அத்தியாயம் - 31

இரண்டு தேர்வையும் அரசு வைத்தால், தனது தேர்வு முறையின் மீதான நம்பிக்கை அரசுக்கு இல்லையென்பதுதான் உறுதிப்படுத்தப்படும்.
அத்தியாயம் - 31

நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை பள்ளிக்கல்வி!

‘‘நமது பிறப்பு வேண்டுமானால் ஒரு சம்பவமாகலாம்; ஆனால் நமது வாழ்க்கை ஒரு சரித்திரமாக வேண்டும்’’ என்றார் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். ஆனால் எல்லோருடைய வாழ்க்கையும் சரித்திரமாகத்தான் வேண்டுமா, அப்படி எல்லாராலும் தனது வாழ்க்கையைச் சரித்திரமாக மாற்ற இயலுமா என்றால் அது எல்லாராலும் இயலாது; சில பேரால் முடியும். இந்த சில பேரின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பதுதான் நமது விருப்பம். இது நடந்தால், நாடும் மக்களும் அவர்களால் சிறப்பு பெறுவார்கள்.

அனைவரும் சரித்திரமாக மாற முடியாவிட்டாலும்கூட, குறைந்தபட்சம் தனது குடும்பத்திற்கும், தனது வருங்கால சந்ததிக்கும், சுற்றத்திற்கும், சமுதாயத்திற்கும் ஒரு முன்னுதாரணமாக வாழும் வாழ்க்கை அமைவதே ஒவ்வொரு மனிதனின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும். அந்த வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பதுதான் கல்வி, கல்வியால் பெறும் அறிவு, அறிவால் விளையும் ஆற்றல், அந்த ஆற்றலால் விளைவதுதான் நன்மையும் தீமையும். நன்மையும், தீமையும் ஒருவருக்கு வாய்க்கும் குணத்தால் விளையும். நற்குணம் வாய்க்கப்பெறுவதும், தீயகுணம் வாய்க்கப்பெறுவதும் ஒருவர் வளரும் சூழலைப் பொறுத்தது.

‘‘நற்குணத்தை குழந்தையிடம் உருவாக்குபவர்கள் மூவர். அவர்கள் அம்மா, அப்பா மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்’’ என்றார் அப்துல் கலாம். மனமாற்றம் ஒருவரை மாற்றும். ஆனால் அது நிலையானதில்லை. ஆனால் குணமாற்றம் ஒன்றே வாழ்க்கையைச் சீரமைக்க, சிறப்பிக்க உதவும். அந்த ஒரு நற்சூழலை வறுமையில் வாடி உழைத்து, உழைத்து ஓடாகத் தேயும் பெற்றோர்களால் தனது குழந்தைக்கு இன்றைய நவீனமயமாக்கப்பட்ட சூழலில் எல்லா நேரமும் கொடுக்கமுடியாது என்ற நிலையே உள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் பெற்றோர்கள்கூட, பணம் இருந்தும் நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் குழந்தைகளுக்குக் கொடுக்கமுடியாத சூழல்தான் இன்றைக்கு நிலவுகிறது. எனவேதான் அனைவருக்கும் தரமான கல்வியைக் கொடுக்க வேண்டியது அரசின் அடிப்படை கடமை. தரமான கல்வியை உறுதி செய்தால்தான் தன்னம்பிக்கை கொண்ட அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கமுடியும்.

எனவேதான் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமும் நானும் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் 30 செப்டம்பர் 2016-இல் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட ‘‘வரைவு தேசிய கல்விக்கொள்கை 2016’’-க்கு எங்களுடைய பரிந்துரையை அனுப்பினேன்.

