ரோஜா மலரே! - 2

சங்கீதமாகட்டும், நடனமாகட்டும் எனக்கு ஆர்வம் இருந்தாலும் அத்துடன் உழைப்பும் சேர்ந்ததால் இந்த அளவுக்கு ஒரு ஆத்மார்த்த ஈர்ப்பு இந்த கலைகளின் மேல் எனக்கு ஏற்பட்டது.
ரோஜா மலரே! - 2

அன்றைய பாடகர் நட்சத்திரம் யார் என்று இதற்குள் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர்தான் ஜே.பி.சந்திரபாபு. அவர் மிகவும் ஆசைப்பட்டு நடனப்பள்ளியில் சேர்ந்து பரத நாட்டியம் கற்றுக்கொண்டார் என்று எனது அக்கா கூறுவார்கள். இந்த நடனப்பள்ளி வந்த உடனே என் அக்கா ‘மாடி’ லக்ஷ்மிக்கும் நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. எனது பெற்றோர் வழியில் சங்கீதம் கேட்பார்கள். ஆனால் நடனம் மீது அவ்வளவாக நாட்டம் அவர்களுக்கு இருந்ததில்லை. அதிலும் நம் வீட்டில் உள்ள பெண்கள் ஆடுவது என்பது கண்டிப்பாக இல்லை, இல்லவே இல்லை. மேடையில் ஆடுவது அதிலும் பெண் குழந்தைகள் ஆடுவதை எனது தந்தை வழியில் ஒப்புக்கொள்ளவோ அல்லது உற்சாகப்படுத்தவோ மாட்டார்கள்.

எனது பாட்டிக்கும் தாத்தாவுக்கும் இதே வடஆற்காடு மாவட்டம்தான். அவர்கள் பெண் குழந்தைகள் இப்படி ஆடுவதை விரும்பவில்லை. அன்று மற்றொரு சிறந்த நடனப்பள்ளி இருந்தது. அது நாமெல்லாம் இன்று போற்றும் பத்மா சுப்ரமணியத்தின் தந்தை திரைப்பட இயக்குநர் சுப்ரமணியம் ஆரம்பித்து நடத்திவந்த ‘நிருத்யோதயா’தான். இன்று எல்லோரும் சொல்லும் இன்ஸ்டிடியூட் (நிறுவனம்) போல் அல்லாமல் மிகவும் நேர்த்தியாக, சிறப்பாக நடனம் மட்டும் அல்லாமல், எல்லா கலைகளும் சொல்லிக்கொடுத்தார்கள்.

இந்த நிறுவனம் எங்க அக்கா செல்லும் பாதையில் இருந்ததால் அதன் மதில் சுவரை ஒட்டி நின்று பார்த்துவிட்டு வருவார்களாம். அப்பொழுது அங்கு பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள் நடனப்பயிற்சி செய்வதை பார்த்திருக்கிறார்கள். ஏன் என்றால் அந்த நிறுவனத்தில் ஆண்களும் பெண்களும் கற்றுக்கொள்ளலாம். ரொம்ப பிரமாதமான இன்ஸ்டிடியூட்.

ஜானகி அம்மா, எஸ். வரலக்ஷ்மி, யோகமங்களம், போன்ற மூத்த கலைஞர்கள் பலரும் அங்கு நடனம் கற்றுக்கொண்டிருந்தார்கள். இது எப்படி எனக்கு தெரியும் என்றால் எங்க அக்கா ‘மாடி’ லக்ஷ்மி நடனம் பயில்வதற்கு முன் சந்திரபாபு, அங்கு நடனம் கற்றுக்கொண்டு இருந்திருக்கிறார். திரைப்படத்தில் சாதனை செய்த பத்மினிகூட அவரது சகோதரிகள் லலிதா, ராகினியுடன் இதே ‘நிருத்யோதயா’வில் அந்தக் காலத்தில் நடனம் கற்றவர்தான்.

இவர்கள் மட்டும் அல்லாமல் நடனத்துக்கே புகழ் பெற்ற ரவிஷங்கர் போன்ற பலரும் அங்கு இருப்பார்கள். பரத நாட்டியம் மட்டும் அங்கு சொல்லிக்கொடுப்பதில்லை. இசைக் கருவிகளை இயக்கப் பயிற்சி, ஸ்லோகம் கிளாஸ் போன்ற எல்லாம் இங்கு சொல்லிக்கொடுத்தார்கள்.

நடனத்தின் பல வடிவங்களான கதக், குச்சுப்புடி, ஒடிசி, மேற்கத்திய பாலே போன்ற நடனங்களும் இங்கு சொல்லிக்கொடுக்கப்பட்டன.

இவைகளை எல்லாம் பார்த்த பிறகு அக்கா ‘மாடி’ லக்ஷ்மிக்கு நடனத்தின் மீது ஆசை ஏற்பட்டது. அவருக்கு ஏற்றாற்போல் எங்கள் வீட்டின் கீழேயே நடனப்பள்ளி தொடங்கி உள்ளதால், அக்கா தன் ஆசையை பாட்டியிடம் சொன்னார். பாட்டிக்கு இந்தக் கலைகளின் மீது ஒரு ஈடுபாடு உண்டு, கற்றுக்கொள்வதில் என்ன தவறு? என்று அவர் நினைத்தார்.

என் அக்காவுக்கே அன்று சுமார் 10 வயசுதான் இருக்கும். பாட்டியின் ஒப்புதலோடு எங்க அக்கா கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அவரது அரங்கேற்றம் 15 வயதில் சிறப்பாக நடந்தது. அப்போது எனக்கு வயசு 3 இருக்கும் என்று நினைக்கிறேன்.

குழந்தைகளுக்கே இருக்கும் ஆர்வம் எனக்கும் இருந்தது. அக்காவை பார்த்துப் பார்த்து நானும் கற்றுக்கொடுக்காமலேயே தாளம் தட்டினால் ஆடுவேன். அன்று பாரத நாட்டியம் என்று தெரியாமலேயே நானும் என் அக்காவை பார்த்து ஆட ஆரம்பித்தேன்.

சமீபத்தில் தினமணியின் மகளிர் தின விழாவில் வைஜெயந்தி மாலாவைப் பார்த்தேன். அங்கு நான், வைஜெயந்தி மாலா உள்ளிட்ட ஒன்பது மூத்த நடிகைகள் கௌரவிக்கப்பட்டோம். அவர்களிடம் வைஜெயந்திமாலா என்னைப் பற்றி சொன்னது, இன்றும் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.

‘தண்டபாணி மாஸ்டர் என் வீட்டுக்கு நடனம் சொல்லிக்கொடுக்க காரில் வருவார். அப்பொழுது குட்டியாக, அதே சமயம் சூட்டிகையாக சச்சு அந்த காரில் உட்கார்ந்து வருவார். மாஸ்டர் சொல்லும் அத்தனையும் அந்த வயதில் செய்து காண்பிப்பார். நான் ஒருபுறம் ஆட, மறுபுறம் சச்சு ஆடுவார். அந்த வயதில் சிறப்பாக ஆடுவது மட்டும் அல்ல, சரியாக, அழகாக ஆடுவார் சச்சு’ என்று எல்லோரிடமும் கூறினார். எனக்கு சந்தோஷமாக இருந்தது.

இதன் விளைவாகத்தான் சங்கீதமாகட்டும், நடனமாகட்டும் எனக்கு ஆர்வம் இருந்தாலும் அத்துடன் உழைப்பும் சேர்ந்ததால் இந்த அளவுக்கு ஒரு ஆத்மார்த்த ஈர்ப்பு இந்த கலைகளின் மேல் எனக்கு ஏற்பட்டது.

தண்டபாணி பிள்ளை வளர்ந்து சினிமாவுக்கு நடனம் அமைக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதனால் அவரது இடத்துக்கு பல பிரபலமானவர்கள் வரத் தொடங்கினர். நடிகர் கே.ஆர். ராமசாமி, கவிஞர் பாரதிதாசன், சின்ன அண்ணாமலை, நடிகையர் டி.ஆர். ராஜகுமாரி, வைஜெயந்திமாலா, தயாரிப்பாளர் ஜூபிடர் சோமு என்கிற சோமசுந்தரம், இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு, சி.ஆர். சுப்பராமன் போன்ற பல திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாமல், மேலும் பல முதலாளிகள், கதாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் என்று பலரும் வரத் தொடங்கினார்கள்.

இவர்களை எல்லாம் பார்த்தவர்கள் என் அக்கா ‘மாடி’ லக்ஷ்மி. அவர் சொல்லத்தான் நானே தெரிந்துகொண்டேன். இன்றும் பல்வேறு புகழ்பெற்ற திரைப்படத் தாரகைகளை பார்க்க, பேச எல்லோரும் அன்று எங்கள் வீட்டுக்கு வந்ததால் இன்றும் பலருடன் நான் நட்பாக பழக சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த சமயத்தில் தான் ‘‘விஜயகுமாரி’’ என்ற படம், கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் எடுத்து முடித்திருந்தார்கள். அதில் ஒரு பாட்டு இருந்தது. அதற்கு பரத நாட்டியம் தெரிந்த சில பெண்களை போட்டு இருந்தார்கள். அதில் முதன்மையானவர் குமாரி கமலா. அதற்கு அடுத்தபடி என் அக்கா ‘மாடி’ லக்ஷ்மி. அடையார் துளசி, வனஜா போன்ற பலர் இந்த பாட்டுக்கு சாஸ்த்ரீய பரதநாட்டியம் ஆடினார்கள். அப்பொழுதெல்லாம் உயரத்தை பார்ப்பார்கள். நடுவில் குமாரி கமலா நிற்க, உயரத்திற்கு ஏற்றபடி மற்றவர்கள் நின்று நடனம் ஆடினார்கள்.

முதலில் அக்காவை இதில் நடனம் ஆட கூப்பிட பயந்தார்கள். வெறும் டான்ஸ்தானே என்று சொல்லி அப்பாவிடம் கேட்டு ஒப்புக்கொள்ள வைத்தார்கள். அந்த படத்தின் படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்தது. அந்தப் படப்பிடிப்புக்கு என்னையும் அழைத்துச் சென்றார்கள். அங்குதான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அது என்ன என்று அடுத்தவாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com