அத்தியாயம் - 27

கடந்த 15 ஆண்டுகளாக பி.டி. காட்டனால் பயனடைந்த விவசாயிகள் எங்களுக்கு பி.டி. காட்டன் வேண்டும் என்று போராடுகிறார்கள். ஆனால் இங்கு ஒரு சில அமைப்புகள் அதைத் தடை செய்ய வேண்டும்
அத்தியாயம் - 27

வாய்மை பொய்யுரைத்தால் நன்மை பொய்க்கும்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல் - (குறள் 664)

மரபணு மாற்றப்பட்ட பி.டி. காட்டன் மூலம் விளையும் பருத்தியின் மூலம் செய்யப்பட்ட பருத்திப் பால் சாப்பிட்டால் புற்றுநோய் வரும், மலட்டுத்தன்மை வரும், ஒவ்வாமை வரும் என்பவை நிரூபிக்கப்படாத பொய்யுரைகள். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரால் தொடர்ந்து அவை பரப்பப்படுகின்றன. பி.டி. காட்டனால்தான் இந்த விளைவுகள் வந்திருக்கின்றன என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாக அதை தடை செய்ய வேண்டும். தடை செய்வதற்கு 1000 வழிமுறைகள் இருக்கின்றன. 3 ஆய்வு நிலைகளில் ஏதாவது ஒன்றில் இது நிரூபிக்கப்பட்டாலும் அப்படிப்பட்ட மரபணு மாற்றுப் பயிர்களை உடனடியாகத் தடை செய்வதற்கு சட்டமிருக்கிறது.

ஒரு புது விஷயத்தைக் கண்டுபிடிப்பதற்கு எத்தனை எத்தனைவிதமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன? 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் ஆராய்ச்சி.. தொடர்ந்து ஆராய்ச்சி.. அந்த ஆராய்ச்சிகளில் பல்வேறு சோதனைகள் செய்து ஏதேனும் தீங்கு விளையுமா என்பதை ஆய்வு செய்து அதைத் தாண்டித்தான் - ஒரு புதுக் கண்டுபிடிப்பு மக்களுக்கு தீங்கில்லை என்று நிரூபிக்கப்பட்ட பின்புதான் உபயோகத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் எவ்வித ஆராய்ச்சியும் செய்யாமல், மரபணு மாற்றப்பட்ட பயிர்களினால்தான் கேன்சர், மலட்டுத்தன்மை வந்தது என்பது நிரூபிக்கப்படாமல் - அது சம்பந்தமான எவ்வித ஆராய்ச்சி முடிவுகளையும் உலக ஆராய்ச்சி பத்திரிகைகளில் வெளியிடாமல் - கேன்சர், மலட்டுத்தன்மை, ஒவ்வாமை வருகிறது என்று பொத்தாம் பொதுவில் சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்? அது அறிவார்ந்த வாதத்திற்குள் வராவிட்டால் அதை அவதூறு என்று கருதி ஒதுக்கிக்தள்ள முடியுமே தவிர, ஏற்க முடியாது.

ஒரு மரபணு புரதத்தை விலங்குகளுக்குக் கொடுத்து பரிசோதித்து, அதனால் எவ்வித தீய விளைவுகளும் இல்லை என்பதை 10 ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சியில் உறுதிப்படுத்திய பின்புதான், அதைப் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்படும். பி.டி. காட்டன் மூலம் கேன்சர் வருமா வராதா என்று கண்டறிய, பி.டி. காட்டன் புரதத்தை ஒரு மடங்கு அல்ல, ஆயிரம் மடங்கு அதிகமாக எடுத்து அதை எலிகளுக்கு செலுத்தி எலிகளுக்கு கேன்சர் வருகிறதா, நச்சுத்தன்மை ஏற்படுகிறதா, ஒவ்வாமை ஏற்படுகிறதா? அதன் குட்டிகளுக்கு 5 தலைமுறைக்கு இந்த பாதிப்புகள் வருகிறதா என்று கண்காணித்து, பரிசோதனைகள் செய்து அதன்மூலம் எலிகளுக்கு எவ்விதத் தீமையும் இல்லை என்று ஆராய்ச்சி முடிவுகள் மூலம் உறுதிப்படுத்திய பின்புதான் இந்த பி.டி. காட்டன் போன்ற எந்த மரபணு மாற்று புரதமாக இருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு வெளியிடுவார்கள். மரபணு மாற்றப்பட்ட பி.டி. காட்டன் மூலம் விளையும் பருத்தியில் செய்யப்பட்ட பருத்திப் பால் குடித்தால் நச்சுத்தன்மை, கேன்சர் வரும் என்று பொய்யுரை சொன்னால், சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

மரபணு மாற்றப்பட்ட பி.டி. காட்டனால் கேன்சர் வருகிறது என்று ஆராய்ச்சி செய்து, குறைந்தபட்சம் எலிகளுக்குக் கொடுத்து கேன்சரை உருவாக்கி, இதனால்தான் அது வந்தது என்று நிரூபித்து இதுவரை உலகத்தில் எங்காவது ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தால், அதைக் கண்டிப்பாக நாம் ஏற்றுக்கொள்ளலாம். உடனடியாக அந்த மரபணு மாற்றிய பயிரைத் தடை செய்யலாம். அப்படி ஒரு முடிவும் இதுவரை நிரூபிக்கப்பட்டு ஆராய்ச்சி கட்டுரையாக வெளியாகவில்லை. பருத்திக் கொட்டையை மாடு சாப்பிடுகிறது என்பதால் பி.டி. காட்டன் பருத்தியை, மாடுகளுக்கு கோழிகளுக்கு, மீன்களுக்கு கொடுத்து பரிசோதித்து ஏதாவது தீங்கு இருக்கிறதா என்று பல ஆண்டுகள் பரிசோதித்து பார்த்துவிட்டுத்தான் பி.டி. காட்டன் பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதி கொடுத்திருக்கிறது.

1993-இல் அமெரிக்காவில் பி.டி. காட்டன் அறிமுகப்படுத்தப்பட்டு, 1995-இல் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின்பு அனுமதிக்கப்பட்டது. 1997 -இல் சீனா அனுமதித்தது. 2002-இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியாவில் 12 மில்லியன் ஹெக்டேரில் பி.டி. காட்டன் பயிரிடப்படுகிறது. அமெரிக்கா 4 மில்லியன் ஹெக்டேரிலும், சீனா 4 மில்லியன் ஹெக்டேரிலும், பாகிஸ்தான் 2.6 மில்லியன் ஹெக்டேரிலும் பயிரிடப்படுகிறது. 2014-இல் அமெரிக்கா விளைவிக்கும் பருத்தியில் 96 சதவிகிதம் பி.டி. காட்டன் பருத்தியாகும். 95 சதவிகிதம் பருத்தி இந்தியாவில் பி.டி. காட்டன் ரகங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. 2003-04-இல் பருத்தி உற்பத்தியில் இந்தியா உலகத்தில் 3-வது பெரிய நாடாக இருந்தது. ஏற்றுமதியில் 7-வது பெரிய நாடு. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்தியா அன்று பருத்தியை அதிகமாக இறக்குமதி செய்தது. ஆனால் 2002- இல் பி.டி. காட்டன் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு 10 ஆண்டு காலத்தில் உலகத்தில் இந்தியாதான் முதல் பெரிய பருத்தி உற்பத்தி நாடு, ஏற்றுமதியில் 2 வது பெரிய நாடு.

பி.டி. காட்டன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துக்கு செலவழித்த பணம் மிச்சப்பட்டது. 24% அதிக விளைச்சல் கிடைத்தது. 50% கூடுதல் லாபம் விவசாயிகளுக்கு கிடைத்தது. இதை விதைத்த விவசாயிகளின் செலவளிக்கும் சக்தி 20% அதிகரித்து வாழ்க்கைத்தரம் உயர்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டது. 2015-16-இல் சீனாவைப் பருத்தி உற்பத்தியில் இந்தியா மிஞ்சியது. இப்படி சாதனைகள் ஒருபுறம் உண்மையாக இருக்க, பி.டி. காட்டனால் உற்பத்தி குறைந்துவிட்டது என்று பரப்பப்படும் வாதம் பொய்மையில்லாமல் வாய்மையா? ஆனால் பி.டி. காட்டன் பருத்தியின் வருகையால் பாதிக்கப்பட்ட பூச்சிகொல்லி மருந்து கம்பெனிகள், சினிமா, ஊடகம், போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசுசாரா சமூக நல போலி நிறுவனங்கள் மற்றும் ஓய்வுபெற்ற விஞ்ஞானிகளைப் பிடித்து இதற்கு எதிரான பரப்புரையை அவர்கள் மூலம் தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பி.டி. காட்டன் வரவால் பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகம் பெருமளவில் குறைந்தது. பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனிகளுக்கு நட்டம் வந்தால் எப்படித் தாங்குவார்கள்? மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவில் 3 லட்சம் விவசாயிகள் பி.டி. காட்டனால்தான் தற்கொலை செய்கிறார்கள் என்று பொய்யுரையை உலகம் எங்கும் ஒரு கூட்டம் பரப்பியது. இன்னும் பரப்பிக்கொண்டு இருக்கிறது.

ஆனால் சில உண்மையான, தீர்வு காண வேண்டிய குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. அதாவது பி.டி. காட்டன் விதைகள் அதிக விலையாக இருப்பது, 120 நாட்களுக்கு மேல் பி.டி. காட்டன் புரதம் வீரியம் இழப்பது, பி.டி. காட்டன் புரத எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு பூச்சிக்கொல்லித்தன்மையை இழந்திருப்பது, அதனால் உறிஞ்சும் பூச்சிகளை பி.டி. காட்டனால் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

முதலாம் பசுமைப்புரட்சி விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், ‘பி.டி. காட்டனால் எதிர்பார்த்த நீடித்த நிலைத்த பலன் இல்லை, அது பூச்சிக்கொல்லித் திறனை இழந்துவிட்டது’ என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் சொல்லிவிட்டு, பிறகு பயோ டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக ‘அது என் கருத்து இல்லை’ என்று மறுத்திருக்கிறார். அதை ஏன் மறுத்தார்? அதன் பின்னனி என்ன? அதற்கும் ஆராய்ச்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

மான்சான்டோ கம்பெனி பி.டி. காட்டன் புரதம் மூலம் உருவாக்கப்பட்டும் விதைகள் அதிக விலையாக இருப்பதால், அதற்கு மாற்றாக இந்திய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், இந்திய பி.டி. காட்டன் பருத்தி ரகங்களை உற்பத்தி செய்கிறார்கள். குறிப்பாக, பஞ்சாப் விவசாயப் பல்கலைக் கழகம் தனது சுயஆராய்ச்சியால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் பி.டி. காட்டன் விதைகளை பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் விளைச்சலுக்குக் கொண்டுவந்தது. நம் நாட்டு விஞ்ஞானிகளின் முயற்சிக்கும் ஏன் எதிர்ப்பு? பிரச்னைகள் இருந்தால் அதற்கு தீர்வைதான் நாம் கண்டாக வேண்டும். எதிர்ப்பில் உண்மையிருந்தால் அதற்கு மதிப்புண்டு. அதைச் சரி செய்ய வேண்டும். ஆனால் அதில் வியாபார தந்திரம் இருந்தால் அதை எதிர்க்கும் வல்லமைதான் நமக்கு வேண்டும்.

மனிதர்கள் எடுத்துக்கொள்ளும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எப்படி எதிர்ப்புச் சக்தியை ஒரு காலகட்டத்தில் பாக்டீரியாக்கள் தானாகவே உருவாக்கிக்கொள்கிறதோ, அதை சரி செய்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறைகள் தொடர்ந்த ஆராய்ச்சியின் பலனாக உருவானதுதான். அதேபோல பி.டி. புரத எதிர்ப்புச் சக்தி உருவானால் அதற்கு தீர்வு இருக்கிறதா? ஆம். இருக்கிறது. அதாவது பி.டி. காட்டன் பயிரிடும் இடத்திலிருந்து 0.8 கி.மீட்டருக்குள் பி.டி. அல்லாத பருத்தியை 20-50% பயிரிடுவதின் மூலம் எதிர்ப்புச் சக்தி கொண்ட பூச்சிகளில் இருந்து தப்பிக்கலாம் என்கிறது ஆய்வு. அது மட்டுமல்ல, தொடர்ந்த உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் விளைவாக மலட்டு ஆண் பூச்சிகளை உருவாக்கி புரத எதிர்ப்புச் சக்தி பெற்ற பூச்சிகளோடு இணையவிடும்பொழுது, பி.டி. காட்டன் புரத எதிர்ப்புச் சக்தி குறைக்கப்பட்ட பூச்சிகள் உருவாகி, இந்த பி.டி. காட்டன் பயிர்களை அழிக்கும் தன்மையில் இருந்து காக்கும் என்று அமெரிக்காவில் அரிஸோனா பல்கலைக் கழகத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

எனவே அறிவியல் ஆராய்ச்சிக்கு சோதனை வந்தால் அதை அறிவியல் ஆராய்ச்சியால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அறிவியல் ஆராய்ச்சிக்கு வர்த்தக அரசியலால் சோதனை வந்தால், அங்கேதான் மக்களது நன்மை பின்னுக்குத் தள்ளப்பட்டு, சுயநலம் மேலோங்கி தங்களது சினிமா, ஊடக பிரபல்யம் மூலம் மக்களுக்காக நன்மை செய்பவர்கள்போல நடிக்கும் உலகமகா நடிகர்கள் தோன்றுகிறார்கள். இவர்களிடம்தான் படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். மக்களின் நலனுக்காகப் பேசுவதுபோலவே பேசுவார்கள். அதில் அவர்கள் சுயநலன் இருக்கும்.

ஆனால் இன்றைக்கு HTBT Cotton வகை இந்தியாவில் தடை செய்யப்பட்டு, அதனால் அதிகம் பயனடைந்த விவசாயிகள், அந்தத் தடையை விலக்க நாள்தோறும் போராட்டம் செய்கிறார்கள். 9 ஜூலை 2019 அன்று மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவில் எச்.டி.பி.டி. காட்டனுக்கான தடையை விலக்கக் கோரி போராட்டம் செய்கிறார்கள். இதனால் எங்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதில் இருந்து பணம் மிச்சமாகிறது. இது சரியான களைக்கொல்லியாகவும் செயல்படுகிறது. இதை ஏன் இந்த அரசாங்கம் ஒரு தவறான பொய்யான கருத்தின் அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாட்டை வைத்து எவ்வித ஆய்வும் செய்யாமல் தடை செய்கிறார்கள் என்று விவசாயிகள் போராட்டம் செய்கிறார்கள்.

கடந்த 15 ஆண்டுகளாக பி.டி. காட்டனால் பயனடைந்த விவசாயிகள் எங்களுக்கு பி.டி. காட்டன் வேண்டும் என்று போராடுகிறார்கள். ஆனால் இங்கு ஒரு சில அமைப்புகள் அதைத் தடை செய்ய வேண்டும் என்று பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார்கள். இதில் யார் யாருக்காக உழைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

தனி கம்பெனி ஆதிக்கம் எங்கும் கூடாது. அது சரிதான். அதனால் உலக நாடுகள் மான்சாண்டோ என்ற கம்பெனியை எதிர்க்கிறது. ஆனால் தனது சொந்த நாட்டில் மரபணு மாற்று ஆராய்ச்சியை வளர்க்கிறது. ஆனால் இந்தியாவில் வெளிநாட்டு கம்பெனிக்கும் எதிர்ப்பு, நம்நாட்டு மரபணு ஆராய்ச்சிக்கும் எதிர்ப்பு. இங்கே வெளிநாட்டுக் கம்பெனி பிரச்னையா, வியாபாரப் போட்டியால் கிடைக்கும் பணம் காரணமா, இல்லை உள்நாட்டு மரபணு ஆராய்ச்சி பிரச்னையா? மரபணு மாற்றுப் பயிர்களால் இறந்தவர்கள் எத்தனை பேர்? மரபணு மாற்றுப் பயிரால் யாருக்காவது கேன்சர் வந்திருக்கிறதா? மலட்டுத்தன்மை வருகிறதா? உங்களுக்கு இதைவிட நிறையக் கேள்விகள் இருக்கும். பார்ப்போம், அடுத்த அத்தியாயத்தில்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com