24. மாணவர்களின் சவால்கள் என்ன..?

தோற்போம், ஆனால் தோல்வியில் பாடம் கொண்டு மீண்டும் சரியாக முயற்சித்து வெற்றிகொள்வோம் எனும் பக்குவம்தான், தோல்வியை வெற்றிக்கு நிகராக மதிக்கும் மனோபாவத்தின் அடையாளம்.
24. மாணவர்களின் சவால்கள் என்ன..?

இதற்கு முன், திட்டமிடுதல், வெற்றி தோல்வியை சமமாகக் கருதுதல், உறவுகளின் வலிமை, துணிவு, சரியான இலக்குகளை கொள்ளுதல் எனும் அம்சங்களைக் கவனித்தோம்.

அதன்பின், மனப்பாங்கினை உருவாக்கும் ஆறு அம்சங்களான முற்றிலும் அறிந்து செயல்புரிதல், எதுவுமே அறியாது செயல்புரிதல், உள் நோக்கிய அலசல், வெளி நோக்கிய அலசல், சரியான காரணங்களுடன் செயல்புரிதல், சரியான காரணங்களின்றி செயல்புரிதல் எனும் ஆறு அம்சங்களையும் கவனித்தோம்.

அடுத்து, மாணவர்கள் சந்திக்கும் சவால்களை அறிமுகம் செய்துகொள்வோமா?!

சவால்கள் என்பவை வெளியில் இருப்பதில்லை; அவை எண்ணத்தில் உருவாகுபவை மட்டுமே என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லோரும் மலைச் சிகரம் ஏறிவிடுவதில்லை. அது ஏறி அடையக்கூடிய இலக்கு என நினைத்த டென்சிங், ஹிலாரி போன்றவர்களே சிகரத்தை அடைந்து கொடி நாட்டுகிறார்கள்.

முயற்சியின்போது முயற்சி போதவில்லை எனும் நிலைதான் சவால். அதுதவிர, நிஜத்தில் சவால் என்று ஏதும் இல்லை.

மாணவர்களின் முதல் சவால்: தோல்வி பயம்

தேர்வு என்று மட்டுமில்லை, மாணவப் பருவம் முடிந்து களத்தில் வேலை தேடும் இளைஞராகவும் இருக்கும் தருணங்களிலெல்லாம் தோல்வி குறித்த பயத்துடன் பலர் இருப்பதைக் கவனிக்கலாம்.

அவர்கள் எல்லோரும் ஒன்றுபோலவே பேசுவார்கள். ‘இது என் திறமைக்கு அப்பாற்பட்டது’, ‘இதெல்லாம் நான் செய்யும் காரியமில்லை’, ‘இதெற்கெல்லாம் தனித் திறமை வேண்டும் தெரியுமா’ என்பதுபோல் அவர்கள் பேசுவதைக் கவனித்திருக்கலாம்.

இதெல்லாம் தனது திறமை குறித்த சரியான மதிப்பீடு இல்லாத அல்லது அந்தச் செயலுக்குத் தேவையான முயற்சிகளைக் குறித்த மதிப்பீடுகள் இல்லாத நிலையில் உண்டாகும் அச்சம் மட்டுமே. அதுவும் எப்படியான அச்சம்? இதில் ஈடுபட்டால் தோல்வி ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம்!

இந்தச் சிந்தனை உள்ளவர்களுக்கு இருக்கும் பொதுவான கருத்துகளைக் கவனித்துப் பார்க்கலாம்..

1. இதில் தோற்றுப்போனால் நம்மை பிறர் மதிக்கமாட்டார்கள்.

2. இதில் தோற்றுப்போனால் நமக்கு எதிர்காலமே இல்லை.

3. இதில் தோற்றுப்போனால் நம் சுற்றமும் சொந்தமும் நம் மீது அக்கறை காட்டமாட்டார்கள்.

4. இதில் தோற்றுப்போனால் நமக்குத் திறமை இல்லை என்பது தெரிந்துவிடும்.

5. இதில் தோற்றுப்போனால் நாம் கேலி பேசப்படுவோம்.

6. இதில் தோற்றுப்போனால் நம்மால் வேறு எதிலும் முயற்சி செய்யவே முடியாது.

- இதுபோன்ற அடிப்படை எதிர்மறை எண்ணங்களினால் தோல்வி குறித்த ஒருவித நிரந்தர பயம் மனதில் தங்குகிறது. அது மனப்பாங்காக மாறுகிறது. அதனால் சவால்களைச் சந்திக்க மறுக்கிறது.

ஆம். சவால் வெளியில் இல்லை. தோற்றுவிடுவோமோ எனும் நினைப்புதான் சவால்.

இந்தச் சவாலை நாம் முன்பு கவனித்த ஐந்து அம்சங்களையும், ஆறு இயல்புகளையும் கொண்டு துரத்திவிட முடியும். அது எப்படி எனக் கவனிக்கலாம்.

திட்டமிடுதல் எனும் அம்சத்தைக் கவனித்தோம் அல்லவா. அதன்படி, செயலின் ஒவ்வொரு நிலையையும் சரிவரத் திட்டமிட வேண்டும். அப்படித் திட்டமிடும்போது, முற்றிலும் அறிந்து செய்தல் எனும் கோட்பாட்டையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி செய்யும்போது, எந்தச் செயலுக்கு எந்த விளைவு என்பது சரியாகத் தெரியும். அதுமட்டுமில்லை. எந்த விளைவுகளின் மீது நாம் எவ்வளவு கட்டுப்பாடு கொண்டிருக்கமுடியும் என்பதும் தெரிந்துவிடும். இதனால், விளைவுகளின் மீது சரியான அளவிடப்பட்ட கவனம் செலுத்துவது சாத்தியம் என்பது மெல்ல மெல்ல புரியவரும்.

இந்த நிலையில், தோல்வி பயம் குறித்த எண்ணங்கள் மாறுவதை நீங்கள் உணரலாம்!

ஒன்றைக் குறித்து முழுவதும் அறியாமல் இருக்கும்போது ஏற்படும் உணர்வுதான் பயம் எனும் அச்சம். இது இயல்பானதுதான். இது நமது திறமை குறித்த உணர்வு இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

உள்நோக்கிய அலசல், வெளிநோக்கிய அலசல் எனும் இரண்டு காரணிகளைக் கவனித்தோம் அல்லவா. அதனை இங்கே செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

ஒரு செயலில் இதுவரை நாம் திட்டமிட்டு இறங்கியது இல்லை. அதனால், அந்தச் செயலின் விளைவுகள் நமக்குத் தெரியாமல் இருந்தன. அதனால், தோல்வி அடைவோம் எனும் அச்சம் இருந்தது. அதனால், அந்தச் செயலை செய்யாமல் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தோம்; அந்தச் செயலைத் தவிர்த்து வந்தோம்.

இப்போது அந்தச் செயலுக்கான ஒவ்வொரு நடவடிக்கையையும் திட்டமிட்டிருக்கிறோம். இந்த்த் திட்டப்படி செயலாற்றினால், விளைவுகள் இப்படி இருக்கும். இந்த இந்த விளைவுகளை நாம் தலையிட்டு மாற்ற இயலும், இதில் தொடர்புடைய சில விளைவுகளும் சில செயல்பாடுகளும் நம் கட்டுப்பாட்டில் இல்லை, ஆனாலும் அப்படியானதில் உருவாகும் எதையும் சரிவர சந்திக்க நாம் தயாராக இருக்கிறோம் என்பது போன்ற உள்நோக்கிய அலசலை முயற்சிக்க வேண்டும். இப்படி அலசும்போது, மதிப்பீடுகளை நமக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைத்துக்கொள்ளாமல் பாரபட்சமின்றி அமைக்கும்போது, தோல்வி குறித்த பயம் விலகுவதை நிச்சயம் உணரலாம்.

இந்த அலசலைச் செய்யும்போது, வெளிநோக்கிய அலசலையும் செய்து பார்க்க வேண்டும். செயலுக்குத் தொடர்பில்லாத, ஆனால் செயலின் விளைவுகளை பாதிக்கக்கூடிய அம்சங்கள் வெளியே என்ன இருக்கின்றன; யாரால் எப்படி இந்தப் பாதிப்புகளை உருவாக்க முடியும் என்பதும் அந்த அலசலில் இருக்க வேண்டும்.

முன்பு கவனித்த உறவுகளின் பலம் என்ன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம்மை நல்ல வழிக்குக் கொண்டுசெல்லும் உறவுகள் அன்பை மட்டும் காட்டுவதில்லை. அந்த உறவுகள் கண்டிப்பும் மதிப்பீடும் காண்பிப்பவை. அப்படியான உறவுகளிடம் உங்களின் திட்டமிடுதல், அலசல் விவரங்களைக் கொடுத்து சரிபார்த்துத் தரச்செய்யவும்.

இந்த நடவடிக்கை ஒருவிதமான மேற்பார்வை. நாம் கவனத்தில் கொள்ளாமல் விட்டிருக்கும் விஷயங்களால் பாதிப்பு வரும். அவை நம் கண்ணோட்டத்தில் புலப்படாமலும் இருக்கலாம். ஆனால், மேற்பார்வை செய்பவர்கள் கண்ணோட்டம் பாரபட்சம் இல்லாது இருப்பதுடன், அவர்களுக்கென்று அதில் எந்தத் தனிப்பட்ட பலனும் இல்லை என்பதால், அளவீடுகள் சரியாக இருக்கும்.

இந்த மூன்று நடவடிக்கைகளைச் செய்த பின்பு தோல்வி குறித்த பயம் உங்களிடமிருந்து விலகிப்போய்விட்டிருப்பதை கண்கூடாக்க் கவனிக்கலாம்.

தோல்வி பயம் இல்லாது இருந்தாலும், மனதுக்குள் அப்போதும் ஒரு சிறு தயக்கம் இருக்கும். செயலில் இறங்க அந்த்த் தயக்கம் தடை போடும். ஏதோ ஒன்று கவனிக்கப்படவில்லையோ எனும் விட்ட குறை தொட்ட குறை நினைப்பு பின்னோக்கி இழுக்கும்.

அது என்ன?

நாம் முன்பு கவனித்த ஐந்து அம்சங்களில் இரண்டாவது அம்சத்தை கைக்கொள்ளும் நேரம் இது.

தோல்வி என்பது விரும்பத்தக்கது அல்ல எனும் நினைப்புதான் அது. அந்த நினைப்பை வெற்றியும் தோல்வியும் சமம் எனும் யதார்த்தத்தைக் கொண்டுதான் வெல்ல வேண்டும். தோல்வி என்பது முயற்சியின் வெளிப்பாடு என்று நினைக்க வேண்டும். தோல்விக்கு யாரைக் காரணம் சொல்லலாம் என நினைப்பவராக இருக்காமல், தோல்வியை ஏற்கும் மனோபாவம் வர வேண்டும்.

தோற்போம், ஆனால் தோல்வியில் பாடம் கொண்டு மீண்டும் சரியாக முயற்சித்து வெற்றிகொள்வோம் எனும் பக்குவம்தான், தோல்வியை வெற்றிக்கு நிகராக மதிக்கும் மனோபாவத்தின் அடையாளம்.

இந்தப் பக்குவம், தோல்வி பயத்தைப் போக்கும்! நூற்றுக்கு நூறு தரும்!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com