அத்தியாயம் - 23

எரிபொருளும் அதற்கான வரி விதிப்பும், விமான நிறுவனங்களை நஷ்டத்துக்கு இட்டுச் செல்வதற்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்பது கடந்த 21 ஆண்டுகால விமான நிறுவனங்களின் நஷ்டம் நிரூபித்திருக்கிறது.
அத்தியாயம் - 23

விவசாயம் செழித்தால் விமானம் பறக்கும்!

இந்தியா உள்நாட்டு விமானப் பயணத்தில் 1997-இல் பயணித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடி. 2008-இல் 4.4 கோடி. 2011-இல் 6.1 கோடி. 2018-இல் 13.9 கோடி பேர். விமானப் பயணத்தில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. ஆனால், பயணிக்க இந்திய விமானம் இருக்காது என்ற நிலை கூடிய சீக்கிரம் வரும். கடந்த 21 ஆண்டுகளாக இந்தியாவில் 12 விமானக் கம்பெனிகள் மூடப்பட்டிருக்கின்றன. இப்போது, சமீபமாக ஜெட் ஏர்வேஸ் மூடப்பட்டுவிட்டது. ஏர் இந்தியா இப்பவோ, பிறகோ என்று இழுத்துக்கொண்டு இருக்கிறது. இதுவரை ஏற்பட்ட இழப்பு ரூ.53,584 கோடி. ஒட்டுமொத்த கடன் மட்டும் ரூ.55,000 கோடி. இருக்கும் ஒரு சில இந்திய விமான நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டால், இனி இந்தியாவில் வெளிநாட்டு விமானங்கள்தான் பறக்கும்.

ரயில் என்றால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். விமானம் என்றால் பறந்துகொண்டே இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் விமான நிறுவனம் தொடங்கினால் மூடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆகிவிட்டது. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், உள்நாட்டு விமான எரிபொருளுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படுவது மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. இதைத் தாண்டி விமான நிலையக் கட்டமைப்பு, மேலாண்மை தொழில்நுட்பத்தில் இருக்கும் குறைபாடுகள், குழப்பங்களினால் ஏற்படும் விமான தாமதங்கள், அதனால் ஏற்படும் இழப்பீடுகள், பயணக் கட்டணத்தில் ஏற்படும் போட்டி, விமானப் பணியாளர்களுக்கு செய்யப்படும் அதீத செலவீனம், நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனங்களை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவது போன்றவற்றால், இதுவரை 13 விமான கம்பெனிகள் மூடப்பட்டிருக்கின்றன.

எரிபொருளும் அதற்கான வரி விதிப்பும், விமான நிறுவனங்களை நஷ்டத்துக்கு இட்டுச் செல்வதற்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்பது கடந்த 21 ஆண்டுகால விமான நிறுவனங்களின் நஷ்டம் நிரூபித்திருக்கிறது. எரிபொருள் மற்றும் அதற்கான வரி விதிப்பு இன்றைக்கு இரண்டு, நான்கு சக்கர வாகனங்களைப் பாதிக்கிறது. அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு சாதாரண மக்களை மட்டும் பாதிக்கவில்லை, விமானப் பயணத்தையும் பாதிக்கிறது. பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதி, அதனால் வரும் வரி வருவாயை மட்டுமே நம்பி நடக்கும் அரசுகளினால், நமது ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சியை நோக்கித்தான் செல்கிறதே தவிர, வளர்ச்சியை குறிப்பதாக அமையவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

2008-இல், முதன் முதலாக ஜெட் பெட்ரோலுடன் பயோ எரிபொருள் கலந்த முதல் விமானம் பறந்தது. அதில் இருந்து இதுவரை 1,50,000 விமானங்கள் பயோ எரிபொருள் கலவையை உபயோகித்து விண்ணில் பறந்துகொண்டிருக்கின்றன. உலகத்தில் 5 விமான நிலையங்களில் பயோ எரிபொருள் கிடைக்கிறது. 50 சதவிகிதம் விமான பயோ எரிபொருள் கலவை, பறக்கும் விமானங்களால் ஏற்படும் காற்று மாசுபடுதலை 50-70% குறைக்கிறது என்று நாசா நிர்ணயித்திருக்கிறது.

2019-இல் வெர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம், ஸ்டீல் மில்லில் இருந்து வரும் உபயோகப்படுத்தப்பட்ட வாயுவில் இருந்து பயோ எரிபொருளை தொடர்ந்து விமானத்தில் உபயோகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஏர்வேஸ், வீட்டுக் கழிவுகளில் இருந்து கிடைக்கும் பயோ எரிபொருளை உபயோகப்படுத்த உழைத்துக்கொண்டிருக்கிறது. யுனெட்டெட் ஏர்லைன்ஸ், 900 மில்லியன் யு.எஸ். கேலன் பயோ எரிபொருளை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உபயோகப்படுத்த, 2015-இல் 30 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் 5 பயோ எரிபொருள் ஃபேக்டரிகளை உருவாக்கியிருக்கிறது. குவான்டாஸ் ஏர்வேஸ், ஜெட்ரோபாவில் இருந்து கிடைக்கும் எரிபொருள் மூலம் ஜெட்புளு ஏர்வேஸ்க்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு உபயோகப்படுத்தி எரிபொருள் செலவைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. அது மட்டுமல்ல, 2020-இல் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் - ஆஸ்திரேலியா இடையே பறக்கும் விமானங்களில் பயோ எரிபொருளை உபயோகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, குவான்டாஸ் ஏர்வேஸ் ரோட்டர்டாம், பூர்வூ போன்ற அதன் பயோ எரிபொருள் உற்பத்தி கேந்திரத்தில் பின்லாந்து நாட்டின் நெஸ்லே மூலம் 2020-இல் 3 மில்லியன் டன் உற்பத்தி இலக்கை நிர்ணயித்திருக்கிறது. அதன் சிங்கப்பூர் தளத்தில் 1.4 பில்லியன் பவுண்ட்ஸ் முதலீட்டில் 4.5 மில்லியன் டன் உற்பத்தி இலக்கை 2022-இல் உருவாக்க தீர்மானித்திருக்கிறது. மாற்று பயோ எரிபொருளைப் பற்றி உலகம் சிந்தித்து 2008-க்கு பிறகு அதை தீவிரமாக விமான எரிபொருளாகக் கொண்டுவருகிறது.

ஆனால் 15 ஆகஸ்டு 2005-இல், டாக்டர் அப்துல் கலாம், இந்தியா எரிசக்தி சுதந்திரத்தை பெற்ற நாடாக 2030-க்குள் மாற வேண்டும் என்ற கொள்கையை சுதந்திர தின உரையில் அறிவித்தார். அடுத்த ஒரு வருடத்திற்குள் எனக்கும், மேஜர் ஜெனரல் சுவாமிநாதன் அவர்களுக்கும் ஓர் இலக்கு நிர்ணயித்து நாம் பயோ எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தால்தான், பெட்ரோல், டீசல் இறக்குமதிக்கு ஆகும் செலவில் இருந்து நம்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். எனவே அதற்கான ஆராய்ச்சியிலும், கொள்கை வகுக்கும் திட்டத்திலும் இறங்குங்கள் என்ற இலக்கை நிர்ணயித்தார். பயோ எரிபொருள் ஆராய்ச்சியில் தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் டாக்டர் பரமாத்மா ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்து, அவரை டெல்லி ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து டாக்டர் அப்துல் கலாமைச் சந்திக்கவைத்தேன். அன்று முதல் ஓர் ஆண்டு காலம் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்து இதற்கான பயோ எரிபொருள் கொள்கையை உருவாக்க உழைத்தோம். அதைப்பற்றிய மாநாட்டை எங்கு நடத்தலாம் என்று திட்டமிட்டோம்.

நாட்டில் உள்ள பயோ எரிபொருள் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும், பேராசிரியர்களையும், விவசாயிகளையும், மத்திய, மாநில அரசு அதிகாரிகளையும் அழைத்து ஹைதராபாத் ராஷ்டிரபதி நிலையத்தில் பேராசிரியர் டாக்டர் பரமாத்மா அவர்கள் உதவியோடு மாநாட்டை 9 ஜூன் 2006-இல் நடத்தினோம். அதன் பலனாக, பயோ எரிபொருள் கொள்கை - 2030 வகுக்கப்பட்டது. இந்தியாவில் 60 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலம் இருக்கிறது. அதில் 30 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலத்தில் எரிசக்தி தரும் தாவரங்களான ஜெட்ரோபா போன்ற தாவரங்களை வளர்க்கத் திட்டம் தீட்டி செயல்பட வேண்டும். அதில் குறைந்தது, ஒரு ஹெக்டேரில் 2 டன் பயோ டீசல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும், பயோ டீசல் உருவாக்கும் கம்பெனிகளை தொழில் முனைவோர் தொடங்க வங்கி கடன்களை வங்கிகள் கொடுக்க வேண்டும், உற்பத்தியாகும் எண்ணெய்களை வாங்க மத்திய, மாநில அரசுகள் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

இதன்மூலம் வருடத்துக்கு 60 மில்லியன் டன் பயோ டீஸல் எரிபொருளை 2030-க்குள் இந்தியா உற்பத்தி செய்யும் நிலையை எட்ட வேண்டிய தொலைநோக்குப் பார்வைத் திட்டத்தை டாக்டர் கலாம் வடிவமைத்துக் கொடுத்தார். அப்போது மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார், மத்திய விவசாயத் துறை செயலாளர் சுப்பிரமணியத்திடம் இந்த கொள்கையை பற்றிய அறிக்கையை அளித்தோம். இதன் அடிப்படையில் மத்திய விவசாய அமைச்சகமும், மாற்று எரிசக்தித் துறை அமைச்சகமும் சேர்ந்து ரூ.900 கோடி மதிப்பீட்டில் பயோ டீசல் ஆராய்ச்சி மற்றும் வளர்ப்புத் திட்டத்தை அறிவித்தார்கள். ஒரு பக்கம் ஆராய்ச்சி நடைபெற்றது. மானாவரி நிலத்தில் ஒரு ஹெக்டேருக்கு 1 டன்னும், தண்ணீர்ப் பாசனத்தில் ஒரு ஹெக்டேரில் 2 டன்னும், சொட்டு நீர்ப் பாசனத்தில் ஒரு ஹெக்டேரில் 4 டன்னும் உற்பத்தி செய்ய முடிந்தது.

தமிழக விவசாயப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில், பயோ டீஸல் 25 சதவிகிதம் எண்ணெய் எடுக்கும் வகையில், கலப்பின ஜெட்ரோபா விதைகள் பரீட்சார்த்த முயற்சி வெற்றிபெற்றது. குஜராத் ஆனந்த் விவசாயப் பல்கலைக் கழகத்தில் அனைத்து டிராக்டர்கள், தண்ணீர் பம்புகளை பயோ டீஸல் மூலம் இயக்கினார்கள். பயோ எரிபொருள் மூலம் இந்திய ரயில்வே துறை தஞ்சாவூர் முதல் நாகூர் பாதையில் 2 பயணிகள் ரயிலையும், திருச்சி முதல் லால்குடி, திண்டுக்கல், கரூர் பகுதியில் 6 ரயில்களையும் இயக்கினார்கள். சட்டீஸ்கார் முதல்வர் ரமன்சிங் இந்த திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். தனது வாகனத்தை 100% பயோ எரிபொருள் மட்டும் கொண்டு ஒட்டினார். அதை ஊக்குவித்தார். ஜார்க்கண்டில் இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. உத்திராஞ்சல். மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றில் இதைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள்.

உத்தரப் பிரதேசம் அலகாபாத்தில் டாக்டர் டி.என். திவாரி தலைமையில் இந்த திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்கள். 26-27 செப்டம்பர் 2008-இல் டாக்டர் கலாமுடன் நானும் அலகாபாத் சென்று 40 ஆண்டுகளாக தரிசாகக் கிடந்த 735 ஹெக்டேர் தரிசு நிலத்தில், பயிரிடப்பட்ட ஜெட்ரோபா பயிர்களை பார்வையிட்டோம். அதன்மூலம் ஒரு ஹெக்டேரில் ரூ.50,000 வருமானத்தை பெற்று, அதை 30,000 ஹெக்டேருக்கு விரிவுபடுத்தியிருந்தார்கள். அங்கு விளக்குகள், ஜெனரேட்டர்கள், டிராக்டர், ஜீப்புகள், லாரிகளுக்கு பயோ எரிபொருளை முழுமையாக உபயோகிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

இந்தியாவில் விவசாயிகள் பயோ எரிபொருள் தயாரிப்பில் ஈர்க்கப்பட்டு வெறும் தரிசு நிலத்தில் பயிரிட்டாலே ஜெட்ரோபா வந்துவிடும் என்று பயிரிட்டார்கள். உற்பத்தி அதிக அளவில் செய்யப்பட்டது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் பயோ டீசலுக்கான விலையை நிர்ணயிக்கவில்லை, பயோ டீசல் உற்பத்தி செய்ய தேவையான வங்கிக் கடன்கள் கொடுக்கப்படவில்லை. இதை வாகனத்தில் உபயோகிக்க தேவையான சட்டத்தை இயற்றவில்லை, தேவையான கொள்கைகளையும் அறிவிக்கவில்லை. அதனால் வெற்றிக் கதைகள் பல இருந்தும், அதிகமான விவசாயிகள் மானாவாரி நிலத்தில் அதிகம் பயிரிட்டு விளைச்சல் குறைந்து நஷ்டப்பட்டதால், மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு இல்லையாதலாலும் பயோ எரிபொருள் உற்பத்தி இந்தியாவில் தோல்வியடைந்தது.

உலகத்தில் யாரும் பயோ எரிபொருளை விமானத்தில் உபயோகப்படுத்தலாம் என்று சிந்திக்காதபோது, 2005-இல் சிந்தித்து அதை 2006-இல் கொள்கையாக அறிவித்தவர் டாக்டர் அப்துல் கலாம். 2008-இல்தான் முதன்முதலாக விமானத்தில் பயோ எரிபொருள் கலவை பெட்ரோலுடன் இணைத்து உபயோகப்படுத்தப்பட்டது. இன்றைக்கு உலகம் பயோ எரிபொருளை அனைத்து வாகனங்களுக்கும் பயன்படுத்தவும், விமானத்தில் பயன்படுத்தவும் ஆரம்பித்து எரிபொருள் செலவை பெரும்பாலும் குறைத்துவிட்டார்கள்.

60 மில்லியன் டன் பயோ எரிபொருள் உற்பத்தி செய்து, உலகத்துக்கு விமான எரிபொருளை ஏற்றுமதி செய்யவும், நம் நாட்டு வாகனங்களில் பயோ எரிபொருளை உபயோகித்து அந்நியச் செலாவணியை உயர்த்தவும் தவறிவிட்டோம். இதனால் விவசாயிகளுக்குக் கிடைக்கும் வாழ்வாதரத்தையும், இளைஞர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய பயோ எரிபொருள் உற்பத்தி, வினியோக தொழில் வாய்ப்பையும் இழந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, பயோ எரிபொருள் உற்பத்தியை ஊக்கப்படுத்தத் தவறியதால் பறக்க வேண்டிய விமானங்கள் தரையில் கிடக்கின்றன. விமான எரிபொருள் மற்றும் அதற்கான மத்திய, மாநில அரசுகளின் அதீத வரி விதிப்பால் நஷ்டப்பட்டு, 13 இந்திய விமானக் கம்பெனிகள் மூடப்பட்டிருக்கின்றன. கூடிய விரைவில் இந்திய வான்வெளி வெளிநாட்டு விமானங்களால் ஆக்கிரமிக்கப்படப்போகிறது.

இந்த நிலைமையைத் தவிர்க்க வேண்டுமானால், அறிவார்ந்த சிந்தனையைப் போற்றி வளர்க்கும் நிலைமை வர வேண்டும். உதாரணம், நம் தமிழ் முன்னோர்கள் ஏற்படுத்திக் கொடுத்த நீர் வழி மேலாண்மையை நாம் உணராததால், நம்மை ஆளும் அரசுக்கு தண்ணீரைச் சேமிக்க வழி தெரியாததால், இன்றைக்கு குடிநீருக்கு குடங்களைக் தூக்கிகொண்டு, தண்ணீர் லாரியைத் தேடி, தேடி தெருவில் அலைய வேண்டிய நிலையை நாம் அடைந்திருக்கிறோம். உன் வலிமையை நீ அறிவார்ந்து உணராவிட்டால், உனது வலிமையை உனக்கு மற்ற அறிவார்ந்த நாடுகள் உணரவைக்கும். ஆனால், அதற்கு நீ கொடுக்க வேண்டிய விலை அதிகம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com