28. எம்பிராந்திரி சம்மந்தி என்றால் என்ன?

ஆவியில் வெந்து எடுக்கக் கூடிய ஒரு சுவையான பண்டம் இது.
28. எம்பிராந்திரி சம்மந்தி என்றால் என்ன?

108)  சக்கை கும்பிளப்பம்

ஆவியில் வெந்து எடுக்கக் கூடிய ஒரு சுவையான பண்டம் இது. பாலக்காட்டைச் சேர்ந்த என் அலுவலகத் தோழி ஒருவர் மூலம்தான் இதன் சுவையை அறிந்து அவரிடம் செய்முறை கேட்டுத் தெரிந்து கொண்டேன். பாலக்காட்டில் இதை மூடல் கொழக்கட்டை அல்லது கும்பிளப்பம் என்பார்கள். தெரளியப்பம் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. பச்சையாக இருக்கும் பிரிஞ்சியிலைதான் தெரளி இலை. இதற்கென்று ஒரு தனி வாசம் இருக்கும். இனி இதை எப்படி செய்வதென்றும் பார்ப்போம். சக்கைப்பழம், நேந்திரம் பழம் என்று எதில் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். உங்கள் விருப்பம் அது. தெரளி இலை இல்லாவிட்டாலும் வாழையிலையிலும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

நன்கு கனிந்த சக்கைப் பழம். – 15

வெல்லம்  - ஒரு கோப்பை

வெள்ளை புட்டுப்பொடி – இரண்டு கோப்பை (இரண்டு கோப்பை அரிசியைக் களைந்து உலர்த்தி மிக்சியில் அரைத்து (புட்டுப்பொடி போல) வாணலியில் ஐந்தாறு நிமிடம் வறுத்தும் இரண்டு கோப்பை அரிசி மாவு தயாரித்துக் கொள்ளலாம்.

தேங்காய் துருவியது – ஒரு கோப்பை

ஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன்

சீரகப்பொடி – ஒரு ஸ்பூன்

தெரளி இலை அல்லது கையளவு நறுக்கிய வாழையிலை அல்லது அரச இலை – 15

செய்முறை

பத்து சக்கைப் பழங்களை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். மீதமிருக்கும் ஐந்து சக்கைப் பழங்களை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை முக்கால் கோப்பை நீர் விட்டு கரைத்து வடிகட்டி வாணலியில் ஊற்றி கொதிக்கவிட்டு வெல்லப்பாகு தயாரித்துக் கொள்ளவும். வெல்லப்பாகில் ஏலக்காய்ப் பொடி சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பேசினில் முதலில் அரிசிப் பொடியைப் போட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் சக்கைப்பழம், நறுக்கி வைத்திருக்கும் சக்கை, தேங்காய்த் துருவல் சீரகப்பொடி இவற்றைப் போட்டு கடைசியாக வெல்லப்பாகையும் அதில் ஊற்றி எல்லாவற்றையும் நன்கு பிசைய வேண்டும். தேவை என்றால் கொஞ்சம் நீர் சேர்த்தும் முறுக்குமாவு பிசைவது போல பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு தெரளி இல்லை வைத்திருப்பவர்கள் அதை பொட்டலம் மாதிரி மடித்து  இந்த மாவை அதனுள் உருட்டி வைத்து இலையின் காம்பை அதனுள் செருகி  பிரியாமல் வைக்கவும். இந்த இலை கிடைக்காதவர்கள் வாழையிலையில் இதை உருட்டி வைத்து அதை இரண்டாய் மடித்து மீத மூன்று பக்கத்தையும் மடித்து குப்புறக் கவிழ்த்து வைக்கவும். இப்படி எல்லாவற்றையும் இலையில் உருட்டி வைத்ததும் இட்லிப்பானையில் இலைகளை இட்லித்தட்டில் அடுக்கி வைத்து ஒரு அரைமணி நேரம் வேகவிடவும். பிறகு திறந்தால் கமகம மூடல் அப்பம் ரெடி.

தெரளி இலைக்கென்று ஒரு மணம் இருப்பதால் அந்த இலையில் வைத்து வேக வைக்கப்படும் அப்பத்தில் அந்த இலையின் மணமும் இறங்கி சுவையைக் கூட்டும் என்பதால்தான் தெரளி இலையில் வைப்பார்கள். ஆனால் எந்த இலையில் செய்தாலும் அதன் சுவை நன்றாகவே இருக்கும்.

கேரளத்தில் ஆற்றுகால் பகவதி கோவிலில் பொங்கால் வைக்கும் வைபவம் விமரிசையாக ஆண்டுதோறும் நடக்கும். லட்சக்கணக்கான பெண்கள் இதில் கலந்து கொண்டு கோவிலைச் சுற்றி இடம் பிடித்து பொங்கால் வைப்பார்கள். அப்போது இந்த தெரளி அப்பமும் செய்வார்கள்,

109)  அம்மிணி கொழுக்கட்டை

பொதுவாக விநாயகர் சதுர்த்தி அன்று உப்பு, கார கொழுக்கட்டைகள் செய்தது போக மீதமிருக்கும் வெள்ளை மாவில், உப்பு காரம் எல்லாம் சேர்த்து செய்வதுதான் இந்த அம்மிணி கொழுக்கட்டை. இதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு (கொழக்கட்டை மாவு) – இரண்டு கோப்பை

தேங்காய் துருவல் – ஒரு கோப்பை

மிளகாய்த் தூள் – உங்களுக்கு தேவையான காரத்திற்கேற்ப, ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன்

பெருங்காயம் – சிறிது

உப்பு – தேவையான அளவு

கடுகு – ஒரு ஸ்பூன்

வெளிச்செண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் வெளிச்செண்ணெய் விட்டு அது சுட்டதும், கடுகு போட்டு வெடித்ததும், பெருங்காயத் தூளும், கறிவேப்பிலையும் சேர்த்து, ஒரு கப் மாவிற்கு இராண்டு கப் தண்ணீர் என்ற அளவில் அதில் நீர் ஊற்றி கொதிக்க விடவும். ஒரு ஸ்பூன் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றவும். இப்படி செய்தால் கொழக்கட்டை மாவு கட்டி தட்டாமல் வரும். தண்ணீர் கொதித்ததும் அதில் மிளகாய்த் தூள், உப்பு, தேங்காய்த் துருவல், அரிசிமாவு எல்லாவற்றையும் போட்டு, அடுப்பை அணைத்து விட்டு நன்றாக கிளறவும். இப்போது கொழக்கட்டை மாவு ரெடி. கைகளில் கொஞ்சம் வெளிச்செண்ணெய் தடவிக்கொண்டு இந்த மாவை சீடை போல உருட்டி இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடம் வேக வைத்து எடுத்தால் அம்மிணி கொழக்கட்டை ரெடி. தேநீர் சமயத்தில்கூட இதை சாப்பிட்டு சூடான தேநீர் அருந்தலாம்.

மிளகாய்த் தூளுக்கு பதிலாக நான்கைந்து பச்சை மிளகாய்களை அரைத்து விட்டும் இதே கொழக்கட்டையை செய்யலாம்.

110)  பொள்ள வடை:

இதுவும் ஒரு வகை தேநீர் நேர நொறுக்குத் தீனிதான்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – நாலு கப்

கடலைப்பருப்பு – அரை கப் 

துவரம்பருப்பு – அரை கப் 

தேங்காய்த் துருவல் – ஒரு கப்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம் சிறிது

பொரிப்பதற்கு வெளிச்செண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பு, துவாரம்பருப்பு இரண்டையும் ஒரு மணிநேரம் ஊறவைத்து, மிக்சியில் போட்டு, அதோடு, காய்ந்த மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து கொஞ்சமாக நீர்விட்டு ஓரளவுக்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். 

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் அரிசிமாவு, தேங்காய்த் துருவல், மிளகாய்த் தூள், வேண்டிய உப்பு, கறிவேப்பிலை  இவற்றையும் சேர்த்து சப்பாத்தி மாவு போல கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். தேவை என்றால் ஒரு கை நீர் தெளித்தும் பிசையலாம். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் பொரிப்பதற்குத் தேவையான வெளிச்செண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சுட்டதும் அதிலிருந்து ஒரு அரைக்கரண்டி எண்ணெய் எடுத்து பிசைந்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து மீண்டும் பிசையவும்.

ஒரு வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி இந்த மாவை சிறு உருண்டை எடுத்து மெலிதாக தட்டை மாதிரி தட்டி எண்ணெயில் எடுத்துப் போட்டு பொரிக்கவும். பப்படம் மாதிரி இருபுறமும் உப்பி பொரியும் இந்த பொள்ள வடை.  கையால் தட்ட வரவில்லை என்றால் இலையில் மாவை வைத்து மற்றொரு எண்ணெய் தடவிய இலையை அதன் மீது வைத்து ஒரு டபராவால் அழுத்தினால் மெலிதாக தட்டை போல ஆகும். பிறகு இதை எடுத்து எண்ணெயில் போட்டால் பூரி மாதிரி இருபுறமும் உப்பியபடி பொரியும்.

111)  பிரெட் போண்டா:

சாதாரண போண்டா அலுத்துப் போனவர்கள் இதைச் செய்து சுவைக்கலாம்.

தேவையான பொருட்கள்

வெள்ளை சாண்ட்விட்ச் பிரட் அல்லது கோதுமை பிரட் – 6 ஸ்லைஸ்

உருளைக் கிழங்கு – கால் கிலோ (இரண்டாக நறுக்கி குக்கரில் வேக வைத்து தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும்)

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக அரிந்து கொள்ளவும்.

பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடுகு – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலி வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பச்சைமிளகாய் நறுக்கியது, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு தாளித்து அதோடு அரை ஸ்பூன் மஞ்சள் தூளும் சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி அது ஓரளவுக்கு வதங்கியதும், உருளைக்கிழங்கு, உப்பு இவற்றை சேர்த்து உருளைக்கிழங்கை லேசாக உடைத்து மசித்துக் கொள்ளவும். பிறகு இவற்றையெல்லாம் சேர்த்து கெட்டியாகக் கிண்டி இறக்கி வைத்துக்கொண்டு, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ளவும். அது சுடுவதற்குள் பிரட் ஸ்லைஸ்களை அதன் நான்கு ஓரங்களையும் மட்டும் கத்தியால் நறுக்கி எடுத்து விட்டு பிரட்டை பேசினில் கொஞ்சம் நீர் வைத்துக் கொண்டு அதில் முக்கி எடுத்து இரண்டு உள்ளங்கைகளுக்கும் இடையில் வைத்து நீரை அழுத்தி வெளியேற்றினால் ரொட்டி இப்போது தளர்வாகும். உருளைக்கிழங்கு மசாலாவை சிறிய உருண்டை எடுத்து உருட்டி பிரட்டின் நடுவில் வைத்து பிரட்டால் மூடி அதனை ஒரு கொழக்கட்டை மாதிரி உருண்டையாக்கி ஒரு தட்டில் வைக்கவும். இப்படியே எல்லா ரொட்டித்  துண்டுகளையும் செய்த பிறகு அவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்..

112)  பிரெட் மில்க் டோஸ்ட்

தேவையானவை – 6 ஸ்லைஸ் பிரெட்

பால் – முக்கால் கப்

சர்க்கரை – இரண்டு டீஸ்பூன் (பாலோடு சேர்த்து கலந்து கொள்ளவும்) இனிப்பு கூட வேண்டுமென்றால் மூன்று ஸ்பூன் கூட போடலாம்.

மஞ்சள் தூள் – சிறிது

நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன் (அல்லது வெண்ணெய் )

அடுப்பை பற்றவைத்து நான் ஸ்டிக் பேனை வைக்கவும். ஒரு பேசினில் சர்க்கரை கலந்த பாலை ஊற்றி அதில் மஞ்சள் தூளையும் சேர்த்து கலக்கவும். ரொட்டித் துண்டுகளை இரு பக்கமும் அதில் முக்கி சட்டென்று எடுத்து சூடான பேனில் வைத்து நெய்யோ, வெண்ணெயோ அதன் மீது வைத்து கருகி விடாமல் லேசான பொன்னிறம் வரும் வரை இருபுறமும் திருப்பிவிட்டு எடுக்கவும். மிகச் சுவையாக இருக்கும் இது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பாலில் பிரெட்டை அதிகம் ஊறவிடாமல் செய்தால்தான் இது சரியாக வரும். ரொம்ப ஊறினால் கூழ் மாதிரி ஆகிவிடும். கவனமாகச் செய்யவும். தேங்காய்ப்பாலில் சர்க்கரை கலந்தும் இதே மாதிரி செய்யலாம்.

எம்பிராந்திரி சம்மந்தி என்பதும் ஒருவகை ரெஸிபிதான். அடுத்த வாரம் வரை காத்திருங்கள்....

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com