வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

23. சவாலும் மனப்பாங்கும் சகோதரர்கள்!

By சந்திரமௌலீஸ்வரன்| Published: 29th August 2019 03:48 PM

 

இந்தக் கட்டுரையின் தலைப்பை கவனித்தபின் ஆச்சரியமாக இருக்கிறதா! இருக்கலாம்.. ஆனால் அதுதான் உண்மை. சவாலும் மனப்பாங்கும் சகோதரர்கள்!

அதுவும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்றால் ஆச்சரியம் அதிகமாகலாம். இதை மேலும் கவனிப்பதற்கு முன்பு, முந்தைய கட்டுரையில் வாசித்தவற்றை எளிமையாக நினைவுகூர்வோமா..

திட்டமிடல், வெற்றி-தோல்வியை சமமாகக் கருதும் தன்மை, உறவுகளின் வலிமை, துணிவு என்றால் என்ன, சரியான இலக்குகளை அமைத்துக்கொள்ளும் அவசியம் எனும் முக்கிய அம்சங்கள் குறித்து ஆழமாக வாசித்தோம்.

இவை சவாலை எதிர்கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் என்பதால் அவை குறித்து தெரிந்துகொண்டோம். அதனினும் மிக முக்கியமான அம்சத்தை நாம் இங்கு வாசிக்க இருக்கிறோம்.

சவாலும் மனப்பாங்கும் சகோதரர்கள்!

மனப்பாங்கு குறித்து பல அறிஞர்கள் பலவித விளக்கங்களைப் பகிர்ந்திருக்கின்றனர். அவற்றில் பல தினசரி மேற்கோள் அளவில்கூட இன்றளவில் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்படுவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம்.

ஆனால் மனப்பாங்கு என்பது மிகவும் சிக்கலான உளவியல் அம்சம். எந்த ஒரு பொருளைக் குறித்தும், ஒருவரின் எண்ண வெளிப்பாடு என்பதாக மனப்பாங்கை எளிமையாகப் புரிந்துகொண்டு மேலும் தொடரலாம்.

மனப்பாங்கு என்பது எப்போதும் ஒன்றுபோலவே இருக்காது, சில சமயங்களில் மாறும் தன்மை கொண்டது. மனப்பாங்கினை அமைத்துக்கொள்வதில் ஒருவரது தனிப்பட்ட அனுபவம் மிகவும் முக்கியமான பங்கினை வகிப்பதால், அனுபவத்துக்கு ஏற்ப மனப்பாங்கு மாறும். சில சந்தர்ப்பங்களில் அந்த மாற்றம் உடனே நிகழக்கூடியதாகவும், வெளிப்படையாக பிறரால் உணரக் கூடியதாகவும் இருக்கும். சில சந்தர்ப்பங்களில், அந்த மாற்றம் நிகழ தாமதம் ஆகலாம். அதனால் பிறரால் உணர முடியாத அளவில் இருக்கும்.

மனப்பாங்கு உருவாகும் விதத்தினை கவனிப்பது சுவாரசியமானதும் அவசியமானதும் ஆகும். மனப்பாங்கினை ஒன்றுக்கொன்று முரணனான மூன்று ஜோடி அம்சங்கள் நிர்ணயிக்கின்றன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

இவை ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாலே, மனப்பாங்கு நிலையில்லாதது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

• முற்றிலும் அறிந்து புரியும் செயல் - அறியாது செய்யும் செயல்.

• உள்நோக்கிய அலசல் - வெளிநோக்கிய அலசல்.

• சரியான காரணங்களுடன் - காரணம் தெரியாமல்.

எனும் ஒன்றுகொன்று முரண்பட்ட இந்த மூன்று ஜோடிகள்தான் ஒருவரின் மனப்பாங்கினை நிர்ணயிக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது மிக அவசியம். இந்த மூன்று ஜோடியின் ஆறு அம்சங்களைத் தெரிந்துகொண்டால் மட்டுமே சவால்களைச் சந்திக்கும் மனப்பாங்கினை உருவாக்க இயலும். இதைத் தெரிந்துகொள்ளாமல் மனப்பாங்கினை சீரமைக்க இயலாது.

முற்றிலும் அறிந்து செய்யும் செயல் என்பது, அந்த செயலுக்கான காரணமும், அந்த செயலைச் செய்வதற்கான வழிமுறைகளும், அந்த செயலின்போது உருவாகும் பல செயல்களும், விளைவுகளும், செயலுக்கான காலஅளவுகள், செயலின் வெற்றி இலக்கு எது என்பதுவரை ஒவ்வொரு நிலையும் தெரிந்து செய்யப்படும் செயல். இப்படியான செயலைச் செய்து பழகும்போது மனப்பாங்கு, சரியாக வேலைசெய்கிறது பொறுமையாக ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுகிறது.

மாறாக எதுவுமே தெரியாது, ஏதோ ஒரு தூண்டுதலில் செய்யப்படும் செயலுக்கான விளைவுகளோ, நேரமோ, அல்லது வேறு அம்சங்களோ நமது கட்டுப்பாட்டில் இருக்காது. அல்லது விளைவுகளை யூகிக்க இயலாது. மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்வதற்கு வழியில்லாத வகையில் இருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகள் மனப்பாங்கினை பலமிழக்கச் செய்கின்றன. இப்படியாகச் செய்து பழகியவர்களின் மனப்பாங்கு எப்போதும் சவாலை விட்டு விலகி நிற்கும்.

எந்த ஒரு செயலும் தனித்து செய்யப்படுவதில்லை. அதில் பிறரின் பங்களிப்பு இருக்கும் அல்லது பிறரின் மேற்பார்வை இருக்கும். இந்த அடிப்படையில் செயல் குறித்து நம்மைக் குறித்த ஆழ்ந்த அலசலும், பிறரைக் குறித்த ஆழ்ந்த அலசலும் ஒவ்வொரு மனிதரும் செய்வது இயல்பு.

தன்னைக் குறித்து ஆழ்ந்த அலசல் என்பது, தன் இயல்புகள், தனக்கான தனித் திறமைகள், தன்னிடம் இருக்கும் குறைகள், தன்னால் இயன்றவை, இயலாதவை என்பன போன்ற அளவீடுகளைக் குறித்த மதிப்பீடுகள். இந்த மதிப்பீடுகளை ஒருவர் பாரபட்சமின்றி செய்து பழகும்போதும், மதிப்பீடுகளில் இயன்றவரை ஒழுக்கத்தினைக் கடைப்பிடிக்கும்போதும், மிகச் சரியான மனப்பாங்கும் வளர்கிறது.

பிறரைக் குறித்த அலசலில், அவருடன் ஏற்பட்ட முன் அனுபவம் காரணமாகவோ, அல்லது பிறரிடமிருந்து அவர் குறித்து பெறப்பட்ட தகவல்கள் காரணமாகவோ பாரபட்சம் இல்லாத மதிப்பீடுகளைக் கொள்வது.

எப்போதும் மதிப்பீடு அலசலில், பாரபட்சமில்லாது நமக்கு நாமே நேர்மையாக இருந்தால் மனபபாங்கு குழப்பம் இல்லாத நிலையினை எட்டும்.

ஒவ்வொரு செயலுக்குமான காரணங்களை தெரிந்துகொள்வது என்பது பொதுவில் ஏன் இதனைச் செய்கிறோம் என்பதாகவே பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் அதனை இன்னமும் ஆழமாகப் பார்க்க பழக வேண்டும்.

அந்தச் செயலுக்கான காரணம் நம் விருப்பமாக இருக்கலாம், அல்லது நம் தேவையாக இருக்கலாம், அல்லது நமக்கு பிறர் சொன்ன அவர்களது விருப்பமாக இருக்கலாம், அல்லது நாம் செய்து முடிக்க வேண்டிய தனிப்பட்ட கடமையாகவோ அல்லது பொது கடமையாகவோ இருக்கலாம். இந்த எளிய அம்சம் அந்த செயலுக்கான முதன்மைக் காரணம். ஆனால் மனப்பாங்கு இந்த முதன்மைக் காரணத்தினால் அமைவதில்லை. மாறாக அந்த செயலைச் செய்ய தேர்வு செய்யும் வழிமுறைகளும் அதற்கான காலமும்தான் காரணம் எனக் கொள்ள வேண்டும்.

சரியான காரணம் என்பது சரியான வழிமுறை என சோதிக்கப்பட்டு அல்லது ஆழமாகப் பரிசீலிக்கப்பட்ட வழிமுறைதானே அல்லாது விருப்பம் மட்டுமில்லை என்பதே நல்ல மனப்பாங்கினை வளர்க்கும், சரியான காரணங்கள் இல்லாது செய்யப்படும் செயல், எப்போதும் இலக்கில்லாத பயணம் போன்றதுதான். இதுவும் பலவீனமான மனப்பாங்கினை வளர்க்கும். மேலும், சவால்களைக் கண்டு விலகி ஓடும் மனப்பாங்கினையும் வளர்க்கும்.

சவாலும் மனப்பாங்கும் சகோதரர்கள், அதுவும் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்கள் என்று கவனித்தோமல்லவா.. அது எப்படி என்பதை விவரமாகக் கவனித்துவிட்டு,

இந்த ஆறு அம்சங்கள், மேலும் முன்பு கவனித்த ஐந்து அம்சங்களைக் கொண்டு மாணவர்கள் எப்படி சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கினை வளர்த்துக்கொள்வது என்பதை தொடர்ந்து கவனிப்போம்.

(தொடரும்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : மாணவர்கள் மதிப்பெண் பாடத்திட்டம் இரட்டையர்கள் மனப்பாங்கு சவால்

More from the section

25. தெளிவுபெற்ற மதியினாய் வா.. வா.. வா..!
24. மாணவர்களின் சவால்கள் என்ன..?
22. சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு..
21. அறிவென்பது என்ன!!
20. மதிப்பெண்ணும் அறிவும்!