ரெடி.. ஸ்டெடி.. கோ..

5. உளவியல் முறைகள் மற்றும் உளவியல் நுணுக்கங்கள் 

12th Jul 2019 10:00 AM | டாக்டர் விஸ்வநாதன் ஸ்ரீதரன்.

ADVERTISEMENT

 

விளையாட்டு என்பது உடல் மற்றும் உள்ளம் சார்ந்த ஒன்று. இதில் உடலின் பங்கு 20% எனில், உளவியலின் பங்கு 80% ஆகும். ஆம் கடந்த வாரங்களில் விளையாட்டில் உடலின் பங்கு என்ன,அதை எப்படி படிப்படியாக ஒரு குறிப்பிட்ட விளையாட்டிற்காக தழுவுதல் (Adaptation) என்பதை பார்த்தோம். இவை எல்லாம் மனம் / உளவியல் ஒத்துழைக்கவில்லை எனில் உங்கள் குழந்தைகளால் எவ்வித விளையாட்டையும் கற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் உளவியலாக ஒரு விளையாட்டை ஏற்று கொண்டால் மட்டுமே உடலும் ஒத்துழைக்கும்.

நீங்கள் எந்த ஒரு விளையாட்டு வீரரையும் கேட்டுப் பாருங்கள், எத்தகைய கடினமான சூழ்நிலையிலும், அவர்கள் வெற்றி பெற மனம் / உளவியல்தான் காரணம் எனக் கூறுவார்கள். ஆம், நீங்கள் பார்த்து ரசித்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகள் வெல்லப்பட்டது, அந்த விளையாட்டு வீரரின் அல்லது அந்த விளையாட்டு குழுவின் (Team) மனோதிடத்தால் மட்டுமே எனக் கூறுவது மிகையாகாது. விளையாட்டிற்கான உளவியல் முறைகள் மற்றும் நுணுக்கங்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

உளவியல் முறைகள்:

ADVERTISEMENT

➜ மனப்பக்குவம்
➜ தோல்வி
➜ உறக்கம்
➜ சிதறாத கவனம்
➜ உணவுகள்
➜ மன ஒழுக்கம்

மனப்பக்குவம்

இது ஒரு மிக முக்கியமான உளவு முறை. உங்கள் குழந்தையின் மனதைப் பக்குவப்பட வைக்கும். ஏனென்றால், ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை, சாமான்னியரின் வாழ்க்கையை விட மிகவும் வேறுபட்டது. ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை 24 மணி நேரம் / 365 நாட்களுக்குமானது. ஏனெனில் உங்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. இவர்கள் வேலை 9 மணிக்கு ஆரம்பித்து 5 மணிக்கு முடிவதல்ல. எனவே உங்கள் குழந்தை அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அடைய வேண்டும். உங்கள் குழந்தை விளையாட ஆரம்பிக்கும் போதே, விளையாடினால் ஏற்படும் நன்மை,  தீமைகளை எடுத்துக்
கூறுங்கள். உங்கள் குழந்தைக்கு அந்த விளையாட்டின் மீது உண்மையான நாட்டம் இருந்தால், இதை எல்லாம் புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை அடைவார்கள். உதாரணமாக, ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தை செய்ய வேண்டிய பயிற்சிகள், அதிகாலை எழுதல், உணவு முறை போன்றவை அவர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சோர்வடையச் செய்யும். ஆனால் அதற்கான மனப்பக்குவம் அடைந்தால் மட்டுமே இந்தக் கடினமான விஷயங்களையெல்லாம் வாழ்வின் அங்கமாக ஏற்று கொள்வார்கள். எனவே ஒரு குழந்தையின் பெற்றோரோ, பயிற்சியாளரோ குழந்தையின் மனம் அந்த விளையாட்டிற்காக எப்படி பக்குவப்படுகிறது அறிதல் மிகவும் அவசியம்.

தோல்வி

மிக மிக முக்கியமான மற்றும் அத்யாவசியமான உளவியல் முறை இது. ஏனெனில் உங்கள் குழந்தையை ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், வெற்றியாளராகவும் மாற்றக் கூடிய ஒன்று. ஆம்,  ஒரு விளையாட்டு வீரருக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும், உளவியல் முறைகளையும் ஒரேயொரு தோல்வி கற்றுக் கொடுக்கும். தோல்விகள் என்பது உங்கள் இலக்கை நிர்ணயிக்கக் கூடியவை. ஆம், ஒரேயொரு தோல்வி உங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துச் சென்று விடும். இது தோல்வியால் ஏற்படும் எதிர்வினை. ஆனால், தோல்வியால், பல நல்வினைகள் ஏற்படும். தோல்வி ஒரு உந்து சக்தி ஆகும். அது நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுக்கும். முதல் பாடம், தோல்வியால் துவண்டு விடாமல், எப்படி எழுவது, இரண்டாவது எந்த தவறினால் தோல்வி அடைத்தோம், மூன்றாவது அதற்கான தீர்வு. இறுதியக அந்த அதே தவறை நாம் செய்யமல் இருப்பது. பல விளையாட்டு வீரருக்கு பிடித்த உளவியல் வாசகம் தோல்வியடைவது பெரிதல்ல, ஆனால், அதிலிருந்து மீளாதிருப்பதே மிகப் பெரிய தோல்வி (Failing is not a Crime, Lack of effort is). எனவே பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் சிறந்த விளையாட்டு வீராக வேண்டுமானால், அவர்கள்  தோல்வி  என்ற மிகப் பெரிய பாடத்தை சரியாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உறக்கம்

உறக்கமா இது ஒரு உளவியல் முறையா என உங்கள் மனதில் கேள்வி எழலாம். உறக்கம் மிக அவசியமான உளவியல் முறைகளில் ஒன்று. ஏனெனில் உறக்கமே, உங்கள் மனம் மற்றும் உடலுக்குத் தேவையான ஓய்வைத் தரும். இதனால் உங்கள் மனம் ஒருமுகப்படுத்தல் மிக எளிதாகும். உங்கள் மனம் சரியாக வேலை செய்தால், உடலும் அதற்கு ஒத்துழைத்து தேவையான விஷயங்களை எளிதில் கற்றுக் கொள்ளும். அதே போல் உடலுக்குத் தேவையான ஓய்வும் கிடைக்கும். எனவே ஒரு சிறந்த விளையாட்டு வீரராக, 8-9 மணி நேரம் உங்கள் குழந்தைகள் உறங்க வேண்டும். இது, மிக முக்கியமாகும், ஏனெனில் உறக்க ஒழுக்கம் என்பதுமிகவும் இன்றியமையாத ஒன்று.

சிதறாத கவனம்

கடந்த வாரம், இதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். இது ஒரு மிக முக்கியமான உளவு முறை. இந்த உளவு முறையை, கற்றுக் கொள்ள நீண்ட நாட்கள் பிடிக்கும். ஆனால் இதைக் கற்றுக் கொள்ள மிகச் சிறந்த வழி, ஒவ்வொரு தேவையான நுணுக்கங்களையும், சிறிது சிறிதாக வடிவமைத்து, ஒன்றன் பின் ஒன்றாக கற்றுக் கொள்ள வேண்டும்.

உணவுகள்

இன்னும் பலரால் அறியப்படாத உளவியல் இது. ஏனெனில் நாம் என்ன உண்கிறோமோ அதற்கான விளைவு ஏற்படுவது நம் மனதில்தான். அதன் பின் தான் உடலில் விளைவு ஏற்படும். எனவே நாம் என்ன உண்கிறோம் என்பதை ஒரு விளையாட்டு வீரராக சரியாக கவனிக்க வேண்டும். உதாரணமாக, குழந்தைப் பருவத்தில், நாம் நிறைய சாக்லேட்கள் சாப்பிடுவோம். அனால் அதுவே நிறைய சாப்பிட ஆரம்பித்தால், நம் உடலில் நிறைய உபாதைகளை ஏற்படுத்தும். மிக முக்கியமாக வயிறு உபாதைகள் ஏற்படும்.வயிறு உபாதை, ஒரு விளையாட்டு வீரரின் மனம் மற்றும் உடலில் சோர்வு ஏற்படுத்தும். ஆனால் அதையே மிகச் சிறிய அளவில் உண்டால், அது உங்கள் மனதிற்கும், உடலுக்கும் சந்தாஷத்தைக் (Happiness) கொடுக்க வல்லது. எனவே எவ்வகையான, எவ்வளவு உணவுகள் சாப்பிடுகின்றோம் என்பதைப் பொறுத்து உங்கள் உளவியல் மாறுபடும்.

மன ஒழுக்கம்

மேற்கூறிய அனைத்து உளவு முறைகளும் சரியாக அமைய வேண்டுமானால், மன ஒழுக்கம் மிக முக்கியம். ஏனெனில் மன ஒழுக்கமே உடல் ஒழுக்கத்தைக் கொடுக்கும். இதுவே உறக்க ஒழுக்கம், உணவு ஒழுக்கம், கவன ஒழுக்கம் என அனைத்து ஒழுக்கத்திற்கும் அடிப்படை. அதே போல் விளையாட்டு நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ள, மன ஒழுக்கம் மிகவும் இன்றியமையாதது. ஒரு சிறந்த விளையாட்டு வீரராக, மன ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும்.

உளவியல் நுணுக்கங்கள்

➜ தியானம்(Meditation)
➜ சிறப்பு நுணுக்கங்கள்
➜ உளவியல் சம்பத்தப்பட்ட விளையாட்டுக்கள்(Chess,Sudoku)
➜ Visualisation
➜ வலிமை,பலவீனங்களை அறிவது

தியானம்

உங்கள் உளவியலை வலிமைப்படுத்த தியானம் மிக முக்கியமான ஒன்று. முதலில் மனதை ஒருமுகப்படுத்தவும், பின்பு எப்படி கடினமான சூழ்நிலைகளை கையாள்வது வரை அனைத்துக்கும் ஒரு விளையாட்டு வீரர் செய்ய வேண்டிய பயிற்சி தியானம். இப்பயிற்சியை சிறுவயது முதலே செய்தால், உங்கள் குழந்தையின் உடல், உளவியல் ஒழுக்கங்கள் வலுப்படும்.

சிறப்பு நுணுக்கங்கள்

ஒவ்வொரு விளையாட்டிற்கென தனித்தனி சிறப்பு உளவியல் நுணுக்கங்கள் உள்ளன. அதை உங்கள் கற்றுக் கொள்ள நீங்கள் உதவ வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒவ்வொருவரின் மனதிலும் Self 1 மற்றும் Self 2 (சுயம் 1,சுயம் 2) என இரு சுய குரல்கள் ஒலிக்கும். Self 1 என்ற குரல், உன்னால் ஒரு விஷயத்தை செய்யவே முடியாது எனக் கூறிக் கொண்டே இருக்கும். ஆனால் Self 2 அந்த விஷயத்தை எவ்வாறு முடிக்கலாம் எனவும் அதே போல் Self 1 கூறும் எதிர்மறை எண்ணங்களை முறியடித்து, அவ்விஷயத்தை வெற்றிகரமாக முடிக்கும். ஆனால் இதில் Self 1 ன் பங்கும் மிக முக்கியமாகும். அதுவே சவாலான, திறமையான Self 2 யை உருவாக்குகிறது. இப்படி எத்தனையோ உளவியல் நுணுக்கங்கள் உள்ளன. அவை எல்லாவற்றையும் அறிதலும், கற்றலும் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக அவசியம்.

உளவியல் சம்மந்தப்பட்ட விளையாட்டுகள்

Chess, Sudoku போன்ற விளையாட்டுகள் உங்கள் மூளைக்கு அதிகம் வேலை தரக் கூடியவை. எனவே நீங்கள் இவ்வகையான விளையாட்டுகளை விளையாடுவதால் ஒரு கடினமான விஷயத்திற்க்கான தீர்வு அறிவதில் மூலம் உங்கள் மனோபலம் மேம்படுகிறது. ஆகையால் இவ்வகையான விளையாட்டுகள் உங்களை உளவியலை பலப்படுத்தும்.

Visualisation(காட்சிப்படுத்தல்)

எந்தவொரு வெற்றி பெற்ற விளையாட்டு வீரரைக் கேட்டாலும், அவர்கள் இந்த Visualisation என்ற உளவியல் நுணுக்கம் மிகச் சிறந்தது எனக் கூறுவார்கள். ஒரு விளையாட்டு வீரர், அவர் விளையாடப் போகும் எதிர் வீரர், அவரை எப்படி கையாள்வது, ஆடுகளத்தைக் கணிப்பது, எனப் பல்வேறு விஷயங்களை Visualise செய்து பார்ப்பார்கள். ஆராய்ச்சிகளின்படி, இந்த உளவியல் நுணுக்கம் வெற்றியாளர்களின் நுணுக்கம் என அறியப்படுகிறது.

வலிமை மற்றும் பலவீனங்கள்

உங்கள் வலிமை, பலவீனம் அறிந்து வைத்திருப்பது உங்களை உளவியல் ரீதியாக வலுப்படுத்தும். அதே போல் உங்கள் எதிர் வீரரின் வலிமை, பலவீனம் அறிவதும் உங்கள் உளவியலை வலுப்படுத்தும். எனவே வலிமை, பலவீனங்கள் என்ன என்பதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுதல் அவசியம். இதன் மூலம், போகப் போக உங்கள் பலவீனங்கள் குறைந்து வலிமைகளை அதிகரிக்கும். இதனால் உங்கள் உளவியல் வலுப்படும்.

மேற்கூறிய உளவியல் நுணுக்கங்கள் எல்லாம் மிக மிக முக்கியமானவை. இதை எல்லாம் சிறுவயதிலிருந்தே பின்பற்றினால் உங்கள் குழந்தைகளின் உளவியல் வலுப்பெறும் என்பது மறுக்க முடியாத உண்மை.

தொடரும்

ADVERTISEMENT
ADVERTISEMENT