வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

11. மனதிலே படம் வரைந்து..

By சந்திரமௌலீஸ்வரன்| Published: 06th June 2019 10:00 AM

 

மாணவர்களில் சிலரை நீங்கள் கவனித்திருக்கலாம். அவர்கள் பாடங்களில் பார்க்கும் வரைபடங்கள், உடல் பாகங்கள், கருவிகளின் படங்கள், ஏன் சில சமயம் தலைவர்கள், விஞ்ஞானிகள் படங்களை ஒரே ஒருமுறை கவனித்துவிட்டு, அதை அப்படியே தங்கள் நோட்டுப் புத்தகத்தில் வரைந்துவிடுவார்கள். இவர்களுக்கு அப்படி வரைவதற்கு, பலமுறை வரைந்து வரைந்து பயிற்சி எடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

நாமெல்லாம் இவர்களுக்கு ஓவியம் வரைவது நன்றாக வருகிறது என நினைத்துக்கொண்டிருப்போம். அதுவும் உண்மைதான். ஆனால் இவர்கள் கற்றுக்கொள்ளும் விதத்தில் Visual Learners வகையினர். எண்ணிக்கையில் அதிகம் காணப்படமாட்டார்கள். ஒரு வகுப்பில் ஓரிரண்டு மாணவர்கள் மட்டும் இந்த வகை மாணவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் கற்றுக்கொள்ளும் விதத்தின் காரணமாக, இவர்களால் எப்படி பாடம் படிப்பதை சிரமம் இல்லாமல் அமைத்துக்கொள்ள இயலும் என்பதைத் தெரிந்துகொள்வது, இவர்களுக்கு மட்டுமல்ல, இவர்களுக்குப் பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், இவர்களின் பெற்றோர்களும் சரியாகப் புரிந்துகொள்வது அவசியம்.

இந்த வகை மாணவர்கள் வகுப்பில் அதிகம் பேசமாட்டார்கள். வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் எடுக்கும்போது கரும்பலகையில் ஏதேனும் எழுதினால், அல்லது வரைந்தால் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதனைக் கூர்ந்து கவனிப்பார்கள்.

ஆனால், ஆசிரியர் பேச்சில் சொல்லும் விளக்கத்தை எழுதி வைத்துக்கொண்டால் மட்டுமே இவர்களால் அதை நினைவில் வைத்துக்கொள்ள இயலும். இதனால், இந்த வகை மாணவர்கள் வகுப்பறையில், குறிப்பு எடுக்கும் பழக்கத்தை ஒழுங்கு செய்துகொள்ள வேண்டும்.

பாடங்களைப் புத்தகத்திலிருந்து, எழுதப்பட்ட குறிப்புகளில் இருந்து வாசிப்பதில் நாட்டம் கொண்டவர்கள். ஆனால் அவை குழப்பமில்லாத எளிய மொழியில் சின்ன சின்ன வாக்கியங்களாக அமைந்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள இந்த வகை மாணவர்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.

பாடங்களில் முக்கியப் பகுதிகளை, சிவப்பு, பச்சை நிற பேனாக்களினால் அடிக்கோடு செய்தல், அல்லது ஹைலைட்டர்கள் கொண்டு அந்தப் பகுதிகளைக் குறித்து வைத்துக்கொள்ளுதல் போன்ற முறைகள் இந்த வகை மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த வகை மாணவர்கள் வீட்டில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டே படிக்கும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அப்படி வாசிப்பது அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதை அவர்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்.

பாடங்களைக் குறிப்பு எடுப்பதிலும் சரி, தேர்வில் எழுதும் போதும் சரி, இவர்களின் கையெழுத்து அழகாகவும் தெளிவாகவும் இருக்கும்.

அவர்கள் பாடங்களை நினைவில் இருந்து தொகுத்து தேர்வில் விடைத்தாளில் எழுதும்போது, அந்த விடை அவர்கள் மனக்கண்ணில் அவர்கள் கையெழுத்திலேயே காண்பார்கள்.

பாடங்களைக் குறிப்பு எடுக்கும்போது, முக்கியப் பகுதி, முக்கியமான சமன்பாடு, முக்கிய அறிவியல் கோட்பாடு என்பனவற்றை குறித்து வைத்துக்கொள்ள இவர்கள் சின்ன சின்ன படங்களை அந்தப் பகுதிகளில் வரைந்து வைத்துக்கொண்டால், அது அவர்களுக்கு அந்தப் பாடப் பகுதிகள் அவர்களின் நீண்ட நாள் மெமரியில் பதிந்துவிடும்.

உதாரணமாக, முக்கோணத்தின் பரப்பளவு எனும் சமன்பாட்டினை ஒரு முக்கோணத்தினை வரைந்து அதனுள்ளே எழுதி வாசித்தால், இந்த வகை மாணவர்கள் அந்த விவரத்தினை மறப்பதில்லை. ஒரு வேதியியல் சமன்பாட்டினை, ரசாயனக் குடுவை ஒன்றின் படம் வரைந்து அதில் அந்த சமன்பாட்டினை எழுதி வைத்துக்கொண்டு வாசித்தால், அது அவர்களுக்கு நினைவில் நிரந்தரமாகப் பதிந்துவிடும்.

நீண்ட பத்திகளை வாசிக்கும்போது, சில சின்னச் சின்ன கோடுகளால் ஆன symbol, clip art, visual cue வரைந்து வைத்துக்கொண்டு வாசித்தால், அந்தப் பாடங்கள் இவர்களின் மெமரியில் நிரந்தரமாகப் பதிந்துவிடும்.

குறிப்பு எடுக்கும்போது, மிக முக்கியமானவை, முக்கியமானவை, அவசியமானவை என்பதாக பாடங்களுக்குத் தலைப்பு கொடுத்து, அந்தத் தலைப்பினையும் வேறு வேறு நிறங்கள் கொண்ட எழுத்தில் (உதாரணமாக சிவப்பு, நீலம், கறுப்பு) என எழுதி வைத்துக்கொண்டால், இந்த மாணவர்கள் அந்தப் பகுதிகளை அந்தந்த நிறங்களுடன் மிகச் சுலபமாக நினைவில் வைத்துக்கொள்வார்கள்.

இந்த வகை மாணவர்கள், திட்டமிடுதலில் சிறப்பானவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பாடங்களை எழுதுவதிலும், திட்டமிடுதலிலும், தங்கள் உடைமைகளைப் பராமரிப்பதிலும். பெரியவர்களுக்கு நிகரான நேர்த்தியைக் காணமுடியும்.

பாடம் படித்துக்கொண்டிருக்கும்போது, அடிக்கடி வானத்தையும், அருகே இருக்கும் சுவரை இலக்கில்லாமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்தச் சந்தர்ப்பங்களில் இவர்களைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்துகொள்வது மிக மிக அவசியம்.

அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்கள் தாங்கள் வாசித்த விவரங்களுக்கு உருவங்களை மனக்கண்ணில் உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். ஆனால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதைப் புரிந்துகொள்ளாமல் பாடத்தில் கவனம் செலுத்தாமல் அவர்கள் பொழுதை வீணாகக் கழிக்கின்றார்கள் என தவறாகப் புரிந்துகொண்டு அவர்களைக் கண்டிக்கத் தொடங்குவார்கள். இதனை கவனமாகத் தவிர்க்க வேண்டும்.

இந்த வகை மாணவர்கள் பொதுவில் எப்படி தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனர்; அதன் காரணம் என்ன என்பதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

1. ஆசிரியர்கள் வகுப்பில் பேசி, விவரம் சொல்லி பாடம் நடத்தும்போது, அதை இவர்கள் கவனிப்பார்கள். அதேசமயம், இவர்கள் அந்தப் பாட விவரங்களுக்கு உருவங்களை மனக்கண்ணில் வரையத் தொடங்குவார்கள். இதனால் இவர்கள் பாடத்தைக் கவனிக்காமல் வேறு எங்கோ கவனம் கொண்டிருக்கின்றார்கள் என கருதக் கூடாது.

2. வார்த்தைகளாக இவர்களுக்குச் சொல்லப்படும் அறிவுரைகளைவிட, எழுத்துப்பூர்வமாக இவர்களுக்குச் சொல்லப்படும் அறிவுரைகள் (உதாரணமாக சுற்றறிக்கை, மின்னஞ்சல்) இவர்களுக்கு உதவும்.

3. வார்த்தைகளாக இவர்கள் கேட்டுக்கொள்ளும் சந்தர்ப்பமாக இருந்தாலும், அதனை இவர்கள் எழுதி, குறிப்பு எடுத்துக்கொண்டு, அதைப் பின்பற்றும் பழக்கத்தை இவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

4. வகுப்பில் பாடம் கவனிக்கும்போதும், பிறர் அறிவுரை சொல்லும்போதும், இவர்கள் அதிகம் கேள்வி கேட்பார்கள். அந்தக் கேள்விகள் மூலம் இவர்கள் தெளிவுபெற்று, அவர்களுக்கான விவரங்களை உருவங்களாக மனக்கண்ணில் வடிவமைத்து அதனை அவர்கள் மெமரியில் பதிந்துவைக்கின்றனர். இதனால் இவர்கள் கேள்வி கேட்பதை எரிச்சலும், கோபமும் கொண்டு அணுகாமல், இவர்கள் கற்றுக்கொள்ளும் தன்மையைப் புரிந்துகொண்டு, இவர்களுக்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உதவிட வேண்டும்.

5. உதாராணமாக, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும் வழி கேட்டால், இவர்களுக்கு வார்த்தைகளாக நாம் வழியை விளக்கிச் சொல்லும்போது, இவர்கள் கேள்விகள் கேட்பதைக் கவனிக்கலாம். அந்தக் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்ல வேண்டும். அல்லது அவர்களுக்கு அந்த வழியினை ஒரு படமாக சுமாரான படமாக இருந்தாலும் போதும், வரைந்து கொடுத்துவிட்டாலும் போதும். அவர்கள் மிகச் சரியாகப் புரிந்துகொள்வார்கள்.

6. இவர்களின் நினைவாற்றல் அபாரமானது. ஆனாலும் இவர்கள் நினைவில் வைத்திருக்கும் விஷயங்கள் உருவங்களாக, படங்களாக, கிராஃப்களாக, குறியீடுகளாக நினைவில் இருப்பதால், அதை வார்த்தைகளில் பதிலாகக் கேட்டால், தடுமாறுவார்கள். இவர்கள் சொல்லும் வாக்கியங்களை முழுமையாக முடிக்கமாட்டார்கள், அல்லது ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லும் வழக்கம் வைத்திருப்பார்கள். இதனால் இவர்கள் சரியாக வாசிக்கவில்லை, படிக்கவில்லை எனும் தீர்மானத்துக்கு வந்து இவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது.

7. பாடங்களை இவர்கள் குறிப்பு எடுக்கும்போது, இவர்கள் வாசிக்கும் பாடங்கள் மனக்கண்ணில் நினைவில் உருவங்களாக உருவாகின்றபடியால், இவர்களில் குறிப்புகளில் ஆங்காங்கே கிறுக்கிவைக்கப்பட்ட படங்கள்போல உருவங்கள் இருக்கும். இதனை பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகவும் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

8. திட்டமிடுதலில் இவர்களிடம் நேர்த்தியும், கவனமும், தேவையான விவரங்களில் அக்கறையும் இருந்தாலும், இவற்றை ஒருங்கிணைக்கும்போது இவர்கள் மனக்கண்ணிலும், எண்ணத்திலும் உருவங்கள் மிக வேகமாக உருவாகி, முடிந்துவிடும். ஆகவே, ஒரு விஷயத்தைத் திட்டமிடும்போதே அதன் முடிவை இவர்கள் உருவகமாக யோசித்துவிடுவதால், திட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும், அதனை விளக்கிச் சொல்லும் பிறரின் மீது சுலபமாகக் கோபம் கொள்வார்கள். திட்டத்தின் ஒவ்வொரு படியினையும் நிலையினையும் பொறுமையாகக் கேட்டுக்கொள்ளும் சுபாவம் இவர்களிடம் இருக்காது.

மாணவர்களில் இந்த வகை மாணவர்கள் அதிகமாகக் காணப்படமாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்புள்ளது எனக் கவனித்தோம். இவர்களின் கற்றுக்கொள்ளும் வழிமுறைகள் அசாதாரணமானவை ஆனாலும், பயனுள்ளவை என்பதை இந்த மாணவர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் புரிந்துகொண்டால், நூற்றுக்கு நூறு வாங்குவது சுலபம்தானே!

(தொடரும்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : மாணவர்கள் பாடத்தில் கவனம் கற்றுக்கொள்ளுதல் ஆசிரியர்கள் பெற்றோர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பாடங்கள்

More from the section

21. அறிவென்பது என்ன!!
20. மதிப்பெண்ணும் அறிவும்!
19. ஆங்கிலம் சுலபமே!
18. ஆங்கிலம் கஷ்டமில்லை!
17. அறிவியல் என்பது ஆச்சரியமே!