22. சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு..

22. சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு..

மாணவர்கள் தேர்வுகளை, வகுப்புப் பாடங்களை, ஏன் தினசரி பாடம் படிப்பதையேகூட இன்றைய காலத்தில் சவால்களாக நினைக்கத் தொடங்கிவிட்டனர் என்று சொன்னால் மிகையாகது.

எந்த ஒரு வேலைக்கும் முனைப்பும், முயற்சியும், ஆர்வமும் அவசியம் என முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அதே நேரம், எந்த ஒரு வேலையிலும் எதிர்பாராத திருப்பங்களும், யூகிக்க இயலாத இடையூறுகளும் வரத்தான் செய்யும் என்பதை மாணவப் பருவத்திலேயே உணர்ந்து பழக வேண்டும். உணர்ந்து பழகுவதோடு அதனை எதிர்கொள்ளும் மனப்பாங்கையும் வளர்த்துக்கொள்வது அவசியம்.

சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கினை அடையவும் அதனை மேம்படுத்திக்கொள்ளவும் சில முறைகள் அவசியமாகின்றன. அவை என்ன என்பதைக் கவனிக்கலாம்.

1. திட்டமிடுதல்

திட்டமிடுதல் என்பது நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் வேலையை  எப்படி, எந்தக் கால அளவில், எதைக் கொண்டு முடிக்க இயலும் என்பதை அறிந்துகொள்வதாகும். மாணவர்களுக்குத் திட்டமிடுதல் என்பது பாடத்தை, எப்படி எந்தெந்த கால அளவில் எந்தப் புத்தகம், குறிப்புகளைக் கொண்டு கற்றுக்கொள்ள இயலும் எனும் திட்டமிடுதல் அடிப்படையாகும்.

திட்டமிடுதலின் முக்கிய அம்சம், உத்தேசமான கணக்கீடுகளை இயன்றவரை தவிர்த்து, சரியான புள்ளிவிவரங்களைக் கொண்டு, திட்டமிடுதல். உதாரணமாக, ஒரு நாளைக்கு சராசரியாக ஒவ்வொரு பாடத்திலும் இவ்வளவு படிக்கலாம் என்பதை கணித்து time-table அமைத்துக்கொள்ளுதல். இதில் உத்தேசக் கணக்குகளை அறவே தவிர்க்க வேண்டும். நடைமுறை சாத்தியம் இல்லாத அளவுக்கு கணக்கீடுகளைக் கொண்டு திட்டமிடுதல் கூடாது. உதாரணமாக, இத்தனை மணி நேரம் தொடர்ந்து படிக்க இயலும் என்பது எல்லா பாடங்களுக்கும் ஒன்று போலவே இருக்காது. அதனைக் கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். மேலும், எந்தப் பாடம் கடினம் என்பதும் எந்தப் பாடம் சுலபம் என்பதும் அறிந்து அதற்கேற்ப திட்டமிடல் இருக்க வேண்டும்.

திட்டமிடல் சரியாக இருப்பின், எதிர்பாராது உருவாகும் சவால்களுக்கு என நேரம் ஒதுக்கவும், அதன் மீது கவனம் செலுத்தவும் நாமே வலிய வாய்ப்புகளையும் நேரத்தையும் ஒதுக்கிவைக்கிறோம் என்பதை அறியலாம். இதனால் எதிர்பாராத சவால்கள் உருவாகும்போது நேரம் போதாமை எனும் காரணத்தினால் உருவாகும் மன அழுத்தம் தவிர்க்கப்படும். திட்டமிடுதலை சரிவரச் செய்து பழகும்போது, சவால்கள் இயல்பானவை என்பது புரிந்துவிடும். அதனை எதிர்கொள்ளும் மனப்பாங்கும் உருவாகும்.

திட்டமிடுதலின் மற்றுமொரு அனுகூலம், அது தன்னம்பிக்கையை  வளர்க்கும். அது எப்படி என்று பார்க்கலாம்.

சவால்கள் இயல்பானவை. அவற்றை எதிர்கொள்ள நமக்குப் போதுமான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது எனும் நிலையில், சவால்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையின் முதல்படி உருவாகிறது.

சவாலை எதிர்கொள்ளத் தேவையான விவரங்கள், உதவிகள் போன்றவற்றை நாம் தேடிப் பெற இயலும் எனும் நேர்மறைச் சிந்தனையை, சவாலைச் சந்திக்க கால அவகாசம் இருக்கிறது எனும் நடைமுறை உண்மை நமக்குத் தருகிறது. இந்த நேர்மறைச் சிந்தனையின் காரணமாக மனம் தானாக வலிமை அடைகிறது.

மனம் வலிமை அடையும்போது, அது தன்னை மேலும் புதுப்பித்துக்கொண்டு புதிய வழிகளைத் தேடும். புதிய தீர்வுகளை நோக்கி விரிவடையும்.

இதன் காரணமாக, சோதனைகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கு தானாக வளரத் தொடங்கும்.

வாழ்வில் பல இடர்களைத் தாண்டி சாதிக்கின்ற யாரை வேண்டுமானாலும் கவனியுங்கள். அவர்களிடம் திட்டமிடும் குணம் மிகுந்து காணப்படும்.

2. வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

எப்படித் திட்டமிட்டாலும், அதனை எப்படிச் செயல்படுத்தினாலும் சில சந்தர்ப்பங்களில் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.

பல வெற்றிகள் கற்றுத்தராத பல விஷயங்களை ஒரு தோல்வி கற்றுத்தரும். தோல்வி, புதிய வழிகளைச் சொல்லித்தரும். தோல்வி, பொறுமையைக் கற்றுத்தரும்.

தோல்விதான் நம் தவறுகளைக் கண்டுபிடிக்க வழி தரும். தோல்வி இல்லையேல் அந்த்த் தவறுகளைக் கண்டு திருத்திக்கொள்ள வழி இல்லாமல் போகும். தோல்விதான் அடக்கத்தை சரியாகப் போதிக்கும். தோல்விதான் பிறரைக் குறித்த நமது மதிப்பீடுகளைச் சரிவர சீர்திருத்த வாய்ப்பு தரும். தோல்விதான் நிதானத்தைப் போதிக்கும்.

வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. அதனால், இரண்டும் இணைந்ததே வாழ்வு என்பதை உணர்ந்துகொள்வதுதான் சவால்களை சரிவர சமாளிக்கும் மனப்பாங்கு கொள்ள சரியான வழியாகும்.

3. உறவின் வலிமை

மனித உறவுகள் என்பவை, களித்து மகிழவும், இணைந்து வாழவும் என்பதைத் தாண்டி, மதித்து புரிந்துகொள்ள வேண்டியவை என்பதும் சவால்களை எதிர் கொள்ளும் மனப்பாங்கின் அடிப்படை.

எல்லா உறவுகளும் அன்பு பாராட்டுவதில்லை. சில உறவுகள் அன்பினை மறைத்து, அதே நேரம் கண்டிப்பினால் நன்னெறிக்குத் திருப்பும் உறவுகளாக இருப்பவை. இந்த வேறுபாட்டினை நன்கு உணர்ந்துகொண்டவர்கள், இயல்பாகவே சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு நன்கு அமையப்பெற்றவர்களாக இருப்பதைப் பார்க்கலாம்.

4. துணிவு என்பது எண்ணம் அல்ல செயல்

நன்கு தெரிந்த, மிகவும் பழக்கமான பாதையை, வழிமுறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து செயல்படுவது, பயணிப்பது என்பது பாதுகாப்பானதுதான். ஆனால், முற்றிலும் புதிய, அறிமுகம் இல்லாத வழிமுறைகள் குறித்து பரிச்சயம் செய்துகொள்ள வேண்டும். நாம் திட்டமிடுதலில் சிறப்பாகச் செய்திருந்தாலும் பல போட்டியான சந்தர்ப்பங்களில், நம் திட்டத்திலிருந்து விலகிச் சென்று இலக்கை அடைய வேண்டிய அவசியம் வருவது இயற்கை. இதுபோன்ற சந்தர்ப்பங்கள்தான், சவால்களை மனக்கலக்கம் இல்லாமல் சந்திக்கும் மனப்பாங்கை வளர்க்கின்றன. பல துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் எல்லாம் இப்படி கண்டுபிடிக்கப்பட்டவையே.

புதிய வழிகளில் நமக்கு கிடைக்கும் சுதந்திரம், நம்மை நாமே சோதித்து அறிந்துகொள்ள நல்ல பயிற்சி மேடையும்கூட. நமது புதிய கருத்துகளை அங்கே இயக்கிப் பார்க்கும்போதுதான், அங்கு கிடைக்கும் அனுபவம் சோதனைகளை எதிர்கொள்ளும் சரியான மனோபாவத்தை வளர்க்கிறது.

5. சரியான இலக்குகள்

சரியான இலக்குகளை அமைத்துக்கொண்டு அதனை அடைய முயற்சிப்பதுதான் நல்ல மனப்பாங்கு. இந்த நல்ல மனப்பாங்குதான் சவால்களை சந்திக்கும் திடமான மனப்பாங்கை உருவாக்கும். சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொள்ள தயங்குபவர்களையும், அச்சப்படுகின்றவர்களையும் அழைத்துக் கேட்டுப் பாருங்கள். அவர்களது சொந்த அனுபவத்திலோ அல்லது அவர்களுக்கு சொல்லப்பட்ட அனுபவத்திலோ ஏதேனும் சாத்தியமில்லாத இலக்கை துரத்தித் தோற்றுப்போன கதை ஒன்று காரணம் என்பார்கள்.

இலக்கு என்பது அடைய வேண்டிய இடம் மட்டுமல்ல. சாத்தியமான முயற்சியின் அடையாளமும்கூட. நடைமுறைச் சாத்தியத்தை முயற்சி செய்வதன் மூலமே ஒருவர் தன்னம்பிக்கை கொள்ள இயலும். அப்படியான தன்னம்பிக்கைதான் சவால்களைச் சந்திக்கும் மனோபாவத்தை வளர்க்கும்.

இது குறித்து மேலும் அடுத்த வாரம் வாசிப்போம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com