11. ஒரு விளையாட்டு வீரரானால் சம்பாதிக்க முடியுமா?

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும்,அவர்களின் பெற்றோர்களுக்கும் வரும் முதல் கேள்வி
11. ஒரு விளையாட்டு வீரரானால் சம்பாதிக்க முடியுமா?

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் வரும் முதல் கேள்வி விளையாட்டு வீரரானால் சம்பாதிக்க முடியுமா என்பது. சொல்லப் போனால், இது ஒரு மிகப்பெரிய கேள்வி. இந்த கேள்விக்கு விடை தெரிந்தாலும் நம் மனதில் ஒரு கேள்வி எப்பபோதுமே நிலைத்திருப்பதுண்டு. அது வருமானம் எப்போது வரும் மற்றும் அது எவ்வளவு என்பதே. அதே போன்று நிலையான வருமானம் கிடைக்குமா என்ற கேள்வியும் உண்டு. இது ஒரு பக்கம் என்றால் ,பெற்றோர் மனதில் தோன்றும் இன்னொரு கேள்வி, எவ்வளவு செலவாகும் என்ற ஒன்று. ஆம், நம் நாட்டைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சுமை. ஏனெனில் நம் நாட்டில் ஒரு விளையாட்டு வீரரை உருவாக்குவதென்பது மிகவும் செலவு வைக்கக் கூடிய, விலையுயர்ந்த விஷயமாகும். இதனாலேயே கிட்டத்தட்ட 75% தங்கள் குழந்தைகளின் விளையாட்டுக்கு கனவைத் தவிர்க்கின்றனர்.

நம் நாட்டில் சுமார் 70% விளையாட்டு வீரர்களின் திறமை கண்டறியப்படாமலே போகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதே போல் அரசாங்கமும் ஒரு விளையாட்டு வீரருக்கான சரியான சலுகைகள், மைதானங்கள், பயிற்சிக்கு கூடங்கள் என செய்து தருவது மிகக் குறைவு. இப்படி இருக்கையில் எவ்வாறு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட்டில் ஆர்வம் காட்ட ஊக்குவிப்பார்கள்? உதாரணமாக, ஒலிம்பிக் போட்டிகளில் நம் இந்தியாவிற்க்காக ஒரேயொரு தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா எப்படிப்பட்ட பயிற்சிகள் எடுத்தார், அதற்கு எவ்வளவு செலவானது என்பது நமக்கெல்லாம் தெரியுமா? அக்காலகட்டத்தில் துப்பாக்கி சுடுதலுக்கான பயிற்சிக்கு கூடங்கள், பயிற்சியாளர்கள் என ஒன்று கூட இல்லை. இதற்கான பயிற்சிகள் அனைத்துமே அவர் வெளிநாட்டில் பெற்றது, சொல்லப் போனால் அவரின் பயிற்சியாளரும் ஒரு வெளிநாட்டவர். இதற்கெல்லாம் ஆன செலவுகளை அவர் தந்தையே முழுமையாக செய்தார். இதற்கான செலவுகள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இப்படிப்பட்ட பயிற்சிகளை எடுக்க முடிந்ததாலேயே, அவர் தங்கப்பதக்கத்தை எளிதாக வென்றார். ஆனால் ஒவ்வொருவராலும், இப்படி செலவு செய்ய முடியுமா என்பதே இங்குள்ள கேள்வி. இந்த நிலைமை இந்தியாவில் உள்ள அனைத்து விளையாட்டு வீரருக்கும் இருக்கிறது.

இந்தியாவில் ஒரு விளையாட்டு வீரராவது என்பது பெரும்போலானோருக்கு எட்டாத கனியே. ஏனெனில், ஒரு விளையாட்டு வீரருக்கு எவ்வளவு திறமை இருந்தாலும், அதற்கான மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் நுணுக்கங்களை கற்க வேண்டும். இதற்கான செலவுகள் மிக அதிகம். ஆம், இங்கு திறமை மட்டுமிருந்தால் போதாது, அந்த திறமையை பன்மடங்கு வளர்த்துக் கொள்ள செய்ய பேண்டியை செலவுகள் ஏராளம். எனினும், அரசாங்கமும், சில அரசு சாரா அமைப்புகளும் (NGO) விளையாட்டு வீரர்களுக்கு உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், உதவி செய்யப்பட வேண்டியவர்கள் இன்னும் ஏராளம்.

இத்தடைகளையெல்லாம் தாண்டி, நீங்கள் விளையாட்டு வீரராகிவிட்டால் வருமானம் எப்படி கிடைக்கும் என்பதை பார்ப்போம். ஒரு விளையாட்டு வீரன் விளையாட்டுக்கு காலம் சராசரியாக 10-12 ஆண்டுகள் மட்டுமே. இதற்குப் பிறகான வாழ்க்கை அவர் இந்த இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறார் என்பதை பொறுத்தே உள்ளது. எந்த ஒரு விளையாட்டிலும் நீங்கள் தரவரிசையில் முதல் "100" இடங்களில் இருந்தாலே, கணிசமான வருமானத்தை ஈட்டலாம். உதாரணமாக, நம் நாட்டில் அதிக வருமானம் தரக் கூடிய விளையாட்டு "கிரிக்கெட்". இதில் நீங்கள் "Domestic" கிரிக்கெட் எனப்படும் 'ரஞ்சி' போட்டிகள் வரை விளையாடினாலே, உங்களுக்குத் தேவையான வருமானம் கிடைக்கும்.இதுபோக, இன்றைய காலகட்டத்தில் ஓவொரு விளையாட்டிலும் 'IPL' போன்ற நிறைய 'League' விளையாட்டுகள் உள்ளன. இதன்மூலமும், நீங்கள் கணிசமான வருமந்தாகி ஈட்ட முடியும்.

நீங்கள் ஒரு திறமையான விளையாட்டு வீரராக இருந்தால், உங்களுக்கு அரசாங்கமும் கௌரவ பதவிகளை வழங்குகிறது. அதேபோல், விளம்பரங்கள் மூலமும் நீங்கள் வருமானம் ஈட்டலாம்.ஆனால், இதையெல்லாம் நீங்கள் ஒரு திறமையான விளையாட்டு வீரரானால் மட்டுமே முடியும் என்பதை வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல், நீங்கள் உங்கள் திறமையை சரியாக வெளிப்படுத்தினால் உங்கள் விளையாட்டுக்கான செலவுகளை ஏற்கக் கூடிய 'Sponsor' களும் கிடைக்கக்கூடும். எனவே திறமையாக விளையாடுங்கள் உங்கள் விளையாட்டுக்கான செலவுகளை ஏற்க 'Sponsor' கல் கூட்டமே உங்களைத் தேடி வரும்.

இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில், மத்திய பிரதேசத்திலிருந்து ஒரு வீடியோ வைரலானது. இதில் ரமேஸ்வர் குஜ்ஜர் என்பவர் வேகமாக ஓடி, இந்திய ஓட்டப்பந்தய சாதனையை முறியடித்துள்ளார். அதுவும் காலணி (Shoes) கூட அணியாமல். இப்போது அவர் அரசாங்கத்தால் கவனிக்கப்பட்டு SAI (Sports Authority of India) எனும் அரசாங்க விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறார். இதற்கான அணைத்து செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுள்ளது. இது போன்ற அதிசயங்களும் சில சமயங்களில் நடப்பதுண்டு. எனவே, நீங்கள் ஒரு திறமையான விளையாட்டு வீரராக இருந்தால் வாய்ப்புகளும், வருமானமும் உங்களை தேடி வரும் என்பதற்கு இதுவே நிரூபணம்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com