14. உங்களுக்குப் பிடிக்குமா பருப்புருண்டைக் குழம்பு?

பச்சை மிளகாய் – நல்ல காரமுள்ளதாக இருந்தால் 3. காரம் குறைவான மிளகாயாக இருந்தால் நான்கு.
14. உங்களுக்குப் பிடிக்குமா பருப்புருண்டைக் குழம்பு?

42) பருப்புருண்டைக் குழம்பு

இந்தக் குழம்பு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பீன்ஸ், கொத்தவரை பருப்புசிலி, பப்படம் போன்றவையும் இதற்கு பெஸ்ட் காம்பினேஷனாக இருக்கும். இனி இதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு – ஒரு கப்.

கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் (இரண்டையும் நன்கு ஊறவைத்துக் கொள்ள வேண்டும்)

புளி – எலுமிச்சம் பழ அளவு

காய்ந்த மிளகாய் – 8

பச்சை மிளகாய் -1 அல்லது இரண்டு

வெல்லம் – சிறு துண்டு

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்குத் தேவையானவை

தேங்காய் – அரை கப் துருவியது

தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன்

வெந்தயம் - அரை ஸ்பூன்

பெருங்காயம் – சுண்டைக்காய் அளவு 

கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை

முதலில் துவரம்பருப்பு அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு இரண்டையும் கழுவி நீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு ஊற வைத்த பருப்புடன், உங்களுக்கு வேண்டிய காரத்திற்கு ஏற்றவாறு இரண்டு அல்லது மூன்று மிளகாய், விருப்பமுள்ளவர்கள் ஒரு பச்சை மிளகாயும், கொஞ்சம் கறிவேப்பிலையும் பருப்புக்குத் தேவையான உப்பும் சேர்த்து கொஞ்சம் நீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

புளியை ஒட்டக் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கட்டி பெருங்காயமாக இருந்தால் முதலில் அதைப் போட்டு அது பொரிந்ததும், தனியா, கடலைப் பருப்பு, வெந்தயம், நான்கு மிளகாய் மற்றும் ஒரு சிறிய பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை இவற்றை வறுத்து அடுப்பை அணைத்ததும் அதிலேயே துருவிய தேங்காயைப் போட்டு லேசாகப் பிரட்டிக் கொண்டு அதையும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை ஏற்றி கரைத்த புளித்தண்ணீரை கொஞ்சம் நீர் சேர்த்து  ஊற்றி, அதில் உப்பு, மஞ்சள் பொடி, சிறிய வெல்லத் துண்டு நன்கு கொதிக்க விடவும். அரைத்த பருப்பை இரண்டு விதமாக கொதிக்கும் குழம்பில் உருட்டி போடலாம்.

மிகவும் அனுபவமும் நம்பிக்கையும் இருப்பவர்கள் பருப்பை சிறு சிறு உருண்டை பிடித்து நேரடியாகவே கொதிக்கும் குழம்பில் போடுவார்கள். உருண்டை வெந்து குழம்பில் மிதக்கத் துவங்கும். உருண்டையைக் குழம்பில் போட்டதும் உடனே கிளறக் கூடாது. கிளறினால் அது உடைந்து கரைய வாய்ப்பிருகிறது.

ஒருவேளை மேற்கண்டவாறு நேரடியாக குழம்பில் உருண்டையைப் போட உங்களுக்குத் தயக்கமாக இருந்தால் அரைத்த மாவை வாணலியில் போட்டு கொஞ்சம் எண்ணெய் விட்டு கொஞ்சம் கெட்டியாக ஆகும்படி சற்று வதக்க வேண்டும். பிறகு அதை உருண்டை செய்து கொஞ்சம் அரிசிமாவில் புரட்டி குழம்பில் போட்டால் உடையாமல் வேகும்.

மேற்கண்ட இருமுறைகளில் உங்களுக்கு எது வருமென்று தோன்றுகிறதோ அதன்படி உருண்டை செய்து குழம்பில் போட்டு நன்கு கொதிக்க விடவும். உருண்டைகள் எல்லாம் குழம்பில் மிதக்கத்துவங்கும்.பிறகு அரைத்த தேங்காய் விழுதையும் அதில் சேர்த்து நன்கு கிளறி விட்டு உப்பு காரம் புளிப்பு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும். தேங்காய் கலவையும் சேர்ந்து ஒரு கொதி வந்து தளைத்ததும் அடுப்பை அணைத்து விடலாம். பிறகு தாளிப்பு கரண்டியில் வெளிச்செண்ணெய் ஊற்றி, கடுகு, மிளகாய், பெருங்காயம், இரண்டாய்க் கீறிய ஒரு பச்சை மிளகாய்  கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து தாளித்து குழம்பின் மீது ஊற்ற வேண்டியதுதான். கமகம உருண்டை குழம்பு ரெடி. தாளிக்கும் போது எதற்கு மஞ்சள் தூள் சேர்க்கிறோம் என்றால் குழம்புக்கு அது மேலும் நல்ல நிறம் கொடுக்கும் என்பதால்தான். இந்த குழம்புக்குத் தொட்டுக் கொள்ளக் கூட ஏதும் தேவையிருக்காது. உருண்டைகlளையே தொட்டு சாப்பிடலாம். வேண்டுமென்றால் அப்பளமோ, பப்படமோ பொரித்துக் கொள்ளலாம்.

                             **************

43) தீயல்

இதைப் பாலக்காட்டு ஸ்பெஷல் எனலாம். சாம்பார் வெங்காயம், வெண்டைக்காய், கத்திரிக்காய், குடைமிளகாய் என்று ஏதேனும் ஒரு காயில் இதைச் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

சாம்பார் வெங்காயம் – 100 gm

பெரிய வெங்காயம் – 1

புளி – நெல்லிக்காய் அளவு

தனியா – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

தேங்காய்த்  துருவல் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயம் – சிறிது

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

மிளகாய் – 1

வெந்தயம் – கால் ஸ்பூன்

வெல்லம் – சிறிது

செய்முறை

சாம்பார் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதோடு ஒரு பெரிய வெங்காயமும் நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். வாணலியில் கொஞ்சம் வெளிச்செண்ணெய் விட்டு வெங்காயத்தை சிவந்து  பொன்னிறமாக மாறும்வரை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். கொள்ளவும். அதே போல் தேங்காயையும் கறிவேப்பிலையையும் எண்ணெய் விடாமல் நன்கு சிவக்க வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் தீயாமல் வறுக்க வேண்டும். பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தனியா, மிளகாய், பெருங்காயம் இவற்றை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

மிக்சி ஜாரில், வறுத்து வைத்திருக்கும், தேங்காய், தனியா, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

புளிக்கரைசல் பச்சை வாசனை நீங்கி நன்கு கொதித்ததும் அதில் அரைத்த கலவையை விட்டு கலந்து மஞ்சளாக நுரைத்து கொதிக்க ஆரம்பித்ததும்  சிவக்க வதக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை அதில் போட்டு மீண்டும்  கொதிக்க விட வேண்டும். புளியுடன் வெங்காயம் நன்கு சேர்ந்து குழம்பு சற்று கெட்டியாகி எண்ணெய் பிரிந்து மிதக்கத் துவங்கும் வரை கொதிக்கவிட வேண்டும். உப்பு புளிப்பு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைத்த. பின்னர் தாளிப்பு கரண்டியில், ஒரு டேபிள் ஸ்பூன் வெளிச்செண்ணெய்  ஊற்றி கடுகு, ஒரு மிளகாய், கால் ஸ்பூன் வெந்தயம், கறிவேப்பிலை இவற்றைத்  தாளித்து அதில் ஊற்றவும்.

ஒருவேளை நீங்கள் வெண்டைக்காய் தீயல் வைக்கிறீர்கள் என்றால் வெண்டைக்காயை பொன்னிறமாக வறுத்து எடுத்து கடைசியில் சேர்க்க வேண்டும்.  வெண்டைக்காய் தவிர இதர காய்கள் என்றால் காயை சிறிது எண்ணெயில் கொஞ்சம் வதக்கி புளித்தண்ணீரை அதிலேயே ஊற்றி கொதிக்க விட வேண்டும். முதலிலேயே தாளித்து காயைப் போட்டு வதக்கியும் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடலாம்.

இந்த தீயலை நெய் சாதத்துடன் தொட்டு சாப்பிட்டால் அமிர்தம்தான். தொட்டுக் கொள்ள பப்படம் பொரித்துக் கொள்ளலாம். ஏதேனும் மெழுக்குபெரட்டியோ, உருளைக்கிழங்கு கறியோ, பருப்புசிலியோ கூட செய்து கொள்ளலாம்.

44)  இருபுளி குழம்பு

அதென்ன இருபுளி என்ற கேள்வி எழும். அதாவது இந்தக் குழம்பில் இரண்டு விதமான புளிப்புச்சுவை கலந்திருக்கும் என்பதால் இருபுளிக் குழம்பு என்ற பெயர் வந்து விட்டது. இதை சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு  வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் என்று எந்தக் காயில் வேண்டுமானாலும் செய்யலாம். நான்கைந்து காய்கள் சேர்த்தும் செய்யலாம். உங்கள் விருப்பம்.

தேவையான பொருட்கள்

சாம்பார் வெங்காயம் – 100 gm

முருங்கைக்காய் – 1

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

கடைந்து வைத்திருக்கும் திக்கான மோர் – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

வெல்லம் – சிறிய கட்டி

வறுப்பதற்கு

காய்ந்த மிளகாய் – 5

துவரம்பருப்பு – ஒன்றரை டீஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

தேங்காய் துருவல் – அரை கப் 

கறிவேப்பிலை – ஒரு கொத்து 

தாளிக்க

கடுகு – ஒரு ஸ்பூன்

மிளகாய் – 1

கறிவேப்பிலை சிறிது

பெருங்காயம் – சிறிது

செய்முறை:

வாணலியில் கொஞ்சம் வெளிச்செண்ணெய் விட்டு துவரம்பருப்பு, மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை இவற்றை சிவக்க வறுத்து அதிலேயே பெருங்காயமும், தேங்காய்த் துருவலும் சேர்த்து தேங்காய் அரைப் பொன்னிறமாக ஆகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை மிக்சியில் போட்டு நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து சிறிது வெளிச்செண்ணெய் ஊற்றி, கடுகு, மிளகாய், கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, அதன் பின் நறுக்கிய முருங்கைக்காயும் சேர்த்து இரண்டு வதக்கு வதக்கிய பிறகு கரைத்து வைத்திருக்கும் புளியை அதில் விட்டு, மஞ்சள் தூள், உப்பு, சிறிது வெல்லம் சேர்த்து பச்சை வாசனை நீங்கி வெங்காயமும் முருங்கைக்காயும் நன்கு வேகும் வரை மூடி, அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். 

அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை, கடைந்து வைத்திருக்கும் மோரில் போட்டு நன்கு கலக்கவும். பிறகு இதை கொதிக்கும் குழம்பில் ஊற்றி நன்கு தளைத்ததும் அடுப்பை அணைத்து விடலாம்.

இந்த குழம்பை உங்கள் விருப்பம் போல சற்று கெட்டியாகவோ அல்லது கொஞ்சம் தளரவோ எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சாதத்தில் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம். கலந்த சாதங்கள்,(சித்ரான்னங்கள்) தோசை இட்லி போன்றவைகளுக்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.

                             ******************

45) தக்காளிக்காய் கூட்டு:

செம ருசியான கூட்டு இது. தக்காளிக்காய் கிடைக்கும் போதெல்லாம் என் அம்மா இதைச் செய்வாள். எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் கூட்டு மிஞ்சவே மிஞ்சாது.

தேவையான பொருட்கள்:

தக்காளிக்காய் – கால் கிலோ.

பாசிப்பருப்பு – அரை கப்

தேங்காய்த் துருவல் – ஒரு கப்

பச்சை மிளகாய் – நல்ல காரமுள்ளதாக இருந்தால் 3. காரம் குறைவான மிளகாயாக இருந்தால் நான்கு.

சீரகம் – ஒரு ஸ்பூன்

பெருங்காயம் – சிறிது

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

தாளிக்க:

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

வெளிச்செண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

தக்காளிக்காயை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். வாணலியில் அவற்றைப் போட்டு தேவையான நீர் விட்டு மஞ்சள் தூளும் உப்பும் போட்டு வேக விடவும். ரொம்பவும்  குழைந்து சிதையாமல் வேக விடவும்.

பாசிப் பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை ஒரு கொத்து இவற்றை மிக்சியில் போட்டு கொஞ்சம் நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

தக்காளிக்காய் வெந்திருப்பதை உறுதி செய்து கொண்டு பாசிப்பருப்பை அதனோடு சேர்த்து, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

தாளிப்பு கரண்டியில் வெளிச்செண்ணெய் விட்டு கடுகு, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதன் மீது ஊற்றவும். புளிப்பு, காரம் உப்பு என கலவையான சுவை கொண்ட கூட்டு இது. இதோடு ஒரு ரசமும் வைத்தால் அன்றைய சமையல் முடிந்து விடும். சப்பாத்திக்கு கூட தொட்டு சாப்பிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com