21. அறிவென்பது என்ன!!

நன்கு கற்ற ஒருவர் அதனை அடுத்தவருக்கு புரியும்படி சொல்லத் தெரியாதபோது அவர் கற்றவர் இல்லை என்பதாகக் கணிக்கப்படுகிறார். இதுதான், அறிவுக்கும் மதிப்பெண்ணுக்கும் இருக்கும் பாலமான இடம்.
21. அறிவென்பது என்ன!!

கற்றுக்கொள்வது, புரிந்துகொள்வது, கருத்துகளை உருவாக்குவது, கோட்பாடுகளை உருவாக்குவது, கற்றுக்கொண்டதில் எதை எங்கே எப்படிப் பயன்படுத்துவது, தெரிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு சரியான காரணங்களைக் கண்டுபிடிப்பது, அந்தக் காரணங்களை ஆராய்வதன் மூலம் சரியான யூகங்களை அறிவது, யூகங்களைக் கொண்டு சரியான முடிவு எடுப்பது, தகவல்களை நினைவு வைத்திருப்பது, நாம் புரிந்துகொண்ட விஷயத்தை பிறருக்குப் புரியும்படி எடுத்துச்சொல்வது எனும் 12 ஆற்றலும் சேர்ந்ததே அறிவு எனப்படும்!

இந்த முக்கியமான அம்சம் குறித்து முந்தைய அத்தியாயத்திலும் நாம் பார்த்தோம்.

அதிலும், முதல் இரண்டு ஆற்றல்களை, அதாவது கற்றுக்கொள்வது, புரிந்துகொள்வது எனும் இரண்டு ஆற்றல்களைக் குறித்து அறிமுகம் செய்துகொண்டோம். இந்த அத்தியாயத்தில் மேலும் வாசிக்கப்போகிறோம்!

கருத்துகளை உருவாக்குவது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

எந்த ஒரு பாடத்துக்கும் அதன் கருத்தும் கோட்பாடும் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பாடத்தின் முக்கிய நோக்கமே இவை இரண்டையும் மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்பதே. இவை இரண்டும் தெரிந்தால் மட்டுமே பாடத்தில் கற்றுக்கொண்டதை, கற்ற பின்பு புரிந்துகொண்டதை நிகழ்வாழ்வில் செயல்முறையில் செய்துபார்க்க முடியும்.

எளிமையாகச் சொல்லுவதென்றால், ஒரு பாடம் ஏன் கற்பிக்கப்படுகிறது என்பதை தீர்மானிப்பது அதன் கருத்தும் கோட்பாடுதான்.

மொழிப்பாடத்தைத் தவிர ஏனைய பாடங்கள் உதாரணமாக, கணிதம், அறிவியல் பாடங்கள் எல்லாம் அடிப்படை கோட்பாடுகளின் மீது ஏனைய வழிமுறைகளை அமைத்து கற்பிக்கப்படுகின்றன.

உதாரணமாக, நியூட்டனின் மூன்று விதிகள் எனும் கோட்பாடுகள், இயற்பியல் எனும் அறிவியலின் தொடக்கம் மட்டுமல்ல, அவற்றைக்கொண்டுதான் ஏனைய கோட்பாடுகளை அமைக்க இயலும்.

கொடுக்கப்படும் சிறு சிறு தகவல்களைக் கொண்டு, அந்த தகவல்கள் என்ன கருத்துகளை உருவாக்கும் என்பதை சரியாக கணிக்கத் தெரிவதே கருத்து உருவாக்கம் / கோட்பாடு உருவாக்கம் என்பதாகும். இது அறிவு வளர்ச்சியின் முக்கிய ஆற்றலாகும்.

இருக்கும் தகவல்களைக் கொண்டு காரணங்களைக் கண்டுபிடிப்பது, மற்றும் யூகங்களுக்கு வருவது அந்த யூகங்களைக் கொண்டு சரியான முடிவு எடுப்பது எனும் இந்த மூன்று ஆற்றல்களைக் குறித்து தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இது தெரிந்தால்தான் எந்தக் காரணத்தை எந்த யூகத்தைக்கொண்டு சரியான முடிவு எடுப்பது எனும் மிக முக்கிய ஆற்றலைச் செயல்படுத்த இயலும்.

இந்த ஆற்றல்களின் அவசியத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். இன்றைய காலத்தில் நடைபெறும் அனைத்துவித போட்டித் தேர்வுகளிலும், வேலைவாய்ப்புக்கென நடைபெறும், நுழைவுத் தேர்வுகளிலும், அயல்நாட்டுக் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளிலும் இந்த ஆற்றல்களைச் சோதிக்கும் வினாக்களும், சூழ்நிலை சார்ந்த கேள்விகளும் எழுப்பப்படுவதைக் காணலாம்.

இது ஏன் இப்படி எனில், மதிப்பெண்கள் என்பவை கற்றுக்கொள்ளாமலும், புரிந்துகொள்ளப்படாமலும் பெற வாய்ப்புகள் உண்டு. ஆனால், இந்த ஆற்றல்கள் அப்படி அல்ல என்பதை தீர்மானமாக உணர வேண்டும்.

இந்த ஆற்றல்களை வளர்த்துக்கொண்டால், மதிப்பெண்களில் நூற்றுக்கு நூறும் நிச்சயம். அறிவு வளர்ச்சியும் நிச்சயம்.

இருக்கும் தகவல்களைக்கொண்டு காரணங்களைக் கண்டுபிடிப்பது, மற்றும் யூகங்களுக்கு வருவது அந்த யூகங்களைக்கொண்டு சரியான முடிவு எடுப்பது எனும் ஆற்றல்களை logical reasoning என்பார்கள்.

இந்த ஆற்றல் ஒரு கணித விஞ்ஞானிக்கும், ஒரு வேதியியல் அறிஞருக்கும், ஒரு வணிகருக்கும், ஒரு மருத்துவருக்கும், ஒரு காவல் துறை அதிகாரிக்கும், ஒரு வழக்கறிஞருக்கும் உற்றுக் கவனித்தால், எந்தத் துறையினருக்கும் அவசியமான ஆற்றல் என்பது புரியும்.

தகவல்களை நினைவில் வைத்திருப்பது என்பதை நாம் இந்தக் கட்டுரைத் தொடரின் தொடக்கத்தில் மெமரி எனும் அம்சமாக விரிவாகக் கவனித்தோம். இந்தத் தொடரை வாசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் அந்தக் கட்டுரைகளை மீண்டும் வாசிப்பது நலம்.

இனி, முக்கிய ஆற்றலான கற்றுக்கொண்டதை / புரிந்துகொண்டதை பிறருக்கு எடுத்துச்சொல்வது குறித்து பார்ப்போம்.

இந்த ஆற்றல்தான் ஒருவரின் ஆற்றல் திறனை பிறருக்கு அறிவிக்கிறது என்றால் மிகையில்லை. நன்கு கற்ற ஒருவர் அதனை அடுத்தவருக்கு புரியும்படி சொல்லத் தெரியாதபோது அவர் கற்றவர் இல்லை என்பதாகக் கணிக்கப்படுகிறார். இதுதான், அறிவுக்கும் மதிப்பெண்ணுக்கும் இருக்கும் பாலமான இடம்.

மனப்பாடம் செய்வதும் மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பதும், வரி பிறழாமல் எழுதுவதும், பிறருக்கு எடுத்துச்சொல்லும் வகை. ஆகவே, மனப்பாடம் செய்தவரால் அப்படியே நிறுத்தக் குறிகள் உட்பட எழுதமுடிகிறது. அதனால் அவர் மதிப்பெண் பெறலாம். ஆனால் அவர் அந்தப் பாடத்தில் அறிவுள்ளவர் என்பது உறுதியல்ல.

அதேபோல, அந்தப் பாடம் ஒருவருக்கு நன்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் புரிந்துகொண்டதை விளக்கத் தெரியவில்லையெனில், அவர் புரிந்துகொள்ளாதவர் ஆகிறார்.

அடுத்து,   மிக முக்கியமான ஆற்றலைக் குறித்துக் கவனிக்கலாம். பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல். இதை ஆங்கிலத்தில் problem solving ability என சொல்வார்கள்.

இதில், கொடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு கூடுதல் தகவல்களைக் கண்டுணரும், hypothesis அதாவது பொருந்தும் யூகங்களை அமைப்பது, அப்படியான யூகங்களை சரிபார்ப்பது, அதேசமயம் ஒருதலைப்பட்சம் இல்லாது நடுநிலை காப்பது, மாறுபட்ட கோணங்களிலும் வேறுபட்ட கோணங்களிலும் சிந்தித்தல் (Lateral and out of the box thinking) இவற்றைக் கண்டு, பிரச்னைகளுக்கான காரணங்களின் மீது, சரியான நிரூபணம் கொண்டுவருதல், தீர்வுகள் சரியானவை என்பதற்கு தர்க்கரீதியிலான தீர்வுகளைப் பரிந்துரைத்தல் போன்றவை.

இந்த ஆற்றல்கள் அறிவுத் திறன் சார்ந்தவை. இவற்றைக் கைக்கொண்டால், மதிப்பெண் நிச்சயம். அதுவும் நூற்றுக்கு நூறு நிச்சயம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com