ரெடி.. ஸ்டெடி.. கோ..

24. ரொம்ப நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்கிறீர்களா? கவனம்!!

22nd Nov 2019 10:00 AM | டாக்டர் விஸ்வநாதன் ஸ்ரீதரன்.

ADVERTISEMENT

 

இன்றைய காலகட்டத்தில் தசை எலும்பு சார்ந்த பிரச்னைகளில் முதுகு வலி முதன்மையாக காணப்படுகிறது. 10-ல் 7 பேர் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. முதுகு வலியை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  • குறிப்பிட்ட காரணமுள்ள முதுகு வலி
  • குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலி

குறிப்பிட்ட காரணமுள்ள முதுகு வலி

இவ்வகையான முதுகுவலிக்கு குறிப்பிட்ட சில காரணங்கள் இருக்கும். உதாரணத்துக்கு அடிபடுதல், எலும்பு முறிவு, நரம்பு அழுத்தம், தசையில் ஏற்படும் காயங்கள் என்று பல காரணங்களைக் கூறலாம்.

ADVERTISEMENT

குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலி

இவ்வகையான முதுகுவலிக்கு குறிப்பிட்டு கூறக் காரணங்கள் ஏதுமின்றி இருக்கும். 85% மக்கள் இவ்வகையான முதுகுவலியால் அவதியுறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இவ்வகையான முதுகுவலிக்கு காரணம் அற்று இருப்பதால், இவற்றுக்கு சிகிச்சையளிப்பதும் மிகவும் கடினம். நோயாளியின் வாழ்க்கை முறை, உடல் அமைப்பு, தினசரி வேலைகள் போன்றவற்றை சரியான முறையில் ஆராய்ந்து சிகிச்சையளிக்க இயலும்.

இவ்வகையான முதுகுவலி யாரைத் தாக்கும் என்று கீழே காணலாம்.

  • பல மணி நேரம் அமர்ந்தபடியே வேலை செய்வோர்
  • பல மணி நேரம் பயணித்தபடியே வேலை செய்வோர்
  • வீட்டு வேலையில் ஈடுபடும் இல்லத்தரசிகள்
  • சிறு பிள்ளைகள்

முதுகு வலி எப்படி இவ்வகியான பிரிவினரை தாக்குகிறது என்பதை பார்ப்போம்.

1. அமர்ந்தபடியே வேலை செய்வோர்

இன்றைய உலகில் கணினியும், தொலைக்காட்சியும் தவிர்க்க முடியாத சாதனங்கள் ஆகிவிட்டன. ஒட்டுமொத்த உலகமும் வரவேற்பரைக்கே நம்மைத் தேடி வருவதால் மனிதர்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. பலர் 5 மணீ முதல் 6 மணி நேரம் வேலையின் நிமித்தம் அமர்ந்திருப்பது தவிர்க்க இயலாத செயலாகிவிட்டது.

தொடர்ந்து இவ்வாறு அமர்ந்திருப்பதால் மனிதன் தன் உடல் தசையின் பலத்தை மெதுவாக இழக்கிறான். நாளடைவில் தசைகள் சீராக வேலை செய்யாததால் முதுகு எலும்பு பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக காலை வேலையில் முதுகு பகுதியில் இறுக்கமாக உணர்வார்கள். முடிவில் முதுகுவலி ஆரம்பிக்கும். இவ்வகையான வலி திடீரென்று தோன்றுவதன்று. மெதுவாக ஆரம்பிக்கும் இப்பிரச்னை ஒரு கட்டத்தில் முதுகு வலியாக வெளிப்படுகிறது. சரியான உடற்பயிற்சியும் சரியான உடல் அமைப்பும் இப்பிரச்னையை எதிர்கொள்ள உதவும்.

இந்தப் பிரிவினர் முதுகு வலியை தவிர்க்க உதவும் சில விஷயங்கள்

  • 15-20 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து நடக்கவும்
  • நேராகப் படுப்பதை தவிர்க்கவும்
  • குளிர்ந்த நீர் அல்லது வெந்நீர் ஒத்தடம் முதுகுவலிக்கு ஏற்ற எளிய சிகிச்சை
  • தொடர்ந்து படுத்து ஓய்வெடுப்பது முதுகு வலிக்கு தீர்வல்ல
  • நடைபயிற்சி தசைகளை திறம்பட செயல்பட வைக்கும்

அனுபவமிக்க இயன்முறை சிகிச்சை நிபுணரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகளை செய்வது நிரந்தர தீர்வை தரும்.

2. பயணித்தபடி வேலை செய்வோர்

வேலையின் நிமித்தம் அதிகம் பயணிப்போர், முதுகுவலிக்கு ஆளாகின்றனர். இரு சக்கர வண்டியில் பயணிப்போர் இதில் முக்கிய இடம் வகிக்கின்றனர். தவறான முறையில் நீண்ட தூரம் பயணம் செய்வது, மேடு பள்ளம் நிறைந்த சாலைகள் என்று முதுகுவலிக்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மேலே கூறியது போல தவறான முறையில் வாகனத்தில் அமர்வதும், நீண்ட தூரம் பயணிப்பதால் தசைகள் வலுவிழந்து முடிவில் எலும்பு பாதிப்படைகிறது. இதன் விளைவாக முதுகு எலும்பு முறிவதும், முதுகு எலும்பு ஜவ்வு பாதிக்க வாய்ப்புள்ளது. சிலரின் முதுகு எலும்புகள் முன்னுக்கு பின்னாக விலகி போகவும் வாய்ப்புள்ளது.

சிலர் இரு சக்கர வாகனத்தில் ஒரு பக்கமாக சாய்ந்தபடி அமர்ந்து கொண்டு பயணிப்பர். இதன் விளைவாக தசைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. சிலர் வாகனத்தின் கைப்பிடியை வண்டியின் பின்புறமாக அமர்ந்தபடி பிடித்திருப்பர். இதன் விளைவாக முதுகு எலும்பு ஜவ்வு விலக வாய்ப்புள்ளது.

இந்த பிரிவினர் முதுகுவலியை தவிர்க்கும் முறைகள் இவை:

  • நீண்ட நேரம் அமர்ந்தபடி வண்டி ஓட்டுவதை தவிர்க்கவும். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ஓய்வெடுக்கவும். குளிர்ந்த நீர் அல்லது வெந்நீர் ஒத்தடம் முதுகு வலிக்கு ஏற்ற எளிய சிகிச்சை.
  • நடைபயிற்சி தசைகளை திறம்பட செயல்பட வைக்கும்.
  • அனுபவம் மிக்க இயன்முறை சிகிச்சை நிபுணரின் (physiotherapist) ஆலோசனைப்படி உடற்பயிற்சிகளை செய்வது நிரந்தர தீர்வை ஏற்படுத்தும்.

தொடரும்

Tags : back pain
ADVERTISEMENT
ADVERTISEMENT