செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

அத்தியாயம் - 15

By விஞ்ஞானி வெ. பொன்ராஜ்| Published: 30th April 2019 11:39 AM

 

மன அழுத்தமா மன ஆற்றலா?


15 செப்டம்பர் 2009 அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமுக்கு விண்வெளித் துறையில் உலக சாதனை படைத்த விஞ்ஞானி வான் கார்மன் விங்ஸ் விருது கொடுத்து கவுரவித்தது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் கலாமோடு, நானும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் மாதவன் நாயரும் கலந்துகொண்டோம். அப்போது, சந்திராயன்-1 செயற்கைக்கோள், எப்படி நிலவில் தண்ணீர் மூலக்கூறு (HO/H2O) இருப்பதைக் கண்டறிந்தது என்று அதை உலகிற்கு அறிவிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு  நாசாவின் ஜெட் புரொபல்சன் லெபாரட்டரியில் (JPL) சந்திராயன்-1 செயற்கைக்கோளின் ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றிய மதிப்பாய்வுரை விவாதக் கூட்டம் நடைபெற்றது. அதில் அனைவரும் கலந்துகொண்டோம்.  டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்ட மூன் இம்பாக்ட் புராப் (Moon Impact Probe) 18 நவம்பர் 2008-இல் நிலவில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் இருந்து 25 நிமிட நேரத்தில் Chandra’s Altitudinal Composition Explorer (CHACE) நிலவில் இறங்கியபோது நிலவின் வளிமண்டலத்தில் 650 மாஸ் ஸ்பெக்ட்ராவில் இருந்து தண்ணீர் துளிகள் இருப்பதை எப்படி கண்டறிந்தது என்றும்,  இந்திய விஞ்ஞானிகளும், நாசா விஞ்ஞானிகளும் இணைந்து தயாரித்த நாசாவின் பேலோடு  எம்3 (Moon Mineralogy Mapper onboard Chandrayaan-1) என்ற உபகரணம் எப்படி நிலவில் இருந்து எதிரொலிக்கும் சூரிய ஒளியில் இருந்து (hydroxyl absorption lines) தண்ணீர்த் துளிகள் இருப்பதை கண்டறிந்தது என்றும்  டாக்டர் கலாமிடம் விளக்கிச் சொன்னார்கள். 

அந்த மதிப்பாய்வுரை முடிந்தவுடன் நாசாவின் தலைமை விஞ்ஞானி சொன்னார்: இந்தியாவில் உள்ள இளம் விஞ்ஞானிகளும், இளம் பொறியாளர்களும், அடிப்படை அறிவியலிலும், கணிதத்திலும் ஆழமான அறிவுடன் உள்ளார்கள். அவர்களது ஒத்துழைப்பும், பங்களிப்பும்தான் இந்த சாதனையை நிகழ்த்த காரணமாக இருந்தது.

அப்போது டாக்டர் கலாம் என்னிடம், ‘‘கவனித்தாயா, பெரும்பாலும் மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் டாக்டர் படிப்பிற்குச் சென்றுவிடுகிறார்கள். ஐ.ஐ.டியில் பொறியியல் படிக்க செல்பவர்கள் வெளிநாட்டிற்குச் சென்றுவிடுகிறார்கள்.  ஆனால் அதற்கு அடுத்த நிலையில் மதிப்பெண் பெறுபவர்கள்தான், இஸ்ரோ போன்ற நிறுவனங்களில் வைக்கப்படும் தகுதித்தேர்வை எழுதி விஞ்ஞானிகளாக, பொறியாளர்களாக வருகிறார்கள், அவர்கள் புரிந்து படித்திருந்தால்தான் ISRO/DRDO/DAE/CSIR போன்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் வைக்கும் தேர்வில் வெற்றிபெற முடியும். எனவே அப்படி புரிந்து படித்து மனப்பாடத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களால் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர வைக்க முடியும் என்பதை அவர்கள் சந்திராயன்-1 வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்’’ என்றார்.

நண்பர்களே, வெறும் மனப்பாடத்தில் பெறும் மதிப்பெண்ணிற்கும், புரிந்து படித்து வாங்கும் மதிப்பெண்ணிற்கும் உள்ள வித்தியாசத்தை இது உணர்த்துகிறது.  இன்றைக்கு நமது கல்வி முறை மனப்பாடக் கல்வி முறையாக இருக்கிறது. அதில் இருந்து புரிந்து படிக்கும் கல்விமுறைக்கு நாம் மாற்றினால் அதன் பயன் ஒட்டுமொத்த இந்தியாவையும் அறிவார்ந்த வளர்ச்சிபெற்ற நாடாக மாற்றும்.

தமிழ்நாட்டில், 2018-19 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8.6 இலட்சம் மாணவர்கள். தேர்வு எழுதி, 7.7 லட்சம் மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.  தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 2.2 சதவிகிதம் மாணவர்கள்தான் (16923) 600க்கு 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள்.  8 சதவிகிதம் மாணவர்கள் (61,538) 500க்கும் மேல் 550க்கும் இடையே மதிப்பெண்கள்,  29.80 சதவிகிதம் மாணவர்கள் (2.29 இலட்சம்) 350க்கும் 500க்கும் இடையே, 60 சதவிகிதம் மாணவர்கள் (4.61 இலட்சம்) 350 மதிப்பெண்களுக்கும் கீழே எடுத்திருக்கிறார்கள்.  

சிந்தித்து பதிலளிக்க வேண்டிய கேள்விகள் தேர்வில் கேட்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.  அதனால்தான் அதிக மதிப்பெண் பெற்ற தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டது என்கிறார்கள்.  இந்த 2.2 சதவிகிதத்தில் இருந்து எத்தனை பேர் நீட் தேர்வுக்கு தேர்ச்சி பெறுகிறார்கள், ஐ.ஐ.டி. தேர்விற்கு தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதை பொறுத்து இந்த புதிய பாட திட்டம் சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தைவிட மேலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதா?  கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறதா?  மாணவர்கள் புரிந்துதான் படித்திருக்கிறார்களா என்பது தெரியவரும். இல்லையென்றால், மாணவர்கள் மீது இந்த புதிய பாடத் திட்டம் திணிக்கப்பட்டதாகத்தான் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.  

அது மட்டுமில்லை, கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவராமல், தேர்வில் மட்டும் மாற்றம் கொண்டுவந்த காரணத்தால், இந்த முறை 12-ஆம் வகுப்பு எழுதிய மாணவர்களில் 60 சதவிகிதம் மாணவர்கள் 350க்கும் கீழே எடுத்து மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.  எனவே நமது கல்வி முறை மாணவர்களை தகுதிப்படுத்துவதைவிட அவர்களுக்கு மன அழுத்தத்தைத்தான் அதிகமாகக் கொடுக்கிறது என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்கும் முறையை மாற்றி, புரிந்துகொண்டு பதிலளிக்கக்கூடிய வல்லமையை மாணவனுக்கு முதலில் கற்றுக்கொடுக்க தேவையான பயிற்சியை அளிக்க வேண்டும். அதுமட்டுமல்ல,  புரிந்துகொண்டு பதில் எழுதிய மாணவனின் பதில் பார்த்து புரிந்து விடைத்தாளை திருத்தும் வல்லமையை ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.  இந்த இரண்டும் நடக்க வேண்டும். அதற்கு குறைந்தது 3 ஆண்டு காலப் பயிற்சி ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் கண்டிப்பாக தேவை. அது நடந்தால், கண்டிப்பாக புரிந்து படித்து அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் சதவிகிதம் கூடும். 

இந்த வருடம் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட் ஆப் மதிப்பெண்ணும் குறையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான புதிய படிப்புகள் படிக்க வாய்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. எந்தப் படிப்பு படித்தாலும் அதில் சிறப்பாக படித்து, மற்ற தனித்திறன்களையும், Appitude என்ற சூட்சுமத் தகுதியை வளர்த்துக்கொண்டால் மட்டுமே வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அதுமட்டுமல்ல, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு, சிந்திக்கும் திறனையும், தேடித் தேடி கற்றுக்கொள்ளும் திறனையும், நேர்மறையாக சிந்தித்து ஆராய்ச்சி செய்யும் திறனையும், பேச்சு திறனையும், ஆக்கப்பூர்வமாக உரையாடும் திறனையும், எழுத்து திறனையும், தாய் மொழி தமிழிலும், இணைப்பு மொழியான  ஆங்கில மொழியிலும் சரளமாகப் பேச, எழுத, உரையாடும் திறனையும், நம் நாட்டை பற்றிய பொதுவான சமூக, பொருளாதார, அரசியல் அறிவாற்றலை வளர்த்துக்கொண்டால், எந்த படிப்பு படித்தாலும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.  எனவே வெறும் மதிப்பெண் மட்டும் ஒருவரை உயர் கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கு தகுதிப்படுத்துமா என்றால் அது இல்லை.  நம் கல்வி நிறுவனங்கள், தேர்வு மற்றும் மதிப்பெண்ணை மட்டும் அடிப்படையாக கொண்டு இயங்குவதாலும், பள்ளிக்கல்வி வெறும் மனப்பாட கல்வியால் கிடைக்கும் மதிப்பெண்ணை மட்டும் கொண்டு உருவாகிறது. எனவே இன்றைய பள்ளிக்கல்வி நமக்கு மேற்குறிப்பிட்ட தனித்திறன்களை பெற்ற மாணக்கர்களை உருவாக்குவதில்லை என்பதுதான் இன்றைய மிகப்பெரிய பிரச்னை. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது, உன் மனவலிமை ஒன்றே அளவில்லா மதிப்பினை உலக அரங்கில் ஈட்டிக்கொடுத்திடும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

ஆனால் மருத்துவ கல்விக்கு நீட் தேர்வு எழுதியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது, மற்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களுக்கு, நிகர்நிலை தனியார் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பித்தாலும் அதற்கென்று தனித்தேர்வு உண்டு. அதில் வெற்றிபெறுவதற்கு, அடிப்படை அறிவியலையும், கணிதத்தையும், புரிந்து படிக்கும் கல்வி முறையாலும், தனித்திறன் தகுதிகளை வளர்த்துக்கொள்வதாலும்,  கேள்விகளைப் புரிந்து அதற்கு மிகவும் வேகமாகவும், சரியாகவும் குறித்த நேரத்திற்குள்ளும் விடை அளிக்கும் திறனை வளர்த்துக்கொள்வதாலும்தான் தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள தரம் மிக்க கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி கற்க இயலும். அதிலும் பாடத்திட்டத்தை மட்டுமல்ல, தனித்திறனை பெற்று பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்டால்தான்  வேலைவாய்ப்புகள் சாத்தியம்.  ஆனால் இத்தனையும் பெற்ற 10 முதல் 20 சதவிகிதம் பேருக்குத்தான் வேலை கிடைக்கிறது. மீதி 80 சதவிகிதம் மாணவர்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை. அல்லது வேலைவாய்ப்பு இந்தியாவில் உருவாக்கப்படவில்லை என்பதுதான் இன்றைய நிலைமை.

135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருக்கும் நாம் என்ன உணவு உண்ண வேண்டும்? என்ன வியாதிக்கு என்ன மருந்து சாப்பிட வேண்டும்? என்ன வாகனம் ஓட்ட வேண்டும்? என்ன ஆடைகள் உடுத்த வேண்டும்?  எந்த விமானத்தில் பயணிக்க வேண்டும்? எந்த தண்ணீரை குடிக்க வேண்டும்? என்ன வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க வேண்டும்? என்ன ஆடம்பர பொருள்களை உபயோகிக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் அவர்களது ஆராய்ச்சியில் விளைந்த பொருள்களைக் கொண்டுவந்து நம் நாட்டை ஒரு வியாபார சந்தையாக்க பார்க்கிறது.  எந்த நாடு ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அது உலகை ஆளும் வல்லமை பெற்ற நாடாக மாறுகிறது. அறிவை ஏற்றுமதி செய்தால், வளத்தை இறக்குமதி செய்யலாம். அதை செய்தால் அந்த நாடு தன் நாட்டின் மக்களுக்கு வேலை வாய்ப்பை கூட்டுகிறது என்பது மட்டுமல்ல; தரமான தேவையான பொருள்களை உற்பத்தி செய்து, அதை உலக சந்தையில் விற்பதன் மூலம் தனி இடத்தை பெற்று தனது நாட்டை வளமாக்கிக்கொள்கிறது.

ஆனால்  டாக்டராக, இன்ஜினீயராக, வக்கீலாக, வணிகம் படித்து வியாபாரம் பண்ணுவதற்கும்,  ஓர் அரசாங்க பதவிக்கு தகுதித்தேர்வுக்கு நம்மை தகுதிப்படுத்துவதற்கான படிப்பாக நமது கல்வி முறை இருக்கிறது.  இதை தாண்டி நாம் சிந்தித்தாக வேண்டும்.

ஆனால் நண்பர்களே, இந்த உலகம் பல்வேறு திசைகளில் பன்முகத்தன்மையோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவால், நாமும் அதை ஒட்டி பயணப்பட்டாக வேண்டிய தேவை இருக்கிறது.  ஒவ்வொரு நாடும் புதிய, புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயம் செய்யும் முறையில் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, ரசாயன உரங்கள் தவிர்த்து, பூச்சிக்கொல்லி மருந்து தவிர்த்து இயற்கை விவசாயம் செய்யும் வகையில் மிகப்பெரிய மாற்றம்  நடந்து கொண்டிருக்கிறது. தொழில் துறையில் இன்டஸ்ட்ரி 2.0 -இல் இருந்து 5.0-விற்கு தகுதி பெற்று வளர்ந்து மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தி துறையில் ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), IIOT (Industrial Internet Of Things) சென்சார்கள் மூலம் மிகப்பெரிய மாற்றம் வந்துகொண்டிருக்கிறது. சேவைத் துறை அனைத்திலும் ஆன்லைன் வர்த்தகத்தால் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதன் விளைவாக நமது வாழ்க்கை முறையில் உணவில் இருந்து உபயோகம் வரை, போக்குவரத்தில் இருந்து எரிசக்தி வரை, கட்டமைப்பில் இருந்து கப்பல் துறை வரை பல்வேறு மாற்றங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.  இதற்கான சந்தை அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவும், சீனாவும்தான். சீனா அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருகிறது. அதற்கு காரணம், அறிவுசார் சொத்துகளை தங்களது நுண்ணறிவால் உருவாக்கி, உலகத்தில் முதல் நாடாக மாறி இருக்கிறது. ஏற்றுமதித் துறையில் அமெரிக்காவை 4-ஆம் இடத்திற்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்திருக்கிறது.

இந்தியா இன்னும் சாதி சண்டை, மதச்சண்டை, ஊழல், வாக்குக்கு பணம், அதனால் அரசியல் அதிகாரம் இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. இதைத் தாண்டி நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளை முன்னெடுத்து அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு உழைக்கும் நிலையை நாம் ஏற்படுத்தினால் மட்டுமே, கண்டிப்பாக உலக அரங்கில் நம் மாணவர்கள், இளைஞர்கள் சரித்திர சாதனை படைப்பார்கள். 

உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்பு கொள்ளுங்கள் -  vponraj@gmail.com

(தொடரும்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : மாணவர்கள் கல்விமுறை அப்துல் கலாம் இஸ்ரோ சந்திரயான் அமெரிக்கா நாஸா ஐஐடி

More from the section

அத்தியாயம் - 26
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 22