திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

19. ஆங்கிலம் சுலபமே!

By சந்திரமௌலீஸ்வரன்| Published: 01st August 2019 11:48 AM

 

ஆங்கிலப் பாடம் படிப்பதை கஷ்டம் என நினைப்பவர்களிடம் பொதுவான பழக்கம் ஒன்று இருக்கும். நீங்கள் கவனித்திருக்கலாம். அவர்கள் ஆங்கில படிக்கும் சூழ்நிலையை கவனமாகத் தவிர்ப்பார்கள்

ஆங்கிலத்தில் பேச வேண்டிய தருணங்கள், கூட்டங்கள், கேள்வி அரங்குகள் இவற்றை கவனமாகத் தவிர்ப்பார்கள். அதேபோல ஆங்கிலத்தில் வாசிக்க வேண்டிய சூழல் வந்தாலும் அங்கிருந்து அகன்று போவார்கள். இந்தத் தயக்கமும், தவிர்க்கும் குணமும் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் இருந்து மாணவர்களை மிகவும் விலக்கி வைத்திருக்கிறது.

ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறு நிகழ்வது இயல்பு. அதிலும், புதிதாக ஆங்கிலம் கற்றுக்கொண்டு பேசும்போது தவறுகள் அதிகம் நிகழும்.

இந்த வகை தவறுகள் இயல்பானவை. தொடக்க நிலையில் தவிர்க்க இயலாதவை. இதைக் கண்டு அச்சமும் தயக்கமும் அடைவது கற்றுக்கொள்வதைப் பாதிக்கும்.

ஆங்கிலப் பாடம் கடினம் எனும் உணரும் மாணவர்கள் சிலர் ஒரு குழு அமைத்து, ஆங்கிலப் பாடம் நன்றாக வரும் நண்பர் ஒருவரின் துணை வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் பேச, எழுத முயற்சி செய்ய வேண்டும். இதனால் பிறர் நன்கு ஆங்கிலத்தில் பேச எழுத வரும் இடத்தில் ஆங்கிலம் சரிவர பேச இயலாத நாம் கலந்து இருக்கிறோம் எனும் தாழ்வு மனப்பான்மை உருவாகாது.

தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படும் இன்றைய நாளில் ஆங்கில உரைகளை கணிப்பொறியிலும் எளிய ஆங்கில உரைகளைக் கேட்டுப் பழக வேண்டும். அது மிகவும் எளிய ஆங்கிலத்தில் இருக்க வேண்டியதும், பேசுகிறவர் மெதுவாகப் பேசுவதுமாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற உரைகளைக் கேட்பதும் மட்டுமில்லை. அந்த உரையின் பொருளை உள்வாங்கி அதனை வேறு கண்ணோட்டத்தில் பேசிப் பழக வேண்டும்.

மொழி அறிவு என்பது, மொழியைப் பயன்படுத்தும் சூழலினால் மட்டுமே வளரும். அதாவது பேசுவது, உரையாடுவது, எழுதுவது வாசிப்பது எனும் பழக்கங்களைத் தொடர்ந்து பயிற்சி செய்வதால் மட்டுமே மொழி அறிவு வளரும். தாய் மொழி என்பதால் தமிழைப் பேசுவதற்கும், தமிழில் உரையாடுவதற்கும், தமிழில் எழுதுவதற்கும், தமிழில் படிப்பதற்கும் தினசரி வாய்ப்புகள் தன்னிச்சையாக அமைகின்றன.

ஆனால், ஆங்கிலம் போன்ற வேற்று மொழிகளில் அப்படிப் பயிற்சி பெற வாய்ப்புகளை நாம்தான் மனமுவந்து உருவாக்க வேண்டும். உருவாக்குவது மட்டும் போதாது அதனை மனமுவந்து பின்பற்ற வேண்டும், தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

ஏழு வாரங்களுக்கு பின்பற்றும்படி மாதிரி பயிற்சிகளை தந்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் இந்தப் பயிற்சியைக் கடைப்பிடித்துப் பார்க்கலாம். ஆங்கிலப் பாடம் மிகக் கடினம் என்பவர்கள் மட்டும் இந்தப் பயிற்சி எடுத்தால் போதுமானது.

முதல் வாரப் பயிற்சி

நீங்கள் அன்றாடம் வீட்டில் இருந்து பள்ளிக்கும் பள்ளியில் இருந்து வீட்டுக்கும் பயணிக்கும்போதும் எதிர்ப்படும் பொருட்களின் பெயர்களை எல்லாம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் வரிசையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். தினம் எழுத வேண்டும்; ஆங்கிலத்தில் எழுத வேண்டும். ஆங்கிலப் பெயர்களுக்கு மாற்றுப் பெயர்களைக் கண்டுபிடித்து அதனையும் எழுத வேண்டும்.

இரண்டாவது வாரப் பயிற்சி

நீங்கள் முதல் வாரத்தில் எழுதிவைத்த பெயர்களைக் கொண்டு எளிமையான வாக்கியங்கள் அமைத்து எழுதிப் பாருங்கள். மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். தவறாக எழுதினால் சோர்ந்துபோக வேண்டாம். சைக்கிள் ஓடடிப் பழகியதை நினைத்துப் பாருங்கள் . கீழே விழாமல், காயம் பட்டுக்கொள்ளாமல் சைக்கிள் ஓட்டியிருக்கவே முடியாது. கீழே விழுகிறோம், காயம் ஆகிறது என்பதால் சைக்கிள் ஓட்டுவதை நாம் தவிர்த்துவிடவில்லை. மாறாக முயற்சி செய்து கற்றுக்கொண்டோம். ஆங்கிலமும் அப்படித்தான்.

மூன்றாவது வாரப் பயிற்சி

நீங்கள் உங்கள் வகுப்புத் தோழனுடன் தினம் பேசுகிறீர்கள், உரையாடுகிறீர்கள். அதனைப் பெரும்பாலும் தமிழில் செய்கிறீர்கள். தினசரி நிகழும் இந்த உரையாடல்களை இந்த வாரத்தின் பயிற்சியாக ஆங்கிலத்தில் எழுதிப் பாருங்கள். அப்போதுதான் உங்களுக்கு பேசும் மொழியின் லாகவமும், இலக்கணமும் பயிற்சி ஆகும். இந்தப் பயிற்சி எடுக்கும் நண்பர்கள் இருவர், அல்லது மூவர் சேர்ந்துகொண்டு ஏற்கெனவே நிகழ்ந்த ஓர் உரையாடலை ஆங்கிலத்தில் உரையாடிப் பார்க்கலாம். இது ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பயிற்சியாக அமையும்.

நான்காவது வாரப் பயிற்சி

நீங்கள் தினசரி செய்தித்தாள் படிக்கும் வழக்கத்தை அவசியம் கைக்கொள்ள வேண்டும். தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ செய்தித்தாள் வாசிப்பது அவசியம். அதில் சில குறிப்பிட்ட செய்திகளை மட்டும் எடுத்துக்கொண்டு, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்துப் பயிற்சி எடுக்கவும். இது ஆங்கிலத்தை எழுத சிறந்த பயிற்சியாக அமையும் வாய்ப்பு கொண்டது.

ஐந்தாவது வாரப் பயிற்சி

உங்களுக்கு நன்கு தெரிந்த கதை ஒன்றினை உங்கள் நடையில் ஆங்கிலத்தில் எழுத முயற்சி செய்யவும். அது ராமாயணத்தின் சுருக்கம், மஹாபாரதத்தின் சுருக்கம், அக்பர் பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதை இப்படி எதுவாக வேண்டுமானல் இருக்கலாம். தமிழில் நீங்கள் கேட்டு அனுபவித்த கதை, அல்லது நன்கு நினைவில் இருக்கும் கதையாக இருப்பின் உங்கள் பயிற்சி செம்மையாக இருக்கும்.

ஆறாவது வாரப் பயிற்சி

பொது இடங்களில் தினசரி நிகழும் உரையாடல்களை ஆங்கிலத்தில் எழுதிப் பாருங்கள். உதாரணமாக ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தகவல் விசாரிப்பது, பேருந்து நிலையத்தில் பயணி ஒருவர் தகவல் விசாரிப்பது, வங்கியில் வாடிக்கையாளர் ஒருவர் தகவல் விசாரிப்பது, தொலைபேசி உரையாடல்கள் இவற்றை முதலில் தமிழில் எழுதிப் பார்த்துவிட்டு அதனை ஆங்கிலத்தில் எழுதப் பாருங்கள். இது வாக்கிய அமைப்புகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.

ஏழாவது வாரப் பயிற்சி

இதுவரை நீங்கள் ஆறு வாரமாக செய்த பயிற்சியின் தொகுப்பாக எழுதிப் பாருங்கள். ஆங்கிலத்தில் இந்த வாரத்தில் நீங்கள் எழுதிப் பார்ப்பதில் பொதுஇட உரையாடலும் இருக்கலாம்; அதே சமயம் செய்தித்தாள் செய்தியும் இருக்கலாம். தமிழில் பேசும்போது நீங்கள் எப்படி உதாரணம் சொல்லிப் பேசுகிறீர்களோ, அதேபோல ஆங்கிலத்திலும் சரளமாக எழுத வந்திருப்பதை நீங்கள் காணலாம்.

ஆங்கிலம் கற்பது என்பது அத்தியாவசியமானது என்பதை உணர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்.

கற்றுக்கொள்ளும் போது தவறு நிகழும் என்பதால் அதற்காக கவலைப்பட்டுக் கொண்டு கற்றுக் கொள்ளும் பழக்கத்தை நிறுத்தாதீர்கள்

கற்றுக்கொள்ளும்போது சந்தேகம் வந்தால், அதனை உதாசீனம் செய்யாதீர்கள். சந்தேகம் கேட்பதற்கு வெட்கப்படாதீர்கள். இணைய தளங்களில் சந்தேகத்தை தொடக்க நிலையில் நிவர்த்தி செய்துகொள்ள இயலும் என்றாலும், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்களிடம் உதவி பெற்று சந்தேகத்தை தீர்த்துக்கொள்வது மிக நன்மை தரும்.

தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளுங்கள், பயிற்சிக்கென தனியே நோட்டுப் புத்தகங்களை வைத்துக்கொள்ளுங்கள். ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களை அகராதியில் தேடிக் கற்று அதனை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கம் மிகவும் பயனுள்ளது. அந்த நோட்டுப் புத்தகம் ஒவ்வொரு நாளும் நீங்கள் முதலீடு செய்யும் சேமிப்பு என்பதை மறவாதீர்கள்.

தேர்வுகள், பாடங்கள் அதில் இருக்கும் சவால்களை சில வாரங்கள் வாசித்தோம்.

மதிப்பெண்களும் அறிவு வளர்ச்சியும் மாணவர்களுக்கு மிகவும் அவசியமானவை. வரும் வாரங்களில் அதனைக் குறித்து விரிவாக வாசிப்போம்.

(தொடரும்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ஆங்கிலம் கற்றல் அச்சம் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பயிற்சிகள்

More from the section

24. மாணவர்களின் சவால்கள் என்ன..?
23. சவாலும் மனப்பாங்கும் சகோதரர்கள்!
22. சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு..
21. அறிவென்பது என்ன!!
20. மதிப்பெண்ணும் அறிவும்!