அத்தியாயம் - 18

தமிழ் இனம், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் நம்மை தனித்துவப்படுத்துவதற்குத்தானே ஒழிய, நம்மை தனிமைப்படுத்துவதற்காக அல்ல. அறிவு ஒன்றுதான் நம்மை மகானாக்கும்.
அத்தியாயம் - 18

நீ எங்கே? உலகம் எங்கே?

உணர்! தகவமை!

இன்றைக்கு நமது இளைஞர்கள் வீடியோக்கள், சினிமா, டிவி நிகழ்ச்சிகளை, குறும்படங்களை, இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கும் சீரியல் தொடர்களை இணையதளத்தின் யூ டியூப், நெட்ஃபிலிக்ஸ் மூலம் விரும்பிப் பார்க்கிறார்கள்.

இந்தியாவில் ஒரு நெட்ஃபிலிக்ஸ் உபயோகிப்பாளர் சராசரியாக 60 சினிமாப் படங்களை ஓர் ஆண்டில் (2017) மட்டும் பார்த்திருக்கிறார். உலகத்தில் உள்ள மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் உள்ள நெட்ஃபிலிக்ஸ் வாடிக்கையாளர்தான் அளவுக்கு அதிகமாக பொழுது போக்குவதில் வல்லவர்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

2016-17-இல் இந்த உலகத்தின் அனைத்து நாடுகளும் சேர்ந்து 4 நாட்களில் பார்த்த வீடியோக்களை, இந்தியா நெட்ஃபிலிக்ஸ் மூலமாக 3 நாட்களில் பார்த்திருக்கிறது. அப்படி என்றால் 60 சதவிகிதம் மனித உழைப்பு வெட்டி களிப்பில் வீணாகிறது என்பது நிரூபிக்கப்படுகிறது. இணையதளத்தில் சினிமா பார்ப்பவர்களில் மெக்ஸிக்கோவில் 89 சதவிகிதம் பேரும் அடுத்து இரண்டாவதாக இந்தியாவில் 88 சதவிகிதம் பேரும் இந்த நெட்பிலிக்ஸில் அளவிற்கு அதிகமாகப் பார்க்கும் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று ஆகஸ்டு - செப்டம்பர் 2017-இல் எடுக்கப்பட்ட சர்வே சொல்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா கம்பெனி நெட்ஃபிலிக்ஸ் 1997-இல் தொடங்கப்பட்டது. ஏப்ரல் 2019-இல் பணம் கொடுத்து பார்க்கும் அவர்களது உலக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 148 மில்லியனாக உயர்ந்திருக்கிறது. இலவச வாடிக்கையாளர்களையும் சேர்த்தால் 154 மில்லியனாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 60 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கிறது. 2016-இல் இந்தியாவில் நுழைந்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்கு 2018-இல் மட்டும் நமது இந்திய மக்கள் கேளிக்கைக்காக ரூ.100 கோடி வருமானத்தை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு ஈட்டித் தந்திருக்கிறார்கள்.

சீனா, சிரியா, வட கொரியா போன்ற நாடுகள் இந்த நிறுவனத்தை அனுமதிக்கவில்லை. அவை தவிர, அனைத்து நாடுகளிலும் தடம் பதித்து இருக்கிறது. நெட்ஃபிலிக்ஸ் என்ற ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் 2018-இல் USD 15.80 பில்லியன் (ரூ.1,10,500 கோடி), சொத்து மதிப்பு USD 25.97 பில்லியன் (ரூ.1,81,818 கோடி). ஒரு அமெரிக்க கம்பெனியின் வருமானம் கிட்டதட்ட ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரு வருட பட்ஜெட் தொகை. அதாவது, அறிவார்ந்து சிந்தித்து, ஆராய்ச்சி செய்து உலகத்தின் தேவையைப் பூர்த்தி செய்தால், ஒரு கம்பெனியால் ஒரு மாநிலத்தின் வரி வருவாயைவிட அதிகம் வருமானம் பார்க்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒரு நிறுவனம்கூட இந்த அளவு வருமானத்தை உருவாக்கவில்லை.

நாம் விரும்பிப் பார்க்கும் வீடியோக்களை, படங்களை யூ டியூப், நெட்ஃபிலிக்ஸ் போன்ற இணையதள வீடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இ-காமர்ஸ் இணையதளங்கள், கூகுள் இணையதளம் மற்றும் இதுபோன்ற இணையதளங்கள் அது தொடர்பான மற்ற வீடியோக்களையும், மற்றும் தகவல்களையும் தேடிக் கொண்டுவந்து தொடர்ந்து உங்கள் முன்னால் மீண்டும், மீண்டும் பாருங்கள் என்று கண் முன்பாக காட்சிப்படுத்தும். இதை செயல்படுத்திய தொழில்நுட்பம்தான் நுண்ணறிதல் பொறி கற்றல் (Machine Learning - ML). இதன் மூலமாக வடிவமைக்கப்பட்டு, நமது உணர்வின் தேவை அறிந்து, நமது நுகர்வின் தேவையறிந்து அது எங்கெல்லாம் இருக்கிறதோ, அதை நம் கண் முன் கொண்டுவந்து நமது உணர்வுகளுக்குத் தீனி போட்டு, அதன்மூலம் நம் வாழ்க்கையைச் சொற்பத்தில் சுலபமாக்கி, கேளிக்கையை அதிகமாக ஆக்கி அதன்மூலம் வர்த்தகத்தைப் பெருக்குகிறது. நாம் மேலே பார்த்த நெட்ஃபிலிக்ஸ் இணையதளம் மட்டும் நுண்ணறிதல் பொறி கற்றல் மூலம் USD 1 பில்லியனை (ரூ.7000 கோடி) சேமித்து தனது வர்த்தகத்தைப் பெருக்கியிருக்கிறது. ஆனால் இந்தியா, நெட்பிலிக்ஸில் படம் பார்த்து 2018-இல் ரூ.100 கோடியைக் கொடுத்திருக்கிறது.

ஆனால் இந்தியாவில், ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஐ.ஓ.எஸ். அலைபேசிகள் மூலமாக இணையதளத்தை உபயோகிக்கும் பெரும்பாலானோர், வீடியோக்களை நுகர்வோராக, பொருள்களை வாங்குவோராக, சேவைகளைப் பயன்படுத்துவோராக இருக்கிறோம். ஆனால் மின்னணு வர்த்தகத்தைவிட, பயனுள்ள சேவைகளைப் பயன்படுத்துவதைவிட அதிதீவிரமாக நமது எண்ணங்களுக்கு ஏற்ப வீடியோக்களைப் பார்த்து நமது பயனுள்ள நேரத்தில் 40-50 சதவிகிதம் பொன்னான நேரத்தை வீணடிக்கிறோம்.

இந்தியாவில் நவீன அலைபேசிகள் (Smart Phone) உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 2015-இல் 19.9 கோடியாக இருந்தது, 2019-இல் 37.8 கோடியாக உயர்ந்திருக்கிறது, இது 2022-இல் 44 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு மாதமும் டேட்டா சார்ஜ் குறைந்தது ரூ.300 கட்டுகிறோம் என்று வைத்துக்கொண்டால்கூட, 2015-இல் நாம் அலைபேசியை உபயோகிக்க, வீடியோக்களைப் பார்க்க செலவழித்த தொகை ரூ.72,000 கோடி. 2018-இல் நாம் செலவழித்த தொகை ரூ.1,36,440 கோடி. அதாவது, ஒரு மாநிலத்தின் பட்ஜெட் தொகை கேளிக்கைக்காகவும், சில ஆன்லைன் வர்த்தகத்திற்காகவும் செலவழிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இதற்கு மேல் 10 சதவிகிதம் அதிகமாகச் செலவழிக்கிறார்கள் என்று வேண்டுமானால் நம்மை நாம் சமாதானப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் நவீன அலைபேசி விற்பதில் ஆண்டுதோறும் சராசரியாக ரூ.30,000 கோடியை இந்த நிறுவனங்கள் வர்த்தகத்தின் மூலம் வருமானமாகப் பெறுகின்றன. இந்தியா ஐ.டி.ஐ. (ITI - INDIAN TELEPHONE INDUSTRY LTD) என்ற தொலைபேசி நிறுவனம், ஆராய்ச்சி, மேம்பாடு, போட்டிக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளாததாலும், சரியான தலைமை இல்லாததாலும், இன்றைக்கு (2018-19) ரூ.2051 கோடி வருமானத்தில் சுருங்கிப் போய்விட்டது.

1990-களில் 1970 காலகட்டத்தை சேர்ந்த பொறியியல் பாடத்திட்டத்தைப் படித்து வெறும் இன்ஜினீயர்களை உருவாக்கிய இந்தியா, அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் Y2K பிரச்னைக்கும், DOT NET, JAVA, GRID Computing, CLOUD Computing போன்ற துறைகளுக்கும் ஆட்களை தயார் செய்து அனுப்பினோம். அமெரிக்கா நமது மனித வளத்தை, கணினி புரோகிராம் எழுத பயன்படுத்திக்கொண்டது. ஆனால் 1990-களில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் வித்தியாசமாக சிந்தித்த அமெரிக்க பல்கலைக் கழகங்கள், அதற்கு உதவிய முதலீட்டாளர்கள், அதற்கு ஏற்ப தொழில் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றிய அமெரிக்க அரசு, வர்த்தகத்தை நிலைப்படுத்திய சட்டங்கள், உலகளாவிய ஒப்பந்தங்களை உருவாக்கிய அமெரிக்க அரசுகள், எத்தனை ஜனாதிபதிகள், கட்சிகள் மாறி, மாறி ஆட்சியில் அமர்ந்தாலும், தனது நாட்டின் ஒவ்வொரு அமெரிக்க நிறுவனங்களும் ஓர் இந்திய மாநில பட்ஜெட் அளவில் வர்த்தகம் செய்யும் நிலைமைக்கு உருவாக்க ஒத்துழைத்து இருக்கிறது. இன்றைக்கு இன்டஸ்ரி 2.0 முதல் 5.0 வரை பயன்படுத்தக்கூடிய தொழில் நுட்பங்களை உருவாக்கி ஆட்டோனாமிக்ஸ் (Autonomics) மூலம் தொழிற்சாலைகள், கம்பெனிகள் உற்பத்தி தவறுகளை குறைத்து, உற்பத்தித் திறனையும், ஆற்றல் திறனையும் அதிகரிக்கும் அறிவியியல் தொழில்நுட்பங்கள் இதற்கு அடிப்படைக் காரணம்.

பல்கலைக் கழகங்களும், தொழில் நிறுவனங்களும் இணைந்து ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளில் இந்த உலகம் எதை நோக்கிச் செல்லும், அதற்கு நம்மை எப்படி தயார் செய்துகொள்ள வேண்டும் என்று உழைப்பதால்தான் இது நடக்கிறது. ஆனால் 2019-இல் மத்திய, மாநில அரசு பல்கலைக் கழகங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாடத் திட்டத்தில் அறிவியல், பொறியியல் பாடம் நடத்தினால், ஆராய்ச்சியையும், புது கண்டுபிடிப்புகளையும் ஒதுக்கிவைத்தால், பல்கலைக் கழகம் நடத்துவதற்கே கல்விக் கட்டணத்தை உயர்த்தினால்தான் முடியும் என்ற நிலையில் இருந்தால், நாம் நமது மாணவர்களின் தரத்தை எப்படி உலகத் தரத்திற்கு உயர்த்த முடியும்? சிந்திக்க வைக்க முடியும்? ஆராய்ச்சி செய்ய ஊக்குவிக்க முடியும்? அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை நாம் எப்போது உருவாக்குவது? ஆராய்ச்சிக்குத் தேவையான குறைந்தபட்சம் பொருளாதாரத்தில் 6 சதவிகிதம் ஒதுக்குவது என்பது கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் கனவாகிவிட்டது. அப்புறம் எப்படி அடுத்த 30 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையோடு ஆராய்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க முடியும்?

1990-களில் அமெரிக்கா அடுத்த 30 ஆண்டுகளில் வளர்ச்சியைப் பற்றி சிந்தித்து, பொறி கற்றல் (Machine Learning - ML) என்ற துறையை வளர்ந்த நாடுகளில் ஆராய்ச்சியில் அறிமுகப்படுத்தியது. இன்றைக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் நிலை எங்கு இருக்கிறது என்று பார்த்தால், 2020-ஆம் ஆண்டில் தொழிற்சாலைகளில் மேற்பார்வை மற்றும் வழிநடத்துதலில் (Monitoring and Guiding) ML-ன் பங்கு 20 சதவிகிதமாக மாறும். 2020-இல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறை சார்ந்த தொழில்நுட்ப சந்தை USD 70 பில்லியன் (ரூ.49,000 கோடி) ஆக உருவாகும் என்று மெரில் லிஞ்ச் வங்கி கணித்திருக்கிறது.

2019-இல் இருந்து 2025-க்குள் ஆட்டோமொபைல் துறையில் நுண்ணறிதல், பொறி, கற்றல் (Machine Learning - ML) 48 சதவிகிதம் நுழைந்திருக்கும். செயற்கை நுண்ணறிவு சில்லறை வர்த்தகத்தில் முழுமையாக நுழைந்தபின். 34 சதவிகிதம் மக்கள் ஆன்லைனில்தான் வர்த்தகம் செய்வார்கள். 2020-இல் வாடிக்கையாளர்களின் முகத்தையும், குரலையும் வைத்து அனைத்து உதவிகளையும் செய்யும் டிஜிட்டல் உதவியாளர்கள் உடனிருப்பார்கள், நேர்முக உதவியாளர்களின் தேவை குறைந்துவிடும். செயற்கை நுண்ணறிவுப் பொறியாளர்கள் இன்றைக்கு 3 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்ற நிலை மாறி பல லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த துறையில் தேவைப்படுவார்கள். 2020-இல் உலக வியாபாரத்தில் ஈடுபடுவோரில் 57 சதவிகிதம், தான் கேட்கும் முன் என்ன தேவை என்பதை வியாபாரம் உணர்ந்து பதிலளிக்க வேண்டும் என்று நிலை வரும். 2025-இல் செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர் துறை USD 60 பில்லியன் (ரூ.42,000 கோடி) ஆக உயரும்.

அடுத்த சந்தையின் போக்கு, வாடிக்கையாளரின் தனிப்பட்ட விருப்பத்தை அறிதல், அதை சந்தைப்படுத்துதல், அவரின் தேவையைப் பூர்த்தி செய்தல் என்ற துறை முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது. 41 சதவிகிதம் உபயோகிப்பாளர்கள் AI (Artificial Intelligence) மற்றும் ML (Machine Learning) தங்களது வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நினைக்கிறார்கள். அமெரிக்காவில் மருத்துவத் துறையில் 2026-இல் செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர் மூலமாக வருடம்தோறும் ஒட்டுமொத்த செலவில் USD 150 பில்லியன் (ரூ.10,50,000 கோடி) சேமிக்க முடியும். 2030-இல் AI (Artificial Intelligence) மற்றும் ML (Machine Learning) மூலமாக 30 சதவிகித வேலைவாய்ப்பு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கு நம் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் சாகிறார்கள். எச்.ஐ.வி. வைரஸ் கலந்த ரத்தம் ஏற்றப்படுகிறது. மின்சாரம் இல்லாததால் 3 நோயாளிகள் மரணம். மருந்து குடிப்பவர்களை உயிர்பிழைக்க வைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

இந்த உலகம், இரவும், பகலும் எதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறது தெரியுமா? 126 கோடி இந்திய மக்கள் என்ன உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எதைப் பயன்படுத்த வேண்டும், எதில் பயணம் செய்ய வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்பதற்காக. எனவே, நமக்கான தேவையை நிறைவேற்ற இந்த உலகம் அறிவார்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கிறது. தங்கள் உயர் கல்வியை, ஆராய்ச்சியை, தொழில் துறையை, உற்பத்தித் துறையை, விவசாயத் துறையை அறிவியல் தொழில்நுட்பத்தால் உருவாக்கி இந்தியாவை உலகத்தின் சந்தையாக்கி வைத்திருக்கிறது.

ஆனால் நாம் எங்கிருக்கிறோம்? நம்மை எங்கு வைத்திருக்கிறார்கள்? இன்னமும் சாதியாலும், மதத்தாலும், இனத்தாலும், மொழியாலும் அரசியல் பதவிகளுக்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கிறோம். நமது அரசியல் தலைவர்களுக்கு, எப்படி அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுப்பது என்று தொலைநோக்குப் பார்வை இல்லை. எனவே மாணவர்களே, இளைஞர்களே, பொதுமக்களே சிந்தியுங்கள்.

சாதி ஒருநாளும் நம்மைச் சாதனையாளன் ஆக்காது. மதம் நம்மை மனிதனாக்குவதற்குத்தானே ஒழிய, மதம் பிடித்து அலைவதற்காக அல்ல.

தமிழ் இனம், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் நம்மை தனித்துவப்படுத்துவதற்குத்தானே ஒழிய, நம்மை தனிமைப்படுத்துவதற்காக அல்ல. அறிவு ஒன்றுதான் நம்மை மகானாக்கும்.

அறிவார்ந்த சிந்திக்கும் தலைவர்களாக நீங்கள் மாறுங்கள். அப்படிப்பட்ட நல்ல தலைவர்களை அடையாளம் காணுங்கள். இங்கு எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். உன் வளர்ச்சிக்கான தடைகளாக எது இருந்தாலும் சாதி, மதம், இனம், மொழி, ஆணவ அரசியல், ஊழல் அனைத்தையும் தகர்த்து எறி. வளமான நாட்டை உன் அறிவால் உயர்த்த உன்னை உன் அறிவுத்திறத்தால் தகவமைத்துக்கொள். உங்கள் பார்வையை உயர்ந்த லட்சியத்தை நோக்கி திருப்புங்கள். சூரியனைப்போல் எரிவதற்கு, சூரியனைப்போல எரிய கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com