அத்தியாயம் - 19

எதையும் அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டால் அது உணவாக இருந்தாலும் நஞ்சாக மாறும். அதை அளவோடு உபயோகப்படுத்துவதில்தான் நமது அனுபவமும், அறிவாற்றாலும் அடங்கி இருக்கிறது.
அத்தியாயம் - 19

பசிப்பிணி போக்கும் அறிவாற்றல்!

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின். (குறள் 225)

வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக்கொள்வதே. அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துதான் வலிமையாய் அமையும்.

பசியும், உணவுப் பாதுகாப்பு பற்றாக்குறையும் இந்த உலகத்தில் மீண்டும் மிகப்பெரிய பிரச்னையாக மாறும் என்றும், இதை எதிர்கொள்ள 2030-க்குள் நீடித்த நிலைத்த விவசாய உற்பத்தியை உலகம் முழுவதும் உருவாக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் போட்டு செயல்பாட்டு வரைவை உருவாக்கியிருக்கிறது.

இன்றைய மக்கள் தொகை 7.7 பில்லியனில் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) இருந்து 2050-இல் 9 பில்லியனாக உயரும்போது, உலகத்திற்கு உணவளிக்கும் தேசங்களுக்கு தினந்தோறும் அழுத்தம் அதிகமாகும். இந்த பட்டியலில் சீனாவும், இந்தியாவும்தான் முதலிடத்தில் இருக்கின்றன. இன்றைக்குச் சீனாவும் இந்தியாவும் உணவுப் பாதுகாப்பில், அதாவது தனது மக்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே உற்பத்தி செய்வதில் தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு நாடுகளால் உலகத்திற்கு உணவளிக்க இயலுமா, அதையும் ஆரோக்கியமான உணவைக் கொடுக்க இயலுமா என்பதுதான் இன்றைக்கு உள்ள மிகப்பெரிய கேள்விக்குறி.

ஏன் இந்த கேள்வி? இந்த உலகம் கொடுமையான பஞ்சங்களைச் சந்தித்தது. வரலாறு காணாத வறட்சியைச் சந்தித்தது. உலகம் பட்டினிச் சாவுகளைச் சந்தித்தது. உணவுப் பற்றாக்குறை அதிகரித்தது. 17-ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தில் முதல் விவசாயப் பொருளாதாரமாக இருந்த இந்தியா, 18, 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்தின் கொள்ளையின் விளைவாகவும், வறட்சியாலும் தொடர்ந்து பஞ்சங்களைச் சந்தித்தது. அதன் விளைவாக 6 கோடி மக்கள் சாவைச் சந்தித்தார்கள். 1876-78-இல் இந்தியாவின் மகா பஞ்சம், 1943-இல் பெங்கால் பஞ்சம், 1966-இல் பிகார் பஞ்சம், 1970-73-இல் மகாராஷ்டிராவில் பஞ்சம். இதற்கு பலியானவர்கள் விவசாயக்கூலிகளும், கைவினைத் தொழிலாளர்களும்தான் அதிகம். 20-ஆம் நூற்றாண்டில் ரயில்பாதைகளின் வரவால், உணவின்றி வாடும் இடங்களுக்கு விவசாயப் பொருள்களைச் சீக்கிரமாகக் கொண்டுசெல்லும் நிலை ஏற்பட்டதன் காரணமாக மிகப்பெரிய பஞ்சத்தின் தன்மை குறைந்தது. இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் உலகத்தில் சத்து குறைவான மக்களில் கால்வாசி மக்கள் இந்தியாவில் வசிக்கும் நிலை ஏற்பட்டது.

இப்படிப்பட்ட பஞ்சங்களால் அமெரிக்காவில் இருந்து கோதுமை கப்பல் வந்தால்தான் இந்தியாவில் உணவு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. 1940-களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை தொழில்நுட்பங்கள் வேளாண்மை உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும் அதனால் நிகழ்ந்த சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்களும் பசுமைப் புரட்சி (Green Revolution) எனப்படுகிறது. இந்தியா போன்ற பல மூன்றாம் நிலை நாடுகள் பட்டினிச் சாவை எதிர்நோக்கிய அன்றைய காலகட்டத்தில் பசுமைப் புரட்சி முன்னிறுத்திய பயிர்ச்செய்கை முறைகள் பலன் தந்தன. பசுமைப்புரட்சியானது ‘உயர்-மகசூல் வகைகளை’ உருவாக்கியதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க பழமையான கலப்பின முறையைப் பயன்படுத்துவதைப் பிரபலப்படுத்தியது. அது பாசனமுறைகளில் நவீனத்தைப் புகுத்தியது. டிராக்டர்கள் அறிமுகப்படுத்தியது. பூச்சிக்கொல்லிகளும், ரசாயன உரங்களும் அதிகஅளவில் பயன்படுத்தபட்டன.

இந்த புரட்சி அமெரிக்காவின் Rockfeller Foudation, Ford Foundation ஆகியவற்றின் உதவியுடன் தொடங்கியது. விரைவில் அமெரிக்க அரசு, இந்திய அரசு, மெக்சிக்கோ அரசு போன்ற பல்வேறு நாடுகள் பசுமைப் புரட்சியை தமது நாடுகளில் நடைமுறைப்படுத்தின. நார்மன் போர்லாக் (Norman Borlaug) தான் உலக பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படுகிறார். அவர்தான் இந்தியாவின் பசுமைப்புரட்சிக்கு 1963-இல் அடித்தளம் அமைத்தவர். நார்மன் போர்லாக் அவர்களின் ஆலோசனைப்படி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில், மத்திய விவசாய அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் இந்தியாவில் பசுமைப் புரட்சி முன்னெடுக்கப்பட்டு, இந்தியா அரிசி, கோதுமை மற்றும் நவ தானிய உற்பத்தியில் 20 ஆண்டுகளுக்கு முன்பே தன்னிறைவு அடைந்துவிட்டது. 2019-இல் இந்தியாவின் உணவு உற்பத்தி 281 மில்லியன் டன். (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்)

டாக்டர் நார்மன் போர்லாக் அவர்களுக்கு, 11-வது குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் 15 மார்ச் 200 -இல் முதல் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் விருதை வழங்கி அவரைக் கவுரவித்தார். அந்த விழாவில் டாக்டர் நார்மன் போர்லாக் அவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அப்போது நடந்த உரையாடலில் டாக்டர் நார்மன் போர்லாக்கிடம் நான் கேட்டேன்: ‘1950-களில் உருவாக்கப்பட்ட ரசாயன உரங்கள், எண்ணெய்யையும், எரிவாயுவையும் வைத்து உருவாக்கப்படும் அம்மோனியா, பூமியில் இருந்து தோண்டிஎடுக்கப்பட்ட பொட்டாசியம் போன்ற தாதுக்கள், அதிக ரசாயன உரங்களின் உபயோகத்தால் வீணாகும் நிலத்தின் தன்மை, மாசுபடும் நீர்நிலைகள், மற்றும் அழியும் உயிர் சுற்றுச்சூழல், மழை வெள்ளத்தால் நிலத்தில் இருந்து கரையும் ரசாயன உரங்களின் கழிவுகள் கடலில் சென்று கலப்பதால் விளையும் சீரழிவுகள், அளவிற்கு அதிகமாக உபயோகப்படுத்தப்படும் நிலத்தடி நீர், நீர் சேமிப்பு மேலாண்மையில் தோல்வி இப்படி பல்வேறு காரணிகள் இன்றைக்கு இந்தியாவை வாட்டுகிறதே.. அதன் விளைவாக உணவில் ரசாயனமும், பூச்சிக்கொல்லி மருந்தும் கலந்துவிட்டதே, அதனால் ஆரோக்கியமற்ற உணவை உண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டதே.. இது பசுமைப் புரட்சியின் தோல்வியல்லவா, அதற்கு பதிலாக (Organic Farming Practice) இயற்கை வேளாண்மையை ஏன் நீங்கள் செய்திருக்கக் கூடாது?’’

‘‘எப்படிபட்ட மாமனிதர், உலகத்தில் தனது அறிவாற்றலால் உணவுப் பஞ்சத்தைப் போக்கியவரை, பசுமைப் புரட்சிக்காக நோபல் பரிசு பெற்றவரிடம் இப்படி நீ கேட்கலாமா?’’ என்று டாக்டர் அப்துல் கலாம் என்னைப் பார்த்து, ‘Funny Guy’ என்று செல்லமாகக் கடிந்துகொண்டார். அப்படி அவர் சொல்கிறார் என்றால் நன்றாக கேள் என்று அர்த்தம். ஆனால் டாக்டர் நார்மன் போர்லாக், ‘‘கேட்கட்டும், கேட்கட்டும்’’ என்று சொல்லிவிட்டு சொன்னார்.

‘‘எதையும் அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டால் அது உணவாக இருந்தாலும் நஞ்சாக மாறும். அதை அளவோடு உபயோகப்படுத்துவதில்தான் நமது அனுபவமும், அறிவாற்றாலும் அடங்கி இருக்கிறது. அது மட்டுமல்ல, 1960-களில் பல்வேறு கொடிய பஞ்சங்களை இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தான் போன்ற பல்வேறு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் அனுபவித்தது, பல கோடி மக்கள் உயிர் பலியானார்கள். அந்த சூழலில், மக்கள் தொகை பெருக்கம் ஒரு பக்கம், பஞ்சம் ஒரு பக்கம். இந்த இரண்டும் இந்த உலகத்தை வதைத்த வேளையில், அதாவது 6.5 பில்லியன் (650 கோடி) மக்களுக்கு உணவளிக்கும் மிகப்பெரிய கடமை எங்கள் முன் இருந்தது. பயிர்கள் நைட்ரஜன் இல்லாமல் வளராது; 6.5 பில்லியன் மக்களுக்கு உணவு உற்பத்தி செய்ய வேண்டும் என்றால், 87 மில்லியன் மெட்ரிக் டன் ரசாயன நைட்ரஜன் உரங்கள் இன்றைக்கு உபயோகிக்கிறோம். இதையே இயற்கையான உரங்களில் இருந்து நைட்ரஜனை உருவாக்க வேண்டும் என்றால், அதில் இருந்து 2 சதவிகிதம்தான் கிடைக்கும். 1 டன் நைட்ரஜன் உரம் உருவாக்க 50 டன் இயற்கை உரம் வேண்டும். அப்படி என்றால் இந்த உலகத்திற்கு உணவை உருவாக்க 4.5 பில்லியன் டன் இயற்கை உரம் வேண்டும்.

அவ்வளவு இயற்கை உரத்தை உருவாக்க கால்நடைகள் வேண்டும், அதாவது 600 முதல் 700 கோடி கால்நடைகள் வேண்டும். அப்போது 150 கோடி கால்நடைகள்தான் உலகில் இருந்தது. 700 கோடி கால்நடைகளை உருவாக்கி அதற்கு கால்நடை தீவனங்களை உருவாக்கும் நிலை ஏற்பட்டிருந்தால் மனிதகுலத்திற்கு தேவையான பயிர்களை கால்நடைகளுக்குக் கொடுத்திருக்க வேண்டும், இல்லையென்றால் காடுகளை அழித்து அதை விவசாயத்திற்கு மாற்றி அந்த 700 கோடி கால்நடைகளுக்கு தீவனம் முதலில் போட்டிருந்தால், நைட்ரஜன் உரத்தை ரசாயனத்தால் உருவாக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. மனித குலம் உணவு பஞ்சத்தால் செத்து மடிந்துகொண்டிருக்கும்போது ரசாயனத்தின் மூலம் உரத்தை உருவாக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தித்தான் ஆக வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் இன்றைக்கு, பயோ டெக்னாலஜி ஆராய்ச்சி மூலம் நாம் இதன் ரசாயன உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தை குறைக்கலாம் இல்லை, முற்றிலும் நாம் அவற்றைத் தவிர்க்கலாம். இன்றைய உணவுத் தேவை அதிகரிக்கும் வேளையில் நாம் மரபணு மாற்றி பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டும்’’ என்றார்.

‘‘மரபணு மாற்றத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்களே’’ என்று நான் கேட்டேன். அவர் சொன்னார். ‘‘அது பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனிகளின் சந்தை மாபியாக்களின் வேலை’’ என்றார். இந்த மனித இனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தாங்கள் உருவாக்கும் விவசாயப் பொருள்களிலே, எந்த விதை நல்ல விதை, எந்த விதை சொத்தை விதை என்று பிரித்தெடுத்து, நல்ல விதைகளை அதிகமாகப் பயிரிடுவதின் மூலம் அந்த விதைகள் செழித்து வளர்கின்றன. இதுவே ஒரு மரபணு மாற்றத்தின் தொடக்க பரிணாமம்தான். இதை நம் முன்னோர்கள் செய்தார்கள். அது பல்வேறு பரிணாமங்களைக் கடந்து குறுகியகாலப் பயிராகவோ, நீண்டகாலப் பயிராகவோ, குறிப்பிட்ட சத்துகளைக் கொண்ட பயிராகவோ மாறுகிறது. இந்த மாற்றம் நிகழ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகின்றன. ஆனால் உயரி தொழில்நுட்ப ஆராய்ச்சியின் விளாவாக DNA மரபணு ஆராய்சியின் மூலம் புது, புது ரகங்களை, பயிர்களை குறைந்த காலத்தில், மகசூல் அதிகரிக்கும்படியும், வறட்சியையும், நீர்ப்பிடிப்பையும் தாங்கி வளரக்கூடிய வகையிலும், பூச்சிகள் வந்து பயிர்களை அழிக்க இயலாத வகையிலும், நாம் மரபணு மாற்றுப்பயிர்களை உருவாக்கலாம். அது இன்றைய அறிவியல் ஆராய்ச்சியின் வளர்ச்சி. அதை இந்தியாவில் செய்யுங்கள். மற்ற நாட்டு மரபணுப் பயிர்களை உங்கள் நாட்டில் அனுமதியாதீர்கள். உங்கள் நாட்டிற்கேற்ற பயிர்களை, உங்கள் வேளாண்மை பல்கலைக் கழகங்களில் உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மூலம் மரபணு மாற்றி உருவாக்கினால் எவ்வித தீங்கும் இல்லை. அது மட்டும் இல்லை. பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருந்து நம் பயிர்களைப் பாதுகாக்கலாம். பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம். அதனால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை’’ என்று சொன்னார்.

‘‘இன்றைக்கு உலகில் வற்றிப்போகும் தாதுக்கள், ரசாயனங்கள் மூலம் செய்யும் வேளாண்மை, விவசாயம் ஒரு காலகட்டத்தில் தாதுக்கள் பற்றாக்குறை, தண்ணீர்ப் பற்றாக்குறை, எண்ணெய், எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டால் விவசாயம் எப்படி நீடித்து நிலைக்கும்? இவை மறையும்போது, இவை சார்ந்து இயங்கும் விவசாயமும் மறையும். அப்போது உணவு பஞ்சம்தானே வரும்? எனவேதான் இதற்கான மாற்று சிந்தனைதான் நமது இயற்கை வளங்களை அழிக்காத விவசாயம், வளங்களை மறு சுழற்சி செய்து மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தகூடிய வகையில் நீடித்த, நிலைத்த விவசாயம் செய்ய வேண்டிய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் அவசியமானதாகிறது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் அவர்கள் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க வேண்டும், நீடித்த நிலைத்த விவசாய ஆராய்சிக்கு வித்திட்டு, இரண்டாம் பசுமைப்புரட்சியை டாக்டர் கலாம் முன்னெடுக்க வேண்டும்’’ என்றார். உலகத்தின் பசுமைப்புரட்சியை உருவாக்கிய டாக்டர் நார்மன் போர்லாக்கிடம் உரையாடியவுடன் டாக்டர் கலாம் சொன்னார்: ‘‘இவன் ஒரு Good funny Guy’’ என்று. சிரித்துக்கொண்டே என்னை தோளில் தட்டி ஊக்கப்படுத்தினார் டாக்டர் நார்மன் போர்லாக்.

உலகின் நிலைத்த வளங்களை உபயோகித்து நீடித்த விவசாயம் (Sustainable Agriculture Initiative) செய்ய வேண்டியதின் அவசியத்தை டாக்டர் கலாம் எப்போது, எப்படி ஆரம்பித்தார், எப்படி ஆரம்பித்தார்? அறிவியல் வேளாண்மை, நீடித்த விவசாயம்... தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com