18 ஆகஸ்ட் 2019

16. பத்திய சமையல்கள்

By வித்யா சுப்ரமணியம்| Published: 06th July 2019 10:00 AM

விருந்து சமையல், சாதாரண சமையல் என்று இதுவரை பார்த்தோம். இனி பத்திய சமையலையும் கொஞ்சம் பார்ப்போம். பத்தியம் என்றால் யார்  யாருக்கு என்ற கேள்வி வரலாம். முற்காலத்தில் வீட்டில் யாருக்கேனும் பிரசவமானால் அந்தப் பெண்ணுக்கு கண்டிப்பாக இரண்டு மாதமாவது பத்திய சமையல்தான் போடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் பிரசவமான பெண்கள் எல்லாவிதமான உணவும் உண்ணலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். என்றாலும் இன்னமும்கூட பத்திய சமையல் செய்து போடும் தாய்மார்களும் உண்டு. அதை விரும்பி சாப்பிடும் பிரசவித்த பெண்களும் உண்டு. காரணம் என்னவென்றால் அந்த உணவு அவ்வளவு சுவையாக இருக்கும். வாய்க்கும், வயிற்றுக்கும் எந்தக் கேடும் செய்யாது. குழந்தைக்கு  வேண்டிய பால் தாய்க்கு சுரக்கும். தாய் உண்ணும் இந்த பத்திய உணவுகளால் பாலருந்தும் சிசுவுக்கு எவ்வித வயிற்றுக் கோளாறுகளும் ஏற்படாது காக்கும். நான் என் பெண்களுக்கு பத்திய சமையல்தான் செய்து போட்டேன்.. இன்னொரு சிறப்பான விஷயம் பிள்ளை பெற்றவர்கள் என்றில்லை, இந்த பத்திய உணவுகளை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்

வீட்டில் யாருக்கேனும், ஜுரம், ஜலதோஷம்,தொண்டைக்கட்டு, வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கேற்றவாறு சில பத்திய உணவுகள் சமைத்துக் கொடுக்கலாம்.

இனி பத்திய சமையல்கள் பற்றி பார்ப்போம்.

துவரம்பருப்பு வாயு என்பதால்,பத்திய சமையல்களில் பொதுவாக பாசிப் பருப்புதான் சேர்க்கப்படும். சிலவற்றிற்கு தாளிப்பு இருக்கும். சிலவற்றிற்குத் தாளிப்பு தேவைப்படாது. மிளகு சீரகம், சித்தரத்தை, திப்பிலி, இதெல்லாம் இதில் உபயோகிக்கப்படும்.

எனக்குத் திருமணமாவதற்கு முன்பு எங்கள் வீட்டில் யாருக்கு பிரசவமானாலும் எனக்கு இரண்டு விதமான சந்தோஷம் ஏற்படும். ஒன்று வீட்டிற்கு புதிதாக ஒரு பூப்போன்ற உயிர் வந்திருக்கிறது. அது உறங்குவதையும், அசைவதையும், கை கால் நீட்டி மடக்கி பூ மாதிரி கிடப்பதையும், மலங்க மலங்க விழித்துப் பார்ப்பதையும், அதன் முகத்தில் திடீரென மலரும் சிரிப்பு, இதழ் பிதுங்க வரும் அழுகை இவற்றையெல்லாம் காணக் காண இன்பம் பெருகும்.

இரண்டாவது காரணம், பிரசவிப்பவர்களுக்காக பிரத்யேகமாக சமைக்கப்படும் பத்திய உணவுகளையும் ருசி பார்க்கலாம். பத்தியம் சாப்பிடுவதற்காகவே பிள்ளை  பெற்றுக் கொள்ளலாம் போலிருக்கே என்பேன் வேடிக்கையாய். இனி பிள்ளைபெத்தா பத்திய சமையல்கள் பற்றி பார்ப்போம். இதை மற்றவர்களும் சாப்பிடலாம் தப்பில்லை.

