நூற்றுக்கு நூறு

5. விளையாடாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்..

25th Apr 2019 10:00 AM | சந்திரமௌலீஸ்வரன்

ADVERTISEMENT

 

பள்ளி / கல்லூரி முடிந்து மாலையில் வீடு திரும்பும்போது, வகுப்பறையையும் பாடங்களையும் சிறிது நேரம் உங்கள் நினைவுகளில் இருந்து ஒதுக்கிவையுங்கள்!

சோர்வடைந்திருக்கும் உங்கள் மூளையும் புத்துணர்ச்சி பெற வேண்டிய வேளை அது. அதனை பாடம் குறித்து வேலை வாங்கி மேலும் மேலும் சோர்வடையச் செய்வதில் என்ன லாபம் இருக்க முடியும்.

வீட்டுப் பாடம் இருக்கலாம்; ஏதேனும் Project work இருக்கலாம். அவற்றை செய்து முடிக்க முயற்சி தேவைதான். ஆனால் எந்த முயற்சிக்கும் ஆரோக்கியமான இடைவெளி அவசியம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT

உடலும் மனமும் எப்படி ஏன் சோர்வடைகின்றன என்பதை முதலில் தெரிந்துகொள்வது, மேற்கொண்டு செல்ல எளிமையாக இருக்கும்.

உடல் தனது உழைக்கும் திறனுக்கு அதிகமாக வேலை செய்யும்போது சோர்வடைகிறது. அது என்னதான் பிடித்தமான வேலையாக இருந்தாலும், உடலின் சோர்வு தவிர்க்க இயலாத ஒன்று! அதுபோலத்தான் மனதின் சோர்வும். ஒரே மாதிரியான வேலையை யோசித்து யோசித்துச் செய்யும்போது, அதில் புதுமை ஏதும் இல்லை என மனம் உணரும்போது சலிப்பு ஏற்படுகிறது. இந்தச் சலிப்பின் காரணமாக, செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதில் கவனம் செலுத்த இயலாமல் போகிறது. அதனால், அந்த வேலை சரிவர நடைபெற இயலாமல் போகிறது.

மனது சலிப்படைந்தால், பாடத்தில் கவனம் செலுத்துவதில் மிகப் பெரும் தடையாக அமையும்.

பள்ளியில் என்ன நடக்கிறது. பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்காருகிறீர்கள். இதனால் உடல் இயக்கம் குறைகிறது. இதனால் ரத்த ஓட்டம் குறைந்துபோகிறது. இதனால் உடலில் Lactic அமிலம் தங்குகிறது. இதனால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து மூளை சோர்வடைகிறது.

இந்தச் சோர்வை எப்படிப் போக்குவது? ஒரு கோப்பை தேநீர்.. ஒரு கோப்பை பழச்சாறு.. ஒரு கோப்பை இளநீர்.. ஒரு கோப்பை காஃபி..?

இதில் ஏதாவது ஒன்றை குறைவாக அருந்தலாம். அதெல்லாம் போதுமா??

போதாது.

பிறகு என்னதான் செய்ய வேண்டும்.

ஓடி ஆடி விளையாட வேண்டும். வியர்வை வெளியேறும்படி விளையாட வேண்டும்.

படிக்க வேண்டிய பாடம் அதிகமாக இருக்கிறது. வீட்டுப்பாடமும் அதிகம். எப்படி விளையாடப் போவது? முதலில் இந்தத் தயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.

மொபைல் போனில் விளையாடுவதையும் குறைத்துக்கொள்ளுங்கள்.

டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், பேட்மிட்டன்.. இப்படி ஏதேனும் ஒரு மைதான விளையாட்டை தினமும் விளையாட வேண்டும்.

பாடத் திட்டத்தில் விளையாட்டுப் பாடத்தை (Physical Education) சேர்க்கப்பட்டிருப்பதன் காரணம் ஆழமானது, மிகவும் பயன்தரக்கூடியது.

