3. நான்கு வித்தைகள்

வருட ஆரம்பத்தில் வகுப்பில் கேட்ட பாடம், ஆண்டு இறுதித் தேர்வு வரை நினைவில் இருக்க வேண்டுமே! அதுதானே நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.
3. நான்கு வித்தைகள்

நீங்கள் ஒரு சினிமாவுக்குப் போகிறீர்கள். அங்கே உங்கள் நண்பரைச் சந்திக்கிறீர்கள்.

உரையாடல் எப்படி இருக்கும்..

‘என்னப்பா, பார்த்து எவ்வளவு நாளாச்சு. எங்கே இருக்கிறாய்.. என்ன செய்கிறாய்.. கல்யாணம் ஆய்டுச்சா..?’’

விடைபெறும்போது, ‘‘உன் போன் நெம்பர் குடு. வீட்டுக்குப் போனதும் நிதானமா பேசறேன்..’’

அவரும் தன்னுடைய நெம்பரை கொடுத்துவிட்டு, ‘‘உன் நெம்பரில் இருந்து எனக்கு ஒரு மிஸ்ட் கால் தா. இல்லேன்னா, ஒரு மெசேஜ் அனுப்பு’’ என்பதாக, அந்த உரையாடல் முடிந்துபோகும்.

நீங்கள் அந்த நெம்பரை நினைவில் வைத்துக்கொண்டிருப்பீர்கள். வீட்டுக்குப் போனதும், நண்பருக்கு மறக்காமல் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும் என நினைத்துக்கொள்ளவும் செய்வீர்கள். ஆனால், வீடு வந்ததும் அந்த நெம்பர் நினைவில் இருந்தால் அது அதிர்ஷ்டம்தான். அதுதான் மனித மூளையின் யதார்த்தம்.

அதிக ஆர்வமும், வியப்பும், ஈடுபாடும் இல்லாது பெறப்பட்ட அந்த நெம்பர் உங்களுடைய நிரந்தர மெமரியில் போய் தங்குவதில்லை. அது தற்காலிக மெமரியில், அதாவது short-term memory-ஆக மட்டுமே கொஞ்ச நேரம் தங்கிவிட்டு, நீங்கள் எந்த முயற்சியும் அதன் மேல் செய்யவில்லை என்பதால், தேய்ந்து மறைகிறது அல்லது தொலைந்துபோகிறது.

வகுப்பறையிலும் இதுதான் நடக்கிறது. ஆசிரியர் ஒன்றைச் சொல்கிறார். ஆர்வமுடன் கேட்கிறீர்கள். ஆனால் அதில் ஈடுபாடு இருந்தால் மட்டுமே அது நிரந்தர / நீண்ட கால மெமரிக்குள் போய் சிம்மாசனம் போட்டு அமர்கிறது.

ஈடுபாடு மட்டும் இருந்தால் போதுமா? இல்லை, அது போதவே போதாது. ஈடுபாடு செயல்வடிவம் பெற வேண்டும்.

அதை எப்படிச் செய்வது?

விஷயங்கள், Sensory register-ல் ஒரு விநாடிக்கும் குறைவான நேரம் மட்டுமே தங்கும் என கவனித்தோம். அதாவது, மில்லி விநாடிகள் மட்டுமே தங்கும். ஆனால், Short term memory-ல் 18 முதல் 30 விநாடிகள் வரை விஷயங்கள் தங்கும்!

இது போதாதே..

வருட ஆரம்பத்தில் வகுப்பில் கேட்ட பாடம், ஆண்டு இறுதித் தேர்வு வரை நினைவில் இருக்க வேண்டுமே! அதுதானே நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மீண்டும் மீண்டும் படிப்பதா? எழுதி எழுதிப் பார்ப்பதா? மொட்டை மாடியில் நடந்துகொண்டே வாய்விட்டு சத்தமாகப் படிப்பதா? என்னதான் வழி..

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது மூளை எந்திரமில்லை. அது தசையும், திசுக்களும், நரம்புகளும், நியூரான்களும், அமிலங்களும், பலவிதமான ரசாயனத் திரவங்களும் கொண்ட அற்புதமான படைப்பு. அதில் மெமரி என்பது ஒரு பகுதி. அங்கேதான் மெமரியின் முதல் நிலையான Sensory Register, இரண்டாம் நிலையான short term memory மற்றும் நிரந்தர / நீண்ட கால மெமரி எல்லாம் இருக்கிறது. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு எப்படி தகவல் போகிறது என்பதை நான் நன்றாகப் புரிந்துகொண்டுவிட்டால் போதும்.

கட்டடம் கட்டும்போது அஸ்திவாரம் அமைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா. கட்டடம் எப்படி அமைக்க வேண்டும் என்பதை வரைபடம் வரைந்து தீர்மானித்து, அதன்படி மண்ணைத் தோண்டி, அந்தப் பள்ளத்தில் மணலைக் கொட்டி அதன் மீது நீர் ஊற்றுவார்கள். அந்த மணலும், நீரும் சேர்ந்து கெட்டிப்படுவதை consolidation என்று சொல்வார்கள். இதேபோலத்தான், நம் மூளையில் நாம் சிறு வயது முதல் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் ஆங்காங்கே நியூரான்களில் பதிவாகிறது. இவை தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, மெல்ல மெல்ல ஒருங்கிணைக்கப்பட்டு consolidate ஆகிறது. அதாவது, ஒரு சினிமா பாடலைக் கேட்கும்போது அந்த இசை தொடர்பான விஷயங்கள் தனித் தனி நியூரான்களில் பதிவாகிறது. இசைக்கான சினிமாவின் பெயர், நடித்தவர்கள் பெயர், பாடல் ஆசிரியர், எங்கே இந்த சினிமாவைப் பார்த்தோம் இந்த விவரங்கள் தனித்தனியே பதிவாகின்றன.

அதே இசையை மீண்டும் கேட்கும்போது, முதலில் அந்த இசை தொடர்பான தகவல் கொண்ட ஒரு நியூரான் தூண்டப்படுகிறது. அதனுடன் தொடர்புடைய, consolidate ஆன ஏனைய நியூரான்களும் வரிசையாகத் தூண்டப்படுகின்றன. இவை எல்லாம் வேதிவினையாகவோ, அல்லது மின் தூண்டலாகவோ வினையாற்றுகின்றன.

எல்லா தகவல்களும் நியூரான்களில் மிகச் சரியாக consolidate செய்யப்பட்டால், அவை கோர்வையாக வெளி வருகின்றன.

வகுப்பில் கவனிக்கும் பாடமும் இப்படித்தான். வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுக்கிறார். மாணவர்கள் கவனிக்கின்றனர். தங்கள் நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொள்கிறார்கள். வீட்டுக்கு வந்து அதைப் படிக்கின்றனர், மீண்டும் படிக்கின்றனர். மறுமுறை படிக்கின்றனர். இதனால் மட்டும் பாடத்தின் தகவல் நியூரான்களில் ஒருங்கிணைந்து பதிவாவதில்லை. இதனால்தான், ஒருநாள் கடந்து போனதும் மறந்துபோகிறது. ஆனால், என்னமோ படித்தோமே என்பதுபோல மங்கலாக நினைவில் இருக்கிறது.

ஆனாலும், சிலருக்கு மட்டும் எப்படி படித்தது அப்படியே நினைவில் இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

அவர்கள் நான்கு வித்தைகள் தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்று பொருள்!! அது என்ன நான்கு வித்தைகள்..

நான்கு வித்தைகள் என்னவென்று தெரிந்துகொள்ள ஒரு சின்ன டெக்னிக் இருக்கிறது.

உங்கள் அம்மாவிடம் போய் கேளுங்கள்..

நம் வீட்டில் சமையலறையில் உப்பு எந்த டப்பாவில் இருக்கிறது எனத் தொட்டுக் காட்டவும்!

