10. எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவே கூடாது!

தன்னம்பிக்கை இல்லை என்றால், நாம் தாமாக எழுந்து கூட நிற்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.
10. எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவே கூடாது!

தன்னம்பிக்கை இல்லை என்றால், நாம் தாமாக எழுந்து கூட நிற்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. நம் அன்றாட வாழ்வில் கூட இதற்கான நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு. இந்நிலையில் ஒரு விளையாட்டு வீரருக்கு, எவ்வளவு தன்னம்பிக்கை இருக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

கடந்த வாரங்களில் நாம் பார்த்த ஒவ்வொரு விஷயமும், தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் உருவாக உதவும். ஆம், மேற்கூறிய அத்தனை விஷயங்களையும் நீங்கள் செய்யும் பட்சத்தில் தன்னம்பிக்கையை நீங்கள் பெற முடியும். ஏனெனில், ஒரு விஷயத்தில் நீங்கள் வல்லவராக வேண்டுமெனில் அதைத் திரும்பத் திரும்ப சரியாக செய்ய வேண்டும்.

உலகெங்கிலும் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகளின்படி, ஒரு விஷயத்தில் நீங்கள் வல்லவராக வேண்டுமெனில் அதை குறைந்தபட்சம் 10000 முறையாவது செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த விஷயம் / செயலை எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் செய்ய முடியும். இது போல், திரும்பத் திரும்ப செய்வதால் தன்னம்பிக்கை கூடும். எனவே ஒவ்வொரு விளையாட்டு நுணுக்கங்களையும் நீங்கள் திரும்பத் திரும்ப செய்து உங்களின் விளையாட்டிற்கான தன்னபிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது, உங்களின் விளையாட்டு உள்வாங்கலை (Adaptation) மேம்படுத்தும். அதனால் விளையாட்டு நுணுக்கங்கள் அத்துப்படி என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.

இப்போது இதைத் தவிர்த்து ஒரு விளையாட்டு வீரராக எப்படி தன்னம்பிக்கையை வளர்த்துக் பாப்போம். இதற்கு மிக முக்கயமாக செய்ய வேண்டியது, உங்களின் செயல்களின் மீது சந்தேகப்பட்டுக் கொண்டே இருங்கள். ஆம், எத்தகைய சூழ்நிலையிலும், உங்களால் அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள முடியுமா, அதை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என உங்களை கேட்டுக் கொண்டே இருங்கள். இப்படி உங்களை நீங்கள் கேள்வியெழுப்புவதன் மூலம், நீங்கள் அதை ஆராயத் தொடங்குவீர்கள். அப்போது அந்தச் சூழ்நிலையின் ஆதாயங்கள், பாதகங்கள் என்னென்ன என்ற தெளிவு பிறக்கும். அந்தத் தெளிவு வந்தபின் அவ்விஷயத்தை நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் செய்வீர்கள். இம்மாதிரியான சூழ்நிலைகளை திரும்பத் திருப்ப எதிர்கொள்வதால் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதேபோல், நீங்கள் அந்தச் சூழ்நிலையில் எடுத்த முடிவு தவறாகப் போனாலும், அதுவும் ஒருவித நம்பிக்கையைத் தரும். காரணம், அடுத்த முறை இதே மாதிரியான சூழ்நிலைகளில், எது தவறு, எது சரி என முடிவெடுக்கக் கூடிய துணிச்சலை அந்த அனுபவம் தரும்.

நாம் கடந்த வாரம் பார்த்த விமர்சனங்கள் ஒரு விளையாட்டு வீர்ருக்கு தன்னம்பிக்கையை கொடுக்கவும் செய்யும், கெடுக்கவும் செய்யும். ஆம்,  விமர்சனம் என்பதை உங்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே  விளையாட்டு வீரர்கள் பார்க்க வேண்டும். எந்தவொரு விளையாட்டை எடுத்துக் கொண்டாலும், நீங்கள் அந்த விளையாட்டில் எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் உங்களின் மீது விமர்சனம் என்பது வைக்கப்படும். சில நேரங்களில் இவ்வகையான விமர்சனங்கள் உங்கள் தன்னம்பிக்கையை அழிக்கக்கூடும். இன்னும் சொல்லப் போனால் மிகப் பெரிய ஜாம்பவான்கள் கூட தன்னம்பிக்கையை இழந்து தவித்திருக்கிறார்கள். அனால், அவர்கள் திரும்பத் திரும்ப முயற்சி செய்து தன்னம்பிக்கையுடன் உழைத்து மறுபடியும் வென்றுவிடுவார்கள். இதனாலேயே இவர்கள்  மிகப் பெரிய ஜாம்பவான்கள் (Great Legends) என அழைக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இந்நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இந்நிலையில் இருந்து மீண்டு எப்படி தன்னம்பிக்கையோடு வருகிறீர்கள் என்பதை பொறுத்தே ஜாம்பவான்கள் உருவாகிறார்கள். இப்படியான மீண்டு வருதல்கள் (Come Backs) அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் மேலும் அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, ரோஜர் பெடெரெர் (Roger Federer) டென்னிஸ் உலகின் மிகப் பெரிய ஜாம்பவான், இதை ஆங்கிலத்தில் GOAT (Greatest of All Time) என அழைப்பார்கள். ஆனால், இவர் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு எந்தவொரு கிராண்ட் ஸ்லாம் (Grand Slam) போட்டிகளையும் வெல்லவில்லை. இந்த காலகட்டத்தில், இவரைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவர் கதை முடிந்தது, ஆடுகளத்தில் மிகவும் மெதுவாக இருக்கிறார் என எத்தனையோ விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் விமர்சனங்களால் விளையாட்டில் நம்பிக்கையை இழக்கவில்லை அவர். மிகக் கடுமையாக உழைத்தார். இப்போது அவர் 39 வயதிலும் கிராண்ட் ஸ்லாம்களை வெல்கிறார். அவரை விட வயது குறைந்ததவர்களுக்கும் கூட சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.

இங்கே நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாதென்பதுதான். மற்றொரு எடுத்துக்காட்டு Ironman எனும் உலகப் புகழ் பெற்ற Triathlon போட்டிகள். இப்போட்டியில் வெற்றி பெற நீங்கள் சைக்ளிங், மாரத்தான் ஓட்டம், நீச்சல் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். இவ்வகை விளையாட்டுகள் மிகவும் கடினமானவை. இவ்விளையாட்டு ஒரு தந்தை தன் மகனுக்காகப் பங்கேற்றார். அவரின் மகன் ஒரு விபத்தில், இடுப்புக்குக் கீழே உள்ள மீதம் உடலை இழந்து விட்டார். இப்படி ஆகிவிட்டால் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கை. எனவே இவருடைய தந்தை தன மகனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும்விதமாக அவரைத் தன முதுகில் ஏற்றிக் கொண்டு 250 கிமீ சைக்ளிங், 42 கிமீ மாரத்தான் ஓட்டம், கடலில் 7.5 கிமீ நீச்சல் என அனைத்தையும் தன மகனை முதுகில் ஏற்றிக் கொண்டு செய்து முடித்தார். தனது மகனுக்கு தன்னம்பிக்கை கொடுக்கவே இதை செய்தார் எனக் கூறினார். அவர் தன் மீது எவ்வளவு தன்னம்பிக்கை வைத்திருந்தால் இதை செய்திருப்பார் என யோசியுங்கள். தன்னம்பிக்கை இருந்தால் எதுவுமே சாத்தியம் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது.

உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள Motivational Video பார்ப்பதும், அத்தகைய புத்தகங்கள் படிப்பதும் நல்லது. ஆகவே, தன்னம்பிக்கையை வளர்ப்போம் பார் புகழும் விளையாட்டு வீரராவோம்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com