20. ஏழு மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு

பிறந்த குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு மாதமாகும் போது முதன்முதலில் சாதம் கொடுக்க ஆரம்பிக்கும்
20. ஏழு மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு

பிறந்த குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு மாதமாகும் போது முதன்முதலில் சாதம் கொடுக்க ஆரம்பிக்கும் முன் குருவாயூர் அல்லது அம்பலப்புழை அல்லது வேறு ஏதேனும் கோவில்களில் வைத்து அன்னப்பிராசனம் செய்வது வழக்கம். சிலர் இதை வீட்டிலேயே ஒரு வைதீகரை அழைத்து பூஜை செய்து விமரிசையாகவும் செய்வார்கள். நெருங்கிய உறவினர்களை அழைத்து அவர்களுக்கும் விருந்தளிப்பார்கள். என் பெண்ணுக்கு நான் குருவாயூர் கோவிலில் அன்னப்பிராசனம் செய்தேன். அப்போதெல்லாம் கோவிலுக்குள்ளேயே கொடி மரத்திற்கு தென்புற பிரகாரத்திலேயே குழந்தைகளுக்கு சோறூட்டும் நிகழ்வு நடக்கும். இப்போது கோவிலுக்கு வெளியில் கோவிலைச் சார்ந்த இடத்தில் நடக்கிறது. சுத்தம் செய்யப்பட்ட பிரகாரத்தில் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு அதன் அப்பாக்கள் அமர்ந்திருப்பார்கள். அருகில் தாயாரும் சுற்றிலும் நெருங்கிய உறவுகளும் இருப்பார்கள். ஒவ்வொரு குழந்தையின் முன்பும் ஒரு சிறிய வாழையிலை வைக்கப்படும். அதில் சூடான அன்னம், பருப்பு, நெய், பால்பாயசம், வாழைப் பழத்துண்டு, பப்படம் ஆகியவை விளம்பப்படும். கோவில் பூஜாரி ஒருவர் முதலில் தீர்த்தம் கொடுத்து குழந்தைக்கு கொடுக்கச் சொல்லுவார். பிறகு தந்தையின் கையிலிருக்கும் தங்க மோதிரத்தை கழற்றி, அதனால் சிறிது பாயசம் எடுத்து குழந்தையின் வாயில் கொடுக்கச் சொல்லுவார். பாயசத்தை சப்புக் கொட்டி ருசிக்கும் குழந்தை. அடுத்து துளி அன்னத்தில் பருப்பு நெய் கலந்து நன்கு பிசைந்து அதிலிருந்து ஒரு துளி எடுத்து குழந்தைக்கு தந்தை ஊட்டுவார். அவரைத் தொடர்ந்து தாயார், பிறகு நெருங்கிய பந்துக்களும் ஒவ்வொரு துளி அன்னம் எடுத்து குழந்தைக்கு ஊட்டுவார்கள். இலையில் வைக்கப்பட்ட பழத் துண்டையும் நசுக்கி பாயசத்தில் தொட்டு ஊட்ட குழந்தை மெல்ல சாப்பிடும். 

இனி குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உகந்த சில உணவுகளைப் பற்றியும் கொஞ்சம் பார்த்து விடுவோம். கேரளத்தில் ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைகளுக்கு நேந்திரங்காயில் ஒரு பவுடர் செய்து கூழ் மாதிரி ஆக்கி கொடுப்பார்கள். இதை ஏத்தங்கா பொடி என்பார்கள். என் பெண்களுக்கு இந்த நேந்திரங்காய் பொடி கூழ்தான் செய்து கொடுத்தேன் நான். இது குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும் உணவாகும்.

68)  ஏத்தங்கா (நேந்திரங்காய்) பொடி

தேவையானவை

நன்கு முற்றிய ஐந்து நேந்திரங்காய்

கையில் சிறிது நல்லெண்ணெய் தடவிக் கொண்டு இதன் தோலை கத்தியால் கீறி உரித்து எடுத்து விட்டு காயை சிப்ஸ் கட்டையில் தேய்த்து மெலிதாக சீவிக் கொள்ள வேண்டும். சீவிய துண்டுகளை ஒரு வெள்ளை வேட்டியில் வெய்யிலில் உலர்த்தி புழுதி ஏதும் படியாமலிருக்க அதன் மேலேயும் ஒரு மெல்லிய வேட்டியால் மூடி பறந்து விடாமல் நாலாபக்கமும் ஏதேனும் பாரம் வைக்கவும். இந்த சீவல்கள் வெய்யிலில் நன்கு காய்ந்ததும் இதை எடுத்து மிக்சியில் அரைத்தால் பௌடராகி விடும். இதை சலித்து காற்று புகாத ஒரு பாட்டிலில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைத்தால் ஒரு வருடம் வரை கூட கெடாது. இதிலிருந்து இரண்டு ஸ்பூன் பவுடர் எடுத்து பசும்பாலில் கரைத்து அடுப்பில் வைத்து கூழ் மாதிரி செய்து கொடுக்கலாம். சர்க்கரை போட வேண்டாம். பாலிலேயே இயற்கையாகவே சர்க்கரை இருக்கும்.

தாய்ப்பால் என்பது ஒன்றிலிருந்து இரண்டு வயது வரை கொடுத்தாலும் ஏழாம் மாதத்திலிருந்து குழந்தைக்கு காய்கறிகள், பழங்கள், சாதம், பருப்பு எல்லாமே மெல்ல மெல்ல பழக்க ஆரம்பிக்கலாம். முதலில் சாதமானாலும், காய்கறிகளானாலும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொடுப்பது நல்லது. காய்கறிகள் அனைத்திலும் இயற்கையாகவே சர்க்கரை மற்றும் உப்புச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு உப்பு, சர்க்கரை எதுவும் சேர்க்காமல் கொடுப்பதே நல்லது.

69)  7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு

ஒரு சிறிய கரண்டி நன்கு குழைந்து வெந்த சாதம்

ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த பாசிப்பருப்பு

அரை ஸ்பூன் உருக்கிய நெய்

வேக வைத்த கேரட் ஒரு துண்டு

வேக வைத்த உருளைக் கிழங்கு ஒரு துண்டு

இவை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு ரெண்டு திருப்பு திருப்பினால் நன்கு மசிந்து விடும். பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்து குழந்தைக்கு சிறிது சிறிதாக ஊட்டுங்கள். குழந்தையின் வாயில் நிறைய அடைக்க வேண்டாம். கூடியவரை உங்கள கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு உங்கள் விரல்களாலேயே சாதம் ஊட்டுங்கள். உங்கள் விரல்களின் மூலம் உங்கள் அன்பின் ருசியும் குழந்தையின் உணவில் சேரட்டும். உணவு சாப்பிட்டதும் குழந்தைக்கு சிறிது சீரகம் போட்டு காய்ச்சி ஆறவைத்த நீரைக் கொடுங்கள். சீரகம் ஜீரண சக்திக்கு உதவும். ஒரு புதிய காய் கொடுக்கும்போது நான்கு நாட்கள் கழித்து மற்றொரு காய் பழக்குங்கள். அதுவரை குழந்தைக்கு அந்தக் காய் எந்த ஒவ்வாமையும் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.  இதேபோல ஒரு துண்டு பீட்ரூட்டையும் நன்கு வேக வைத்து அரைத்து கொடுக்கலாம்.

70)  குழந்தைகளுக்கு கீரை

ஒரு சிறிய கரண்டி நன்கு குழைந்து வெந்த சாதம்

ஒரு டீஸ்பூன் வேக வைத்த பாசிப்பருப்பு

அரை ஸ்பூன் உருக்கிய நெய்

சிறிய இலைகள் கொண்ட பொன்னாங்கண்ணி கீரை – ஒரு கைப்பிடி. இதன் இலைகளை மட்டும் எடுத்து  நன்கு சுத்தம் செய்து ஒரு சிறிய வாணலியில் போட்டு ஒரு கை நீர் தெளித்து அதன் பசுமை மாறாமல் வேக வைக்கவும்.

சாதம், பருப்பு, கீரை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து கிண்ணத்தில் வைத்து ஊட்டலாம். பொன்னாங்கண்ணி கீரை குழந்தையின் கண்களுக்கு ஒளிமிகுந்த பார்வையைக் கொடுக்கும். முளைக்கீரை, சிறுகீரை  போன்றவற்றையும் கூட இதே போல மாற்றி மாற்றி ஒரு கைப்பிடி வேக வைத்து அரைத்துக் கொடுக்கலாம்.

71)  குழந்தைகளுக்கு பச்சைக் காய்கறிகள்

பீன்ஸ், அவரைக்காய், போன்ற காய்கள் நார்ச்சத்து மிகுந்தவை என்பதால் இவைகளை வேக வைத்து அரைத்து வடிகட்டி சூப் மாதிரி செய்து கொண்டு அதை சாதத்தில் விட்டு கூடவே பருப்பு நெய் போன்றவற்றையும் சேர்த்து அரைத்துக் கொடுக்கலாம். முருங்கைக் காயை வேக வைத்து உள்ளிருக்கும் சதையை மட்டும் ஒரு ஸ்பூனால் சுரண்டி எடுத்து சாதத்துடன் சேர்த்து அரைத்துக் கொடுக்கலாம்.

