அத்தியாயம் - 14

நதிகளை இணைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், மரங்கள் வெட்டப்படும், மக்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்ற பயம் சுற்றுச்சூழலாளர்களிடம் இருக்கிறது.
அத்தியாயம் - 14

முடியும் என்றால்தான் வரலாறு!

சீனா, பாலைவனத்தைச் சோலைவனமாக்கும் வழியை தனது பல்கலைக் கழக ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்திருக்கிறது. தாவரங்களில் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களில் இருந்து ஒரு பசுமையான பசையை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த பசுமைப் பசை, பாலைவன மணலை, விவசாயம் செய்யும் மண்ணாக மாற்றுகிறது. இந்த பசுமைப் பசையை மணலில் கலக்கும்போது, அந்த மண் தண்ணீரை தன்னுள் சேமித்துவைக்கிறது. ஒவ்வொரு தாவரத்துக்கும் தேவையான மண் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் தேவையான சத்துகளையும், ஆக்ஸிஜனையும் தன்னுள் சேமித்துவைக்கும் தன்மையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆல்கே என்படும் பசும் தாவரம், தண்ணீரால்கூட அதன் சத்துகளை அழிக்க இயலாத தன்மை கொண்டதாக உருவாக்குகிறது. 200 ஹெக்டேர் பாலைவனத்தை, செழுமையான விவசாயம் செய்யும் மண்ணாக 6 மாதத்தில் மாற்றியது. பல்வேறு விவசாய விளைபொருள்களை உற்பத்தி செய்யும் பூமியாக அந்தப் பாலைவனம் மாறியது. நெல் முதல் மக்காச்சோளம் வரை, உருளைக்கிழங்கு முதல் சூரியகாந்தி பூ வரை அனைத்து விவசாயப் பொருள்களும் அந்த மண்ணில் செழித்து வளர்கின்றன. ஒரு ஹெக்டேருக்கு அமெரிக்க டாலர் 4500 (ரூ.3,15,000) முதல் 6500 (ரூ.4,55,000) டாலர் வரை செலவழித்து பாலைவனத்தை சோலைவனமாக்கினர். சாங்க்யுங் ஜியாடோங் பல்கலைக் கழக (Chongqing Jiaotong University) ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும்தான் இந்தச் சாதனையை செய்து முடித்தவர்கள். ஆராய்ச்சியின் பலன், பாலைவனம் சோலைவனமாகிறது. சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது மனித இனத்தின் இடைவிடாத தொடர்ந்த முயற்சியின் பலன்தான், இந்தப் பூமியை வாழும் பூமியாக மாற்றுகிறது. 

இதேபோல, சீனா 2002-இல் ஆரம்பித்து 2015-இல் 2000 கி.மீ. தொலைவு யாங்ட்ஸ் நதியை வடக்கில் இருந்து தெற்காக இணைத்துவிட்டது. திடமான செயலாக்கத் திறனாலும் தொலைநோக்குப் பார்வையாலும் நதிகளை இணைக்கிறது. சீனா மட்டுமல்ல, பல நாடுகள் நதிகளை இணைத்து சாதனை படைத்து தன் மக்களை வளமாக வைத்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் நதி நீர் இணைப்பிற்கு எதிர்ப்பு ஏன்? எதனால்? ஆராய்ந்து அறிவோம் நண்பர்களே..

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளிவைத்து, விவசாயிகளைக் கடன்காரர்களாக்கி, சுத்தமான குடிதண்ணீருக்குக்கூட அலையும் நிலையை ஏற்படுத்தி, வெள்ள நீரைக்கூட பயன்படுத்தத் தெரியாமல் இருக்கும் சூழ்நிலையில், நதிகள் இணைப்பு பைத்தியக்காரத்தனம் என்று தமிழகத்தில் தோன்றிய சில திடீர் நீரியல் நிபுணர்கள், சில போலி சுற்றுச்சூழல் விற்பன்னர்கள் மக்களை, இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். எனவே...

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள் 423) 

ஆம். இப்பொருளை நாம் ஆராய்ந்து தெளிவோம். மனித குலத்துக்குக் கடவுள் கொடுத்த வரம், கடலில் இருக்கும் உப்புத் தண்ணீர் வங்கிதான். இந்தப் பூமி, தோன்றிய காலம் முதல் இன்று வரை 70 சதவீதம் கடலில் இருக்கும் தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறது. அதாவது, பூமியில் 32.6 கோடி டிரில்லியன் கேலன் தண்ணீர் (ஏறத்தாழ 1,260,000,000,000,000,000,000 லிட்டர்) இந்தப் பூமியில் இருக்கிறது. பல கோடி நூற்றாண்டுகளாக இந்தத் தண்ணீர் சதவீதத்தில் பெரும்பாலும் எவ்வித மாற்றமும் இல்லை. கூடவும் இல்லை, குறையவும் இல்லை. கடலின் ஆழம் குறைந்தது 1000 மீட்டராக இருக்கிறது. இந்தப் பூமியில் இருக்கும் ஒட்டுமொத்த தண்ணீரில் 98 சதவீதம் கடலில் உப்புத் தண்ணீராக இருக்கிறது. 2 சதவீதம் தண்ணீர்தான் சுத்தமான தண்ணீராக மாறுகிறது. இதில் 1.6 சதவீதம் போலார் பகுதியில் பனிப்பாறையாகவும், கிளேசியராகவும் இருக்கிறது. இதில் 0.36 சதவீதம் நிலத்தடி நீராகவும், கிணறுகளிலும் கிடைக்கிறது. இதில் 0.036 சதவீதம்தான் நதிகள், ஆறுகள் மூலமாக ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள், ஊருணிகளில் கலந்து கடைசியில் கடலில் கலக்கும். 

இந்தத் தண்ணீர் சுழற்சி, பூமி தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து ஒரே மாதிரியாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் எவ்வித மாற்றமும் மிகப்பெரிய அளவில் ஏற்படவில்லை. ஐஸ் ஏஜ் என்று சொல்லப்படும் பனிக்காலத்தில், கிளேசியர் மூன்றில் ஒரு பகுதி பூமியில் தரையை ஆக்கிரமித்திருந்தது. அதனால் கடல் இன்றைய அளவில் 400 அடிக்கும் கீழே இருந்தது. புவி வெப்பமயமாதல் மூலம் 1.6 சதவீதம் தண்ணீரை தன்னகத்தே கொண்ட பனிப்பாறைகள், கிளேசியர்கள் உருகுவதன் மூலம் 98 சதவீதம் கடல் தண்ணீரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இந்த பூமியை அழித்துவிட முடியாது. ஒரு சில கடலோர பகுதியில் அதுவும் பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக ஒரு சில அடிகள் மூழ்குமே தவிர, சில சுற்றுச்சூழல்வாதிகள் பயமுறுத்துவதுபோல் மிகப்பெரிய அழிவு ஒன்றும் நடக்காது. 

இந்தப் பூமியில் பெய்யும் மழையில் 50 சதவீதத்துக்கும் மேல், அதாவது வருடம்தோறும் 100 அங்குல மழை கடலில் பெய்கிறது. எனவே கடலுக்குத் தேவையான நன்னீர் இதன்மூலம் தொடர்ந்து கிடைக்கிறது. நதி நீரை இணைப்பதால் கடலில் நன்னீர் கலக்காது என்ற வாதத்தில் எள்ளவும் உண்மையில்லை. வருடம்தோறும் பூமியில் பெய்யும் மழையின் அளவு பாலைவனத்தில் 0.1 அங்குலத்தில் இருந்து சில மலைப்பகுதிகளில் 900 அங்குலம் வரை பெய்கிறது. இந்தியாவில் சிரபுஞ்சியில் 905 அங்குலம் மழை பெய்து சாதனை படைத்திருக்கிறது. கடலைவிட தரையில்தான், அடர்த்தியான வனம் உள்ள மலைகளில்தான் அதிக அளவு மழை பெய்கிறது. தண்ணீர் சூல் கொண்ட மேகங்களில் தொடர்ந்து கடலில் இருந்து பூமியை நோக்கிப் பயணப்படுகிறது. எங்கு மேகம் தண்ணீரை தன்னகத்தே வைத்துக்கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறதோ, அங்கு மேகம் மழையாக தண்ணீரை விடுவிக்கிறது. அதை தன்னகத்தே ஈர்ப்பது, தட்ப வெப்ப சூழ்நிலை, குளிர் காற்று போன்றவை காரணமாக அமைகிறது. 

98 சதவீதம் கடல் தண்ணீரில் இருந்து பெறப்படும் ஏறக்குறைய 2 சதவீத மழைத் தண்ணீரில் 0.036 சதவீதம் மழைத் தண்ணீர்தான் இந்தியாவில் நதிகள் மூலம் கடலில் கலக்கிறது. நதிகளை இணைப்பதால் கடலில் மழை நீர் 100 சதவீதம் கலப்பது தடுக்கப்படும் என்பது சொத்தை வாதம். இந்த வெள்ள நீரில் 10 சதவீதத்தைதான் நமது மத்திய, மாநில அரசுகள் 80 மிகப்பெரிய அணைகள் கட்டி, 150 பில்லியன் கியூபிக் மீட்டர் வெள்ள நீரை சேமித்து வைத்திருக்கின்றன. மீதம் 90 சதவீதம் 1500 பில்லியன் கியூபிக் மீட்டர் வெள்ள நீர் கடலில் கலக்கிறது. 

கடலில் கலக்கும் இந்த வெள்ள நீரை பல்வேறு நதிகளை இணைப்பதன் மூலமும், அதிதிறன் நீர்வழிச் சாலைகளை ஏற்படுத்துவதன் மூலமும் குறைந்தது 50 சதவீதம், அதாவது 750 பில்லியன் கியூபிக் மீட்டர் வெள்ள நீரை நீர்ப்பாசனத்துக்காக ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், கால்வாய்கள் மூலம் விவசாயத்துக்கும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், சுத்திகரித்து குடிநீருக்கும், தேவையான நீரை தொழிற்சாலைக்கும், பல்வேறு கால்நடை மற்றும் விலங்கினங்களுக்கும் பயன்படுத்துவதற்கும்தான் கண்மூடித்தனமாக எத்தனை எதிர்ப்புகள்? மீதம் உள்ள 50 சதவீத வெள்ள நீர் கடலில் சென்றுதான் கலக்கும். மழை சுழற்சி தொடர்ந்து நடக்கும். 

நதிகளை இணைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், மரங்கள் வெட்டப்படும், மக்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்ற பயம் சுற்றுச்சூழலாளர்களிடம் இருக்கிறது. ஆனால் அந்தப் பயத்தில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று பார்த்தால், அவர்கள் வாதம் மக்களை பயமுறுத்துவதற்கான வெற்றுவாதமாக மட்டுமே இருக்கிறது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. எனவே போலி சுற்றுச்சூழல்வாதிகளின் பயமுறுத்தலுக்கு நாம் பயப்படத் தேவையில்லை. ஆனால் இதன் விளைவுகளைப் பற்றி அறிவுப்பூர்வமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். 

மக்கள், பூமியை தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் காற்று மாசு காரணமாக, பெட்ரோல், டீசல் வாகனங்கள் மூலமாக, மாசுபடுத்தி, நமது வாழ்வின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட சாதனங்கள் வெளியிடும் கரியமில வாயுக்கள் அனைத்தும் சேர்ந்து ஓசோன் படலத்தில் ஓட்டை பெரிதாகி, பனிப்பாறைகள் உருகுவதற்குக் காரணமாக இருக்கும் வளர்ந்த நாடுகள் அதை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். வளருகின்ற நாடுகள், இந்த விளைவைத் தவிர்க்க வேண்டிய அறிவார்ந்த செயல்களைச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன. எனவே நதி நீர் இணைப்பைவிட சுற்றுச்சூழலுக்கு அதிக மாசை ஏற்படுத்துவது வாகன உபயோகம், ஏசி உபயோகம், தொழிற்சாலைகள் மூலம் ஏற்படும் நீர் மாசு, நில மாசு, காற்று மாசு, நமது சாக்கடைகள், நெகிழி பயன்பாடுதான். இதைச் சரிசெய்யாமல், நதிகளை இணைப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும், அது மிகப்பெரிய அழிவை உருவாக்கும், உயிரினங்களை அழிக்கும், கடலில் கலக்கும் நன்னீர் அளவைக் குறைக்கும், இதனால் கடல் வற்றிவிடும் என்று பயமுறுத்திக்கொண்டு, சுற்றுச்சுழலுக்கு எதிரான அனைத்தையும் உபயோகித்துக்கொண்டு, நதிநீர் இணைப்புக்கு எதிராக சுற்றுச்சூழல்வாதிகள் வைக்கும் சொத்தை வாதங்களை தூக்கி எறிந்து நாம் சிந்தித்தால், அதன் அறிவார்ந்த உண்மைத்தன்மை விளங்கும். 

நதிகளை இணைப்பதால் வெட்டப்படும் மரங்கள் இருந்தால் அதற்கு சுலபமான தீர்வு வெட்டப்படும் மரங்களைவிட 10 மடங்கு மரங்களை வைத்தால் போதும். அணைகள் கட்டி வெள்ள நீரை சேமிக்கும் அதே நேரம், மலைகளில் அடர்த்தியான வனங்களை உருவாக்கும் திட்டத்தை அதி தீவிரமாக செயல்படுத்தினால் மட்டுமே, மழைநீர் சூல் கொண்ட மேகங்கள் நம்மை நோக்கி வரும், காலத்தில் மழையை பொழியும், நதிகள் வற்றாமல் தொடர்ந்து வரும். இதனால் மக்கள் இடம் பெயர்ந்தால் அவர்களுக்கு மறுவாழ்வை உருவாக்கி கொடுப்பதில் அரசுகள் தவறுவதால் ஏற்படும் துன்பங்களைக் காட்டி, நதிகளை இணைப்பதற்கு எதிர்ப்பை விதைக்கிறார்கள். நதிகளை இணைப்பதால் அதன் உயிரினங்கள் அழிந்துவிடும் என்ற வாதம் சொத்தையான, அறிவியலால் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். நதிகளின் தன்மைக்கேற்ப, அதன் மண்ணுக்கேற்ப, அதன் ஓட்டத்துக்கு ஏற்ப மனித நாகரிகம் உருவானதுதான் வரலாறு. அதைப்போல தண்ணீரில் வாழும் உயிரினங்களும் நீரின், நிலத்தின் தன்மைக்கேற்ப தங்களை தகவமைத்துக்கொள்ளும். அந்த சூழலைத் தாங்கி வாழும் புதிய உயிரினங்கள் உருவாகும். மாற்றம் என்பது மாறாதது. எனவே நதிகளை இணைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்ற வாதம் ஒரு சொத்தையான வாதம். 

எனவே, இந்தியா நதி நீர் இணைப்பை பற்றி ஆணையம் அமைத்து காலம் தாழ்த்தாமல் அதைச் செயல்படுத்த தீவிரமான மிகப்பெரிய திட்டத்தை உருவாக்க வேண்டும். 

இந்தியப் பொருளாதாரத்தில் 5 ஆண்டுகளில் 200 லட்சம் கோடி, 400 லட்சம் கோடியாக 2024-இல் உயரும்போது, 15 லட்சம் கோடியில் 10 ஆண்டுகளில் நதி நீரை இணைக்க முடியாது என்று யாரேனும் சொன்னால், அவர்களை நம்பாதீர்கள். நதிகள் இணைக்கப்பட்டு, அதிதிறன் நீர்வழிச் சாலைகள் உருவாக்கப்பட்டால், இந்தியாவில் விவசாயம் அது சார்ந்த உற்பத்தி மற்றும் தொழில் தலை நிமிரும். படித்த, படிக்காத அனைவருக்கும் மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பு கிடைக்கும். 

உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com