நம் வீட்டில் சமையலறையில் சர்க்கரை எந்த டப்பாவில் இருக்கிறது எனத் தொட்டுக் காட்டவும்!

நம் வீட்டில் சமையலறையில் மிளகாய் எந்த டப்பாவில் இருக்கிறது எனத் தொட்டுக் காட்டவும்!

நம் வீட்டில் சமையலறையில் மிளகு எந்த டப்பாவில் இருக்கிறது எனத் தொட்டுக் காட்டவும்!

நீங்கள் சொல்லச் சொல்ல, உங்கள் அம்மா அதையெல்லாம் அநாயாசமாகச் செய்வதைக் கவனிக்கலாம்.

உப்பு என்ற வார்த்தையும், அது நம் வீட்டில் சமையல் அறையில் எங்கு இருக்கிறது என்ற விவரமும், மூளையில் தனித்தனியே வெவ்வேறு இடங்களில்தான் பதிவாகியிருக்கிறது. உப்பு எங்கே இருக்கிறது என்ற கேள்வி வந்தவுடன், அது தொடர்பான விவரங்கள் consolidate எனும் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருப்பதால், டாண் டாண் என விடையாக வெளியே வருகிறது.

இதேபோலத்தான் உங்கள் வகுப்புப் பாடமும். ஒரு சப்ஜெக்டில் நீங்கள் படிக்கும் விவரங்கள் மூளைக்கும் போய் தனித் தனி விவரங்களாகப் பதிவாகின்றன. அவை பயிற்சியினால் ஒருக்கிணைப்பு எனும் consolidate ஆகியிருந்தால், கேள்வியைப் பார்த்தவுடன் கோர்வையாகப் பதிலாக வெளியே வரும்.

ஆனால், பயிற்சி எனப்படும் மனப்பாடம் செய்தல், எழுதிப் பார்த்தல் எனும் முயற்சிகளில் தகவலை மூளைக்குள் மீண்டும் மீண்டும் திணிக்கப் பார்க்கிறோமே தவிர, அவற்றை முறையே ஒருங்கிணைக்க முயற்சி செய்வதில்லை.

இதனால்தான், பாதி படித்த மாதிரி, பாதி மறந்துபோன மாதிரி, எதுவுமே நினைவில் இல்லாத மாதிரி குழப்பம் வந்து, கொஞ்சம் கொஞ்சம் படித்ததும் பலன் தராமல் போகிறது.

நான்கு வித்தைகள் என்று சொன்னோமே, அவை என்னவென்று இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.

வித்தை நம்பர் 1 - இடம் பிடித்தல்

நீங்கள் படிக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் நீங்களே உங்கள் மூளைக்குள் இடம் பிடித்துக் கொடுத்தல். நீங்கள் வாசிக்கும், படிக்கும், பயிற்சி செய்யும் தகவல் எல்லாம் மூளைக்குள் எங்கோ போய் நியூரானில் தனித் தனியே உட்கார்ந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அதையெல்லாம் நீங்களே விரும்பி வெளியே கொண்டுவருவது. அதாவது, இன்னமும் சற்று நேரத்தில் நான் இந்த விவரங்களை நினைவுக்குக் கொண்டுவருவேன் எனும் சிந்தனையுடன் படிப்பது. இதை ஒவ்வொரு பாடத்துக்கும் எப்படி செய்வது என்பதைத் தனித் தனியே பின்னர் கவனிக்கலாம். 

வித்தை நம்பர் 2 - சைக்கிள் வித்தை

நீங்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட நாள்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். நேராகப் பார்க்கவும், சைக்கிள் ஹாண்டில் பாரை வளையாமல் பிடிக்கவும், உடல் கோணி சைக்கிள் கீழே விழாமல் இருக்க பேலன்ஸ் செய்வதும், அதே சமயம் சைக்கிள் பெடலை மிதித்துக்கொண்டு சைக்கிள் முன்னேறி செல்லவுமான எத்தனை வேலைகளை ஒரே சமயத்தில் யோசித்து யோசித்து முயற்சி எடுத்து முயற்சி எடுத்து செய்யவேண்டி இருந்தது. ஆனால் இன்று அப்படியா? அநாயாசமாக சைக்கிள் ஓட்டுகிறீர்களே, எப்படித் தெரியுமா?

சைக்கிள் ஹாண்டில் பாரை வளைக்காமல் பிடித்துக்கொண்டு, உடலைக் கோணாமல் வைத்துக்கொண்டு, சைக்கிளை அழகாக பேலன்ஸ் செய்துகொண்டு, சைக்கிள் பெடலை எவ்வளவு தேவையோ அவ்வளவு மிதித்துக்கொண்டு.. எத்தனை லாகவமாக ஓட்டுவது எல்லாம், நீங்கள் இதற்கெல்லாம் செய்த practice காரணமாக, ஒவ்வொரு விஷயமும் சின்னச் சின்னத் தகவல்களாக உங்கள் மூளைக்குள் நியூரான்களில் பதிவாகி, முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, அதாவது consolidate ஆகி, நீங்கள் எப்போதெல்லாம் சைக்கிள் ஓட்ட நினைத்து சைக்கிளை எடுக்கிறீர்களோ, அப்போதெல்லாம் அந்த சின்னச் சின்னத் தகவல் சேமிக்கப்பட்டுள்ள நியூரான்கள் ஒருங்கிணைந்து வேலை செய்கின்றன.

நன்றாக யோசியுங்கள். நீங்கள் சில முறை முயன்று கற்றுக்கொண்ட சைக்கிள் ஓட்டும் பழக்கம் உங்களுக்கு மறக்கவே மறக்காது.

நீச்சல், டை கட்டிக்கொள்வது, கிரிக்கெட் / டென்னிஸ் / கால்பந்து / கூடைப் பந்து/ சதுரங்கம் விளையாடுவது போன்ற பழக்கங்களும் இப்படித்தான்.

இதுபோல, நீங்கள் படிக்கும் பாடத்தையும் கொண்டுவர முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வித்தை நம்பர் 3 - சினிமா வித்தை

உங்களுக்குப் பிடித்த நடிகர் / நடிகை தொடர்பான சினிமா விவரங்களை நீங்கள் பயிற்சி செய்வதில்லை. ஆனாலும் அவை உங்கள் மூளையிலே போய் தங்கிவிடுகின்றன. இதற்குக் காரணம், உங்களுக்கு அவரைப் பிடிக்கும் எனும் உணர்ச்சி மட்டுமே.

அதுபோல, உணர்ச்சிபூர்வமான எந்த ஒரு நிகழ்ச்சியையும் மூளை மறப்பதில்லை. இதுபோல உங்கள் பாடத்தையும் உணர்ச்சி சம்பவங்களைக் கொண்டு, உங்கள் நீண்ட நாள் / நிரந்தர மெமரியில் கொண்டு தங்கவைக்க முடியும்.

வித்தை நம்பர் 4 - தூக்க வித்தை

தூக்கத்துக்கும் நமது மெமரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தூங்காமல் கண் விழித்து பாடம் படித்தால் ஞாபகம் அதிகமாகும் என்பது தவறான எண்ணம்.

மாறாக, சரியான நேரத்தில் தூங்கினால், நாம் படித்த பாடங்கள், மூளைக்குள் ஒருங்கிணைப்பு ஆகும். அதாவது, consolidate வலுவாக ஆகும். இதை எப்படி நம் பாடம் பயில்வதற்கு சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை தனியே விரிவாகப் பிறகு பார்க்கலாம்.

மூன்று மந்திரங்கள் தெரிந்துகொண்டோம்..

நான்கு வித்தைகள் தெரிந்துகொண்டோம்..

இவற்றை வைத்துக்கொண்டு எப்படி நூற்றுக்கு நூறு வாங்குவது..?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com