விளையாடினால் படிப்பு கெட்டுப்போகும் எனும் எண்ணத்தை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கைவிட வேண்டும்.

விளையாட்டு என்பது உடல் நலத்துக்கு மட்டுமில்லாமல், மன நலத்துக்கும், நல்ல ஞாபக சக்திக்கும் உதவும்.

உதாரணத்துக்கு, உங்கள் மொபைல் போனை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிரதான மெமரியில் இவ்வளவுதான் சேமிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியும். அதனால், கூடுதலாகச் சேமிக்க கூடுதல் மெமரி என SD card மாதிரி அட்டைகளைக் கொண்டு சேமிக்கிறீர்கள். மனித மூளைக்கு பிரதானம், நரம்பு மண்டலத்தின் நியூரான் எனப்படும் செல். இதில்தான் நாம் படிக்கும் பாடம் சேமிக்கப்படுகிறது. நாம் கேட்கும் பாட்டு சேமிக்கப்படுகிறது. நாம் பார்க்கும் சினிமா சேமிக்கப்படுகிறது.

இந்த நியூரான்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் நன்மைதானே!

*

நாம் மிகவும் ஆர்வமுடன் உடலை இயக்கி விளையாடும்போது, அந்த உடல் இயக்கம் இரண்டு வகைகளில் நமக்கு உதவுகிறது.

உடலில் தங்கிவிட்ட லாக்டிக் அமிலம் எரிக்கப்பட்டு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகமாகிறது. இதனால், சோர்வு நீங்கி உடல் புத்துணர்வு பெறுகிறது.

உடல் இயக்கம் அதிகமாகும்போது புதிய நியூரான்களின் உற்பத்தியும் அதிகரிக்கிறது. இது நமது நினைவாற்றல் திறன் அதிகமாக பெரிதும் உதவுகிறது.

படிப்பதற்குப் பாடங்கள் அதிகம் இருக்கும்போது விளையாடக் கூடாது, தேர்வு நெருங்கும் சமயத்தில் விளையாடக் கூடாது என்பதெல்லாம் தவறான தகவல்.

மாறாக, விளையாட்டினால் படிக்கும் பாடம் நினைவில் பதிவது அதிகரிக்கும்.

ஓடி ஆடி விளையாடிவிட்டீர்களா? மிக நன்று.

முகம் மற்றும் கை கால்களை சுத்தமான நீரில் கழுவிக்கொள்ளுங்கள். மிக மிக நன்று.

அடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

ஆயிற்றா..

இப்போது நாம் பாடம் படிக்கத் தயாராகலாம்.

பாடத்துக்கு முன்பு நாம் கவனித்த மூன்று மந்திரங்களையும், நான்கு வித்தைகளையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

முதல் மந்திரம் - ஆர்வம்.

இரண்டாவது மந்திரம் - ஆச்சரியம்.

மூன்றாவது மந்திரம் - ஈடுபாடு.

வித்தை 1 - இடம் பிடித்தல்.

வித்தை 2 - சைக்கிள் வித்தை

வித்தை 3 - சினிமா வித்தை

வித்தை 4 - தூக்க வித்தை

நீங்கள் படிக்கும் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டீர்கள்; அதனால் என்ன பயன் என்பதை உங்களுக்குத் தெரிந்த வகையில் சுருக்கமாக எழுதிய நோட்டுப்புத்தகத்தை எடுங்கள்.

இன்று வகுப்பில் ஆசிரியர் நடத்திய பாடத்தில் என்ன புதிதாகத் தெரிந்துகொண்டீர்கள், அதன் பயன் என்ன என்பதை, நிதானமாக 10 நிமிடம் எடுத்துக்கொண்டு, உங்களுக்குத் தெரிந்தவகையில் எழுதுங்கள்.

நீங்கள் இதை எழுத எழுத, முதல் மந்திரம் பலமாக வேலை செய்வது உங்களுக்கே தெரியும்.

உங்களுக்குப் புரிந்த மாதிரி எழுதி வைத்துக்கொள்வது முதல் மந்திரத்துக்காக மட்டும்தான். இரண்டாம் மந்திரமும் மூன்றாம் மந்திரமும் கொஞ்சம் வித்தியாசமானவை. ஆனால், எளிமையானவை.

உங்கள் முழு கவனமும் நீங்கள் இப்போது படிக்க இருக்கும் பாடத்தில் இருக்க வேண்டுமல்லவா..

என்ன பாடம் என்பதும் உங்களுக்குத் தெரியும், எதையெல்லாம் படிக்க வேண்டும் எனும் ஒரு லிஸ்ட் போடுங்கள். பாடத்தின் தலைப்புகளை மட்டும் எழுதினால் போதும். சிறு சிறு பெயர்களில் தலைப்புகளை எழுதுங்கள். என்ன படிக்க வேண்டும் என்பதும் தயார்.

உங்கள் ஆழ்மனதை எழுப்பும் டெக்னிக் உங்களுக்குத் தெரியும். ஆம்.. 100, 99, 98, 97 என 1 வரை எண்ணி முடித்தபின், பாடத்தில் கவனம் செலுத்துங்கள்.

வாசிப்பதை கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து, சிறு சிறு குறிப்புகளாக எழுதுங்கள். பாடத்தை அப்படியே எழுதுவதாக இருக்கக் கூடாது. இங்கு பெரும்பாலும், பாடத்தில் என்ன வார்த்தைகள் இருக்கின்றனவோ அதை எழுதிப் பழகுங்கள். வேகம் கொடுக்க வேண்டாம். நிதானமாக படித்து எழுதிக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், நேரமும் முக்கியம்.

நீங்கள் இப்போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்..

புரிந்துகொண்டு படியுங்கள். புரியவில்லை என்றால், அந்தப் பாடத்தை கொஞ்ச நேரம் தவிர்த்து வேறு பாடங்கள் படியுங்கள். புரியாத பாடத்தை புரிந்துகொள்ள ஆசிரியரிடம் / சக மாணவரிடம் / பெற்றோரிடம் கேட்க வேண்டும் என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். புரியவில்லை என்றால், அதை மனப்பாடம் செய்வதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

ஒரு பெரிய பத்தி (Paragraph) படிக்க வேண்டும் என்றால், முதலில் அதை சாதாரணமாக வாசிக்கவும். அப்போது, அதில் எந்தெந்த விவரங்கள் முக்கியம் என்பது தெரிந்துவிடும். அவற்றை தனியே ஒரு சிறிய லிஸ்ட் போல குறிப்பு எடுக்கவும்.

அந்த லிஸ்ட்டில் இருக்கும் மிக முக்கிய வார்த்தைகளை, அதாவது அந்த முக்கிய விவரங்களைச் சுட்டும் வார்த்தைகளை (Nail words) நீங்கள் நினைவுக்கு கொண்டுபோகிறீர்கள், உங்கள் நிரந்தர மெமரியில் பதியவைக்கப்போகிறீர்கள் என்பதைச் சொல்லிக்கொண்டே வாசிக்கவும். அந்த லிஸ்ட்டில் முதல் இரண்டு பாயிண்ட்களும், கடைசி இரண்டு பாயிண்ட்களும் அந்தப் பாடத்தின் மிக முக்கிய அம்சமாக இருப்பதாக அமைத்துக்கொள்ளவும்.

நீங்கள் ஒரு மாளிகை கட்டுவது போலவும், அந்த மாளிகையின் ஒவ்வொரு செங்கலின் மீதும் இந்த முக்கிய வார்த்தைகள் ஒவ்வொன்றாக எழுதப்பட்டிருப்பது போல நினைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு செங்கலாக எடுத்துவைத்துக் கட்டுகிறீர்கள். ஒவ்வொரு செங்கலை எடுத்துவைக்கும் போதும், அந்த செங்கல்லின் மீது இருக்கும் வார்த்தை, அதன் பொருள், அதை எதற்காகப் படிக்கிறோம், என்ன பயன் என்பதை எல்லாம் இணைத்து சொல்லிக்கொண்டே வாருங்கள்.

இப்படி படிப்பதனால், உங்கள் நினைவாற்றல் மேலும் பலமாக ஆகும். நீங்கள் வாசிக்கும் விவரங்கள், நேர்த்தியாகச் சென்று உங்கள் நினைவில் (மெமொரி) பதியும்.

மாளிகை கட்டுவது என்பது ஓர் உதாரணம். இதுபோல இன்னமும் சில உதாரணங்கள் இருக்கின்றன -

1. அந்த முக்கிய வார்த்தைகளைக் கொண்டு நீங்களாகவே கற்பனைக் கதையை வடிவமைத்தல்..

2. அந்த முக்கிய வார்த்தைகளை உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் பொருத்தி ஞாபகம் வைத்துக்கொள்ளுதல்.

இந்த வித்தைதான் இடம் பிடித்தல் வித்தை. உங்கள் மூளை ஆச்சரியமான ஆற்றல் கொண்டது. நாம் கவனிக்கும், வாசிக்கும் ஒரே விஷயத்தின் பல விவரங்களைப் பல இடங்களில் பதிவு செய்து வைத்துக்கொள்கிறது. தேவைப்படும்போது, அந்தப் பல விஷயங்களும் பதிவாகியிருக்கும் ஒவ்வொரு தனித் தனி நியூரான்களும் தூண்டப்பட்டு ஒருங்கிணைந்து, ஒரு சந்திப்பின் வழியே பயணித்து வெளியே வருகின்றன.

என்றைக்கோ நீங்கள் பார்த்த சினிமா பாடலை நீங்கள் முணுமுணுக்கும்போது, பல நியூரான்கள் தூண்டப்படுகின்றன. அந்தப் பாடலின் பல தகவல்களும் ஒவ்வொரு வார்த்தையும் இசை வடிவமும் தனித் தனி நியூரான்களில் இருந்தே வருகின்றன.

உங்கள் பாடமும் உங்கள் மெமரியில் அப்படித்தான் பதிவாகிறது. அதை நீங்கள் படிக்கும்போது வரிசைப்படுத்திப் படித்துவிட்டால், சில வித்தைகள் செய்து பார்த்துவிட்டால், நீங்கள் சொல்வதைக் கேட்கிறது மூளை!

*

அடுத்து, இரண்டாவது வித்தையான சைக்கிள் வித்தையைக் கவனிக்கலாம்.

சைக்கிள் வித்தையை, பெரும்பாலும் கணக்குப் பாடத்துக்குப் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, சதுரத்தின் பரப்பளவுக்கான ஃபார்முலா Area of Square = Side x Side என்பதை நினைவில் வைத்துக்கொள்ள நீங்களாகவே ஒரு காகிதத்தில் சதுரம் வரைந்து, அந்த சதுரத்தின் உள்ளே பாடத்தை revision செய்யும்போது, இந்தப் படத்தை மட்டும் கவனித்தால் போதும், எந்த ஃபார்முலாவும் மறக்காது. இதை சதுரம், செவ்வகம், ஐங்கோணம், முக்கோணம், கூம்பு, கோளம், அரைக்கோளம் போன்ற வடிவங்களின் அளவுகளுக்குப் பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும்.

ஒவ்வொரு அறிவியல் பாடத்துக்கும் நீங்களே ஒரு செய்முறையை உருவாக்கி அதனைப் பழகும்போது, அது நீங்கள் சைக்கிள் பழகியது எப்படி மூளையில் நினைவுகளாகப் போய் பதிந்ததோ, அப்படியே ஆழமாகப் பதிந்துவிடுகிறது. இதனை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் இருக்கும்.

தூக்க வித்தையும், சினிமா வித்தையும் சுவாரசியமானவை. அவற்றை அடுத்த வாரம் கவனிக்கலாம்.

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT