அத்தியாயம் - 34

வேலைவாய்ப்பின்மை என்பது மிகப்பெரிய ஒரு தாக்கத்தை பொருளாதார வீழ்ச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் மட்டும் 3.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்திருக்கிறார்கள்.
அத்தியாயம் - 34

வளர்ச்சிக்கு மாற்று வழி!

இன்றைக்கு இந்தியா மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு 2019-ல் மூன்றாம் காலாண்டில் ஜிடிபி 5% ஆக குறைந்துவிட்டது. உற்பத்தித் துறை 0.6 சதவீதமாகக் குறைந்து தள்ளாடிக்கொண்டு மிகவும் ஒரு சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் பல கார்ப்பரேட் கம்பெனிகள் உற்பத்தி நிறுத்தம் செய்ய வேண்டிய நிலைமை தொடர்ந்து ஏற்படுகிறது. அதனால் அவற்றைச் சார்ந்து இருக்கிற பல தொழிற்சாலைகளைத் தொடர்ந்து மூடிக்கொண்டிருக்கிறார்கள்; வேலைவாய்ப்பு இழப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். Fast-Moving Consumer Goods (FMCG) என்று சொல்லப்படக்கூடிய வேகமாக விற்பனையாகும் - மக்கள் உபயோகப்படுத்தும் சில்லரை பொருள்கள் துறையும் - இன்றைக்கு வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. ரூ.5 விலையுள்ள பிஸ்கட் விற்பனையாகவில்லை என்ற நிலைமை உள்ளது. உள்நாட்டுத் தேவை மிகவும் குறைந்து உபயோகிப்பின் வளர்ச்சி கடந்த 18 மாதங்களில் மிகவும் குறைந்துவிட்டது. கடந்த 15 வருடங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி அடித்தட்டு நிலையைத் தொட்டு நிற்கிறது.

வரி பயங்கரவாதம் கட்டுக்கடங்காமல் செல்கிறது. முதலீட்டாளர்கள் நம்பிக்கை முற்றிலும் சிதைந்து காணப்படுகிறது.

வேலைவாய்ப்பின்மை என்பது மிகப்பெரிய ஒரு தாக்கத்தை பொருளாதார வீழ்ச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் மட்டும் 3.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்திருக்கிறார்கள். சிறு மற்றும் குறு தொழில் துறையில் (எம்.எஸ்.எம்.இ) கிட்டத்தட்ட 10 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. அதில் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.

கிராமப்புற இந்தியா இன்றைக்கு கதிகலங்கி நிற்கிறது. கிராமப்புற வருமானம் முற்றிலும் குறைந்துவிட்டது. நமது விவசாயிகளுக்கு தேவையான உற்பத்தி விலை கிடைக்கவில்லை.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து 1.7 லட்சம் கோடி ஆதார பணத்தை அரசு வாங்கி அதை எப்படி செயல்படுத்துவது, வீழ்ந்த பொருளாதாரத்தை எப்படி மீட்டெடுப்பது என்பதற்கான சரியான திட்டமிடல் இல்லாமல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. 2019-20 நிதிநிலை அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் இன்றைக்கு பொருளாதாரம் சரிந்தவுடன் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதே சரியான திட்டமிடல் இல்லை; தொலைநோக்குப் பார்வை இல்லை என்பதை நிரூபிக்கிறது.

இதுதவிர இன்றைக்கு சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய பொருளாதார யுத்தத்தின் விளைவாக உருவாகி இருக்கக்கூடிய ஏற்றுமதிக்கான வாய்ப்பு என்பதை இந்தியா பயன்படுத்துவதற்கு இங்கு நிறுவனங்கள் தயாராக இல்லை என்ற நிலைக்கு காரணமாக பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி இருக்கிறது. ஆனால் நமது இளைஞர்களும், விவசாயிகளும், விவசாய கூலி மற்றும் அனைத்து தொழிலாளர்களும், தொழில்முனைவோர்களும், கடன் பாதிக்கப்பட்ட மக்களும் இந்த பொருளாதாரச் சிக்கலில் இருந்து எப்படி மீளப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

இதற்கு காரணம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், அவசர கோலத்தில் அமலாக்கம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் ஜிஎஸ்டி பைலிங் சிஸ்டம் என்று சொல்லப்படும் அரைகுறை கணினி மென்பொருளும்தான் என்பது தெரிகிறது. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு பயமுறுத்தப்பட்டு, NPA என்ற சர்பாஸி சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்டு, தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அரசுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களும் செய்து கொடுத்த பொருளுக்கு, வேலைக்கு, சேவைக்கு, 6 மாதத்திற்கு மேலும் ஒரு வருட காலதாமதமாகக்கூட பணம் கொடுக்க அரசாலும், கார்ப்பரேட் நிறுவனங்களாலும் இயலவில்லை. அதற்கு எந்தக் கேள்வியும் கிடையாது. அதற்கு எவ்வித ஒழுங்குமுறையும் கிடையாது. சொந்தப் பணத்தை போட்டு, சொந்தங்களிடம் கடன் வாங்கி, சொத்தை அடமானம் வைத்து வங்கியிடம் கடன் வாங்கி 63 மில்லியன் மைக்ரோ தொழிற்சாலைகள், 0.33 மில்லியன் சிறு தொழிற்சாலைகள், 5000 குறும் தொழிற்சாலைகள் சேர்ந்து 120 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பை உறுவாக்கி கொடுத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவில் 40 சதவிகிதம் பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கும் துறையில் கடந்த 8 ஆண்டுகளில் 10 லட்சம் சிறு மற்றும் குறும் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. 50 லட்சம் பேர் இன்றைக்கு வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட துறையை உருவாக்குவதற்கு அரசு எவ்வித சலுகையும் வழங்கவில்லை, சிறு குறு தொழில் தொடங்காதே, தொடங்கினால் வரி போடுவோம் என்று போட்டார்கள். தொழில் தொடங்க வரி போட்டவர்கள், அதை மூடுவதற்கு, ‘‘அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்’’ என்ற பழமொழிக்கு ஏற்ப, கடனில் தவிக்கும் சிறு மற்றும் குறும் தொழில்களை மூடுவதற்கு அரசின் கொள்கையும் அரசு இயந்திரம் கடந்த 10 ஆண்டுகளாக மும்முரமாக இருக்கிறது.

நலிந்த கம்பெனிகளை மூடுவதற்கு கடந்த 10 ஆண்டுகளில் போட்ட சட்டங்கள் முனைப்போடு செயல்படுத்தப்பட்டு, வங்கிக்கு கடனை 3 மாதம் அடைக்க முடியாவிட்டால், NPA முதல்கட்டம், அடுத்த 45 நாட்களுக்குள் அடைக்க முடியாவிட்டால் NPA அடுத்த கட்டம், அடுத்த 45 நாட்களில் அடைக்காவிட்டால் ஏலம். ஒருமுறை NPA ஆகிவிட்டால் வேறு எங்கும் கடன் வாங்க முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டு, சொத்து அனைத்தையும் கந்து வட்டிகாரர்களிடம் அடமானம் வைத்து அனைத்தையும் இழந்து தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, கம்பெனியை மூடி, நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து, அவமானப்பட்டு, தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் தொழில்முனைவோர்கள். ஜி.எஸ்.டி வரி போட்டு அனைவரையும் தினமும் வரி தாக்கல் செய்வதற்கு மட்டுமே வேலை பார்க்கவைக்கும் ஓர் அரசு, மாத மாதம் வரி வசூல் செய்யமுடியும். ஆனால், ஜி.எஸ்.டி வரி திரும்பப்பெறும் கோரிக்கையை மட்டும் ஓர் அரசால், ஒரு மிகச்சிறந்த ஜி.எஸ்.சி மென்பொருளால் 6 மாதத்திற்கு மேலும் திரும்ப செலுத்த முடியாது என்றால், ஒரு சிறு, குறும் தொழில் நடத்துபவர்களால் எப்படி மாதச் சம்பளம் தொடர்ந்து கொடுத்து தொழில் செய்யமுடியும்? சிறு மற்றும் குறும் தொழில்கள் சாதாரண மக்களால் உருவாக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர். மரத்தின் ஆணிவேரை பிடுங்கிவிட்டு, அசைத்துவிட்டு மரத்தின் கனிகள் மட்டும் வேண்டும் என்றால் எப்படியோ, அதுபோலத்தான் விவசாயத்தையும், தொழிலையும் முடக்கிவிட்டு இந்திய பொருளாதாரத்தை நலிந்த வங்கிகளை லாபம் கொடுக்கும் வங்கிகளோடு இணைத்து மீட்டுவிடலாம்; கடன் வட்டி விகிதத்தை குறைத்து மீட்டுவிடலாம்; சில சலுகைகளை அளிப்பதால் மீட்டுவிடலாம் என்று நினைத்துச் செயல்படுகிறது அரசு.

இந்த நிலைக்குக் காரணம் என்ன, உலகத்தில் எவ்வளவோ பொருளாதார வீழ்ச்சி வந்தாலும், நிலையாக நின்ற இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கும், வேலை இழப்பிற்கும் என்ன காரணம் என்றால், வங்கிகளில் சேமிக்கமுடியும் என்ற நடுத்தர வர்க்கத்தின் அசையாத நம்பிக்கை முதலில் ஒழிக்கப்பட்டது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம். அதனால் பணத்தை மட்டுமே நம்பி கோடிக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துவந்த முறைசாரா தொழில்துறை ஒழிக்கப்பட்டது. வேலை இழப்பு தொடர்ந்தது. அப்போது யாரும், எந்த தொலைக்காட்சி ஊடகமும் இதைப்பற்றி பேசவில்லை; விவாதிக்கவில்லை. ஆனால் அங்கு தொட்டு, இங்கு தொட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை இந்த பாதிப்பு தொட்டவுடன் அனைவரும் இதைப்பற்றி பேசும் நிலை வந்துவிட்டது.

இவற்றைச் சரிசெய்ய இந்திய நிதி அமைச்சர் பல சலுகைகளை, நடவடிக்கைகளை 3 முறை அறிவித்திருக்கிறார். பல்வேறு பொருளாதார நிபுணர்கள் தங்களது ஆழ்ந்த கருத்துகளை அரசுக்கு தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் வீழ்ந்த பொருளாதாரம் எழுவதற்குறிய அறிகுறிகள் அரசின் நடவடிக்கையின் விளைவாக எதுவும் தெரியவில்லை.

எனவே எனது பின்வரும் பரிந்துரைகளை நான் நிதி அமைச்சருக்கு அனுப்பினேன். அதன் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகள் என்ன, நீண்டகால நடவடிக்கைகள் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவை பொருளாதாரத்தை முன்னேற்றுவதோடு மட்டுமல்லாமல், நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கவும், நம் நாட்டின் வளத்தைப் பெருக்கவும் அதே நேரத்தில் நமது பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் உதவும் என்று நம்புகிறேன்.

பொருளாதார மீட்சிக்கு முதல் நடவடிக்கை அதிகபட்ச GSTI 16% ஆக குறைக்க வேண்டும். இதை ஜி.எஸ்.டி கவுன்சில் செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட ஆட்சி முறை நிர்வாகம் இருப்பது உண்மையானால், இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் திறனற்ற, அதிகப்படியான ஆவணங்களை திரும்பத் திரும்ப கேட்டு, தொழில் துறைக்கு சுமையாக இருக்கும் GST தாக்கல் செய்யும் தகவல் தொழில்நுட்ப முறையை தொழில்நுட்ப ரீதியாக தவிர்க்கமுடியும். எனவே இந்த முறையை ரத்து செய்து மாற்றி அமைத்தால் மட்டுமே ஜி.எஸ்.டி பிரச்னையில் இருந்து மீளமுடியும்.

அதிகப்படியான கட்டுப்பாடு, வரி நெருக்கடி இருந்தும் ஊழல் போன்றவற்றால் அதிகார வர்க்கத்தோடு நெருக்கமாக இருப்பவர்களால் GST-யை ஏமாற்றமுடிகிறது. இது சந்தையில், ஏமாற்றுக்காரர்கள், சட்டத்தை மதிக்கும் வர்த்தகர்கள், மற்றும் வணிகர்களுக்கு இடையே நியாயமற்ற போட்டியை உருவாக்குகிறது. குற்றவாளிகள் தப்பிக்கும் வழிகளை தடுத்து அவர்களை ஒரு வளையத்திற்குள் கொண்டுவரச் செய்து அனைவருக்கும் சரியான ஒரே சமதள வாய்ப்பை வழங்கினால் மட்டுமே ஜி.எஸ்.டி மூலம் நியாயம் கிடைக்கும். தொழிற்சாலைகள் தனது லாபத்தில் 2 சதவிகிதம் சமூக நலனுக்குச் செலவு செய்யாவிட்டால், எடுக்கப்படும் குற்ற நடவடிக்கை இப்போது கைவிடப்பட்டிருப்பது நல்லது. ஒன்று தண்டனை அது முடியவில்லை என்றால் விடுதலை என்பது அறிவார்ந்த நடவடிக்கையல்ல. ஆனால் அதை அனைவரும் பின்பற்றும்படி மாற்றி அமைத்தால் அது நல்லாட்சி. மத்திய அரசின் திட்டத்தின்படி சமூக பொறுப்புணர்வு (CSR) நடவடிக்கைகள் மூலம் சமுதாய மேம்பாட்டிற்கு 2%-மும், சுற்றுசூழல் மேம்பாட்டிற்கு 2%-மும், சுற்றுலாவை மேம்படுத்த 2%-மும், மொத்தம் 6% செலவிடும்பட்சத்தில் தொழில்துறைகளுக்கான GST-யை 6% குறைப்போம் என்று சொல்லிப் பாருங்கள், அனைவரும் அதை செய்வார்கள்.

தவறாமல் GST செலுத்திவரும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு 58 வயதிற்கு பிறகு ஓய்வூதியம் வழங்குவோம் என்று சட்டம் இயற்றுங்கள்; அனைவரும் அதை பின்பற்றுவார்கள். வரி நிலுவை 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ள பட்சத்தில் மொத்த தொகையையும் ஒரே சமயத்தில் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, மொத்த தொகையைப் பிரித்து தவணை முறையில் செலுத்தவைப்பதன் மூலம் வரிச்சுமையைக் குறைத்து, வரி செலுத்தும் அனுபவத்தை சுலபமாக்க முடியும். சில்லறை செலவினங்களின் மீதான GST-யை குறைத்து, வருமான வரியை விலக்கி, வரி கட்டுவதற்கான இணக்கத்தை செலவுகளின் அளவைக் கூட்டுவதால் அதிகரிக்கும் பொழுது வரும் வரியின் அளவு, வருமான வரியை விலக்குவதால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய கூடியதாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கும். எனவே இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தைரியம் வேண்டும். செய்வார்களா, பார்ப்போம்.

சிறு மற்றும் குறு தொழில்களை நசுக்கும் SARFAESI சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவற்றிக்குச் செலுத்த வேண்டிய பணத்தை, 3 மாதத்திற்குள்ளாக செலுத்த வேண்டிய சட்டத்தை இயற்ற வேண்டும். அதைச் செய்ய முடியவில்லை என்று சொன்னால் வாராக் கடன்களை அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை வங்கிகள் அவர்களிடம் வசூல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்தினால், NPA சட்டத்திலிருந்து சிறு மற்றும் குறும் தொழில்கள் தப்பிக்கும். இந்தச் சிக்கலைத் தீர்க்க வங்கிகள், அரசு மற்றும் பெருநிறுவனங்கள் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டும். சிறு மற்றும் குறு தொழில்கள் துறையில், நசிந்த தொழில்களை மீட்பதற்கு முதலீடுகளைக் கடனாகவோ, பங்காகவோ செலுத்துவதோடு இவற்றை நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் மேம்படுத்த வேண்டும். சிறு மற்றும் குறு தொழில்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களை மீட்க, அவற்றிற்கு புத்துயிரூட்ட 500 கோடிகள் வரை வருமானம் ஈட்டும் தொழில்துறைகளுக்கு வருமான வரி, ப்ராவிடன்ட் ஃபண்ட் போன்ற ஒழுங்குமுறை அதிகாரிகள் விதிக்கும் அனைத்து அபராதங்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டுமே, சிறு மற்றும் குறு தொழில்கள் சிறக்கும்; வேலை வாய்ப்பு பெருகும்; மக்களிடம் செலவளிக்கும் எண்ணம் தோன்றும்.

இதைப் போன்ற பல்வேறு ஆலோசனைகளை விவசாயம் மற்றும் வேளாண் உணவு பதப்படுத்தும் தொழிற் துறையைப் புதுப்பித்தல் மற்றும் ஏற்றுமதியை நோக்கி கவனத்தைச் செலுத்துதல், அதிகப்படியான பெட்ரோல் மற்றும் டீசல் சார்பை குறைக்க எரிசக்தி தாவரங்கள் பயிரிடுவது மற்றும் உயிர் எரிபொருள் உற்பத்தியில் கவனம் செலுத்துதல், நதி நீர் இணைப்பு, சுற்றுச்சூழல் துறை, எரிசக்தித் துறை, மருத்துவத் துறை, கிராமப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் எவ்வாறு கொள்கைகளை மாற்றி வடிவமைத்தல், செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எப்படி எடுத்தால் இந்திய பொருளாதாரம் எப்படி மீட்டெடுக்கப்படும், வேலைவாய்ப்பு எப்படி உருவாகும், அதற்கும் தேசிய கல்விக்கொள்கைக்கும், தொழில் கொள்கைக்கும், பொருளாதாரத்திற்கும், ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com