24. நோன்பு அடை செய்வது எப்படி?

கொஞ்சம் ஆறியதும் கையால் உருட்டிப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட வேண்டும்.
24. நோன்பு அடை செய்வது எப்படி?



83) உப்பு நோன்படை

தேவையானவை

வறுத்த அரிசிமாவு – இரண்டு டம்ளர்

வெள்ளைக் காராமணி – 100 gm (வறுத்து வேக வைத்துக்கொள்ள வேண்டும்)
தேங்காய் – பல்லு பல்லாக நறுக்கியது இரண்டு டேபிள் ஸ்பூன் (அல்லது துருவியும் சேர்க்கலாம்)
காய்ந்த மிளகாய் – 3
கடுகு – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை
வாணலியில் வெளிச்செண்ணெய் இரண்டு டீஸ்பூன் விட்டு சூடானதும் கடுகு போட்டு அது பொரிந்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு அது சிவக்கும்போது பெருங்காயமும், கறிவேப்பிலையும் சேர்த்து அதில் வேக வைத்திருக்கும் காராமணியையும், நறுக்கி வைத்த அல்லது துருவி வைத்த தேங்காயையும் சேர்த்து ஒரு பங்கு மாவுக்கு இரண்டேகால் பங்கு என்ற
அளவில் தண்ணீர் சேர்த்து, அது நன்கு கொதித்து வரும்போது ஒரு ஸ்பூன் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் சேர்த்து கிளறி விட்டு பிறகு அடுப்பை சிம்மில் மாற்றி, வறுத்து வைத்திருக்கும் அரிசி மாவை அதில் சேர்த்து அடுப்பை நிறுத்தி விட்டு நன்கு கிளற வேண்டும். இதனால் மாவு கட்டி தட்டாமலிருக்கும். மாவு உருண்டு திரண்டு கெட்டியாகும்வரை கிளறவும்.
பிறகு இட்லித்தட்டில் வெளிச்செண்ணெய் தடவி இதை உருட்டி மெலிதான அடையாகத் தட்டி நடுவில் துளையிட்டு ஆவியில் வேக வைக்கவேண்டும். உப்படையோ, வெல்ல அடையோ எதுவாக இருந்தாலும் இதற்கு தொட்டு சாப்பிட பெஸ்ட் காம்பினேஷன் உருகாத வெண்ணெய்தான்.
இந்த நோன்பு முடியும்வரை வேறு எதுவும் சுமங்கலிப் பெண்கள் சாப்பிட மாட்டார்கள். திருமணம் ஆகாத பெண்களும் இந்த நோன்பிருந்து நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு நோன்புச் சரடு கட்டிக்கொள்வது வழக்கம். இந்த ஒரு நோன்பின் போதுதான்
கணவனுக்கு முன்பு மனைவி நோன்படை உண்ணுவது வழக்கம். கழுத்தில் சரடு கட்டிக் கொண்ட உடனே தன் முன்னால் இருக்கும் இலையில் உள்ள அடைகளை நெய்வேத்தியம் செய்து சாப்பிடவேண்டும் என்பதால் அப்படி ஒரு வழக்கம் விரதமிருப்பவர்கள் உண்ணும் சிறப்பு உணவு வகைகள்
ஏகாதசி விரதமாகட்டும், சிவராத்திரி விரதமாகட்டும், சஷ்டி, சதுர்த்தி என்று எந்த விரதமாக இருந்தாலும் விரதமிருப்பவர்கள் தனக்கென்று செய்து சாப்பிடும் ஒன்றிரண்டு ஐட்டங்கள் என்னெவென்றால் பாசிப்பருப்பு பாயசம், கோதுமைக் கஞ்சி, நேந்திரம்பழ நொறுக்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு நொறுக்கு, இவைதான். அந்தக் காலங்களில் எனக்கெல்லாம் விரத
நாட்கள் வந்தால் குஷியாகிவிடும். நான் விரதமிருக்கா விட்டாலும் பெரியவர்கள் அன்று செய்யும் மேற்படியானவை எல்லாவற்றையும் ருசிக்க அது ஒரு சந்தர்ப்பம். காலையோ மாலையோ ஏதேனும் ஒருநேரம்தான் இதை செய்து சிறிதளவு சாப்பிடுவார்கள். வயிறுமுட்ட உண்பதற்கு பெயர் விரதமல்ல அல்லவா?


84) பாசிப்பருப்பு பாயசம்

தேவையானவை

பாசிப்பருப்பு – ஒரு கோப்பை
வெல்லம் – பொடித்தது ஒரு கோப்பை
ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்
முந்திரி, திராட்சை – ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – முக்கால் கப்.

செய்முறை

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி பாசிப்பருப்பை சிவக்க வறுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அது முங்கும் அளவுக்கு நீர் ஊற்றி குக்கரில் வைத்து மூன்று சவுண்டு விட்டு வேகவிடவும்.  வெல்லத்தில் அரை கிளாஸ் நீர்விட்டு கரைத்து வடிகட்டி ஒரு வாணலியில் ஊற்றி கொதிக்கவிடவும். வெள்ளம் நன்கு கொதித்து நுரைத்து வரும்போது பாசிப்பருப்பை மசித்து அதில் போட்டு நன்கு கிளறிவிடவும். தேவையென்றால் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும். பருப்பும்
வெல்லமும் நன்கு கலந்து கொதிக்கும்போது ஏலக்காய் தூள் சேர்த்து தேங்காய்ப்பாலை அதில் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும். சிறிய வாணலி ஒன்றில் நெய் விட்டு முந்திரி திராட்சை இரண்டையும் வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். விரத நாட்களுக்கேற்ற பாயசம் இது. இதேபோல
கோதுமை ரவையிலும் பாயசம் செய்யலாம்.

85) கோதுமை ரவை சாதம்

மலையாள மாசமான விருச்சிக மாதத்தில் வரும் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. விருச்சிக ஏகாதசி என்றும், கைசிக ஏகாதசி என்றும் இதனைக் கூறினாலும் குருவாயூர் ஏகாதசி என்றுதான் இது கேரளத்தில் கூறப்படுகிறது. குருவாயூரப்பனின் அவதாரம் என்று சொல்லப்படும் குருவாயூர்
கேசவன் முப்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு குருவாயூர் ஏகாதசியன்றுதான் அன்ன ஆகாரம் எடுக்காமல் கடைசியாக தன் தும்பிக்கையால் நீரை அள்ளி தன் தலையில் சொரிந்து கொண்டு, கோவில் இருக்கும் திசையை நோக்கி தனது தும்பிக்கையைத் தூக்கி வணங்கியபடி கீழே விழுந்து
தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டது. அதனால் குருவாயூர் ஏகாதசியன்று கேசவனின் நினைவு நாளும்கூட என்பதால் அதற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். தவிர பகவத்கீதை பிறந்த தினமும் அன்றுதான் என்பது கூடுதல் சிறப்பு. இத்தகைய பல்வேறு சிறப்புமிக்க குருவாயூர் ஏகாதசியன்று குருவாயூரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். லட்சக்கணக்கான பக்தர்களால் கோவில் நிரம்பி வழியும். அன்று மட்டும் நாள் முழுவதும் நடை அடைக்கப்படாது. விடிய விடிய குருவாயூரப்பனை தரிசிக்கலாம். அன்று விரதமிருப்பவர்களுக்கு உப்பில்லாத, கோதுமைக் கஞ்சி, கோதுமை பாயசம், கோதுமை சாதம், பழம் ஆகியவை வழங்கப்படும். வெறும் கோதுமை
சாதத்தில் பழம் பிசைந்து உண்பார்கள் விரதமிருப்பவர்கள். விரதம் இல்லாதவர்க்கும்கூட ஊட்டுப்புறையில் அன்று அன்று கோதுமை சாதம்தான் பரிமாறப்படும். அதோடு கூட்டு, கறி, சாம்பார் ஆகியவையும் பரிமாறப்படும்.
குருவாயூருக்கு செல்ல முடியாதவர்களும்கூட குருவாயூர் ஏகாதசியன்று தாங்கள் இருக்கும் இடத்திலேயே விரதம் அனுஷ்டிக்கையில், மேற்படியானவற்றைதான் சாப்பிடுவார்கள்.

கோதுமை ரவை சாதம்

செய்முறை:.

கோதுமை ரவையை சுத்தம் செய்து ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் நீர் விட்டு குக்கரில் வேகவிடவும். விரத நாளில் உப்பு சேர்க்க விரும்பாதவர் இது போல கோதுமை ரவை சாதம் செய்து அதில் பாலும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடலாம்.

86) நேந்திரம் பழ நொறுக்கு

தேவையானவை

நன்கு கனிந்த நேந்திரம் பழம் – 2 அல்லது மூன்று
வெல்லம் – ஒரு கோப்பை
ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை:

நேந்திரம் பழத்தை தோலோடு மூன்று துண்டுகளாக நறுக்கி குக்கரில் நீர்விட்டு ஒரு குக்கர் தட்டில் பழத்துண்டுகளை வைத்து ஒரு சவுண்டு விட்டு வேகவிடவும். வெல்லத்தை அரை கப் நீர் விட்டு கரைத்து வடிகட்டி ஒரு வாணலியில் ஊற்றி கொதிக்க விடவும். அது நன்கு குறுகி நுரைத்து வரும்போது ஏலக்காய் தூள் சேர்த்து, வேக வைத்த பழங்களைத் தோல் உரித்து வெல்லத்தில் சேர்த்து நன்கு கிளறிவிடவும். வெல்லத்தின் நீர் முழுவதும் வற்றி, பழமும் வெல்லமும் ஒன்றோடொன்று நன்கு கலந்ததும் அடுப்பை அணைத்துவிடலாம்.
மிகச்சுவையான பழ நொறுக்கு இது. சர்க்கரை நோயாளிகள் ஆசைக்கு ஒரு சிறிய துண்டு சாப்பிட்டு ஆசையை அடக்கிக் கொள்வது நல்லது.
87) சர்க்கரை வள்ளிக்கிழங்கு நொறுக்கு. நேந்திரம் பழம் எப்படி செய்தீர்களோ அதே செய்முறையில்தான் இதையும் செய்ய வேண்டும்.
****************

சிற்றுண்டி வகைகள்


இட்லி தோசை எல்லோரும் செய்வதுதான். அதைத் தவிர பல ஸ்பெஷல் டிபன் வகையறாக்களும் உண்டு. அவற்றைப்பற்றி பார்ப்போம்
என் அம்மா அடிக்கடி செய்யும் ஒரு டிபன் வெறுமரிசி தோசை. அத்தனை சுவையாக இருக்கும் இது.

88) வெறுமரிசி தோசை.
 

தேவையான பொருட்கள்:
 

சாப்பாட்டு புழுங்கலரிசி – மூன்று கோப்பை
உப்பு வேண்டிய அளவு
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
தேங்காய் – அரை மூடி துருவியது -
முருங்கை இலை உருவி சுத்தம் செய்தது – நான்கு கைப்படி அளவு (முருங்கை இலை சேர்க்காமலும் இந்த தோசை செய்யலாம். முருங்கை இலை நல்ல வாசனையும் சுவையும் கொடுக்கும், உடலுக்கும் நல்லது என்பதால் அதைச் சேர்ப்பது வழக்கம்)
வெளிச்செண்ணெய் – 50 gm

செய்முறை
 

புழுங்கல் அரசியைக் களைந்து நீர் விட்டு நான்கைந்து மணி நேரம் ஊற விடவும். பிறகு மிக்சியில் போட்டு கொஞ்சம் கறிவேப்பிலை உப்பு,சிறிது பெருங்காயம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். கடைசியாக தேங்காய்த் துருவலும் சேர்த்து அரைக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இரண்டு பச்சைமிளகாயும்கூட சேர்த்து அரைக்கலாம். தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். ரொம்ப கெட்டியாக இருந்தால் அதற்கேற்ப தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சூடான தோசைக் கல்லில் மெலிசாக வார்த்து சுற்றிலும் வெளிசெண்ணெய் இரண்டு ஸ்பூன் விட்டு தோசையின் மீது முருங்கை இலைகளை ஒரு கை எடுத்து பரவலாக வைத்து தோசைக்கரண்டியால் அழுத்தி விடவும். அடிப்புறம் வெந்ததும் இதைத் திருப்பிப் போடவும். முருங்கை இலைகள் சீக்கிரமே வதங்கி சிவந்து விடும். தோசை முறுகலாகிச் சிவந்ததும் எடுத்து விடலாம். மாவு ஒரே வேளையில் தீர்ந்து விடும் என்று நினைத்தால் முருங்கை இலைகளை மாவிலேயே போட்டு நன்கு கலந்து விட்டும் தோசை வார்க்கலாம். அல்லது கொஞ்சம் மாவைத்
தனியே எடுத்து அதில் மட்டும் முருங்கை இல்லை கலந்தும் வார்க்கலாம். உங்கள் விருப்பம். முருங்கை இல்லை இல்லாமலும் இந்த தோசை சுவையாக இருக்கும். இந்த தோசையை அப்படியே ஒரு ஸ்பூன் நெய் மட்டும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். தக்காளித் சட்னி அல்லது தொக்கு செய்து தொட்டு சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் இது சுவைக்கும்.

89) உப்புமா கொழக்கட்டை

இதையும் இரண்டு விதமாகச் செய்யலாம். அந்தக் காலத்தில் சிவப்பு புழுங்கலரிசியை கழுவிக் களைந்து மூன்று மணிநேரம் ஊறவைத்து கல்லுரலில் அரைத்து செய்வார்கள். அதன் வாசனையும் ருசியும் அபாரமாக வேண்டும். அதை முதலில் பார்ப்போம்.

தேவையானவை

சிவப்பு புழுங்கலரிசி – இரண்டு டம்ப்ளர் (கழுவி நீர்விட்டு மூன்று மணிநேரம் ஊறவைக்கவும்
தேங்காய் – ஒரு மூடி துருவியது
காய்ந்த மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – ஒரு ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன்
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது

செய்முறை

ஊற வைத்திருக்கும் அரிசியை மிக்சி அல்லது கல்லுரலில் போட்டு ஊறியநீரையே சிறிது சிறிதாக சேர்த்து ரவை பதத்திற்கு நீர்க்க அரைத்துக் கொள்ளவேண்டும். ரொம்ப நைசாக அரைக்க வேண்டாம். அரைத்ததை கரண்டியால் எடுத்து ஊற்றலாம் போல இருக்க வேண்டும். அடுப்பில் வாணலி வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் வெளிச்செண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும், காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், மற்றும், கறிவேப்பிலை, பெருங்காயம் இவற்றையும் சேர்த்து வதங்கியதும், அரைத்து வைத்திருக்கும் அரிசியை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பை சற்று
பெரிதாகி, கை விடாமல் கிளறினால் அரைத்த மாவு உப்புமா பதத்திற்கு உருண்டு திரண்டு கெட்டியாகும். இப்போது தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்துவிடலாம்.

கொஞ்சம் ஆறிய பின்னர் இந்த உப்புமாவை உருட்டிப்பிடித்து இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேகவைக்க வேண்டும். கிளறும்போதே பாதி வெந்திருக்கும் என்பதால் ஆவியில் மீதிப்பாதியும் நன்கு வெந்துவிடும். தேங்காய் சட்டினியோடு சாப்பிடலாம் இதை. அவ்வளவு மணமாக இருக்கும். என் அத்தை அந்தக் காலத்தில் கல்லுரலில் அரைத்து வெங்கலப்பானையில் வைத்து கிளறிப் பண்ணிய உப்புமா கொழக்கட்டையின் ருசி இன்னமும் என் நாவில் இருக்கிறது.

90) மற்றொரு செய்முறை:
 

தேவையானவை
 

பச்சரிசி – ஒரு டம்ளர் (கழுவி உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்).
துவரம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
தேங்காய் – அரை மூடி துருவியது
காய்ந்த மிளகாய் – சிறியது 2
கடுகு – ஒரு ஸ்பூன்
கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை :

அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகம் இவற்றை ரவை பதத்திற்கு மிக்சியில் பொடித்துக்கொள்ள வேண்டும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் வெளிச்செண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இவற்றைத் தாளித்து, அதோடு இரண்டு காய்ந்த மிளகயைக் கிள்ளிப் போட்டு,
கறிவேப்பிலையும் பெருங்காயமும், உப்பும் சேர்த்து ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் நீர்விட்டு நன்கு கொதிக்கவிட வேண்டும். பின்னர் முதலில் தேங்காய்த் துருவலை சேர்த்து பிறகு பொடித்து வைத்திருக்கும் அரிசி ரவையை அதில் கொட்டி உப்புமா கிண்டுவது போல கெட்டியாகும்வரை
கிண்டவேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விடலாம். கொஞ்சம் ஆறியதும் கையால் உருட்டிப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட வேண்டும்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com