50) மொளகூஷ்யம்

புடலங்காய், மஞ்சள் பூசணி, பெங்களூர் கத்திரிக்காய், சேனை, வாழைக்காய், கேரட், பயத்தங்காய், அவரைக்காய், பீன்ஸ்  என்று இவற்றில் எந்தவொரு தனி காயிலும் செய்யலாம். அல்லது இரண்டு மூன்று காய்கள் சேர்த்தும் செய்யலாம். எப்படி செய்தாலும் செய்முறை ஒன்றுதான்.

தேவையான காய் ( நாம் நாலைந்து காய் போட்டு செய்வோம்)

சௌ சௌ – 1

மத்தன் (மஞ்சள் பூசணி) கால் கிலோ

பீன்ஸ் அல்லது காராமணி – (ஒரு இன்ச் நீளத்துண்டுகளாக நறுக்கியது அரை  கோப்பை

அவரைக்காய் – நறுக்கியது ஒரு அரை கோப்பை

பாசிப் பருப்பு – ஒரு கோப்பை

மிளகு  – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

மிளகுப்பொடி – ஒரு ஸ்பூன் 

பெருங்காயம் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வெளிச்செண்ணெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை

பாசிப் பருப்பை  கழுவி நீர்விட்டு அரை ஸபூன் நல்லெண்ணெ சேர்த்து  குக்கரில் வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்களை எல்லாம் கழுவி நறுக்கிக் கொண்டு ஒரு வாணலியில் வேண்டிய நீர் ஊற்றி, ஒரு சிறிய ஸ்பூன் மிளகுப் பொடியும், உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து நன்கு வேக விடவும்.

மிளகு சீரகத்தை ஒன்றும் பாதியுமாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.

காய்கள் நன்கு வெந்ததும் பாசிப்பருப்பை நன்கு மசித்து காயில் சேர்க்கவும். ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல், ரொம்ப நீர்க்கவும் இல்லாத அளவுக்கு வேண்டிய தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பெருங்காயமும் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறி விடவும். கொதிக்கும் போது பொடித்து வைத்திருக்கும் மிளகு சீரகப் பொடியைப் போட்டு கிளறி, அடுப்பை அணைத்து மேலே ஒரு ஸ்பூன் வெளிச்செண்ணெய், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து மூடிவிடவும். இதற்கு தாளிப்பு தேவையில்லை. வேண்டுமென்றால் ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகத்தை தாளிக்கலாம்.

பிள்ளை பெற்றவர்களுக்கு பசி அதிகமாக இருக்கும். சாதத்தில் தாரளமாக உருக்கிய நெய் ஊற்றி இந்த மொளகூஷ்யத்தை சாதத்தோடு பிடித்து  சாப்பிட்டால் அந்த ருசியே தனிதான். இன்னும் இன்னும் என்று சாப்பிடத் தோன்றும். இதிலேயே காய்கள் இருப்பதால் இதற்குத் தனியே எதுவும் தொட்டுக் கொள்ளக் கூடத் தேவையில்லை. ஏதேனும் வேண்டும் என்று விரும்புகிறவர்கள் மிளகு குழம்பு வைத்து அதை இதற்கும், மிளகு குழம்பு சாதத்திற்கு மொளகூஷ்யத்தையும் பரஸ்பரம் தொட்டு சாப்பிடலாம்.

அடுத்தது பிரசவித்த பெண்கள் சாப்பிடும்படியான ஒரு மிளகு குழம்பும் பருப்புத் துவையலும் எப்படி செய்வதெனப் பார்ப்போம். இது ஒரு சூப்பர் காம்பினேஷன் சமையல். பிரசவமான பெண்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே இது ஒரு நல்ல மருந்துணவு எனலாம்.

51) மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்

புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு

மிளகு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன் – கட்டிப் பெருங்காயம் என்றால் ஒரு சுண்டைக்காய் அளவு

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

வெல்லம் – சிறு கட்டி 

கறிவேப்பிலை – ஐந்தாறு கொத்து (கறிவேப்பிலை நிறையவே சேர்க்கலாம். உருவினால் அரை கப்பாவது இருக்க வேண்டும்)

நல்லெண்ணெய் – மூன்று அல்லது நான்கு டேபிள் ஸ்பூன். (இதற்கு எண்ணெய் கூடுதலாக இருந்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது. ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடலாம். மிளகிற்கு கபத்தைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு என்பதால் உடலுக்கு நல்லது.

செய்முறை:

புளியை கெட்டியாக ஓட்டக் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு 2 மிளகாய், மிளகு, உளுத்தம்பருப்பு பெருங்காயம், அரை கப் கறிவேப்பிலை இவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவும். கட்டிப் பெருங்காயம் என்றால் முதலில் போட்டு வறுக்கலாம். பொடி என்றால் இறுதியில் சேர்க்கவும்.

வறுத்தவற்றை மிக்சியிலிட்டு பொடியாகப் பொடித்துக் கொள்ளவும். ரொம்ப மாவாகவும் இல்லாமல், ரொம்ப கரகரப்பாகவும் இல்லாத ஒரு பதத்தில் பொடிக்கவும்.

வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு மிளகாய், சீரகம் போட்டு தாளித்து அதில் புளிக்கரைசலை விடவும். தேவையான உப்பும் மஞ்சள்தூளும், சிறு வெல்லக் கட்டியும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை மறைந்து நன்கு கொதித்து வற்றிவரும். உப்பு, புளிப்பு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு, பொடித்து வைத்திருக்கும் மிளகுப் பொடியை அதில் கட்டி தட்டாமல் சேர்த்து கலந்து ரொம்ப இறுகிப் போயிருந்தால் கொஞ்சம் சுடுநீர் ஊற்றி கலந்து சிறிது நேரம் கொதிக்க விட்டு. மீதமிருக்கும் நல்லெண்ணெயை அதன் மீது ஊற்றி, அடுப்பை அணைக்க வேண்டியதுதான்.. விருப்பப்படுபவர்கள் அப்பளமும் சுட்டுக்கொண்டு இவற்றோடு சாப்பிடலாம். சூடான சாதத்தில் உருக்கிய நெய்யை கொஞ்சம் கூடவே ஊற்றிகொண்டு மிளகு குழம்பையும், பருப்புத் துவையலையும் தொட்டு சாப்பிட்டால் வயிறு ஆஹா அஹா என்று வாழ்த்தும்.

52)  பருப்புத் தொகையல்:

பாசி பருப்பு – ஒரு கோப்பை

மிளகு – கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – சிறிது

தேங்காய் துருவியது – ஒரு கைப்பிடி

பெருங்காயம் - சிறிது 

உப்பு – தேவையான அளவு

செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து பாசிப் பருப்பையும், மிளகையும் சிவக்க வறுத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பருப்பு சிவக்க ஆரம்பிக்கும் போது பச்சை மிளகாய் ஒன்றையும், கறிவேப்பிலையையும் அதோடு சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.

மிக்சியில் வறுத்த பொருட்களோடு தேங்காயையும் சேர்த்துப்போட்டு, உப்பு, பெருங்காயம் சேர்த்து கொஞ்சமாக நீர்விட்டு கெட்டியாக கொரகொரவென்று அரைத்து எடுக்கவும். இதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். மிளகுக் குழம்பிற்கு பெஸ்ட் காம்பினேஷன் இது.

53)  கறிவேப்பிலைப் பொடி:

கறிவேப்பிலை ஒரு மிகச் சிறந்த மூலிகை. இது பல நோய்களை சத்தமின்றி தீர்க்கும். இரத்த சோகை, மூலநோய், தலைசுற்றல், வாந்தி, இப்படி பலவற்றிற்கு மிகச் சிறந்த மருந்து இது. உடலுக்குத் தேவையான, வைட்டமின் ஏ, ஈ, சி, மற்றும் எலும்பு உறுதிக்கு தேவையான போலிக் அமிலம் என அனித்தும் உள்ளன. தினம் ஒரு கொத்து கறிவேப்பிலையாவது உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பிரசவித்த பெண்களுக்கு இரத்த இழப்பு அதிகமிருக்கும் என்பதால்தான் அதை ஈடுகட்ட கறிவேப்பிலையை அவர்களுக்கு பலவழிகளில் உணவில் சேர்ப்பார்கள். அதில் ஒன்றுதான் கறிவேப்பிலைப் பொடி. மற்றவர்களுக்கும் இது உடலுக்கு மிகவும் நல்லது. தினம் ஒரு உருண்டை சாதமாவது இந்த பொடி போட்டு சாப்பிட்டால் மிகவும் நல்லது. முடி கொட்டுவது குறையும். உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – மூன்று கோப்பை

மிளகு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பெருங்காயம் – அரை ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் – 1

உப்பு  தேவையான அளவு

செய்முறை :

வாணலியில் சிறிது  எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம் மற்றும் பெருங்காயத்தை முதலில் போட்டு லேசாய் வதக்கி, பின்னர் பருப்பு வகைகளையும், மிளகாயையும்  போட்டு சிவக்க வறுக்கவும். இதை தனியே எடுத்து வைத்துவிட்டு அதே வாணலியில் கறிவேப்பிலையைப் போட்டு நொறுங்கினால் உடையுமளவுக்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் முதலில் மிக்சியில் பருப்பு வகைகளை வேண்டிய உப்பு சேர்த்து முதலில் கொஞ்சம் பொடித்துக் கொண்ட பிறகு அதில் கறிவேப்பிலையையும் சேர்த்து சற்று கரகரப்பாக எல்லாவற்றையும் பொடித்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு காற்று புகாமல் மூடிவைத்துக் கொள்ள வேண்டியதுதான். வெறும் நெய் சாதத்தில் இதைக் கலந்து சாப்பிட, ஜுரம் வந்த வாய்க்கு நன்றாக இருக்கும்.

54)  மொளகு வெள்ளம்:

பிரசவித்த பெண்களுக்கும் காய்ச்சலுற்றவர்களுக்கும் உணவில் நேரடியாக தயிரோ மோரோ சேர்க்க அனுமதிக்க மாட்டார்கள் பெரியவர்கள். ஆனால் அதே மோரை மொளகு வெள்ளமாக்கி கொடுக்கும் போது அது அவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்வதில்லை. என் மாமனார் சற்று உடம்புக்கு முடியவில்லை என்றாலும் உடனே எனக்கு வெறும் மொளகு வெள்ளம் போதும். வேறொன்னும் வேண்டாம்ட்டியா என்பார். அவருக்கு அது மிகவும் பிடிக்கும் என்பதால் சாதாரண நாட்களில் கூட நான் அவருக்கு மோரை மொளகு வெள்ளமாக்கி கொடுத்து விடுவேன். அவர் முகம் மலரும். அப்படி ஒன்றும் கஷ்டமான வேலையுமல்ல அது. ரொம்ப சிம்பிள்தான்.

தேவையான பொருட்கள்

புளித்த மோர் – ஒரு கோப்பை (மோர் ரொம்பவும் நீர்க்க இருக்கக் கூடாது. கொஞ்சம் திக்காக இருக்கட்டும்)

மிளகுத் தூள் – அரை ஸ்பூன் (மிளகாய் ஒன்றும் பாதியுமாகவும் உடைத்துக் கொள்ளலாம்)

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

உப்பு – சிறிது 

கறிவேப்பிலை – நான்கைந்து இலை

வெளிச்செண்ணெய் அல்லது நெய் – ஒரு ஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு ஸ்பூன்

செய்முறை:

ஒரு சிறிய வாணலியில் ஒரு ஸ்பூன் வெளிச்செண்ணெய் அல்லது நெய் ஊற்றி அது சுட்டதும், கடுகு போட்டு அது வெடித்ததும், சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை சேர்த்து அதோடு அரை ஸ்பூன் மிளகுப் பொடி,  உப்பு மஞ்சள் பொடி இவற்றையும் சேர்க்க வேண்டும். பிறகு அதில் மோரை விட்டு லேசாக சூடு வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். மிகவும் கொதித்தால் மோர் திரிந்து விடும். மோர் சாதத்திற்கு பதில் இதை ஊற்றி சாப்பிட்டால் ஜுரம் வந்த வாய்க்கு விறுவிறுப்பாக இருக்கும்.

ருசிக்கலாம்...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

22. விரதங்களும் அவை சார்ந்த உணவுகளும்
22. விரதங்களும் அவை சார்ந்த உணவுகளும்
21.திருவாதிரைக் கூட்டு
20. ஏழு மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு
19. காப்பரிசி செய்வது எப்படி?