிகை, சிறப்பாகவும் பாடுவார்.

இந்தப் படத்தின் இசை அமைப்பு சி.ஆர்.சுப்பராமன். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அன்று சுப்பராமனுக்கு உதவியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு நான் நடித்துக்கொண்டிருந்தபோதே எனக்குப் பல படங்கள் ஒப்பந்தமாயின. அதில் ஒன்று ‘தேவதாஸ்’ படம். தெலுங்கில் எடுக்கப்பட்டபோது ஒரு குழந்தை இந்த வேடத்தில் நடித்தது. ஆனால், தமிழில் எடுக்கப்படும்போது நான்தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார் இசையமைப்பாளர் சுப்பராமன். சென்னையில் உள்ள தயாரிப்பாளரிடம் தொலைபேசியில் கூப்பிட்டு இதைச் சொன்னார். ‘‘இந்தக் குழந்தை சிறப்பாக நடிக்கிறது. நம்ம படத்திலும் இந்தக் குழந்தையையே நீங்கள் நடிக்கவைக்க வேண்டும்’’ என்று உறுதியாகக் கூறினார். இப்படிப் படங்கள் வர வர, ஒன்றை நான் உறுதியாக இழக்க நேர்ந்தது. அது என்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com