மிச்சமெல்லாம் உச்சம் தொடு

அத்தியாயம் - 37

1st Oct 2019 12:07 PM | விஞ்ஞானி வெ. பொன்ராஜ்

ADVERTISEMENT

 

தேவை: சரியான திட்டமிடல்.. வலுவான ஒற்றுமை!

 

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

ADVERTISEMENT

அணியென்ப நாட்டிவ் வைந்து. (குறள் 738)

மக்களுக்கு நோயற்ற வாழ்வு, மிகுதியான விளைச்சல், பொருளாதார வளம், மகிழ்ச்சியான வாழ்வு நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவை. இந்த ஐந்தையும் மக்களுக்கு ஆட்சியாளர்கள் வழங்குவது அவர்களின் கடமையாகும்.

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

நாடென்ப நாட்டின் தலை. (குறள் 736)

பகைவரால் கெடுக்கப்பட வாய்ப்பில்லாதாக, ஒரு வேளை கெட்டுவிட நேர்ந்துவிட்டாலும் வளம் குன்றாத அளவு வல்லமை உள்ள நாடே, நாடுகள் எல்லாவற்றிலும் தலைசிறந்த நாடாகும் என்கிறார் திருவள்ளுவர்.

ஒரு நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு முக்கியமான நோக்கம் மற்றும் சவால் என்ன என்றால், அவர்களின் கொள்கைகளும், திட்டங்களும், செயல்களும், யாருக்காக சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களோ, அந்த மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும். இந்தச் சவாலில் வெற்றிபெற வேண்டும் என்றால், உலகத்தின் போக்கையும், அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய அல்லது வென்று முன் செல்லக்கூடிய வல்லமை கொண்டதாக நம் நாட்டைச் சகலவிதத்திலும் மாற்ற வேண்டும். அதற்குத் தேவையான வழிகளை ஆராய்வதோடு மட்டுமல்லாமல், அதைச் சாதிக்கக்கூடிய வல்லமையை யார் பெற்றிருக்கிறார்களோ, அவர்களால்தான் நம் நாட்டை மற்ற நாடுகளுக்கு முன்பாக வீறுநடை போடச் செய்ய முடியும்.

‘‘என் நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்குத்தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை; எனது நாட்டின் பொருள்களை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் நாடுகளுக்கும், எங்கள் பொருள்களை வாங்கும் சக்தி அதிகம் கொண்ட நாட்டிற்குதான் சிறப்பு சலுகைகள்; எனது நாட்டில் முதலீடு செய்து எனது மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத்தான் சலுகைகள்; எனது மக்களுக்குதான் சிறந்த தரமான கல்வியும், சிறந்த தரமான மருத்துவமும் கிடைக்க முன்னுரிமை; அதற்கு அடுத்த முன்னுரிமை அமெரிக்க வாழ் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்தியர்கள் மற்றும் பிற நாட்டை சேர்ந்தவர்களுக்கு; அதற்குப் பின்புதான் புலம் பெயர்ந்தோர்களுக்கு’’ என்று தேர்தலில் தான் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு, அதைச் சாதித்துக் காட்டிவிட்டு சமீபத்தில் அமெரிக்கா டெக்ஸாஸ் மாநிலம் கவுஸ்டன் நகரில் நடைபெற்ற ‘ஹவ்டி மோடி’ என்ற நிகழ்ச்சியில் மார்தட்டிச் சொல்லக்கூடிய வல்லமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இருக்கிறது. இவ்வாறு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு, அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்துவிட்டு, அதை மற்ற நாட்டின் தலைவர்களுக்கு முன்பாக மார்தட்டிச் சொல்லக்கூடிய வல்லமை பெற்ற தலைவர்களால்தான் ஒரு நாடு சிறப்படைகிறது.

‘‘அமெரிக்காவின் ஏற்றுமதி பொருள்களுக்குச் சலுகைகளை அளித்து அமெரிக்காவின் வர்த்தகத்தை அதிகரிக்க தடையாக இருந்தால், அது சீனாவிற்கு மட்டுமல்ல; இந்தியாவின் சில குறிப்பிட்ட ஏற்றுமதி பொருள்களுக்கும் அமெரிக்காவில் இறக்குமதி வரி விதிக்கப்படும்’’ என்ற மிரட்டலையும் சேர்த்தே விடக்கூடிய வல்லமை அமெரிக்க அதிபருக்கு இருக்கிறது. அதைச் சமாளிக்கும் வல்லமை நம் நாட்டிற்கு இருக்கிறதா?

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிந்தபோது 90 சதவிகிதம் முறைசாராத் துறையில் வேலை செய்து வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் உழைப்பாலும், சேமிப்பாலும், செலவாலும் நிலைநிறுத்தப்பட்ட இந்தியாவின் பொருளாதாரம், இன்றைக்கு 5% கீழே வீழ்ச்சியடைந்துவிட்டது. இது எப்போது முன்னேறும் என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது.

முறைசாராத் துறையில் இருக்கும் பொதுமக்கள் கையில் எப்போது பணப்புழக்கம் அதிகமாகிறதோ, அப்போது பொருளாதாரம் முன்னேறும். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வாய்ப்பு எப்போது தொழில் முனைவோர்களுக்கு உருவாக்கி கொடுக்கப்படுகிறதோ, அப்போதுதான் பொருளாதாரம் மீண்டெழும். உழைப்பிற்கான வாய்ப்பு மட்டுமல்ல, மக்களின் உழைப்பினால் உருவாகும் பணத்தைச் சேமித்து வைக்கக்கூடிய ஆர்வத்தைத் தூண்டும் வட்டி கொடுக்கும் வங்கிகள் இன்றைக்கு இந்தியாவில் இல்லை என்றாகிவிட்டது. உண்மையான தொழில் முனைவோருக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் இனிமேல் இல்லை என்ற நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. வங்கிச் சேவையை நாடினால் அனைத்திற்கும் ‘சர்வீஸ் சார்ஜ்’ என்ற பெயரில் ஆரம்பித்த பழக்கம், இப்போது அபராதம் என்ற நிலைக்குச் சீரழிந்து கிடக்கிறது. சேமிக்கவும் முடியாது; இனிமேல் தொழில் செய்யவும் முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்தச் சீரழிவை சரி செய்யாமல் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீள வழியில்லை.

வங்கியில்லாப் பொருளாதாரம் என்ற நிலை இந்தியாவில் சீக்கிரம் வரும். பணமில்லா டிஜிட்டல் கரன்சி என்ற நிலைக்கு வளர்ந்த நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றன. ஒரு சில இந்திய ஆராய்ச்சித் துறைகளை தவிர்த்து உலகத்தின் அறிவின் வளர்ச்சி அளவில் 30 வருடங்களுக்கும் கீழ் பிந்தியிருக்கும் இந்தியா, வளர்ந்த நாடுகளைப்போல தன்னை அறிவால், ஆராய்ச்சியால், தொழில்நுட்பத்தால் வளர்த்துக்கொள்ளாமல், வளர்ச்சிக்கான வழிகளில் மக்களை வழிநடத்தாமல், வருமான வரியையும், ஜி.எஸ்.டி.யையும் குறைக்காமல், வங்கிகளை இணைத்து, டிஜிட்டல் கரன்சிமுறையைக் கொண்டுவருவதால் மட்டும், வட்டி விகிதத்தைக் குறைப்பதால் மட்டும், திடீரென்று கடன் கொடுக்க வங்கிகளுக்கு அறிவுறுத்துவதால் மட்டும் முன்னேறிவிடும் என்ற நினைக்கிற தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாறாமல் - வெறும் பங்குச்சந்தை உயர்வுக்கு வழிவகுத்தால் மட்டும் - இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுவது என்பது மிகச் சிரமம்.

இந்தியாவின் பொருளாதாரம் வலுவான விகிதத்தில் வளர்ந்தபோது, உலக வங்கியின் 2018 ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ் தரவரிசையில் 23 இடங்களை ஏறி 77-வது இடத்திற்கு முன்னேறியது. ஆனால் இன்றைக்கு தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் (NSSO) அவ்வப்போது தொழிலாளர் படை கணக்கெடுப்புபடி (PLFS), இந்தியாவில் தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் 46.8% ஆக மிகக் குறைவு. 2012-2018 வரையிலான காலகட்டத்தில் வேலைவாய்ப்பு விகிதம் சராசரியாக 48.76% ஆக இருந்தது. இது 2012-இல் 50.80% ஆகவும், 2018-இல் 46.80% ஆகவும் இருந்தது. முந்தைய காலாண்டில் 113.5 ஆக இருந்த வர்த்தக எதிர்பார்ப்புக் குறியீடு (BEI - Business Expectations Index) 2019-20 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 112.8 ஆகக் குறைந்துள்ளது, இது டிரேடிங்எகனாமிக்ஸ்.காம்படி, 2000-2019 காலகட்டத்தின் 117.74 குறியீட்டு புள்ளிகள் சராசரியைவிடக் குறைவாக உள்ளது. இதற்கிடையில், நுகர்வோர் நம்பிக்கை 2019-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 97.30 குறியீட்டுப் புள்ளிகளிலிருந்து 2019 மூன்றாம் காலாண்டில் 95.70 குறியீட்டு புள்ளிகளாகக் குறைந்துவிட்டது. இது 2010-2019 காலகட்டத்திற்கான 103.10 குறியீட்டு புள்ளிகளுக்குக் கீழே போய்விட்டது.

இந்த நாட்களில் இந்தியாவில் பல விஷயங்கள் தவறாகப் போய்க்கொண்டிருக்கின்றன.

கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

‘2015-ஆம் ஆண்டு தொடங்கி, கிராமப்புற இந்தியர்கள் உணவுக்கு அதிக சிரமப்படத் தொடங்கினர்’ என்று மற்றொரு கேலப் அறிக்கை கூறுகிறது. நான்கு கிராமப்புற இந்தியர்களில் (28%) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒருகட்டத்தில் உணவுக்காக போதுமான பணம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். கிராமப்புறத்தை ஒப்பிடும்போது அதே கஷ்டத்தை 18% நகர்ப்புற இந்தியர்கள் அனுபவித்திருக்கிறார்கள். எனவே கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு குறைந்தபட்சம் தூங்கிக்கொண்டிருக்கும் மத்திய அரசின் ஷியாமா பிரசாத் முகர்ஜி ரர்பன் (RURBAN) திட்டத்தைச் செயல்படுத்த சில ஆலோசனைகளை மத்திய அரசு செயல்படுத்தினால், 70 சதவிகிதம் மக்கள் வாழும் கிராமப்புற பொருளாதாரம் மேம்பட வழிவகை ஏற்படும். அதன்மூலம் கிராமப்புற மக்கள் கையில் வாங்கும் சக்தி மேம்படும். வீழ்ந்த பொருளாதாரம் மேம்பட அது ஒரு உந்து சக்தியாக மாறும்.

கிராமப்புறங்களில் நிலையான கிராமப்புற வளர்ச்சியைக் கொண்டுவருவதற்காக அப்துல் கலாமின் PURA திட்டத்தின் பின்வரும் கூறுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்த பணியைச் செயல்படுத்தவும், கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்கி பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இயலும். ஸ்வாட்ச் பாரத் மிஷன் உருவாக்கிய அனைத்து கழிப்பறைகளையும் இணைத்து ஒரு மையப்படுத்தப்பட்ட பயோடைஜெஸ்டரை நிறுவி அதாவது DST (அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை) நாடு முழுவதும் 400 நிறுவனங்களில் சிறப்பாகச் செயல்படுத்தி கொண்டிருக்கும் செயல்பாட்டு மாதிரி போல ஒவ்வொரு கிராமத்திலும் இந்த முறையின் வழியாக 50 கிலோவாட் முதல் 100 கிலோவாட் மின்சாரம் தயாரிக்க வேண்டிய நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். கிராமப் பஞ்சாயத்து, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் முழுவதும் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை (SLRM) திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் அவற்றைப் பசுமையாகயும், தூய்மையாகவும் மாற்றுவதோடு இந்தத் திட்டத்தை பஞ்சாயத்து ராஜ் உடன் இணைக்க வேண்டும்.

புரா திட்டத்தின் அடிப்படை வியாபாரப் பொருளாதார மையத்தை போல ஒரு RURBAN பொருளாதார மையத்தை உருவாக்கி பாரம்பரிய தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் சிறு, குறு தொழில்கள், பெருநிறுவனங்களுக்குத் தேவையான பொருள்களையும், அதை உருவாக்கும் திறமைகளை வளர்ப்பதற்கான வாய்ப்பையும், முதலீடுகளையும் வழங்கி வேலைவாய்ப்பை உறுதி செய்து, கிராமத் தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும். உள்நாட்டுத் தேவைக்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் தகுதியான வகையில் பொருள்களை உருவாக்கும் வாய்ப்புகளை கிராமப்புறத்தில் தோற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை உணவுப்பொருள்களை விளைவித்து அதன் அங்காடிகளை கிராமம் தோறும் உருவாக்க இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஊக்கம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்து வார்டுகளிலும் 5 மழை நீர் சேமிப்புக் கிணறுகளையும், ஒவ்வொரு வீதிகளிலும் 2 மழை நீர் சேமிப்பு கிணறுகளையும் உருவாக்க வேண்டும். பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் கார்ப்பரேஷனில் உள்ள சாக்கடைகள் நீர்நிலைகளுக்குள் நுழைவதற்கு முன், அவற்றைச் சுத்தம் செய்ய வடிகால்களின் இறுதி பகுதியில் இயற்கை மணல் வடிகட்டியைப் பயன்படுத்தும் வழிகளை உருவாக்க வேண்டும். இப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதின் மூலம்தான் நாட்டின் அடிப்படைப் பொருளாதாரம் பலப்படும். அதே நேரத்தில் கிராமப்புறத்திலிருந்து நகப்புறத்திற்கு இடம்பெயரும் நிலை குறையும். நகர்ப்புறத்தின் அழுத்தம் குறையும்.

எனவே இன்றைய நிலையில் நாடு சுயபரிசோதனை செய்யும் நிலையில் இருக்கிறது. இந்தச் சூழலில் நாட்டின் மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு சேர்ந்து உழைத்து வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வழியில்லாமல் போய்விடுமோ என்று பயப்படும் நிலைக்கு இன்றைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. வளர்ந்த நாடுகள், தங்களது நாட்டை எந்த வழிகளில் எல்லாம் முன்னேற்றி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு நாமும் முயற்சிப்பது நல்லது.

இன்றைக்கு ஜனநாயகம் பரவலாக்கப்படவில்லை என்றால், மேல்மட்டத்தில் நடைபெற்ற அரசுத் துறை ஊழல்கள், வியாபாரத் துறை ஊழல்கள் உள்ள அவலநிலை மாற்றப்படாவிட்டால், அனைத்து வேறுபாடுகளையும் தன்னகத்தே கொண்டு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா என்ற ஒரு பெரும் தேசம் மீண்டெழுவது கடினமாக இருக்கும். இதையும் தாண்டி சிந்திக்க வேண்டிய தலைமை சிந்திக்குமா, வேறு எந்த கொள்கை மாற்றம் இந்த மந்தமான பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்து உச்சம் தொடவைக்கும்? தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT