22. விரதங்களும் அவை சார்ந்த உணவுகளும்

22. விரதங்களும் அவை சார்ந்த உணவுகளும்

விரதங்களும் அவை சார்ந்த உணவுகளும்
துவாதசி சமையல்
அந்தக்காலங்களில் ஒவ்வொரு ஏகாதசிக்கும் வீட்டில் பெரியவர்கள் விரதமிருப்பார்கள். மறுநாள்
துவாதசி சமையல் மருத்துவ குணம் கொண்டதாகவே இருக்கும். அதிலும் வைகுண்ட ஏகாதசிக்கு
விரதமிருப்பவர்கள், மறுநாள் சூர்யோதயத்திற்குள் துவாதசி பாரணை கொடுத்துவிட்டு விரதத்தை
முடிக்கவேண்டும் என்பது நியதி. இதனால் என் அம்மா நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து
துவாதசி சமையல் செய்ய ஆரம்பிப்பாள். விரதம் ஏதும் இல்லாவிட்டாலும் நாங்களும் சீக்கிரமே
எழுந்து குளித்து சூர்யோதயத்திற்கு முன்பு சாப்பிட உட்கார்ந்து விடுவோம். காரணம் அம்மா
சமைக்கும்போது காற்றோடு கலந்து வந்து நாசியைத் துளைக்கும் அந்த சுவையான துவாதசி
சமையலின் அபார வாசனை நம்மைத் தூங்கவிடாமல் கட்டியிழுக்கும். சமைத்து முடித்து, இருள்
பிரிவதற்குள் அருகிலிருக்கும் மாதவர் கோவிலுக்குச் சென்று பாரணை கொடுத்து தீர்த்தமும்,
துளசியும் வாங்கி வருவாள் அம்மா. பிறகென்ன துவாதசி சமையலை எல்லோரும் ஒரு வெட்டு
வெட்டுவோம்.
ஏகாதசி உபவாசம் இருக்கும்போது வாய் முதல் வயிறு வரை புண்ணாகும் என்பதால் மறுநாள்
உபவாசம் முடிக்கும்போது உட்கொள்ளும் உணவுகள் அந்தப் புண்களை ஆற்றும் மருந்தாகவும்,
உடலுக்கு சக்தியளிப்பவையாகவும் இருக்கும்படியான உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து
வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இந்த உணவின் மகிமையை இன்றைய தலைமுறை
அறிந்து கொள்ள வேண்டும். .
73) சுண்டைக்காய் வற்றல் குழம்பு
தேவையானவை
பச்சை சுண்டைக்காய் - 100 gm அல்லது சுண்டைக்காய் வற்றல் – 50 gm
புளி – சிறிய எலுமிச்சை அளவு
பாசி பருப்பு – இரண்டு டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி – இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – கால் ஸ்பூன்

வெல்லம் – சிறிய கட்டி
தேங்காய் துருவியது – அரை கோப்பை
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
தாளிக்க
நல்லெண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – சிறியது இரண்டு
செய்முறை:
பாசிப்பருப்பை தனியே வேகவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு இல்லாமலும்
இதைச்செய்யலாம். என் அம்மா கொஞ்சம் பாசிப்பருப்பு வேக வைத்து சேர்ப்பாள் என்பதால்
அதன்படி சொல்லி இருக்கிறேன்.
பச்சை சுண்டைக்காய் என்றால் நன்றாக சுத்தப்படுத்தி லேசாய் நசுக்கி நன்கு கழுவிப் பிழிந்து ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒருவேளை நீங்கள் சுண்டை வற்றல் உபயோகித்தால், ஒரு வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், மிளகாய், கறிவேப்பிலை ஒரு கொத்து இவற்றைத்
தாளித்து அதிலேயே சுண்டை வற்றலை நன்கு வறுத்து, பின்னர் துருவிய தேங்காயும் சேர்த்து அது
பொன்னிறமாகும் வரை வறுத்து இவற்றைத் தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு
புளிக்கரைசலை வாணலியில் ஊற்றி, உப்பு, சாம்பார்பொடி, மஞ்சள் தூள், வெல்லம் இவற்றை
சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு பிறகு பாசிப் பருப்பையும் மசித்து அதில் சேர்த்து, பெருங்காயமும்
சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, கடைசியாக வறுத்து வைத்திருக்கும் கலவையை அதில் கொட்ட
வேண்டியதுதான்.
பச்சை சுண்டை என்றால், முதலில் கடுகு, வெந்தயம், மிளகாய், கறிவேப்பிலை இவற்றைத்
தாளித்துக்கொண்டு புளிக்கரைசலை அதில் ஊற்றி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, வெல்லம்,
உப்பு எல்லாம் சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். புளியின் பச்சை வாசனை நீங்கி,
சுண்டைக்காய் வெந்திருப்பதை உறுதி செய்து கொண்டு, பாசிப்பருப்பை மசித்து சேர்த்து மீண்டும்
கொதிக்கவிட்டு கடைசியாக தேங்காய்த் துருவலையும், கறிவேப்பிலையையும்,
பெருங்காயத்தையும் தனியே பொன்னிறமாக வறுத்து குழம்பில் சேர்க்க வேண்டியதுதான்.
சுண்டைக்காய்க்கு பித்தத்தைக் குறைக்கும் மருத்துவ குணம் உள்ளது.
74) அகத்திக்கீரை கறி

தேவையானவை
அகத்திக் கீரை – ஒரு கட்டு
பாசிப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தாளிக்க, ஒரு டீஸ்பூன் வெளிச்செண்ணெய், ஒரு ஸ்பூன், கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு
வரமிளகாய்
செய்முறை
அகத்திக்கீரை இலைகளை உருவி நீரில் நன்கு சுத்தம் செய்து நீரை வடிகட்டி நன்கு பிழிந்து
எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில், கொஞ்சம் வெளிச்செண்ணெய் ஊற்றி, கடுகு,
உளுந்தம்பருப்பு, மிளகாய், தாளித்து அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூளும் சேர்த்து பிழிந்து
வைத்திருக்கும் அகத்திக் கீரையை உதிர்த்து அதில் சேர்க்கவும். அரை ஸ்பூன் சர்க்கரையும்
சேர்த்து மிதமான சூட்டில் மூடி வைக்கவும். வேண்டுமென்றால் ஒரு கை தண்ணீர் தெளிக்கலாம்.
பாசிப்பருப்பை அரைவேக்காடு வேக வைத்துக் கொள்ளவும்.
கீரை நன்கு வெந்து நீர் வற்றியதும், பாசிப்பருப்பையும் துருவிய தேங்காயையும் சேர்த்து நன்கு
கிளறிக் கொடுத்து அடுப்பை அணைத்து விடலாம். சுண்டைக் குழம்பிற்கு பெஸ்ட் காம்பினேஷன்
இது.
75) நெல்லிக்காய் பச்சடி
தேவையானவை
நெல்லிக்காய் – இரண்டு அல்லது மூன்று
பச்சை மிளகாய் - 1
தேங்காய் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கடுகு – அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 1
கொத்தமல்லி,, கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
நெல்லிக்காயை வேகவைத்து கொட்டை நீக்கி சுளைகளை எடுத்துக் கொள்ளவும்
வெந்த நெல்லிக்காயோடு தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை இவற்றை
சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்
தாளிப்பு கரண்டியில், ஒரு ஸ்பூன் வெளிச்செண்ணெய் ஊற்றி, கடுகு, மிளகாய் இவற்றைத்
தாளித்து சிறிது பெருங்காயமும் சேர்த்து அதில் போட வேண்டும். மேலே கொத்தமல்லியைப்
பொடியாக நறுக்கி தூவி விடவும்.
இவை தவிர, கொஞ்சம் துவரம் பருப்பு வேக வைத்து கலத்து பருப்பு, ஒரு சிறிய கிண்ணத்தில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
துவாதசியன்று இவற்றை சாப்பிட்டுப் பாருங்கள், விரதமிருந்த வயிற்றுக்கு இவை எல்லாம்
அருமருந்தாக இருக்கும்.
**************************
திருவாதிரை
திருவாதிரை ஒரு வாய் களி என்பார்கள். அன்று ஒருவேளை களி மட்டும் உண்டு விரதமிருப்பவர்
உண்டு. பொதுவாக இனிப்பான உணவுக்கு உப்பும் காரமுமாக எதையும் தொட்டு சாப்பிட
மாட்டார்கள். ஆனால் திருவாதிரைக் களிக்கு பெஸ்ட் காம்பினேஷனாக ஒரு காய்கறிக் கூட்டு
செய்யும் வழக்கம் உண்டு.
அந்தக்காலத்தில் என் அம்மா குமுட்டி அடுப்பு மூட்டி, வெங்கலப் பானையில்தான் திருவாதிரைக்
களி பண்ணுவாள். களியைக் கிளறி வெங்கலப் பானையை அடுப்பிலேற்றி மூடி வைத்துவிட்டு
கபாலி கோவிலில் ஆருத்ரா தரிசனம் செய்துவிட்டு அவள் வீடு திரும்பும் போது களி பூ மாதிரி
பொலபொலவென்று வெந்திருக்கும். அதன் வாசனை தெருமுனை வரை வீசும். இப்போதெல்லாம்
களியைக் கிளறி குக்கரிலேயே வேக வைக்கும் வசதி இருக்கிறது.
கேரளத்தில் திருவாதிரையன்று பெண்கள் ஒரு குழுவாக நடுவே ஒரு பெரிய விளக்கேற்றி வைத்து
அதைச் சுற்றி வந்து பாரம்பரிய நடனமாடுவார்கள். இந்த நடனத்திற்கும் திருவாதிரைக்களி
என்றே பெயர்.
இனி திருவாதிரைக் களியும், கூட்டும் எப்படி செய்வதெனப் பார்ப்போம்.
76) திருவாதிரைக் களி

தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ஒரு ஆழாக்கு
பொடித்த வெல்லம் – ஒன்றரை ஆழாக்கு
பாசிப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – அரை கோப்பை
ஏலக்காய்ப் பொடி – ஒரு ஸ்பூன்
உடைத்த முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் தனித்தனியே சிவக்க வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு
இரண்டையும் சேர்த்து மிக்சியில் போட்டு ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும்.
வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி எடுத்து மேலும் ஒன்றரை டம்ப்ளர்
தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். அதாவது அரிசி எந்த அளவு எடுக்கிறோமோ
அதற்கு இரண்டரை பங்கு வெல்லக் கரைசல் இருக்க வேண்டும். பச்சை வாசனை நீங்கி வெல்லம்
நன்கு நுரைத்து கொதிக்கும்போது, ஏலக்காய், தேங்காய்த் துருவல், ஒரு ஸ்பூன் நெய் இவற்றை
சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, பொடித்து வைத்திருக்கும் அரிசி, பருப்பு ரவையை அதில்
போட்டு கட்டித்தட்டாமல் கிளற வேண்டும். தேவை என்றால் கால் டம்ளர் வெந்நீர்கூட அரிசி
வாகைப் பொறுத்து சேர்த்துக் கொள்ளலாம். பிறகு இந்தக் கலவையை நேரடியாகவும் குக்கரில்
போட்டு அடுப்பை சிம்மில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக விடலாம். அல்லது அடிபிடித்து
விடும் என்ற பயமிருந்தால் இதை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி குக்கரின் அடியில் நீர் ஊற்றி
அதில் இந்த பாத்திரத்தை வைத்து தட்டு போட்டு மூடி இரண்டு விசில் விடும்வரை வேக விடலாம்.
ஓசை அடங்கியதும் பாத்திரத்தை எடுத்து திறந்து பார்த்தால் களி பொலபொலவென்று
வெந்திருக்கும். பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் உடைத்த முத்திரியை வறுத்து அதில் சேர்த்து
நன்கு கிளறிவிடவும். குக்கரில் வைக்க வேண்டாம் என்றால் அடிகனமான வாணலியிலேயே
அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடலாம். அவ்வப்போது திறந்து பார்த்து கிளறிவிட வேண்டும்.
நாம் கொஞ்சம் அசந்தால், களி அடிபிடிக்கும் அபாயம் உள்ளதால் குக்கரில் வேக விடுவதே
பெஸ்ட்.
77) திருவாதிரைக் கூட்டு
இதை ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள். தாளகம் என்றும் கூட்டு என்றும்
இருவிதமாக செய்யலாம். என் அம்மா புளி சேர்த்து கார சாரமாக தாளகம் செய்வாள்.. என்
மாமியார் கூட்டு மாதிரி செய்வார். நாம் இரண்டு விதத்தையும் இங்கு பார்ப்போம்.

இதை ஏழுகாய் கூட்டு என்பார்கள் பொதுவில். ஏழு, ஒன்பது பதினொன்று என்று காயின்
எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்கவேண்டும். நாட்டு காய்களைத்தான் இதற்கு எடுத்துக்
கொள்வார்கள். நான் நிறைய காய்கள் சேர்த்து செய்வேன்.
முதலில் தாளகம்
இதற்குத் தேவையான காய்கள்
அவரைக்காய் – 100 கிராம்
சேனை – 150 gm
மஞ்சள் பூசணி (மத்தன்) – சதுரமாக நறுக்கிய பத்து துண்டுகள்
வெள்ளை பூசணி – சதுரமாக நறுக்கிய பத்து துண்டுகள்
கத்திரிக்காய் – 2
பெங்களூர் கத்திரிக்காய் – பாதி போதும்
பீன்ஸ் – (ஒரு இன்ச் சைசில் நறுக்கியது) 50 gm
கேரட் – சிறியது ஒன்று ( ஒரு இன்ச் அளவில் மெலிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்)
வாழைக்காய் – ஒரு அரை வாழைக்காய் போதும் துண்டுகளாக் நறுக்கிக் கொள்ளவேண்டும்.
சேப்பங்கிழங்கு – 100 gm
சர்க்கரை வள்ளிக் கிழங்கு – சிறியதாக ஒன்று (துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
கூர்க்கங்கிழங்கு – ஒரு ஏழெட்டு போதும் (கிடைக்கவில்லை என்றால் விட்டு விடலாம்)
பச்சை மொச்சை – 100 gm
மற்ற பொருட்கள்
புளி – சிறிய எலுமிச்சம்பழம் அளவு
வறுப்பதற்கு:
காய்ந்த மிளகாய் – எட்டு
தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு – இரண்டு டீஸ்பூன்
கடலைப் பருப்பு – இரண்டு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன்
மிளகு – கால் ஸ்பூன்
தேங்காய் துருவல் – மூன்று டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
சேப்பங்கிழங்கு, கூர்க்கங்கிழங்கு இரண்டையும் தனியே குக்கரில் வேக வைத்து தோலுரித்து
இரண்டாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்
மற்ற காய்களை சற்று பெரிய துண்டுகளாகவே நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு அதே குக்கரைக் கழுவி அதில் சேனையை அடியில் போட்டு, அதன் மேல் வாழைக்காய்,
அதற்கும் மேலே மஞ்சள் பூசணி, வெள்ளைப் பூசணி, பிறகு கேரட் பூசணி, மொச்சை, பட்டாணி
என அனைத்து காய்களையும் போட்டு மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து இரண்டு விசில்விட்டு வேக
வைக்கவும். அடுப்பை அணைத்ததும் பிரஷரை உடனே ரிலீஸ் செய்து விடவும். இதனால்
காய்கறிகள் உடையாது வேகும்.
வாணலியில் எள்ளை மட்டும் எண்ணெய் விடாமல் தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு கொஞ்சம் வெளிச்செண்ணெய் விட்டு தனியா, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் (உங்களுக்கு வேண்டிய அளவு காரத்திற்கேற்ப மிளகாயை
கூட்டவோ குறைத்துக் கொள்ளவோ செய்யலாம்) பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை
வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பிறகு அதே வாணலியில் தேங்காய்த் துருவலை சிவக்க
வறுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்திருக்கும் எள் மற்றும் இதர பொருட்களை எல்லாம் மிக்சியில் ரவை பதத்தில்
பொடித்துக் கொள்ள வேண்டும். கடைசியாக வறுத்த தேங்காய்த் துருவலையும் இதில் போட்டு
இரண்டு மூன்று திருப்பு திருப்பி பொடித்துக் கொள்ளவும்.
வெந்த காய்களை ஒரு வாணலிக்கு மாற்றி, அதில் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை விட்டு
உப்பு, வெல்லம் சிறிதளவு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு கொதிக்கவிட வேண்டும்.
காய், புளி, உப்பு எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும் அதில் நாம் களிக்காக வறுத்து
வைத்திருப்போமே அரிசிப்பொடி அதை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கவும். இது கொஞ்சம்
கெட்டித் தன்மையைக் கொடுக்கும். கடைசியாக வறுத்துப் பொடித்து வைத்திருக்கும் பொடியை
அதில் சேர்த்து நன்கு கிளறிக்கொடுத்து மேலே இரண்டு டீஸ்பூன் வெளிச்செண்ணெய் விட்டு
அடுப்பை அணைக்கவும். பிறகு தாளிப்பு கரண்டியில் கொஞ்சம் வெளிச்செண்ணெய் விட்டு ஒரு
ஸ்பூன் கடுகு, காய்ந்த மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில்
சேர்த்துவிடவும்.

இனிப்பான களிக்கு காரசாரமான இந்த கூட்டைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அன்று
முழுக்க பசிக்காது. தோசை சப்பாத்திக்குகூட இந்த கூட்டைத் தொட்டு சாப்பிடலாம். சூடான
சாதத்தில் உருக்கிய நெய் ஊற்றி இதைத் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
மற்றொரு கூட்டு வகையை அடுத்த வாரம் பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com