ஒன்றிரண்டு மாதங்கள் வரை உணவை அரைத்துக் கொடுத்தாலும் போகப் போக உணவை அரைக்காமல், நன்கு கரண்டியால் மசித்துக் கொடுக்க ஆரம்பிப்பதே நல்லது. குழந்தை தானே எடுத்து உண்ண விரும்பினால் தடுக்க வேண்டாம். சுற்றிலும் இறைத்துக் கொண்டு சாப்பிட்டாலும் அது தானே சாப்பிடும் போது உணவின் மீது அதற்கு விருப்பம் ஏற்படும்.

72)  குழந்தைகளுக்கு தக்காளி

சிறியதாக ஒரு பெங்களூர் தக்காளியை (பெரியது என்றால் கால் தக்காளி போதும்) ஒரு டேபிள் ஸ்பூன் பாசி பருப்பு வேக வைக்கும் போதே முழுதாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு தக்காளியின் தோலை நீக்கி விட்டு பருப்போடு சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். பிறகு குழைந்த சாதத்தில் துளி உருக்கிய நெய் விட்டு இந்த பருப்பு தக்காளி கலவையை அதில் போட்டு நன்கு மசித்து ஊட்டலாம்.

குழந்தைக்கு ஒரு வயதாகும்போது சாதம் பிசையும்போது பருப்பு, காய்கறி சாதத்தில் கூடுதல் சுவைக்காக ஒரு சிட்டிகை மிளகு சீரகப் பொடியும் சேர்த்து பிசைந்து கொடுக்கலாம். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு சிறிய வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு இந்த உருளைக்கிழங்கு துண்டுகளை அதில் போட்டு லேசாக வதக்கி அதை மசித்து வெறும் உருளைக் கிழங்கு கூட சமயத்தில் கொடுக்கலாம்.

கறிவேப்பிலைகளை குழந்தைக்கு அப்படியே கொடுக்கக் கூடாது. தொண்டையில் சிக்கும். அவற்றை வறுத்து நன்கு பௌடர் செய்து கொண்டு கால் ஸ்பூன் பொடியை வெந்த காய்களோடு சேர்த்து சாதத்தில் மசித்து கொடுத்தால் கறிவேப்பிலையின் சத்துக்களும் குழந்தைக்கு சேரும்.

73)  குழந்தைகளுக்கு பழங்கள்:

ஆப்பிளை தோல் நீக்கி நான்கைந்து துண்டுகள் வேக வைத்து மசித்துக் கொடுக்கலாம். மலைப்பழம், பூவன் பழம் போன்றவற்றை ஏழெட்டு மாதத்திலிருந்தே நசுக்கி சிறிது சிறிதாகக் கொடுக்கலாம்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கொட்டை திராட்சை நான்கைந்தை சுடுநீரில் போட்டு ஊறவைத்து அதை கைகளால் நன்கு கசக்கி, வடிகட்டி அதன் சாறை மட்டும் குடிக்கத் தரலாம். இது குழந்தையின் மலச்சிக்கலைப் போக்கும். 

ஒரு வயதுக்குப் பிறகு சப்போட்டா, அவகேடோ, கிவி, போன்றவற்றைக் கொடுக்கலாம். ஆரஞ்சு பழத்தை உரித்து கொட்டை நார்  போன்றவற்றை நீக்கி அதன் சதைப்பகுதியை மட்டும் கொடுத்து பழக்கலாம். அவகேடோ பழத்தில் ருசி எதுவும் இருக்காது இதை நன்கு மசித்து தாய்ப்பால் சிறிது எடுத்து அதனுடன் கலந்து கொடுக்கலாம்.

வளர வளர குழந்தைகளுக்கு வேக வைத்த காய்கறிகளை நேரடியாக சிறிதளவு கொடுக்கலாம்.. தானே பற்களால் உணவை அரைத்து உண்ணப் பழக்க வேண்டும். குழந்தைகள் கொழு கொழுவென்று இருப்பதை விட ஆரோக்கியமாக இருப்பதுதான் மிக முக்கியம் என்பதை மறக்க வேண்டாம். எப்போதுமே ஜங்க் ஃபுட் எனப்படும் குப்பை உணவுகளையும், துரித உணவுகளைக் கொடுப்பதையும் தவிர்த்து விடுங்கள். என்ன இருந்தாலும் பாரம்பரிய உணவுகள்தான் எந்த வயதினருக்கும், எக்காலத்திலும் சிறந்தவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கும் உணவு வகைகளைக் கொண்டே அவர்கள் எத்தகைய அறிவாளிகள் என்பது விளங்கும்.

                               *******************

அடுத்த வாரம் விரத சமையல்கள் பற்றி பார்ப்போம். அதுவரை உங்களுக்கு பிடித்த பாலக்காட்டு உணவு வகைகளை சமைத்துப் பாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com