கல்வி என்பது ஆயுள் முழுவதும் கற்க வேண்டிய 3 அம்சங்களுடையது - (1) அறிவார்ந்து சிந்திக்கக் கற்றுக்கொள்ளுதல்; (2) வாழ்வியலை கற்றுக்கொள்ளுதல்; (3) விரும்பிய தனித்திறனை வளர்த்துக்கொள்ளுதல். ஒரு பள்ளி மாணவனின் வாழ்க்கை 12 ஆண்டுகள் - மொத்தம் 25 ஆயிரம் மணி நேரம் - பள்ளியில் செலவழிக்கப்படுகிறது (1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை). இதில் ஆரம்பக் கல்வியை, நாம் சீரமைத்தாக வேண்டும். மொத்தக் கல்விக்கும் அடிப்படையாக இருப்பது ஆரம்பக் கல்வியே. அதிலும் குழந்தையை 3 வயதில் இருந்து Pre-KG, LKG, UKG என்று தொடங்கி, பேசும் வயதில் பேசக் கூடாது என்று தடுத்துவிடுகிறோம். ஓடி விளையாடி கீழே விழுந்து, எழுந்து, தோல்வியடைந்து வெற்றிபெற்று, வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் அங்கம் என்பதைக் குழந்தைகள் புரிந்துகொள்ளவிடாமல் தடுத்துவிட்டோம். தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் போய், ஆங்கிலப் பாடல்களை YouTube-இல் அர்த்தம் புரியாமல் பார்க்கவைத்து மனப்பாடம் செய்யவைத்து, மனப்பாடக் கல்வி முறை பழக்க வழக்கத்தைத் தொற்றிக்கொள்ளச் செய்கிறோம். ஆனால், மனப்பாட கல்வி முறையில் இருந்து விலகி, கேள்வி கேட்டு, ஆராய்ந்தறிந்து செயல்படக்கூடிய கல்விமுறைக்கு நாம் மாற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

3-7 வயதிலே unshooling செய்ய வேண்டும். அதாவது இன்றைய பள்ளிக்கல்வி முறையில் இருந்து குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தோம். அதாவது 3 வயது முதல் 7 வயது வரை குழந்தைகளின் ஆக்கப்பூர்வ எண்ணங்களை வெளிக்கொணர வேண்டும். எனவே, ஆரம்பப் பள்ளிகளில் பார்த்து உணரவும், விளையாடி அறியவும், ஒன்றைச் செய்து பார்த்து பழகவும், ஆக்கப்பூர்வ செயல்முறை பாடத்திட்டம், ஆக்கப்பூர்வமான ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான வகுப்பறை மட்டுமல்ல, விளையாட்டு இடமும் இருக்க வேண்டும். மூன்றிலும் மாற்றங்கள் வர வேண்டும்: கற்பித்தல், பாடத்திட்டம், ஆசிரியர்கள். இதை எப்படிச் செய்வது? இதிலும் மூன்று அம்சங்கள் உள்ளன: மாணவர்களின் திறன் வளர்த்தல், திறன் வளர்ச்சிக்கு உபயோகப்படும் உபகரணங்கள், கருவிகள், மற்றும் தார்மீகத் தலைமை வேண்டும்.

அதாவது பள்ளிக்கல்வியை 5+3+3+4 என்ற முறையில் மாற்றி, அதில் முதல் ஐந்தை அதாவது, 3 வயது முதல் 7 வயதுவரை ஒரு குழந்தை வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியோடு விளையாடி, அவர்களைப் பார்த்து நற்குணங்களை கற்றுக்கொண்டு வளரக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அந்த வயதில் அந்த குழந்தையின் அறிவாற்றல், அறிந்துகொள்ளும் ஆற்றல், புலன் உணர்வு போன்றவை சிறப்பாக வளரும். மூளையில் 85 சதவிகிதம் வளர்ச்சியடையும் தருணம். அந்த தருணத்தில்தான் அனைத்து நியூரான்களும் வளர்ச்சிபெறும். அந்த தருணத்தில் அவர்கள் இப்போது இருக்கும் பாலர் பள்ளிக்குச் செல்லக் கூடாது, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு மற்றும் ஆரோக்கிய மையத்திற்கு குழந்தைகள் செல்ல வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தோம். அங்கு ஆசிரியர்கள் பெற்றோர்களாகச் செயல்பட வேண்டும். இந்த வயதில் விளையாட்டு மற்றும் செயற்பாட்டின் மூலம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். எழுதவும், படிக்கவும் இந்த வயதில் மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் IQ (Intelligent Quetient) இருக்கிறது, அதன் அளவின்படி தனித்திறனும், ஆற்றலும் உருவாகும். அதே நேரத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் EQ (Emotional Quotient) தான் தன்னோடும், சமுதாயத்தோடும் ஒவ்வொரு குழந்தையையும் இணைக்கிறது, சமுதாயத்தோடு பயணப்பட வைக்கிறது. எனவேதான் இவை இரண்டும் அந்த குழந்தையிடம் இருந்து வெளிக்கொணரப்பட்டு, தனது தனித்திறனை அந்த குழந்தை கண்டறிய வைக்க வேண்டும்.

எனவேதான் கண்டு, உணர்ந்து, அறிந்து, புரிந்துகொள்ளும் முறையில் கல்வியின் செயல்பாட்டு வரைவில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று சொன்னோம். அதோடு குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு சத்தான உணவைக் கொடுத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அது துணையாக இருக்க வேண்டும் என்று சொன்னோம். அதை புதிய கல்விக்கொள்கை - 2019 அங்கீகரித்திருக்கிறது. அதாவது Pre-KG, LKG, UKG-ஐ கலைத்துவிட்டு, 1-ஆம் வகுப்பு, 2-ஆம் வகுப்பையும் சேர்த்து 3 வயது முதல் 7 வயது வரை அடிப்படை வாழ்க்கையை வீட்டுச்சூழலில் அனுபவப் பாடமாக படிக்க வேண்டிய ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். வளர்ந்த நாடுகளில் 7 வயதில்தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். அங்கு பெற்றோர்களுக்கு பிள்ளைகளை 7 வயது வரை வீட்டில் வைத்து பராமரிக்கவும், நன்றாக வளர்க்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்தியா 135 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடு. ஏழ்மையும், வறுமையும் ஒருபுறம். படித்த கணவனும், மனைவியும் வேலைக்கு செல்லவேண்டிய சூழல் மறுபுறம். கூட்டுக்குடும்பங்கள் உடைந்து தனிக்குடும்பங்கள் தனித்தீவுகளாக நிற்கும் நிலை அடுத்தபுறம். இப்படி இருக்கும் சூழலில் எப்படி அவர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் 7 வயது வரை வைத்து பராமரிக்க முடியும். எனவேதான் வீட்டுச் சூழலை, ஓர் ஆரோக்கியமான சூழலை அந்தக் குழந்தைகளுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற எங்களின் பரிந்துரை ஏற்கப்பட்டு முதல் 5 ஆண்டுகள் ECCE (Early Childhood Care and Education) என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இது அடிப்படைக் கல்வி. இதிலிருந்து அடுத்த 30 ஆண்டுகளுக்குள் எப்படிப்பட்ட மனிதவளத்தை இந்த நாடு உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை திட்டத்தின் அடிப்படையை வைத்துத்தான் கல்விக்கொள்கை கட்டமைக்கப்பட வேண்டும்.

இந்தியா ஒரு வளமான நாடாக வேண்டும்; அறிவில் சிறந்த வல்லரசாக வேண்டும் என்றால், ஒவ்வொரு மாநிலமும், அடுத்த மாநிலத்திற்குப் போட்டியாக அல்ல, ஒரு வளர்ந்த நாட்டுடன் போட்டி போடக்கூடிய வல்லமை பெற்ற மாநிலமாக நாம் உருவாக வேண்டும். அதற்கு நமது நீர் வளம், நிலவளம், மனித வளம் ஆகியவை மேம்பாடு அடைவதற்கான கொள்கைகளின் அடிப்படையில்தான் நமது கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும். இந்தியா தொடர்ந்த 10 ஆண்டுகளுக்கு 10 சதவிகித வளர்ச்சியை விவசாயத்திலும், தொழில் துறையிலும், சேவைத் துறையிலும், உற்பத்தித் துறையிலும் என்றைக்கு எய்துகிறதோ அன்றைக்குத்தான் நாம் வளர்ந்த நாடாக மாறமுடியும். நாம் அரசுப்பணிக்கு மட்டும் மனிதவளத்தை உருவாக்குவதைவிட, தொழில் கல்விக்கு மட்டும் உருவாக்குவதைவிட, வேலை தேடுபவர்களை உருவாக்குவதைவிட, வேலைவாய்ப்புகளை உருவாக்ககூடிய மனித வளத்தை நாம் உருவாக்க வேண்டும்.

அதற்கான அடிப்படை மாற்றம் பள்ளிக்கல்வியில் இருந்துதான் தொடங்க வேண்டும். முதல் 5 ஆண்டு அடிப்படை அனுபவக் கல்விக்கு பிறகு, அடுத்த 3 ஆண்டுகளில் முறையான கல்விக்கு மாணவர்களைத் தயார் செய்யும் நிலை, அதாவது 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை. விளையாட்டின் அடிப்படையில், கண்டறிதல் அடிப்படையில், பாடத்திட்டம் அடிப்படையில் செயல்பாட்டு கல்வி, வகுப்பறைக்கல்வி இங்குதான் அறிமுகப்படுத்த வேண்டும். இங்குதான் பல்வேறு பாடத் திட்டங்களின் பொதுவான அடித்தளம் இடப்படும். எழுத்தும், எழுத்துக் கூட்டி படிப்பும், பேச்சு, விளையாட்டும், கலையும், மொழியும், அறிவியலும், கணிதமும் அறிமுகப்படுத்தப்படும்.

இதற்கு அடுத்த இடைநிலைக் கல்வி 3 ஆண்டுகள் இங்குதான் நடுநிலைக்கல்வி பாடத் திட்டம், கல்விசார் கற்பிக்கும் முறையோடு அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பாடத்திலும் அறிவியலிலும், கணிதத்திலும், சமூக அறிவியலிலும், மொழியிலும் கருத்துகளை எளிதில் புரியும்படி சுருக்கமாகச் சொல்லிக்கொடுக்கும் கற்பிக்கும் முறை செயல்பாட்டிற்கு வரும். அனுபவத்தின் மூலம் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் வாய்ப்பு இங்குதான் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பாடத் திட்டத்திற்கும் என்ன இணைப்பு மற்றும் தொடர்பு என்ன என்பதை புரிந்துகொள்ளக்கூடிய நிலை இங்கு ஏற்படுத்தப்படும்.

இதற்கு அடுத்துதான் இடைநிலைக்கல்வி 4 ஆண்டுகள். இங்குதான் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகிய சுமைகள் நீக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு இந்த பொதுத்தேர்வுகளைப் பற்றிய பயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தத்தை மாணவர்கள், பெற்றோர்கள், சுற்றம், பள்ளி என அனைத்திலும் ஏற்படுத்துகிறது. ஒரு வருடம் படித்து, அதை மொத்தமாக மனப்பாடம் செய்து பள்ளி இறுதி பொதுத்தேர்வில் எழுதி தேர்ச்சிபெற்று நல்ல மதிப்பெண் பெற்றால்தான் விரும்பிய உயர்கல்வி பயில இயலும் என்ற மனப்பாடச் சுமை மாணவர்களை அழுத்துகிறது. தோல்வியடைந்தால் மட்டும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. வெற்றிபெற்று உயர்கல்வி நிறுவனங்களில் ஐ.ஐ.டி.யில் சேர்ந்த பல மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 23 ஐஐடி-களில் சேர்ந்த மாணவர்களில் 2461 மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் இடையிலேயே நின்றிருக்கிறார்கள். இதில் 50 சதவிகிதம் 1290 பொதுப்பிரிவிலும், 1171 மாணவர்கள் SC, ST and OBC பிரிவில் இடைநின்றிருக்கிறார்கள். இதில் டெல்லியில்தான் அதிகம். 782 மாணவர்கள். கரக்பூரில் 622, மும்பையில் 263, கான்பூரில் 190, சென்னையில் 128. எனவே மனப்பாடக்கல்வியால், மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது சென்னையைக் காட்டிலும் வடநாட்டில்தான் அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இடைநிற்றலுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், புரிந்து படிக்காததினால் ஏற்படும் இடைவெளி முக்கியக் காரணியாக இருக்கிறது.

எனவேதான் இடைநிலைக் கல்வியை 9-ஆம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை, இந்தியா முழுமைக்கும் 4 ஆண்டுகளாக்கி ஒவ்வொரு ஆண்டும் பாடங்களை பரவலாக்கி, பாடத்திட்டத்தைச் சுருக்கி ஓர் ஆண்டுக்கு 2 செமஸ்டர் முறையில் தேர்வு வைத்து புரிந்து படிக்கக்கூடிய வாய்ப்பை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதிகமான பாடத்திட்டத்தின் அழுத்தத்தைக் குறைத்து, ஒன்றில் தோல்வியுற்றாலும், அடுத்தமுறை ஒரு வாய்ப்பைக் கொடுத்தால் இடைநிற்றல் குறையும். தன்னம்பிக்கையோடு படிக்கும் வாய்ப்பை மாணவர்களுக்குக் கொடுத்தால் கண்டிப்பாகப் புரிந்து படித்து அனைத்து பாடங்களிலும் நல்ல தேர்ச்சிபெறும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தோம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

சரி எதற்கு 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கணக்கீட்டு தேர்வு, செமஸ்ட்டர் தேர்வு. இதையும் வைத்துக்கொண்டு உயர்கல்விக்கு எதற்கு நுழைவுத்தேர்வு? கேள்வி நியாயமானதுதான். இரண்டு தேர்வையும் அரசு வைத்தால், தனது தேர்வு முறையின் மீதான நம்பிக்கை அரசுக்கு இல்லையென்பதுதான் உறுதிப்படுத்தப்படும். ஒன்று பள்ளித் தேர்வை நம்ப வேண்டும்; இல்லையென்றால் நுழைவுத்தேர்வை நம்ப வேண்டும். எது சரி? அடுத்த தொடரில் பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்- vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com