நூற்றுக்கு நூறு

6. விரும்பினால் பெறலாம்..

2nd May 2019 10:00 AM | சந்திரமௌலீஸ்வரன்

ADVERTISEMENT

 

தூக்க வித்தையையும், சினிமா வித்தையையும் விரிவாகப் பார்ப்போம் என்று முந்தைய வார அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன்.

அவை குறித்து பார்ப்பதற்கு முன், சைக்கிள் வித்தையில் இன்னமும் கொஞ்சம் கவனிக்கவேண்டி இருக்கிறது

தகவல்களை நமது மூளை எப்படி இடம் போட்டு ஞாபகத்தில் சேமிக்கிறது என கவனித்தோம். இதை வைத்துக்கொண்டே சைக்கிள் வித்தை விளையாடுவோம்.

ADVERTISEMENT

நன்றாக சைக்கிள் ஓட்ட பழகிய பின்பு என்ன செய்வீர்கள்? மிக வேகமாகப் பெடலை மிதித்துவிட்டு சைக்கிள் நல்ல வேகம் எடுத்தவுடன், பெடலை மிதிப்பதை நிறுத்திவிடுவீர்கள். ஆனாலும், சைக்கிள் நீங்கள் மிதித்த வேகத்துக்கு எவ்வளவு தூரம் போக வேண்டுமோ அதுவரை போகும். அதுபோலத்தான் இப்போதும் செய்யப்போகிறீர்கள்.

நீங்கள் படிக்க வேண்டிய பாடத்தை புத்தகத்திலிருந்தோ, அல்லது நோட்டிலிருந்தோ பார்த்து பல முறை வாசிக்கிறீர்கள்; மீண்டும் மீண்டும் வாசிக்கிறீர்கள். பிறகு அதை மனப்பாடமாக அப்படியே சொல்லிப் பார்க்கிறீர்கள்.

இந்தப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றுவதுதான் சைக்கிள் வித்தை.

நீங்கள் படிக்க வேண்டிய பாடத்தை நன்கு கருத்து ஊன்றி வாசியுங்கள். பல முறை வாசியுங்கள். பிறகு வாசித்ததை ஒரு நோட்டுப் புத்தகத்தில் முழுவதும் எழுதாமல், இடம் விட்டு இடம் விட்டு எழுதுங்கள். எல்லா விவரங்களும் இருக்கக் கூடாது. விடுபட்ட இடங்களை உங்கள் ஞாபகத்திலிருந்து எழுத முடிகிறதா என்பதைப் பரிசோதியுங்கள்.

உதாரணமாக,

எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில், தமிழ்ச் சான்றோர்கள் குறித்த பாடத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்வோம்.

ஆறுமுக நாவலர், இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் ஆறுமுகனார் என்பதாகும். இவர் இளமையிலேயே சைவ சித்தாந்த நூல்களையும் திருமுறைகளையும் தெளிவாகக் கற்றார்.

தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும் ஒருசேரக் கைவரப் பெற்றவர். அதனால், இருமொழி கற்பிக்கும் ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

இந்த இரண்டு பத்திகளையும் வாசித்து நமது நிரந்த மெமரியில் கொண்டுசேர்க்க, சைக்கிள் வித்தை எப்படி பயன்படும் என பார்க்கலாம்.

உங்கள் பாடப் புத்தகத்தைப் பார்த்து நோட்டுப் புத்தகத்தில் இப்படி எழுதுங்கள்..

_______ல் பிறந்தவர் ஆறுமுக நாவலர்.

இவருடைய இயற்பெயர் __________ என்பதாகும்.

இவர் இளமையிலேயே சைவ சித்தாந்த நூல்களையும் திருமுறைகளையும் தெளிவாகக் கற்றார்.

தமிழ்ப் புலமையும், __________ புலமையும் ஒருசேரக் கைவரப் பெற்றார்.

அதனால் _________ கற்பிக்கும் ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

நோட்டுப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, பாடப் புத்தகம் பார்த்து நான்கு முறை இந்த இரண்டு பத்திகளையும் வாசித்துவிட்டு, நோட்டுப் புத்தகத்தை திறந்து கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்.

இதுபோல, பாடம் முழுமைக்கும் செய்து பாருங்கள். படித்த விவரங்கள் எல்லாம் உங்களின் நிரந்தர மெமரியில் போய் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொள்ளும்.

மொழிப் பாடங்கள், சமூக அறிவியல், வரலாறு போன்ற பாடங்களைப் படித்து நீண்ட நாள் மெமரியில் வைத்துக்கொள்வதற்கான சைக்கிள் வித்தை இது.

*

கணிதம் அறிவியல் போன்றவற்றுக்கான சைக்கிள் வித்தை வேறு. அதையும் உதாரணத்துடன் கவனிக்கலாம்.

8 செமீ நீளம், 6 செமீ அகலம், 7 செமீ உயரம் கொண்ட காகிதப் பெட்டியின் வெளிப்புறப் பரப்பளவைக் கண்டுபிடி?

இந்தக் கணிதக் கேள்விக்கு சமன்பாடு மூலம் விடை கண்டுபிடிக்க, சமன்பாட்டை மனப்பாடம் செய்வது ஒரு வழி. ஆனால் அது நீண்ட நாள் நினைவில் இருக்காது.

சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதைப்போல, படிப்படியாக கற்றுக்கொள்வதுதான் சைக்கிள் வித்தை.

இந்தப் பெட்டிக்கு எத்தனை பக்கம்? ஆறு பக்கங்கள்.

அதை எப்படி வகைப்படுத்தலாம்?

நீளம் X உயரம் என்பதாக, முன்பக்கம் ஒரு செவ்வகம்; அதே நீளம் X உயரம் என பின்பக்கம் ஒரு செவ்வகம்.

அதாவது, 2 X (நீளம் X உயரம்).

அடுத்து, அகலம் X உயரம் என்பதாக வலதுபுறம் ஒரு பக்கம்; அதே அகலம் X உயரம் என்பதாக இடதுபுறம் ஒரு பக்கம்.

அதாவது, 2 X (அகலம் X உயரம்).

அடுத்து, நீளம் X அகலம் என மேல்புறம் ஒரு பக்கம்; அதே நீளம் X அகலம் என கீழ்புறம் ஒரு பக்கம்.

அதாவது, 2 X (நீளம் X அகலம்).

ஆக, {2 X (நீளம் X உயரம்)} + {2 X அகலம் X உயரம்} + { 2 X நீளம் X அகலம்} என்பது மொத்த சமன்பாடு.

இதை ஒவ்வொரு பாகமாகப் பிரித்து, செயல்முறையாக நமக்குப் புரிந்தவகையில் எழுதிப் பார்த்துக்கொண்டால், அது நீண்ட நாள் மெமரியில் தங்குகிறது.

அதன்பிறகு, சமன்பாடுகளை நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பூஜ்ஜியம் முதல் ஒன்பது வரை எண்களும், தசம ஸ்தானங்களும் மட்டுமே நினைவில் வைத்திருக்கிறோம்.

உதாரணமாக 0,1,2,3,4,5,6,7,8,9 எனும் எண்களும், ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம் எனும் தசம ஸ்தானங்களும் மட்டும் நினைவில் வைத்திருக்கிறோம்.

அதனால்தான், 10,20,876 என்ற எண்ணைப் பார்த்தவுடன் பத்து லட்சத்து இருபதாயிரத்து எண்ணூற்றி எழுபத்தியாறு என நம் நீண்ட நாள் மெமரியில் பதிந்திருக்கும் எண்கள், தசம ஸ்தானங்களைக் கொண்டு டக்கென்று சொல்லிவிடுகிறோம்.

எல்லா பாடங்களையும் அப்படி நமது Procedural Memory-க்குள் கொண்டுசெல்ல முடியும். ஆனால், நாம் அதைச் செய்யாது, மூளையை ஒரு மனப்பாட எந்திரம்போல பயன்படுத்துகிறோம். அதனால்தான், நீண்ட நாள் நினைவில் வைத்திருக்க முடிவதில்லை.

இங்கே சொன்னவை உதாரணங்கள்தான். ஒவ்வொரு பாடத்துக்கும் நாமே இதுபோல வடிவமைத்துக்கொள்ள முடியும். அப்படிச் செய்வது, நீங்கள் சைக்கிள் ஓட்டப் பழகியதுபோலத்தான். அதுதான் சைக்கிள் வித்தை.

அடுத்து, சினிமா வித்தையைப் பார்க்கலாம்.

இதை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் பிடிக்கும். அந்த நிறத்தில் உடைகள், பைகள் வாங்குவது; அந்த நிற உடைகள் அணிந்தவர்களை விரும்புவது இதெல்லாம் இயல்பானது. ஒன்று நமக்கு நன்கு பிடிக்கும் என்பது நம் உணர்ச்சியின் வெளிப்பாடு என உளவியல் சொல்கிறது.

நிறம் மீதான இந்த ஈடுபாட்டை படிப்பில், பாடங்களை வாசிப்பதில், அதனை நீண்ட நாள் மெமரியில் வைத்துக்கொள்வதில் பயன்படுத்திக் கொள்வதைத்தான் சினிமா வித்தை என்கிறேன்.

விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு பாடத்தை தொடர்ந்து வாசிக்கிறீர்கள். அதில் இருந்து குறிப்புகள் எடுக்கிறீர்கள். ஆனால், அவை எல்லாமே வெள்ளைத் தாளில் அல்லது கோடு போட்ட காகிதங்களில் எடுக்கப்பட்டவைதானே.

அவை அப்படித்தான் இருக்க முடியும். அவை உணர்ச்சிகள் ஏதும் கொண்டவையா? இல்லைதானே..

புரிந்துகொண்டவை நீண்ட நாள் மெமரியில் இருப்பதுபோலத்தான், உணர்ந்துகொண்டவையும் நீண்ட நாள் மெமரியில் தங்கிவிடும்.

இதுதான் சினிமா வித்தை.

பொதுவாக, படிக்கும் மாணவர்கள் எப்போதும் சீரியசாகவே படிக்கிறார்கள். சின்சியராகப் படிக்க வேண்டுமே அல்லாது சீரியசாகப் படிக்க வேண்டியதில்லை.

படிக்கும்போது தேர்வு குறித்த அக்கறை இருக்கலாம்; கவலை இருக்க வேண்டியதில்லை.

படிக்கும்போது, காலத்தே படித்து முடிக்க வேண்டும் எனும் கவனமும் நோக்கமும் இருக்கலாம்; பயம் இருக்க வேண்டியதில்லை.

தேர்வில் கேள்வித்தாளைப் பார்த்தவுடன் நாம் ஒழுங்காகப் புரிந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் எனும் ஆர்வம் இருக்கலாம்; ஆனால், படித்த பாடம் மறந்துபோய்விடுமோ எனும் குழப்பம் இருக்க வேண்டியதில்லை.

நீங்கள் சினிமா பார்க்கும்போது உங்களுக்கு இந்த எதிர்மறை உணர்ச்சிகள் எதுவும் வருவதில்லை. ஏனெனில், அந்த சினிமாவை நீங்கள் விரும்பிப் பார்க்கிறீர்கள்.

எவ்வளவு நாள்கள் ஆனாலும் அந்த சினிமா உங்கள் மெமரியில் தங்குவது அந்த விருப்பத்தினால்தான்.

பாடத்தின் மீதும் இப்படி ஒரு விருப்ப உணர்ச்சியைக் கொண்டு வாருங்கள். அதுதான் சினிமா வித்தை.

*

என் நண்பரின் பெண், கணிதத்தில், முக்கோணங்களின் பண்புகள் குறித்த Trignometry பாடத்தில் வரும் எல்லா முக்கோணங்களையும், தான் விரும்பி உண்ணும் sandwich துண்டங்களாக நினைத்து, அந்த சான்ட்விச் துண்டங்களின் பண்புகளை அளந்து, கோணங்களை அளந்து பார்ப்பதாக நினைத்துக்கொள்வாள்.

அதனால், அவளால் Trignometry-ன் அனைத்து கோட்பாடுகளையுமே எளிமையாக, அதேநேரம் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் அப்படி விருப்பமாகப் படித்த காரணத்தால், அவளால் படித்த எல்லாவற்றையுமே குழப்பம் இல்லாமல், கவலை இல்லாமல், பயம் இல்லாமல் நன்கு நினைவில் வைத்திருக்க முடிந்தது.

நீங்களும் உங்கள் எல்லாப் பாடங்களுக்கும் இப்படி ஒரு விருப்ப அம்சம் கொண்டுவர முடியும். அது உங்களை மேலும் தூண்டும்.

பிறகென்ன, நூற்றுக்கு நூறுதான்!

தூக்க வித்தை குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT