நூற்றுக்கு நூறு

4. வகுப்பறையும் ஒரு மைதானம்தான்..

சந்திரமௌலீஸ்வரன்

மூன்று மந்திரங்களைக் கவனித்தோம்; நான்கு வித்தைகளைக் கவனித்தோம். அவற்றை எங்கே பயன்படுத்துவது? வேறெங்கே, உங்கள் வகுப்பறையில்தான்!

வித்தைகளைப் பயன்படுத்தும் மிகச் சிறந்த மைதானம் உங்கள் வகுப்பறைதான்!

உங்கள் வகுப்பறையை ஒரு மைதானம் போல நினைத்தால், நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடங்கள், உங்கள் மொபைல் போனில் நீங்கள் விளையாடும் விளையாட்டுகள் போலத்தான். அந்த விளையாட்டில் ஒரு வீரனை, பல சவால்களைக் கடந்து வெற்றி இலக்கை அடையவைக்கிறீர்கள். வகுப்பறையும் அதுபோலத்தான்.

அங்கே ஒரு வீரனை நீங்கள் இயக்குகிறீர்கள். அந்த வீரனை பெரிய சுவரைத் தாண்டி குதிக்கவைக்கிறீர்கள். நெருப்பைக் கடந்து போக வைக்கிறீர்கள், பெரிய பள்ளத்தைத் தாண்டி ஓட வைக்கிறீர்கள்.

இதெல்லாம் உங்களால் செய்ய முடிவதற்கு இரண்டே காரணங்கள். முதல் காரணம், அந்த ஆட்டத்தில் எது எப்போது எங்கே குறுக்கே வரும் என்று உங்களுக்குத் தெரியாது எனும் ஆச்சரியம்; இரண்டாவது காரணம், அந்த விளையாட்டு உங்களுக்கு சந்தோஷத்தைத் தருகிறது!

நாம் கவனித்த மூன்று மந்திரங்களில் இரண்டாவது மந்திரம் என்ன.. ஆச்சரியம்!

உங்கள் பாடத்தை ஆச்சரியத்துடன் அணுகுவதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அது என்ன? அந்தப் பாடத்தால் கிடைக்க இருக்கும் பலன். ஆனால், அந்தப் பலன் விளையாட்டைப்போல உடனே கிடைப்பதில்லை என்றாலும், நிச்சயமாகப் பெரிய பலனைத் தரும் என்பது உங்களுக்கும் தெரியும்.

வகுப்பறையை ஒரு மைதானம் என நினைத்துக்கொண்டே தினமும் வகுப்பில் போய் அமருங்கள். இந்த நினைப்பை, உங்களுக்குள் ஒரு மந்திரம்போல சொல்லிக்கொள்ளுங்கள்.

உங்கள் பாடப் புத்தகம்தான் உங்களின் முதல் வழிகாட்டி. வகுப்பறை எனும் மைதானத்தில் நீங்கள் என்ன விளையாடப்போகிறீர்கள் என்பதை விளக்கமாகச் சொல்லும் வழிகாட்டி உங்கள் பாடப் புத்தகம்தான்.

அந்தப் பாடங்கள் எல்லாம் உங்களுக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பயன்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதனால்தான் அவை பாடத்தில் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உதாரணமாக, உங்கள் அறிவியல் பாடத்தில் அளவீடுகள் எனும் பாடத்தை எடுத்துக்கொள்வோம். அதில், ஆசிரியர் சொல்லிக் கொடுத்தவை அனைத்துமே உங்களுக்கு தினசரி வாழ்க்கையில் பயன்படப்போகின்றன என்பதை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்!

நீங்கள் ஏன் ஒரு பாடத்தைப் படிக்கிறீர்கள் என்பது தெரிந்துவிட்டால், அந்தப் பாடத்தில் ஆர்வமும் ஈடுபாடும் தானாக வந்துவிடும். ஆகவே, அந்தப் பாடத்தை ஏன் படிக்கிறோம் என்பதை வகுப்பறையில் பாடம் தொடங்குவதற்கு முன்பு உங்களுக்கு நீங்களே மனதுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள்!

மனதுக்குள் சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது.. ஒவ்வொரு பாடத்திற்கும் தனியே ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

  • இந்த நோட்டுப் புத்தகம் உங்களின் வகுப்பறை நோட்டுப் புத்தகம் போன்றதல்ல‌.
  • இந்த நோட்டுப் புத்தகம் உங்களின் வீட்டுப் பாடங்கள் எழுதும் நோட்டுப் புத்தகம் போன்றதல்ல‌.
  • இந்த நோட்டுப் புத்தகம் உங்கள் மாதாந்திரத் தேர்வுகள், காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, ஆண்டுத் தேர்வு போன்றதில்ல.
  • இது உங்கள் மைதானத்துக்கான நோட்டுப் புத்தகம். நீங்கள் எழுதப்போகிறீர்கள். அதை யாரும் திருத்தப்போவதில்லை! ஏன், வேறு யாரும் பார்க்கப்போவதுகூட இல்லை!! இந்த நோட்டுப் புத்தகத்தைப் பொறுத்தவரை நீங்களே உங்களுக்கு ஆசிரியர்.

அப்படி என்னதான் அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுத வேண்டும்?

உங்களின் ஒவ்வொரு பாடத்திலும், நீங்கள் பயின்ற விஷயங்களை, எத‌ற்காகப் பயின்றீர்கள், அதன் பயன் என்ன என்பதை நீங்கள் உங்கள் சொந்த மொழியில் எழுதிவைக்க வேண்டும்.

இப்படித்தான் எழுத வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. ஆனால் வேறு ஒரு விதி இருக்கிறது. இந்த நோட்டில் தினமும் எழுத வேண்டும். ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும். தொடர்ந்து எழுத வேண்டும். முந்தைய நாட்களில் என்ன எழுதினோம் என்பதை மீண்டும் வாசிக்க வேண்டும். வாசித்தால் மட்டும் போதும். மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை!

வகுப்பறையில் பயின்ற பாடத்தை எதற்குக் கற்றுக்கொண்டோம். அதன் பயன் என்ன என்பதைப் புரிந்துகொண்டு எழுத வேண்டும். அவ்வளவுதான்..

உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக சில உதாரணங்களை மட்டும் சொல்கிறேன்.

அறிவியல் பாடத்தில் அளவீடுகள் (Measurements) குறித்த பாடத்தைப் பயின்றீர்கள். இதனை ஏன் பயின்றீர்கள், இதன் பயன் என்ன என்பதை எப்படி எழுதுவது என்பதை உதாரணமாகச் சொல்கிறேன்.

  • நீளத்தை / தூரத்தை அளக்கும் முறையையும், அதன் அளவீடுகள் குறித்தும் பயின்றேன்.
  • பலன்கள்
    • ஒரு பொருளின் நீள அகலம் தெரிந்தால்தான் அதைத் தயாரிக்க எவ்வளவு பொருள் தேவை என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
    • இங்கிருந்து இன்னொரு இடம் / ஊர் எவ்வளவு தூரம் என்பது தெரிந்தால்தான், அந்த இடத்துக்குப் போக தேவையான முயற்சிகளை எடுக்க.முடியும்.
    • நான் வளர்ந்து வேலைக்குச் சென்றாலோ அல்லது தொழில் தொடங்கினாலோ, நீளம் / தூரத்தை அளக்கும் முறையும் அதன் அளவீடுகளும் எனக்கு சொந்த வாழ்விலும், அலுவல் / பணி வாழ்விலும் தினசரி பயன்பாட்டில் பயன்படும். ஆகவே, இது குறித்து சந்தேகமில்லாமல் தெரிந்துகொள்வது அவசியம்.

இதுபோல ஒவ்வொரு பாடத்துக்கும் நீங்கள் சுருக்கமாக எழுதி வைத்துக்கொள்ளலாம்.

இந்த நோட்டுப் புத்தகத்தில் தினமும் எழுத அதிகபட்சம் பத்து நிமிடங்கள் ஆகலாம். முந்தைய நாட்களில் என்ன எழுதினீர்கள் என்பதை மீண்டும் வாசிக்க மேலும் சில நிமிடங்கள் தேவைப்படலாம். ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள் இதற்கென ஒதுக்கலாம்.

இந்த முப்பது நிமிடங்களும் உங்களுக்குப் பெரும் பலம் தரக்கூடியது. நீங்கள் ஏன் ஒரு விஷயத்தைப் பாடமாக வகுப்பில் கற்றுக்கொள்கிறீர்கள்; அதனால் உங்களுக்கு வருங்காலத்தில் கிடைக்கும் பலன் என்ன என்பதை நீங்களே உங்கள் சொந்த மொழியில் எழுதி தினம் வாசிக்கும்போது, உங்களுக்கு பாடத்தின் அருமையும், அழகும் தெளிவாகும். வகுப்பறை ஓர் அழகான மைதானம்; வகுப்பறையில் கற்கும் பாடம் ஓர் அற்புதம் நிறைந்த விளையாட்டு என்பதும் மிகத் தெளிவாகத் தெரியவரும்!

சில மாதங்கள் கடந்த பின்பு நீங்கள் இந்த நோட்டுப் புத்தகத்தை கவனமாக வாசித்தால், நீங்கள் எத்தனை பயன் உள்ள செயலை, உங்களுக்காகவே செய்திருக்கிறீர்கள்; உங்கள் அறிவுக்கு எத்தனை பலம் சேர்த்திருக்கிறீர்கள் என்பது தெரியவரும்.

படிப்பில் / கல்வியில் உங்கள் பலம் எவ்வளவு மேலானது என்பது நிச்சயம் தெரியவரும்.

புரியாது என அச்சப்படும் பாடங்களின் மீதும் ஈடுபாடும் நல்ல பரிச்சயமும் உண்டாகும்.

பாடம் புரியவில்லை எனில் ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கும் பழக்கம் தானாக வந்துவிடும்.

*

உங்கள் வகுப்பறை உங்களுக்கு மிகவும் பிடித்தமான மைதானமாக மாறிவிட்ட பிறகு நீங்கள் மிகச் சிறந்த வீரராக மாறப்போகிறீர்கள்.

மிக முக்கியமான விஷயம். வகுப்பறை மைதானத்தில் உங்கள் வகுப்பு நண்பர்கள் எல்லோருமே உங்களுக்குப் போட்டியாளர்கள்தான். ஆனால், நீங்கள்தான் முதலாவதாக வர இருக்கிறீர்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கவனிப்போமா?

நிஜமான மைதானத்தில் நீங்கள் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து, இறகுப் பந்து விளையாடும்போது உங்கள் கவனம் எங்கே இருக்கும்?

விளையாட்டிலா அல்லது வேறெங்காவது வேடிக்கை பார்ப்பீர்களா? நிச்சயம் வேடிக்கை பார்க்கமாட்டீர்கள்தானே!

வகுப்பறை மைதானமும் அதுபோலத்தான். பாடத்தில் மட்டும் கவனம் இருக்க வேண்டும்!

வகுப்பறை பலகையில் எழுதப்படுவதைக் கண்ணால் பார்த்தால் மட்டும் போதாது!

வகுப்பறையில், ஆசிரியர் சொல்வதைக் காதால் கேட்டால் மட்டும் போதாது!

ஏன் எனும் காரணம் நாம் முன்பே கவனித்துவிட்டோமே! Sensory Register-கள் தாற்காலிக மெமரி மட்டுமே!

ஆசிரியர் நடத்தும் பாடத்தை உடனே நமக்குப் புரிந்த வகையில் குறிப்பு எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வகுப்பில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு சப்ஜெக்டை ஏன் பயில்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ..

அந்த சப்ஜெக்டை நாம் பயில்வதால் நமக்கு என்ன பயன் என்பது எவ்வளவு முக்கியமோ..

அதுபோல, அந்த சப்ஜெக்ட் உங்களுக்கு எப்படிப் புரிகிறது என்பதை நீங்கள் உங்களுக்குப் புரிந்த வகையில் குறிப்புகள் எடுத்துக்கொள்வதும் மிக மிக மிக முக்கியம்!

தேர்வில் இந்த சப்ஜெக்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையான வகையில் எழுதுவதற்குப் பதிலை மனப்பாடம் செய்வது மட்டும் வழியல்ல. ஆகவே, சப்ஜெக்டை நீங்கள் எப்படி புரிந்துகொள்கிறீர்கள் என்பதுதான், நீங்கள் அந்த சப்ஜெக்டை மனப்பாடம் செய்ய முதல் ஸ்டெப். முதல் ஸ்டெப் சரியாக இருந்தால் மட்டுமே அடுத்த ஸ்டெப்கள் சரியாக இருக்கும். சரியான திசையில் இருக்கும்.

ஆகவே, நீங்கள் பாடத்தை எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிந்த வகையில் எளிமையாக எழுதுவது மிக முக்கியமானது. மேலும், அது உங்களை பலமான ஆட்டக்காரராக மாற்றும் வல்லமையும் கொண்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வகுப்பறையுல், பாடத்தைக் கவனிக்காமல் உங்கள் கவனம் சிதறாமல் இருக்க இந்த பயிற்சி உதவும்.

அதாவது, பாடத்தை நீங்கள் உங்களுக்குப் புரிந்தவகையில் எழுதுவதால் ஈடுபாடு அதிகமாகும் என்பது உளவியல்பூர்வமான உண்மை.

வகுப்பில் பாடத்தின் மீது மட்டும் கவனமாக இருக்க ஒரு சின்ன டெக்னிக் இருக்கிறது.

நீங்கள் ஒரு விஷயத்தை வாடிக்கையாகச் செய்யும்போது உங்கள் ஆழ்மனம் விழிப்புடன் இருப்பதில்லை. ஆழ்மனம் விழிப்புடன் இல்லாதபோது, கவனிக்கும் திறன் குறைவாகவும், கவனச் சிதறலும் இயல்பாக இருக்கும்.

ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருப்பார். ஆனால் உங்கள் கவனம் அதில் இருக்காது. உங்கள் ஆழ்மனம் விழிப்படைய மிக எளிமையான டெக்னிக் இதோ.

கண்களை மூடிக்கொள்ளுங்கள்.

100, 99, 98, 97, 96 என பின்னோக்கி மனதுக்குள் நிதானமாக எண்ணுங்கள்.

நீங்கள் 1 என எண்ணி முடிக்கும்போது, உங்கள் ஆழ்மனம் மெல்ல மெல்ல விழிப்பு நிலைக்கு மீண்டுவிடும்.

எண்களை முன்னோக்கி 1, 2, 3 என எண்ணும்போது, அது ஆழ்மன விழிப்பில் எண்ணப்படுவதில்லை. அது அநிச்சையாக நிகழ்கிறது.

ஆனால், 100, 99, 98 என பின்னோக்கி எண்ணும்போது, அதற்கு ஆழ்மன விழிப்பு நிலை அவசியம். அப்படி நாம் எண்ணத் தொடங்கும்போது ஆழ்மனம் விழித்துக்கொள்கிறது.

விழித்துக்கொண்ட ஆழ்மனம் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கும். அப்போது கற்றுக்கொள்ளும் எதுவும் நன்றாகப் புரியும். நீண்ட நாள் / நிரந்தர மெமரியில் தங்கும்!

வகுப்பில் கற்றுக்கொள்வதை வீட்டில் பயிற்சி செய்து, வகுப்பறை மைதானத்தில் மேலும் பலமான வீரனாக வலம் வருவது எப்படி என்பதை அடுத்த வாரம் கவனிக்கலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT