சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

14. பரிட்சை என்றால் ஏன் பயம்?

By சந்திரமௌலீஸ்வரன்| Published: 27th June 2019 10:00 AM

 

திட்டமிட்டு ஒழுங்காகப் படிக்கும் மாணவர்களும் சரி, ஓரளவு சுமாராகப் படிக்கும் மாணவர்களும் சரி. பரிட்சை என்று வந்துவிட்டால் போதும், அதுவரை இல்லாத பயம் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொள்ளும்.

படுத்தால் தூக்கம் வராது. பரிட்சை எழுதுவதுபோலவும், வினாத்தாள் மிகவும் கஷ்டமாக வந்துவிட்டதுபோலவும், அதை எழுதமுடியாமல் திணறுவதுபோலவும் தனக்குத்தானே கற்பனை செய்துகொண்டு, கொஞ்சமிருக்கிற அந்தப் பயத்துக்குத் தானே மனதளவில் ஊக்க மருந்தும், சத்துணவும் கொடுத்து பெரிய பூதமாக மனதுக்குள் வளர்த்து வைத்துவிட்டு, பின்னர் அதை இறக்கிவிடத் தெரியாமல் தவிப்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். பயத்தைப் போக்க தாயத்து, மந்திரம், கோவிலில் சாமி சந்நிதியில் தன்னுடைய நம்பரை எழுதி வைத்துவிட்டு வருவது எனும் பரிகாரங்களையும் செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

பரிட்சை குறித்த பயம் ஏன் வருகிறது என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டால், பின்னர் அந்தப் பயத்தை சுலபமாக விரட்டிவிடலாம். வரும் வாரங்களில், ஒவ்வொரு பாடமாக கவனிப்பதற்கு முன், பரிட்சை பயம் குறித்து அறிமுகமாகத் தெரிந்துகொள்வோமா?

பரிட்சை நல்லவிதமாக எழுதி, நல்ல மதிப்பெண்களும், நல்ல கிரேடும் பெறுவது முக்கியம்தான். ஆனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதற்கு முக்கியத்துவம் தரும் கண்ணோட்டம் எப்படி உள்ளது எனில், நீ தோல்வி அடைந்தால், நீ குறைவாக மதிப்பெண் வாங்கினால், நீ இத்தனை சதவீதத்துக்கு குறைவாக வாங்கினால் எந்தப் பலனும் இல்லை. அப்படி வாங்கினால் உனக்கு வேலை கிடைக்காது, மேற்கல்விக்கு அனுமதி கிடைக்காது எனும் எச்சரிக்கைகளுடன் அவர்களது அறிவுரை இருக்கிறது. இப்படியான எச்சரிக்கைகள் பிள்ளைகளுக்கு அவர்களின் கவனத்தை முழுமையாக எதிர்மறையான பின்விளைவுகளின் மீது கொண்டு நிறுத்துகின்றன.

இதுபோன்ற அணுகுமுறைகளின் காரணமாக அவர்களின் வாராந்திர, மாதாந்திர தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை வருவதில்லை, அல்லது அந்த தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மீது பெற்றோர் / ஆசிரியரின் எதிர்மறை விமரிசனங்கள், மாணவர்களின் சுயமரியாதை மீதும், சுயமதிப்பீடு மீதும் நம்பிக்கையின்மையைத் தோற்றுவிக்கின்றன.

இதுபோன்ற சூழலில், இயல்பாக மாணவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் உருவாகத் தொடங்கும். அப்படியான எண்ணங்களை ஆழ்மனது உருவாக்கி வைத்துக்கொள்வதால், அதனை வெளிப்படுத்துவதற்கு ஒரு வடிகால்போல பரிட்சை பயம் பயன்படத் தொடங்குகிறது. இதன்றி, மிகவும் நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்களிடம் காணப்படும் பரிட்சை குறித்த பயம் சற்றே வித்தியாசமானது.

என் நண்பர் ஒருவரின் மகன். சென்ற வருடம் அவனது பனிரெண்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வின்போது சந்தித்தேன். கணிதப் பாடத்துக்கான தேர்வுக்கு தயார் செய்துகொண்டிருந்தான். மிகவும் புத்திசாலியான பையன். எப்படி இருக்கிறது தயாரிப்பு முயற்சிகள் எனக் கேட்டேன். மிகவும் பயமாக இருக்கிறது என்று சொன்னான். என்ன காரணம் எனக் கேட்டேன். தன் வகுப்புத் தோழன் தன்னைவிட அதிக மதிப்பெண் வாங்கினால் தன் எதிர்காலம் என்னவாகும் என்னைப் பதில் கேள்வி கேட்டான்.

அவன் மட்டுமில்ல. பல மாணவர்கள் இன்றைக்கு இப்படித்தான், அவசியமில்லாத போட்டியை மனதுக்குள் உருவாக்கிக்கொள்கின்றனர். தங்களுக்கான பாடத்திட்டம், வகுப்பில் கற்றது, பயிற்சி வகுப்புகளில் கற்றது, தான் பயின்றது, பரிட்சை முறைகளைப் புரிந்துகொள்வது, அதன் அடிப்படையில் நல்லவிதமாக பரிட்சை எழுதுவது எனும் நிலைப்பாட்டை எடுக்காமல், தன் வகுப்புத் தோழன் இன்னாரைவிட தான் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என நினைத்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு இருக்க வேண்டிய இலக்கு மாறுகிறது. அதனால் அந்த மாய இலக்கை துரத்தத் தொடங்குகின்றனர். இல்லாத ஒன்றைத் துர்த்தினால், துரத்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அதனால்தான் பரிட்சைக்கு முன்னால் பயம் வந்து ஒட்டிக்கொள்கிறது.

இதைத் தவிர, பரிட்சை பயத்துக்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு. சக மாணவன் எவ்வளவு படித்திருக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டு, அவனுடன் தன்னை அவசியமில்லாத ஒப்பீடு செய்துகொண்டு கவலைப்படுவது. அந்தக் கவலைக்கு தீனி போட்டு தீனி போட்டு, பயமாக வளர்த்தெடுப்பது.

சரியான திட்டமிட்ட தயாரிப்பு இல்லாத காரணத்தினாலும் பரிட்சை குறித்த பயம் வருகிறது. திட்டமிடாத காரணத்தினால், என்று எவ்வளவு எந்தப் பாடம் படிக்க வேண்டும் என்ற கணக்கீடும், அளவீடும் இருப்பதில்லை. இதனால், பரிட்சை நாள் அருகில் நெருங்கும்போதும், படித்திருக்க வேண்டிய பாடத்தின் அளவுக்கும், படித்திருக்கும் பாடத்தின் அளவுக்கும் கணிசமான இடைவெளி விழுந்துவிடும். இந்த இடைவெளியைச் சீராக்க காலஅவகாசம் இருக்காது. இப்படியான சவாலான சந்தர்ப்பத்தில் அந்தச் சவாலை எதிர்கொள்ள உள் மனது உருவாக்கும் ஒரு தூண்டில்தான் பரிட்சை குறித்த பயம். ஆனால், இந்தத் தூண்டில் சரியான திட்டமிடல் இல்லாதவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்.

பரிட்சை குறித்த பயம் உளவியல் சார்ந்தது என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும். இதன் காரணமாக, அந்தப் பயத்தை நீக்க மாணவர்களுக்கு உதவிட முன் வர வேண்டும். பரிட்சை பயம், பரிட்சை எழுதுவதிலும் மதிப்பெண் / கிரேடு பெறுவதிலும் மட்டும் பாதிப்புகளை உண்டாக்காது. மாறாக, மாணவர்களின் தன்னம்பிக்கை, கல்வி மீது ஆர்வம், வாழ்க்கை மீது பிடிப்பு எனும் மிக முக்கியமான அம்சங்களின் மீதும் பாதிப்புகளை உருவாக்கும்.

மாணவர்களிடம், பரிட்சை குறித்த பயம் உருவாகாமல் இருக்க, பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிறைய பங்களிப்பு செய்யலாம்.

பெற்றோர்களுக்கு..

1. நன்றாகப் படிக்க ஊக்குவிக்கவும். அதேசமயம், இவ்வளவு மதிப்பெண் வாங்க வேண்டும். இன்ன கிரேடு வாங்க வேண்டும் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருக்கக் கூடாது. பிள்ளைகள் தங்கள் பரிட்சைக்கான தயாரிப்பை உற்சாகமாகச் செய்வது, பெற்றோர்களின் பொறுப்பில் பெருமளவு இருக்கிறது. சின்னச் சின்னத் தவறுகளை, கேலி, கிண்டல் கொண்டு கடந்துபோக வைக்க வேண்டும். அதை ஊதிப் பெரிதாக்கி, அவர்களை மூலையில் உட்கார வைக்கக் கூடாது.

2. தினசரி வாடிக்கை என்பதை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதைக் கடைப்பிடிக்க மெதுவாகப் பழக்க வேண்டும். ஒரே நாளில் எந்தப் பழக்கத்தையும் மாற்றிவிட இயலாது.

3. பரிட்சை நாட்களில், கேளிக்கை விளையாட்டுக்குத் தடைபோடக் கூடாது. கல்வி எவ்வளவு முக்கியமோ, அதனினும் முக்கியம் கேளிக்கை, விளையாட்டு, ஓய்வு, தூக்கம் போன்றவை.

4. பிள்ளைகளின் பொறுப்புணர்வை எடுத்துச்சொல்வது தவறில்லை. ஆனால் அப்படிச் சொல்லும்போது அது குற்றம் சாட்டும் மொழியில் இல்லாமல், நச்சரிக்கும் அறிவுரைபோல் இல்லாமல் அமைத்துக்கொள்ளவும். இந்தப் பழக்கத்தை கடைப்பிடிக்கத் தொடக்கத்தில் கடினமாகத் தெரியலாம். ஆனால், நீண்ட நாள் பலன் அளிக்கும். குறிப்பாக, பரிட்சைக் காலங்களில் பிள்ளைகளின் தன்னம்பிக்கைக்கு இந்தப் பழக்கம் பெரிதும் துணை புரியும்.

மாணவர்களுக்குப் பரிட்சை பயம் இல்லாமல் இருக்க, ஆசிரியர்கள் பெரும் உதவி புரிய இயலும்.

ஆசிரியர்களுக்கு..

1. பாடம் நடத்துவதை கவனமாகச் செய்வதுபோல, பரிட்சை விடைத்தாளை எப்படி திருத்துகிறோம் என்பதை, அச்சப்படுத்தாமல் மாணவர்களுக்கு நட்புடன் விளக்கலாம்.

2. மாணவர்கள் வாடிக்கையாகச் செய்யும் சிறு தவறுகள் ஏன் ஏற்படுகின்றன என்பதை உதாரணங்களுடன் எடுத்துச்சொல்லி, அவர்களுக்கு பரிட்சை முறைகளை நன்கு பரிச்சயம் செய்துவைக்கலாம்.

3. பரிட்சைக் காலத்தில் மட்டுமில்லாமல், ஏனைய கல்வி நாட்களிலும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் வழங்கும்போது, அவர்களுக்கு அந்தப் பாடங்களின் மீது அக்கறையும் ஆர்வமும் உருவாக்கும்விதமாக வீட்டுப் பாடங்கள் வழங்க வேண்டும்.

4. பாடங்களை மாணவர்கள் புரிந்துகொண்டு, தங்கள் சொந்த மொழி நடையில் எழுத அனுமதிக்க வேண்டும். இது பரிட்சை பயத்தை நீக்க பெருமளவு உதவும்.

வரும் வாரங்களில், ஒவ்வொரு பாடமாக, பரிட்சை பயம் குறித்தும் அதனை எப்படி வெல்வது என்பதையும் கவனிக்கலாம்.

(தொடரும்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : தேர்வு பயம் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்கள் பரிட்சை மதிப்பெண் exam fear students subjects parents teachers

More from the section

22. சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு..
21. அறிவென்பது என்ன!!
20. மதிப்பெண்ணும் அறிவும்!
19. ஆங்கிலம் சுலபமே!
18. ஆங்கிலம் கஷ்டமில்லை!