நூற்றுக்கு நூறு

9. வாய்விட்டுப் படித்தால்..!

23rd May 2019 10:00 AM | சந்திரமௌலீஸ்வரன்

ADVERTISEMENT

 

கற்றுக்கொள்ளும் முறைகளில் வாய்விட்டுப் படிக்கும் முறை, மிகவும் சகஜமானது.

பரீட்சை நாள்களில் இப்படியானவர்களை அதிகம் கவனிக்கலாம். ஒவ்வொரு பாடத்தையும் மிகவும் சத்தமாக வாய்விட்டு, ஒரு முறைக்கு பல முறை வாசிப்பவர்கள். இவர்கள் உங்கள் வீட்டிலும் இருக்கலாம், உங்கள் நண்பர்கள் வீட்டிலும் இருக்கலாம்.

இப்படியானவர்கள் வாய்விட்டுப் படிக்கத் தொடங்கியவுடன், ‘‘ஆஹா.. இன்னார் படிக்க ஆரம்பித்துவிட்டார்’’ என அவர் வீடே அமைதியாகிவிடுவதையும் கவனித்திருக்கலாம்.

ADVERTISEMENT

இப்படி வாய்விட்டுப் படிக்கிறவர்களின் குணாதியங்களை அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் தெரிந்துவைத்திருப்பது நலம். மிகக் குறிப்பாக, பெற்றோர்கள். அப்போதுதான் அவர்கள் வாய்விட்டுப் படிப்பதன் காரணம் புரியும். அப்படி வாய்விட்டுப் படிப்பதில் இருக்கும் சாதகங்களைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும்.

வாய்விட்டுப் படிப்பவர்கள்..

1. தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவான திட்டமிட்ட நடவடிக்கை வைத்திருப்பார்கள்.

2. தாங்கள் என்ன செய்ய வேண்டும் என ஆசைப்படுவதையும், அதனால் தங்களுக்கு எப்படி மகிழ்ச்சி கிடைக்கும் என்பதையும் அடிக்கடி வெளியே சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

3. மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள்.

4. இவர்களின் உணர்ச்சி அவர்களின் மொழி, உடல் அசைவு, கண்ணீர் என ஒரே சமயத்தில் பலவிதங்களில் வெளிப்படும்.

5. பலர் சேர்ந்து உரையாடும் சந்தர்ப்பங்களில் இவர்கள் தங்களுக்கான முறை வரும் வரை காத்திருக்கமாட்டார்கள். முந்திக்கொண்டு தன் கருத்தை வலியுறுத்திப் பேசுவார்கள்.

6. வகுப்பில் ஆசிரியர்கள் பேசுவதை, பாடம் நடத்துவதை மிகக் கூர்ந்து கவனிக்கும் பழக்கமும், அதனை சீராகக் குறிப்பெடுக்கும் பழக்கமும் இவர்களுக்கு இருக்கும்.

இப்படிப் பழங்கங்கள் இருக்கும் ஒருவர், ஒருவேளை வாய்விட்டு சத்தமாகப் படிக்கும் வழக்கம் இல்லாமல் இருந்தால், அவர் வாய்விட்டு சத்தமாகப் படிக்கும் முறையைத் தேர்வு செய்வது அவருக்கு நன்மை அதிகம் தருவதாக இருக்கும்.

வாய்விட்டு சத்தமாகப் படிப்பவர்களால்..

1. வருடங்கள், சம்பவங்கள், வரலாற்று நிகழ்வுகள், தேதிகள், பட்டங்கள், பெயர்கள் இவற்றை கோர்வையாக நினைவில் வைத்திருக்க முடியும். இவர்கள் இந்த விவரங்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொண்டு இதனுடன் தொடர்புடைய மேல் விவரங்களை,  நினைவில் (மெமரி) ஒழுங்காக சீராகச் சேமிக்கும் பழக்கத்தை இயல்பாகக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

2. சுற்றுப்புறத்தில் அமைதியான சூழல் அமைந்துவிட்டால் போதும்.. இவர்கள் ஓரிரண்டு முறை சத்தமாக வாசித்தால் மட்டுமே போதும். அது பல வருஷங்களுக்கு இவர்கள் மெமரியில் தங்கிவிடும். சிலருக்கு, நிரந்தரமாக சில விவரங்கள் மெமரியில் தங்கிவிடுவதும் உண்டு.

3. ஒரு விவரத்தை அடிப்படையாகக் கொண்டு, கேள்விகளை எப்படி மாற்றி அமைத்தாலும் அதற்கேற்ப பதில் சொல்லும் ஆர்வமும் ஆற்றலும் இவர்களுக்கு அமைந்திருக்கும். இது தேர்வுகளின்போது மிகவும் பயன்படும். காரணம், பாடத்திட்டத்தில் இருக்கும் அம்சங்களைக் கொண்டு கேள்விகளைக் கொஞ்சம் மாற்றி வித்தியாசமாக அமைத்து, மாணவர்களின் அறிவுத் திறனை சோதிக்கும் முறை கொண்ட தேர்வுகள் இப்போது கடைப்பிடிக்கப்படுகின்றன. இதுபோன்ற தேர்வுகளுக்கு தங்களைத் தயார் செய்பவர்களில், வாய்விட்டு சத்தமாகப் படிப்பவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

4. வகுப்பறை, பயிற்சிக் கூடங்கள், பயிலரங்கங்கள் இங்கெல்லாம் இவர்களால் தங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை வரிசையாகக் கோர்வையாக பிறருக்குப் புரியும்படி எளிமையாக விளக்கிச் சொல்ல முடியும்.

5. புதிய கருத்துகளை உள்வாங்கிக்கொள்வதிலும், அதே கருத்தை வெவ்வேறு கோணங்களில், புதிய அதே சமயம் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான உதாரணங்களுடன் விளக்கிச்சொல்வது இவர்களுக்கு இயல்பாக வரும் வித்தை.

6. மிகவும் சிக்கலான சமயங்களில் தொடக்கத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். ஆனால் போதிய ஊக்கமும், ஆதரவும் வெளியிலிருந்து கிடைத்துவிட்டால் போதும்.. ஒரு பெரிய மலையளவு பிரச்னை வந்தாலும் இவர்களால் அதற்கு கோர்வையாகத் தீர்வுகளை கற்பனை செய்து, அதனை செயல்முறைக்கு வடிவமைத்து, செயல்படுத்தி தீர்வு கண்டுபிடிக்க முடியும்.

வாய்விட்டு சத்தமாகப் படிப்பவர்களுக்குத் தேவையான ஆதரவுகளையும், அவர்கள் விரும்பும் சூழலையும் வகுப்பறைகளிலும், வீட்டிலும் உருவாக்கித்தருவது பெற்றோர் ஆசிரியர்களின் கடமை.

வீட்டில் பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை..

1. உங்கள் மகன் அல்லது மகள் எந்த வகுப்பில் படிப்பவராக இருந்தாலும், உதாரணமாக கல்லூரிப் படிப்பு, பள்ளிப்படிப்பு இப்படி எதுவாக இருந்தாலும், அவர் வாய்விட்டு சத்தமாகப் படிப்பது கேலிக்குரியது என நினைக்கக் கூடாது.

2. வாய்விட்டுப் படிப்பது நல்ல முறைதான் எனும் எண்ணத்தை பெற்றோர்கள் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

3. வீட்டில் வாய்விட்டுப் படிக்கும் மாணவர்கள் இருந்தால் அவர்கள் படிப்புக்கு குந்தகம் தரும் வகையில் தொலைக்காட்சிப் பெட்டி, அல்லது இசைக் கருவிகளை சத்தமாக வைக்க வேண்டாம்.

4. உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் வாய்விட்டுப் படிக்கும் பழக்கம் இல்லாத பிள்ளைகள் இருக்கலாம். அதனால் நம் வீட்டுப் பிள்ளைகள் அதேபோல பயிற்சி கொள்ள வேண்டும் என நினைக்க வேண்டாம். அதை வற்புறுத்துவதும் தவறு.

5. வாய்விட்டுப் படித்து பயிற்சிபெறும் பிள்ளைகள் நல்ல நினைவாற்றல் கொண்டவர்களே என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். இப்படியான பிள்ளைகள் இசையைக் கேட்டுக்கொண்டே படித்தாலும் அவர்கள் கவனம் திசைமாறாது என்பது அறிவியல்பூர்வமான உண்மை. அதனால் அப்படி அவர்கள் இசை கேட்டுக்கொண்டே பாடம் படிப்பதை, தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபடுவதை தவறாக நினைத்து தடை போடக் கூடாது.

வாய்விட்டு சத்தமாகப் பாடம் பயிலும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பெருமளவில் உதவிட முடியும்.

1. இப்படியானவர்கள், ஒரு கருத்தை தன் அளவில் சொந்தமாக சிந்தித்து எழுதும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.

2. வகுப்பில் பாடம் நடத்திய பின்பு, அதே கருத்தை தங்கள் முறையில், யோசித்து விளக்கிச்சொல்ல இதுபோன்ற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

3. பாடங்களைச் சின்னச் சின்னக் கேள்விகளாகக் கேட்டு பதில் சொல்லும் பழக்கத்திற்கு இப்படியான மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

4. வாய்ப்பு இருக்குமானால், வகுப்பறையில் பாடம் நடத்துவதை ஒலிப்பதிவு செய்து இவர்களைக் கேட்க வைக்கலாம்.

5. இப்படியான மாணவர்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றலும் தானாகவே முறைகளை வகுத்துக்கொண்டு கற்றுக்கொள்ளும் திறனும் கொண்டிருப்பார்கள். ஆகவே கற்பிக்கும் முறையையோ அல்லது இப்படித்தான் விடை எழுத வேண்டும் என வற்புறுத்தும் வழக்கத்தையோ இவர்களிடம் கடைப்பிடிக்காமல் இருக்க வேண்டும்.

வாய்விட்டு சத்தமாகப் படிக்கும் பழக்கம் கொண்ட மாணவர்கள் இந்தப் பழக்கத்தை இன்னமும் மெருகேற்றிக்கொண்டு, மிகச் சிறந்ததாக்கிக்கொள்ள முடியும்.

1. தாங்கள் வாய்விட்டுப் படிப்பதை குற்ற உணர்வு கொண்டு கவனிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

2. இப்படிப் படிப்பது அங்கீகரிக்கப்பட்ட முறை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

3. தன் சக மாணவன் / சக மாணவி வேறுவிதமான படிக்கும் பழக்கம் கொண்டிருக்கலாம். அதனால் அது நல்ல பழக்கம் அந்தப் பழக்கம் நம்மிடம் இல்லை எனும் தவறான எண்ணம் வரக் கூடாது.

4. எந்தப் பாடமாக இருந்தாலும் அதை வாய்விட்டுச் சொல்லிப் படிக்கும் வழக்கத்தைத் தொடரலாம். செய்முறைப் பயிற்சி தேவைப்படும் பாடங்களாக இருந்தாலும், இந்த முறையைக் கடைப்பிடிக்கவும். உதாரணமாக, கணிதப் பாடத்தை செய்முறைப் பயிற்சியின் மூலமே கற்க முடியும். அதாவது கணக்குகளைப் போட்டுப் பார்த்து, பயிற்சி செய்வது மட்டுமே வழி. ஆனாலும் வாய்விட்டுப் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கணிதப் பாடம் படிக்கும்போது, அதனை செய்முறைப் பயிற்சியின் வழியே மட்டும் செய்தால் போதாது. அப்படிச் செய்யும்போது என்ன செய்கிறோம் என்பதை வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே செய்வது அவர்கள் பயிற்சியைச் செம்மைப்படுத்தும்.

5. மாணவர்கள் தங்களிடம் இருக்கும் தொழில்நுட்பம் அதிகம் நிறைந்த மொபைல் பேசிகளைப் பயன்படுத்தலாம். அதில் குரலைப் பதிவு செய்து மீண்டும் ஒலிக்கவிடும் வசதி இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி முதல் முறை வாசிப்பதை பதிவுசெய்து ஒலிக்கவிட்டால் அது நினைவில் பதிவதற்கு மிகுந்த உதவி செய்யும்.

6. வாய்விட்டுப் படிக்கும் பழக்கம் கொண்ட மாணவர்கள் தங்கள் வகுப்பில் பாடங்களைக் குறிப்புகள் எடுக்கும்போது, கட்டுரைபோல எழுதிக்கொண்டே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, நோட்டுப் புத்தகத்தின் இடது புறத்தில் இரண்டு அல்லது மூன்று அங்குலம் இடம் விட்டு margin வரைந்துகொள்ளலாம். இதுபோல வலது புறத்திலும், பக்கத்தின் மேல், கீழ் புறத்திலும் margin வரைந்துகொள்ளலாம். இப்போது உங்கள் நோட்டுப் புத்தகத்தின் பக்கத்தில் நான்கு புறத்திலும் மேலே இரண்டு அங்குலம் இடமிருக்கும். உள்ளே கட்டம் போல பெரிதாக இடமிருக்கும். உள்ளே பெரிதாக இருக்கும் இடத்தில் நடத்தப்படும் பாடத்தினை ஆசிரியர் நடத்துவது போலவே விரிவாக எழுத வேண்டும். பக்கத்தின் இடது வலது மேல், கீழ் புறங்களில் இருக்கும் அந்த இரண்டு அங்குல இடம் கொண்ட் மார்ஜினில் அந்தப் பக்கத்தில் எழுதப்பட்ட பாடங்களுக்கான சிறு சிறு வார்த்தைக் குறிப்புகளை எழுதிக்கொள்ளலாம். படிக்கும்போதும் அந்த வார்த்தைக் குறிப்புகளை ஒட்டி, விரிவாக எழுதப்பட்ட பாடத்தினை சத்தமாக வாய்விட்டு வாசிக்கும்போது, அது நீண்ட நாள் மெமரியில் போய்த் தங்குகிறது.

7. பாடத்தின் மிக முக்கியக் குறிப்புகளை, ஓரளவு பெரிய சைஸ் அட்டைகளில் பெரிய எழுத்துகளாக எழுதி அதையும் சத்தமாக வாசிக்கும் பழக்கத்தைத் தொடரலாம்.

8. அறிவியல் பாடங்களில் கோட்பாடுகளின் மிக முக்கிய வார்த்தைகளை மட்டும் சத்தமாகப் பேசி பதிவுசெய்து, அந்த வார்த்தைகளை ஒலிக்கவிட்டு அந்த வார்த்தை தொடர்பான கோட்பாடுகளைச் சத்தமாகச் படித்து பழகினால், நன்கு ஆழமாக மெமரியில் பதியும்.

உங்கள் குரல்தான் உங்கள் பலம் அதைப் புரிந்துகொள்ளுங்கள்.

வாய்விட்டுப் படிப்பவர்களுக்கான உதவிக் குறிப்புகள் சிலவற்றை அடுத்த வாரமும் கொஞ்சம் கவனிக்க இருக்கிறோம். அடுத்த வாரம் Kinesthetic learners-க்கான விவரங்களையும் கவனிக்க இருக்கிறோம்.

பாடம் கஷ்டமில்லை;

பாடம் சிரமமில்லை.

நாம் எந்த வகையில் படித்தால் நமக்கு நன்கு பாடம் புரியும் என்பதுதான் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

அது தெரிந்தால்,

நூற்றுக்கு நூறுதான்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT