நூற்றுக்கு நூறு

10. நான் அசைந்தால்..!

30th May 2019 10:00 AM | சந்திரமௌலீஸ்வரன்

ADVERTISEMENT

 

கற்றுக்கொள்ளும் முறைகளில் Kinesthetic என்பதும் மிக முக்கியமானதொரு முறை. இந்த முறையில் பாடம் படிப்பவர்களையும் நீங்கள் எங்கும் காணலாம். குறிப்பாக உங்கள் வீட்டிலேயே இருக்கலாம்.

மொட்டை மாடியில் நடந்துகொண்டு.. வாய் விட்டு வாசிக்காமல் மனதுக்குள் முணுமுணுத்தபடி.. ஒரு கையில் புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு, அதைப் பார்த்தபடி இன்னொரு கையை பலமாக அசைத்தபடி படிப்பவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே!

இவர்களைப் போன்றவர்களையும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

ADVERTISEMENT

இந்த முறையில் பாடம் படிக்கும் மாணவர்கள், தாங்கள் வாசிப்பதை நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் சிரமம் என்று நினைத்துக்கொள்வதால்தான், நடப்பது, கை அசைப்பது போன்ற நடவடிக்கைகளை அதிகம் செய்கின்றனர். இப்படி உடல் அசைவுகள் அதிகம் இருந்தால்தான் நன்றாகப் படிக்க முடியும் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

இந்த எண்ணம் காரணமாகவும், அதற்குத் தேவைப்படும் அதிக உடல் இயக்கம் காரணமாகவும், அதிக அளவு பாடங்களைப் பார்த்தால் இவர்களிடம் பதற்றமும், எரிச்சலும் காணப்படும். இதனால், இவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதைக் குறைத்துக்கொள்ளும் வாய்ப்பும் அதிகம்.

நடப்பது, கை அசைப்பது, குதித்து, நடப்பது போன்ற இயல்பான உடல் அசைவுகளுடன் இவர்கள் வாசிப்பதால், இந்த உடல் அசைவுகளுடன் இவர்கள் நினைவாற்றலும் தொடர்பு கொண்டதாகிறது.

வாசித்ததை கரும்பலகையில் எழுதச் சொன்னால் இவர்களால் வெகு சுலபமாக எழுத முடியும். சில சமயம், இவர்கள் நடந்துகொண்டே வாசித்ததை சத்தமில்லாமல் முணுமுணுத்துக்கொண்டே காற்றில் எழுதிப் பார்ப்பதையும் கவனிக்கலாம்.

இந்தப் பழக்கம் கொண்ட மாணவர்கள் சில நுணுக்கமான வழிகளைக் கடைப்பிடித்தால் போதும். அவர்கள் வாசித்தது அவர்களது நீண்ட நாள் நினைவில் (மெமரி) தங்கும்; நூற்றுக்கு நூறும் நிச்சயம்.

1. நீண்ட தூரம் நடந்து படிக்க வேண்டும் என்பதை மாற்றிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இரவு நேரம் சாலைகளில் நடந்துகொண்டே படிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

2. தினமும் ஒரே இடத்தில் நடந்துகொண்டே படிப்பது கூடுதல் நன்மை தரும். வீட்டில் இருக்கும் அறைகள், கூடம், பள்ளி தாழ்வாரங்கள், பள்ளி மைதானம், வேறு மைதானங்கள், வீட்டின் மொட்டை மாடி போன்றவை நடந்துகொண்டே படிக்க சிறந்த இடங்கள்.

3. இருவர் சேர்ந்தபடி நடந்துகொண்டே படிக்கலாம் எனும் பழக்கம் இவர்களுக்கு நன்மை தராது. இது படிப்பதற்கும் சவாலாகவே அமைந்துவிடும். ஆகவே இதனைத் தவிர்ப்பது நலம்.

4. பாடங்களை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு படிப்பதே இந்த வகை மாணவர்களுக்குச் சிறந்தது. நடந்துகொண்டே படிக்கும்போது, நீண்ட பத்திகள், நீண்ட வாக்கியங்கள் இவர்களுக்கு சோர்வை உண்டாக்கும். ஆகவே, படிக்கத் தொடங்குவதற்கு முன்பே, இதனை சரியாகக் கவனித்து, பாடங்களைப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. வீட்டில் நீண்ட அறைகள், பள்ளியில் வராண்டாக்கள், மொட்டை மாடி போன்ற இடங்களில் நடந்துகொண்டே படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாடங்களின் முக்கியப் பகுதிகளை, அட்டைகளில் பெரிய அளவு எழுத்தில் எழுதி வைத்துக்கொண்டு, அதை சுவரில், தூணில் பொருத்தி வைத்துவிட்டு, அதனருகே நடந்தபடி அதை வாசிப்பது, இவர்களின் மெமரியில் அது சென்று தங்குவதற்கு மிகவும் பயன்படும்.

6. நடப்பது, கைகளை அசைத்துக்கொள்வது என்பது இவர்களின் படிக்கும் முறை என்பதால், உடல் சோர்வின் மீது அதிக அக்கறை தேவை. தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும். நீண்ட நேரம் தொடர் நடையைத் தவிர்த்து, குறைந்த கால அளவுகளில் நடந்து, பின்னர் சற்று இடைவெளி கொடுத்து, நடப்பது அதிக நன்மை தரும்.

7. Spelling, formula, equation, இது போன்ற பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள இவர்களுக்கு அதிகம் சிரமமாக இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இவர்கள் அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்ப்பதால் நினைவில் நின்றுவிடும் என நினைத்து அப்படிச் செய்வார்கள். அந்த முறை இவர்களுக்குப் பயன் தராது. மாறாக, அது போன்ற பாடங்களை வாசிக்கும்போது, நடப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து, சிறு சிறு உடல் அசைவுகளுடன் அந்தப் பாடங்களை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வாசிக்கும்போது, அவை நீண்ட நாள் மெமரியில் தங்கும். உதாரணமாக, கையில் சிறிய பந்து ஒன்றை வைத்துக்கொண்டு, அதை தரையில் போட்டுப் பிடித்து, மீண்டும் தரையில் போட்டுப் பிடித்து என்று தொடர்ந்து செய்துகொண்டே பாடங்களைப் படித்தால், இவர்களுக்கு அது நல்ல பலன் தரும்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இவர்களுக்குப் பெற்றோர்களின் உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. பாடம் படிக்கும்போது என்ன விளையாட்டு வேண்டிக்கெடக்கு.. என்று கண்டிக்காமல், அப்படி பந்து விளையாடியபடி பாடம் படிப்பதால் அவர்களின் கவனம் பாடத்தின் மீது குவிகிறது என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

8. கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துப் படிப்பது இவர்களுக்கு மிகுந்த பயன் தரும். கணினித் திரையில் கவனித்து, அதிலிருந்து குறிப்பு எடுத்து, பின்னர் சின்ன நடை போட்டு படிப்பது இவர்களுக்கு மிகவும் பிடித்த பழக்கமாக இருக்கும்.

இவர்களின் மெமரி என்பது உடல் அசைவுகளோடு தொடர்புடையது என்பதால் இவர்கள், செயல்முறைப் பயிற்சி வகுப்புகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள்.

இவர்களது செயல்களில், கண்களோடு ஏனைய உறுப்புகள் இணைந்து செயல்படும் தன்மை துல்லியமாக இருக்கும். இதனால், இவர்களால் செயல்முறை வகுப்புகளில் கொடுக்கப்படும் அறிவுரைகளைச் சரிவரப் புரிந்துகொண்டு, அதை அப்படியே பிழையின்றிச் செய்ய இயலும்.

9. விளையாட்டில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். விளையாட்டு இவர்களின் மெமரியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்பதை பெற்றோர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களை விளையாட்டில் இருந்து விலக்கிவைத்து, ‘‘எப்பப் பாரு என்ன விளையாட்டு, போய் படி’’ என முடக்கிவைப்பதைப் பெற்றோர்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்.

இந்த வகை மாணவர்களிடம் காணப்படும் சில பொது அம்சங்கள்

இவர்கள் வகுப்பில் இருக்கும்போதுகூட கைகளையும் கால்களையும் அசைத்துக்கொண்டே இருப்பார்கள்.

பேனா, பென்சில் அல்லது ஸ்கேல் கொண்டு மேஜையை லேசாக தட்டிக்கொண்டே இருப்பார்கள்.

உடலை அசைத்துக்கொண்டே இருந்தால்தான் தங்களின் முழு திறமை, முழு ஆற்றல் வெளிப்படும் என்று முழுமையாக நம்புவதால், அவர்களிடம் இதுபோன்ற அசைவுகள் எப்போதும் காணப்படும். இதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்துகொண்டு, இவர்களை அனுசரித்துச் செல்லப் பழக வேண்டும்.

உடல் அசைவுகளுக்கு இவர்களிடம் அதிக முக்கியத்துவம் இருப்பதால், ஒரே இடத்தில் அசைவில்லாமல் உட்கார்ந்து செய்யப்படும் வேலைகளில் இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்காது. இதன் காரணமாகவே, இவர்கள் வீட்டுப் பாடம் செய்வதில் அதிக தயக்கம் காட்டுவார்கள். அல்லது, பாதி வீட்டுப் பாடம் எழுதிக்கொண்டிருக்கும்போதே இவர்கள் கவனம் அதிலிருந்து விலகி, ஓடலாம், ஆடலாம் என எண்ணம் வந்துவிடும். இதனைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு, பொறுமை காட்ட வேண்டும்.

இதுபோன்ற மாணவர்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்துகொண்டு நடத்துவது மிகவும் அவசியம். குறிப்பாக, இவர்களிடம் பாடத்தில் கேள்வி கேட்டு பதில் வாங்கும்போது, வாய்விட்டுப் படித்து பயிற்சி செய்யும் மாணவர்களிடம் எதிர்பார்ப்பதுபோல எதிர்பார்க்கக் கூடாது. இவர்களுக்கு படிப்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள எப்படி உடல் அசைவுகள் உதவுகிறதோ, அதுபோலவே நினைவில் இருப்பதைச் சொல்லவும் உடல் அசைவுகள் அவசியம்.

இதனால், இவர்கள் பேசும்போது, கைகளை அசைத்து, உடலை அசைத்து பதில் சொல்லவே முயற்சி செய்வார்கள். இதைக் கண்டிப்பதும், கேலி செய்வதும் இவர்களுக்குப் பாதகம் விளைவிப்பதாகும்.

இதுபோன்ற மாணவர்களுக்கு உடல் அசைவுகளின் வழியே பாடம் கற்றுக்கொள்வது என்பது இயல்பான பழக்கம். இதை ஆசிரியர்களும் மாணவர்களும் புரிந்துகொண்டு, அவர்களை அதன்வழியே ஊக்குவிக்க வேண்டும்.

இவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடுவது, கேலி பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் இத்தகைய மாணவர்களிடம் ஆர்வம் அதிகமாக இருக்கும். இவர்களால் விரைவில் செயல்பட முடியும். தோல்வி பயம் அவ்வளவாக இல்லாதவர்கள். அதனால், புதிய முயற்சிகளில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் காட்டுவார்கள். பல முறை முயற்சி செய்வது இவர்களுக்கு அயற்சி தராது. அதனால் இவர்கள் ஆர்வம் குறையாமல் இருக்கும்.

ஆனால், ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் வேட்டைப் புலி போன்றவர்கள். ஓடி, ஆடி, தாவிப் பிடித்தால்தான் இவர்களுக்கு எதுவுமே சுவைக்கும். பாடமும் அப்படித்தான். அதற்கு அவர்களுக்கு வழி செய்து கொடுத்தால், நூற்றுக்கு நூறு நிச்சயம்!

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT