நூற்றுக்கு நூறு

8. பாடங்கள் கஷ்டமில்லை..!

16th May 2019 10:00 AM | சந்திரமௌலீஸ்வரன்

ADVERTISEMENT

 

பாடங்களில் எந்தச் சிரமும் இல்லை. அதைப் படிப்பதிலும் எந்தச் சிரமமும் இல்லை. சிரமம் என நினைப்பது எல்லாம் மனதுதான். சிரமம் என்னும் நினைப்பு மட்டுமே தடைக்கல். இந்தத் தடையைத் தாண்டி வருவது மாணவர்கள் கையில்தான் இருக்கிறது.

இதில் மாணவர்களுக்கு உதவிட ஆசிரியர்களும் பெற்றோர்களும் முன்வர வேண்டும். உதவி என்பது அவர்களுக்கான பாட நூல்கள், புத்தகங்கள் வாங்கித் தருதல் மட்டுமல்ல..

பாடங்களைக் கற்பது சிரமம் என்ற மனநிலையைத் துறந்து, பாடங்கள் மீது அக்கறை கொள்ள, மாணவர்கள் சில முக்கிய விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

*

கற்றுக்கொள்ளும் தன்மையைக் கொண்டு, கற்றுக்கொள்பவர்களை Auditory Learnes, Kinesthetic Learners, Visual Learners என்பதாகப் பிரிப்பார்கள்.

Auditory Learnes என்பவர்கள், பொதுவாக சத்தம் போட்டு வாசிப்பவர்கள். இவர்களுக்கு அப்படி சத்தம் போட்டு வாசித்தால்தான் மனதில் பதியும். இது இயல்பு. இதை பெற்றோர்களோ, ஆசிரியர்களோ குறை சொல்வதோ அல்லது கேலி செய்வதோ அந்த மாணவரின் மனநிலையைப் பாதிக்கும்.

Kinesthetic Learners என்பவர்களுக்கு அமைதியாகப் படிக்க வேண்டும். ஆனால் அதே சமயம், உடல் அசைவுகள் அதிகம் கொண்டவர்கள். இவர்களது வாசிப்புக்கும் கல்விக்கும் செய்முறைப் பயிற்சிகள் துணை செய்யும். இவர்கள் வாய்விட்டு சத்தமாகப் படிக்கமாட்டார்கள் என்றாலும், இவர்கள் தங்களுக்குள் மெல்லிய குரலில் சொல்லிப் பார்த்துக்கொள்ளும் பழக்கம் இருக்கும்.

Visual Learners என்பவர்கள் கவனித்துக் கற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். பெரிய பெரிய அளவில் எழுதப்பட்டிருக்கும் பாடங்களைவிட சிறிய அளவிலாக படங்கள், குறியீடுகள், வரைபடங்கள், கிராஃப் போன்றவற்றின் மூலம் கற்பது இவர்களுக்கு எளிதாக இருக்கும்.

சிலர் இந்த மூன்று முறைகளையும் கலந்து கடைப்பிடித்து பாடம் படிக்கிறவர்களாக இருப்பார்கள். இப்படியானவர்கள், வெகு சிலர் என்பது மட்டுமல்ல, அபூர்வமானவர்கள்.

*

பள்ளி மாணவர்களின் வகுப்பறைக் கல்வி தாண்டி அவர்கள் வீட்டில் பாடம் பயிலும்போது, அவர்களுக்குப் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

பெற்றோர்களின் ஒத்துழைப்பு என்பது, தன் மகன் அல்லது மகள் இந்த மூன்றுவிதமான முறைகளில் எந்த முறையில் பயிற்சி செய்வது பலன் அளிக்கும் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு தரும் ஒத்துழைப்பு. இதில், பெற்றோர்கள் கீழ்க்கண்ட முக்கிய விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த மூன்று முறைகளில் ஒரு முறை சிறந்தது, மற்றொரு முறை தவறானது எனும் அணுகுமுறையும் எண்ணமும் இருந்தால், அதை உடனே கைவிட வேண்டும்.

மூன்று முறைகளுமே பலன் அளிக்கக்கூடிய சிறந்த முறைகள்தான். தனது மகன் அல்லது மகள் அவரது இயல்புக்கு ஏற்ப ஒரு முறையைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த முறை தேவையான பலனைத் தரவில்லை என்றால், அவராகவே அடுத்த முறைக்கு மாறிக்கொள்வார். இது இயல்பு என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தனக்கு எந்த முறை சரியாக வரும் என்பதைத் தேர்வு செய்ய இயலவில்லை எனும் நிலை மிக அபூர்வமானது. அந்தச் சமயத்தில் மட்டும் பெற்றோர் மிகக் கவனமுடன் பிள்ளைகளுடன் பேசி ஒத்துழைப்புத் தர வேண்டும்.

ஒரு மாணவர் அவரது எல்லா பாடங்களுக்கும் ஒரே முறையைக் கைக்கொள்ள மாட்டார். இதுவும் இயல்பு. அதேபோல, வயதுக்கு ஏற்ப கற்கும் முறை மாறுவதும் இயல்பு. பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கற்கும் முறை மாறுவதும் இயல்பு. இதனை பெற்றோர்கள் மிக கவனமாகப் புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், பெற்றோர்களின் கணிப்பில் அவர்களது மகன் அல்லது மகள் ஒரு குறிப்பிட்ட முறையில் கற்பது பலன் அளிக்கும் என்பது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டால், அந்த முறையில் பிள்ளைகள் மாற்றம் கொண்டுவந்தால், பெற்றோர்கள் தேவையில்லாமல் அல்லது தேவைக்கு அதிகமாக அச்சமும் பதற்றமும் கொள்கிறார்கள். இது அவசியம் இல்லை என்பது பெற்றோர்களுக்குப் புரிய வேண்டும்.

மிக முக்கியமானதொரு விஷயத்தைப் பெற்றோர்கள் புரிந்துகொள்வது, அவர்களது பிள்ளைகளின் கல்விக்கு மிகவும் பலம் சேர்க்கும் உதவியாக இருக்கும். பிள்ளைகளுக்குப் பாடங்களைக் கற்க எப்படி மூன்று வழிமுறைகள் இருக்கின்றனவோ, அதேபோல பெற்றோர்களுக்கும் அதே மூன்று வழிமுறைகள்தான். பெற்றோரின் வழிமுறையும் பிள்ளைகளின் வழிமுறைகளும் ஒன்றாக இருக்க இயலாது. இந்த வேறுபாட்டின் காரணமாக, தங்கள் பிள்ளைகள் படித்தது போதாது, அல்லது அவர்கள் குறைவாகக் கற்றுக்கொள்கிறார்கள், அல்லது அவர்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு வருவது இயல்பு. இதனை முன்னிறுத்தி பிள்ளைகளிடம் விவாதிப்பது, அவர்களுக்குச் சோர்வு, எரிச்சல், அக்கறையின்மை இவற்றை உருவாக்கும்.

தங்கள் பிள்ளைகள் எந்த முறையைக் கடைப்பிடித்து கற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அது தெரிந்தால்தான், அவர்களுக்குப் புதிய திறமைகளைக் கற்றுக்கொள்ள உதவிடுதல், அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை நினைவூட்டுதல், அவர்களது வேலைகளைப் பாராட்டுதல் எனும் முக்கியப் பொறுப்புகளைச் சீராகவும் செம்மையாகவும் செய்ய இயலும்.

அவர்களது கற்றுக்கொள்ளும் முறை குறித்த புரிதல், அவர்களுடன் இனிமையாக உரையாடுதல், அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், அவர்களுக்கு எங்கே, எப்போது எந்தவிதமான உதவி தேவை என்பதை அறிந்துகொள்ளுதல் எனும் முக்கிய விஷயங்களில் உதவியாக இருக்கும்.

தங்களது கற்றுக்கொள்ளும் முறை சொல்லப்பட்ட மூன்றில் எந்த முறை என்பதை மாணவர்கள் சரியாகத் தெரிந்துகொண்டு, அதை உணர்ந்து ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்.

ஒவ்வொரு கற்றுக்கொள்ளும் முறைக்கும் சில அனுகூலங்களும் சில சவால்களும் இருக்கும். இது இயல்பு என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பாடத்துக்கும் தனது கற்றுக்கொள்ளும் முறை எப்படி உதவியாக இருக்கும், எங்கே அக்கறை அதிகம் தேவைப்படும், எங்கே கூடுதல் கவனமும் முயற்சியும் தேவைப்படும் என்பதை வரும் அத்தியாயங்களில் பாடங்கள் வாரியாக விவரமாகக் கவனிக்க இருக்கிறோம்.

தங்களின் கற்றுக்கொள்ளும் முறையிலும், அதனை எப்படி இன்னமும் சீராக்கிப் புரிந்துகொள்ள முடியும் என்பதை மாணவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியதொரு வித்தை.

*

இந்தத் தொடரை வாசிக்கும் ஆசிரியர்களுக்கு வணக்கம். பள்ளி கல்லூரிகளில் ஒரு வகுப்பில் சராசரியாக நாற்பது மாணவர்கள் இருப்பர். அவர்களில் இந்த மூன்று முறைகளின் வழியே கற்பவர்களைக் கண்டு, இனம் பிரித்து அவர்களுக்கு ஏற்ப பயிற்றுவிக்கும் முறையை மாற்றிக்கொள்வது என்பது மிகவும் சவால் நிறைந்த பணிதான். ஆனாலும், மூன்று முறைகளில் இருப்பவர்களும் பயன்பெறும்படி சில அறிவுரைகள், சில குறிப்புகளைத் தொடர்ந்து வகுப்பறையில் வழங்கினால், அவர்கள் நூற்றுக் நூறு பெறுவது சாத்தியம்தானே!

அடுத்த வரும் அத்தியாயங்களில், Auditory Learnes, Kinesthetic Learners, Visual Learners எனும் மூன்று வகை மாணவர்களுக்கும் ஒவ்வொரு பாடத்தில் இந்த முறைகள் எப்படி பலன் அளிக்கும், இந்த முறைகளை சரியாகப் பயன்படுத்தி பாடங்களைச் சிரமம் இல்லாமல் கற்பது எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT