அத்தியாயம் - 28

எண்ணெய்ப் பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா, பிரேஸிலை தாண்டி இந்தியா 4-வது பெரிய நாடு. இருந்தாலும் இந்தியா தனது எண்ணெய்த் தேவைக்கு 70 சதவிகிதம் வெளிநாட்டு இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்கிறது.
அத்தியாயம் - 28

அறிவார்ந்து சிந்திக்கத் தயாராகுங்கள்!

மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிர்ப்பு எங்கிருந்து தொடங்கியது என்றால் ஒரு புள்ளியில் இருந்து தொடங்கியது எனலாம். அதுதான் ‘டெர்மினேட்டர் சீட்ஸ்’ (முடியும் விதை) என்று சொல்லப்படும் (Genetic Use Restriction Technology - GURT) தொழில்நுட்பம். இந்த GURTI 1990-களில் பேடண்ட் செய்தது டூபாண்ட் என்ற கம்பெனி. அதைப்போல டெல்டா மற்றும் பைன் லாண்ட் கம்பெனி, ஜெனிட்டிக் சுவிட்சு என்ற தொழில்நுட்பத்தை பேடண்ட் செய்தது. இந்த கம்பெனியைத்தான் மான்சான்டோ 2007-இல் வாங்கியது. அதாவது, டெர்மினேட்டர் சீட்ஸ் என்றால் ஒரு விதையின் மறுஉருவாக்கத் தன்மையை தடை செய்து, இரண்டாவது முறை மீண்டும் முளைக்கும் வாய்ப்பை அழிப்பது. இதற்கு குறுக்கு மகரந்தச் சேர்க்கை மூலம் ஏற்படும் கலப்படத்தை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்றாலும், இது அறிமுக நிலையிலே அனைவராலும் எதிர்க்கப்பட்டது.

ஏனென்றால், அமெரிக்க நிறுவனங்களுக்கு தங்களது தொழில்நுட்பத்தைக் காத்து, தொடர்ந்து விதைகளை அந்த கம்பெனிகளிடம் இருந்து வாங்கவைப்பதற்கான முயற்சியாக இது இருந்ததுதான் காரணம். இந்த விதையைப் பயன்படுத்தும் விவசாயிகள் ஒரு கம்பெனிக்கு அடிமைகளாக நேரும் என்பதாலும், ஒரு கம்பெனியின் ஆதிக்க வல்லாண்மையை ஊக்குவிக்கும் என்பதாலும் அறிமுக நிலையிலேயே எதிர்க்கப்பட்டு, இன்றைக்கு டெர்மினேட்டர் விதைகள் உலகத்தில் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டுவிட்டன. எனவே இப்போது இருக்கும் எந்த ஒரு மரபணு மாற்ற விதையும் டெர்மினேட்டர் விதையல்ல.

ஆனாலும்கூட, எந்த ஒரு கலப்பின விதையாக இருந்தாலும் அது தொடர்ந்து உபயோகப்படுத்தப்படும்போது முதலில் இருந்த வீரியம், பூச்சி எதிர்ப்புத்தன்மை குறையும்.

எப்படி நம் முன்னோர்கள் சொத்தைகளை ஒதுக்கி, வீரியமான நெல்லை மட்டுமே விதை நெல்லாக்கினார்களோ, அதேபோல மரபணு மாற்றப்பட்ட கலப்பின விதைகள் விவசாயிகளுக்கு தொடர்ந்து குறைந்த விலையில் தடையில்லாமல் கிடைக்கும் வகையில் அரசு சரியான கொள்கை செயல்பாட்டு முறைகளை வகுத்து வழங்க வேண்டும். அதை விநியோகிக்கும் உரிமையைத் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.

பி.டி. கத்தரிக்காய் (BT BRINJAL) பூச்சியைத் தாங்கி வளரக்கூடிய சக்திகொண்ட மரபணு மாற்று பயிரை மகாராஷ்ட்டிரா ஹைபிரிட் சீட்ஸ் (MAHYCO) - மான்சான்டோ, விவசாய அறிவியல் பல்கலைக் கழகம் UAS, தார்வாட், தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் TNAU, கோயம்புத்தூர் இணைந்து தயாரிக்க 2005-ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு, ஆராய்ச்சியின் மூலம் பி.டி. கத்தரிக்காய் கலப்பின பயிர்கள் உருவாக்கப்பட்டன. இது மரபணு மாற்றுப் பயிர் சோதனை கமிட்டிகளில் 3 நிலைகளை வெற்றிகரமாகத் தாண்டி, எந்த நச்சுத்தன்மையும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு, 14 அக்டோபர் 2009- இல் பி.டி. கத்திரிக்காய் செயல்பாட்டுக்கும், விவசாயத்திற்கும் ஏற்றது என்று GEAC (Genetic Engineering Appraisal Committee) அனுமதி கொடுத்தது. பி.டி. கத்தரிக்காய் குறித்த எல்லா ஆராய்ச்சிகளும் இந்திய விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டு, இந்தியாவில்தான் உருவாக்கப்பட்டது. அனைத்து ஆய்வு நிலைகளையும் கடந்த பின்பு ஒரு சில சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆதாரமற்ற எதிர்ப்பைக் காரணம் காட்டி, 9 பிப்ரவரி 2019-இல் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், இதே நேரத்தில் இந்தியாவோடு பங்களாதேஷ் அரசும், விஞ்ஞானிகளும் இணைந்து பி.டி. கத்திரிக்காய் மரபணு மாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தியாவில் விஞ்ஞானிகள் தனியாக ஆராய்ச்சி செய்கிறார்கள். அரசு தனியாக நிற்கிறது. அரசு தனியாக அரசியல் சார்ந்து முடிவெடுக்கிறது. பங்களாதேஷில் அரசு விஞ்ஞானிகளோடு சேர்ந்து செயல்படுகிறது. அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவு எடுக்கிறது.

பங்களாதேஷ் விவசாயத் துறை அமைச்சர் மரபணு மாற்று ஆராய்ச்சியில் முதலில் இருந்து பங்குகொண்டு அதன் நன்மை, தீமைகளை ஆராய்ந்து அதன் விளைவுகளை ஆய்வு செய்ய கட்டாய வரைமுறைகள் கொண்டுவந்து ஆய்வுசெய்து பி.டி. கத்திரிக்காய் மூலமாக சுற்றுச்சூழலுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுகிறதா என்று அனைத்து நிலைகளிலும் ஆய்வுசெய்து, அதில் எவ்வித பாதகமும் இல்லை என்பதை முடிவு செய்து, விவசாயிகளிடம் கொண்டு சென்றிருக்கிறார்கள். முதலில் சிறு அளவில் விவசாயிகளுக்கு கொடுத்து அதை பரீட்சார்த்த முறையில் சோதனைசெய்து பார்த்து, இன்றைக்கு பங்களாதேஷில் கத்திரிக்காய் விளைச்சலில் பி.டி. கத்திரிக்காய் 15 சதவீதம் பயிரிடுகிறார்கள். தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள். விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். எந்தவிதச் சுற்றுச்சூழல் தீய விளைவுகளும், ஒவ்வாமையும், நச்சுத்தன்மையும் ஏற்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஐந்து முறை பூச்சிக்கொல்லிகள் தெளிக்க வேண்டிய நிலைமை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு, அந்த கத்திரிக்காய் செடிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிக்கப்படுவது குறைக்கப்பட்டு, அதற்கு செலவழிக்கக்கூடிய பணம் பங்களாதேஷ் விவசாயிகளால் சேமிக்கப்படுகிறது. நல்ல விளைச்சல் கிடைக்கிறது. பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் எச்சம் உடல் நலத்தை பாதிக்கும் அதன்மூலமாக காற்று மாசு, நிலம் மாசு ஆவது, பங்களாதேஷில் மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்திரிக்காய் பயிரிடப்பட்ட இடங்களில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

பி.டி. கத்திரிக்காய்க்கு ஒரு சில அரசியல் ஆதிக்கம் பெற்ற அமைப்புகள் போராட்டம் செய்கின்றன என்று சொல்லி இந்தியா தற்காலிகமாக ஒத்திவைத்து இருப்பதால், விவசாயிகளுக்கும், மக்களுக்கும் கிடைக்க வேண்டிய நன்மைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. நமது நாட்டில் செய்யப்பட்ட மரபணு மாற்ற ஆராய்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடித்து வளர்க்கப்படும் கத்தரிக்காயை, காய்கறிகளை, பழங்களைத்தான் மக்கள் உண்ணும்படியான நிலையைத்தான் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பூச்சிக்கொல்லி மருந்துகளால் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு அதை உண்ணும் மக்களுக்கு நெஞ்சு எரிச்சல் போன்ற வியாதிகள், அதன்மூலமாக ஏற்படும் பல்வேறு உடல்நல கோளாறுகள் இன்றைக்கு வழக்கமாகிவிட்டன. இந்த நிலையிலே பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து உருவாக்கப்படக்கூடிய மரபணு மாற்றுப் பயிர்களைப் பொத்தாம் பொதுவாக கேன்சர் வருகிறது, மலட்டுத்தன்மை ஏற்படும், ஜென்ம ஜென்மத்திற்கு இதனால் தீய விளைவுகள் ஏற்படும், என்று ஒரு சில பேர் பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதில் ஏதாவது ஒரு சில உண்மை இருக்குமானால், ஒரு சதவீதம் உண்மை இருக்குமானால்கூட, இந்த மரபணு மாற்றுப் பயிர்களை நாம் தடை செய்துவிடலாம்.

ஆனால் இதுவரை 30 ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து மரபணு மாற்றுப் பயிர்களை உருவாக்கி பல்வேறு நிலைகளில் இதை ஆய்வுசெய்து இதனால் நச்சுத்தன்மையும், கேன்சர், மலட்டுத்தன்மையும் ஒவ்வாமையும் வராது என்று ஆராய்ச்சி செய்து பல்வேறு ஆய்வு நிலைகளைத் தாண்டி, நல்லதை மக்களுக்குக் கொண்டு சேர்த்தால் ஒரு சில சினிமா விஞ்ஞானிகள், அரசியல் விஞ்ஞானிகள், விஞ்ஞானிகளைப்போல நடிப்பவர்கள், எவ்வித நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சி ஆதாரமும் இல்லாமல் கேன்சர் வரும், மலட்டுத்தன்மை வரும், நச்சுத்தன்மை வரும் என்று பயமுறுத்துகிறார்கள். இதை ஊடகங்களும் ஊதிப் பெரிதுபடுத்துகின்றன என்று சொன்னால் இதற்கு ஏதோ ஒரு பின்புலம் இருக்க வேண்டும். அந்த பின்புலத்தை நாம் உணராத வரை நமக்கு அறிவியலால் கிடைக்கக்கூடிய நன்மைகளை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் கிடைக்கவிடமாட்டார்கள் இந்த போலி சுற்றுச்சூழல்வாதிகள்.

மரபணுவை வெளிநாட்டு கம்பெனிகளிடம் இருந்து வாங்கித்தான் நாம் அதை ஆராய்ச்சி செய்கிறோம் என்ற குறைபாடு இருந்தது. ஆனால் GM MUSTARD மரபணு கடுகு, இந்தியாவில் டெல்லி பல்கலைக் கழத்தின் விஞ்ஞானி பேராசிரியர் தீபக் பென்டல் அவர்களது ஆராய்ச்சியின் விளைவாக மட்டுமே பிரஸ்ஸிகா ஜின்ஸியா (BRASSICA JUNCEA) என்ற கடுகு இனத்தில் உருவாக்கப்பட்ட மரபணுதான் தாரா மஸ்டர்டு ஹைபிரிட்-11 (DMH-11). சாதாரணமான கடுகு விதைத்தால் 100 டன் வருகிறது என்று வைத்துக்கொண்டால் கலப்பின வீரிய விதைகள் மூலம் மூலம் 130 டன் கிடைக்கும். 30% அதிகமாகக் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் கிராஃப்டிங் பண்ண வேண்டும், அதாவது இரண்டு செடிகளில் ஒன்றிலிருந்து மகரந்தத் தூளை எடுத்து, மற்றொன்றின் சூலகத்தில் போட்டு அதை ஒட்டு பண்ணினால் அதன் விதைகள் வீரியத்தன்மையுடன் விளைச்சல் அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் 40% கடுகு எண்ணெய்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. வடக்கே மேற்கு வங்காளம் முதல் ராஜஸ்தான் வரை அனைவரும் அதிகமாக கடுகு எண்ணெய்தான் பயன்படுத்துகிறார்கள். எண்ணெய் எடுக்கும்போது அதில் டி.என்.ஏ.வும் இருக்காது; புரோட்டினும் இருக்காது. எண்ணெய் மட்டும்தான் இருக்கும். மரபணு மாற்றப்பட்ட கடுகில் விஷத்தன்மை இருக்கிறதா என்ற பரிசோதனையெல்லாம் ஹைதராபாத்தில் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, மரபணு மாற்றப்பட்ட கடுகு எண்ணெய்யால் எவ்வித விஷத்தன்மையோ, ஒவ்வாமையோ, கேன்சரோ வராது என்று ஆராய்ச்சியில் உறுதிப்பட்டுத்தப்பட்டு, இது 3 நிலைகளைக் கடந்து GEAC கமிட்டி அனுமதி கொடுத்து 2 வருடங்களாகிவிட்டன. ஆனால் இன்னும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி கொடுக்கவில்லை. ஏன்?

எண்ணெய்ப் பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா, பிரேஸிலை தாண்டி இந்தியா 4-வது பெரிய நாடு. இருந்தாலும் இந்தியா தனது எண்ணெய்த் தேவைக்கு 70 சதவிகிதம் வெளிநாட்டு இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்கிறது. ஏறத்தாழ 60 சதவிகித எண்ணெய்த் தேவையை பாமாயில் இறக்குமதியில் இருந்துதான் இந்தியா சமாளிக்கிறது. 2001-இல் 3 மில்லியன் டன் பாமாயில் உபயோகப்படுத்திய இந்தியா, இன்றைக்கு 10 மில்லியன் டன் உபயோகப்படுத்துகிறது, கிட்டத்தட்ட 230 சதவிகிதம் அதிகம். 2017-18- இல் மட்டும் மத்திய அரசு ரூ.46,000 கோடியை பாமாயில் இறக்குமதிக்குச் செலவழித்தது. அதாவது US$6,774 மில்லியன் அன்னியச் செலாவணியை செலவழித்தாலும் செலவழிப்போம், நமது எண்ணெய்த் தேவையைச் சமாளிக்க நமது நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கிய மரபணு மாற்றப்பட்ட கடுகை உபயோகப்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்கிறது நமது நாட்டு ஆதாய அரசியல்.

மரபணு மாற்றப்பட்ட கடுகால் எண்ணெய் உற்பத்தி 30% உயரும், எந்தவித நச்சுத்தன்மையையும் இல்லை என்று பரிந்துரை செய்த பின்பும், எண்ணெய் இறக்குமதி செய்வோர்களின் ஆதிக்கத்தின் காரணமாகவும், பணத்தால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் எதிர்ப்பின் மூலமும், மரபணு கடுகுக்கு இன்னமும் அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதிக்காகக் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாத கேன்சர் வரும், மலட்டுத்தன்மை வரும், நச்சுத்தன்மை வரும் என்ற எதிர்ப்புதான் காரணம்.

வெளிநாட்டிற்கு சென்று கோடிக்கணக்கில் சம்பாதிப்பதை விட்டுவிட்டு ஒரு சில விஞ்ஞானிகள் நம் நாட்டில் ஆராய்ச்சி செய்கிறார்கள். அப்படிப்பட்ட நாட்டுப்பற்றுள்ள விஞ்ஞானிகளை நம்ப நம் மக்கள் தயாராக இல்லை.

ஆனால் இனிமேலும் ஏமாறுவதற்கு மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும், அறிவார்ந்து சிந்திப்பவர்களும் தயாராக இல்லை என்று நான் நம்புகிறேன்.

எந்த நாடு அறிவார்ந்த அரசியலுக்கு மதிப்பு கொடுக்கிறதோ, அந்த நாடுதான் அடுத்த தலைமுறைக்கான அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதைப் பற்றி சிந்திக்கிறது. எந்த நாடு தனது அடுத்த 5 ஆண்டுகளை ஆட்சியைப் பற்றி சிந்திக்கிறதோ, அது ஆதாய அரசியல் சார்ந்து முடிவு எடுத்து எதிர்கால தலைமுறைக்கு குழியைத்தான் தோண்டுமே தவிர, வளமான வாழ்க்கையை அல்ல. திருவள்ளுவரின் வாக்கை ஏற்று நாம் அறிவார்ந்து சிந்திக்க தெரிந்தவர்கள் என்று நிரூபிக்க நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளாவிட்டால், நமது எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் சாதியால், மதத்தால், பணத்தால், சினிமாவால், ஊடகத்தால் தீர்மானிக்கக்கூடிய சக்திபெற்றவர்களின் அடிமையாகத்தான் இருப்போம். அடிமையா, அறிவுடைமையா சிந்திப்போம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com