அத்தியாயம் - 13

2050-இல் உலகத்தின் மக்கள் தொகை 900 கோடியாக மாறும்போது, இந்த உலகத்திற்கு உணவளிக்கும் தேசம் சீனாவும், இந்தியாவும்தான்.
அத்தியாயம் - 13

மாற்றிச் சிந்தித்தால் மாற்றம்!

‘திரும்பத் திரும்ப ஒரே செயலைச் செய்துவிட்டு, வித்தியாசமான முடிவை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்’ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதாக ஒரு கூற்று உண்டு.

மனித வாழ்க்கையில் நாம் அனைவரும் திரும்பத் திரும்ப செய்தவற்றை தொடர்ந்து செய்து பழகிவிட்டோம். மாற்றி செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதைச் செய்ய மனதும், சுற்றுப்புறச் சூழலும் இடம் கொடுக்கவில்லை என்ற சாக்குபோக்கு கூறி, மாற்றி சிந்திக்கக்கூட நாம் அனுமதிப்பதில்லை. அப்புறம் எப்படி நமது செயல் மாறும்? அதன் பலன் மாறும்?

நேற்று செய்த செயல்களின் விளைவுதான் இன்றைய வாழ்க்கை. நமது வாழ்க்கை மகிழ்ச்சியாகவோ, கவலையாகவோ இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், நமது நேற்றைய நம்பிக்கையும், அதனால் நாம் செய்த செயல்களுமே. நமது துன்பத்திற்குக் காரணம் நமது செயல்கள்தான் என்றால், அந்த செயல்களை மாற்றி வேறு புதுவிதமான செயல்களைச் செய்தால் மட்டுமே நமது துன்பம் விலகும்; நன்மை கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

நமது செயலால் நமக்கு மட்டும் துன்பம் வந்தால்கூட நாம் தாங்கிக்கொள்ளலாம். அடுத்தவர்களுக்குத் துன்பம் வந்தால் உடனடியாக நாம் நமது செயலை மாற்றினால்தான், நல்வழியில் திருப்பினால்தான் வாழ்வு சிறக்கும்; மகிழ்ச்சி நிலைக்கும். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை?’ என்று புலம்பித் திரிவதில் வருவது இல்லை மாற்றம். மாற்றிப் பார் உன் செயலை. நீ எதிர்பார்க்கும் மாற்றம் உனக்குக் கிடைக்கும் பயனில் தெரியும்.

ஒரே வேலையை அதே மாதிரி திரும்பத் திரும்ப செய்வதால் எவ்வித புது மாற்றத்தையும் உருவாக்க முடியாது. ஆனால் ஒருநாள் நாம் செய்யும் வேலையே வேறு விதமாக மாறும். அப்போது ஒரே மாதிரியான வேலையைத் தினந்தோறும் செய்து பழகியவர்கள் தனித்துவிடப்படுவார்கள்.

2030-இல், இன்றைக்கு நாம் செய்யும் பல தொழில்கள் மாறிவிடும்; இல்லை ஒழிந்து வேறு தொழில்கள் வந்துவிடும். கொத்தனார் என்ற வேலையே 2030-இல் இருக்காது. நவீன கட்டட தொழில்நுட்பத்தில் 56 மாடி கட்டடத்தை 19 நாட்களில் சீனாவில் கட்டி முடித்துவிட்டார்கள். நாம் இன்னும் மணலை கடத்தி அடுத்த மாநிலத்திற்கு விற்றுக்கொண்டிருக்கிறோம். மலையை ஏலம் விட்டு எம் - சாண்ட் உடைத்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறோம். உலகம் ஆராய்ச்சிக்கும் அறிவிற்கும் முதலிடம் கொடுத்து, இரும்பில் இருந்து, நெகிழியில் இருந்து மறு சுழற்சி செய்கிறது. புதுவிதமான கட்டடப் பொருள்களை நானோ அறிவியல் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி, பசுமையான கட்டடங்களுக்கு மாறிவிட்டது. புதிய சிந்தனை உருவாகவில்லை என்றால், இருக்கும் வளங்களைக் கொள்ளையடித்து விற்று பிழைப்பு நடத்தி, நம் எதிர்கால சந்ததியைக் கையேந்தும் நிலைக்குத்தான் தள்ள முடியும். இதை மாற்றுவது யார்? மாற்ற வைப்பது யார்?

பெட்ரோல் பங்க் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். கடைசியில் இல்லாமல் போகும். இன்றைக்கு நாம் ஓட்டும் காரும், பஸ்ஸும், லாரியும், இரண்டு சக்கர வாகனங்களும் குப்பைக்குப் போகும். 20 ஆயிரம் பாகங்கள் கொண்ட பெட்ரோல், டீசல் வாகனங்கள் இல்லாமல் போகும். 20 பாகங்களே கொண்ட மின்சார கார்கள் வரும். அப்போது சொந்த கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும். ஓலா, ஊபர் போன்ற வாகனம் இல்லா வாகன கம்பெனிகள் உயரும். இன்றைக்கு இருக்கும் மோட்டார் வாகன ரிப்பேர் கடைகள் காணாமல் போகும். இந்த நிலையில் இன்றும் 10 ஆண்டு பழைமையான பாடத் திட்டத்தில் படிக்கும் பொறியியல் மாணவர்கள் நிலைமை என்னவாகும். கல்வியாளர்கள் சிந்தித்தார்களா? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் சிந்தித்தார்களா? நாம் சிந்தித்தோமா? படிக்கும் மாணவர்கள் சிந்தித்தார்களா? யார் சிந்திப்பது? யார் செயல்படுத்துவது?

ஆன்ட்ராய்ட் வந்தது, நோக்கியா போனது. ஐ போன் வந்தது, தனியிடம் பெற்றது. சாம்சங் செழித்தது, ஐபோன் குறைந்தது. இப்போது சாம்சங் தனது இருப்பிடத்தை தக்கவைக்க புது கம்பெனிகளிடம் போராடிக்கொண்டிருக்கிறது. இதுதான் மாற்றத்தின் தத்துவம். தொடர்ந்து வித்தியாசமாக சிந்திக்கவில்லை என்றால் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.

உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் வயல் சவுதி அரேபியாவில் உள்ள காவர் என்ற வயலாகும். ஒரு நாளைக்கு 3.8 மில்லியன் பேரல் எண்ணெய், 200 பில்லியன் கன அடி எரி வாயு உற்பத்தி செய்கிறது. இது இன்றைக்கு 25 சதவிகிதம் வறண்டுவிட்டது. உற்பத்தியில் 25 சதவிகிதம் தனக்கே உபயோகிக்கிறது சவுதி அரேபியா. 2030-இல் சவுதி அரேபியா எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையை எட்டும். இதுபோல உலகெங்கும் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி 2030 முதல் 2050-க்குள் முற்றிலும் குறைந்துவிடும்.

இந்த நிலைமையில்தான் 2005-இல் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் சிந்தனையில் உதித்தது 2030-இல் இந்தியா எரிசக்தி சுதந்திரம் பெறக்கூடிய கொள்கையும் செயல் திட்டமும். 24 மணிநேரமும் சூரிய ஒளி மின்சாரம் உருவாக்கும் சூரிய ஒளி செயற்கைக்கோள் திட்டம் படைத்தார். உலகின் 2-ஆவது பெரிய தோரியம் வளம் கொண்ட நம் நாடு, அதன்மூலம் எவ்வித குறைந்தபட்ச ஆபத்தும் இல்லா அணு மின்சாரம் அடுத்த 500 ஆண்டுகளுக்கு உருவாக்கும் ஆக்கம் கொடுத்தார். பயோ டீசல் மூலம் எரிசக்தி சுதந்திரம் எப்படி அடையலாம் என்ற இலட்சியத்தை கொடுத்தார். ஆனால் நம்மை ஆளும் ஆட்சிகள் இன்னும் எரிசக்தி பாதுகாப்பைக்கூட உறுதி செய்யவில்லை.

இன்றைக்கு உலக அளவில் அறிவியலும், தொழில்நுட்பம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும், ஆட்சியாளர்கள் செயல்பட்டாலும், செயல்படாவிட்டாலும் உங்களுக்கு தெரியாமலேயே நீங்கள் பார்க்கும் வேலை திடீரென்று மாறிவிடும். நீங்கள் இப்போது படிக்கும் படிப்பிற்கும், இப்போது பார்க்கும் வேலைக்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ, அதுபோல நீங்கள் பார்க்கும் வேலைக்கும், இனிமேல் வரப்போகும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் போகும். புதிய தொழில்நுட்பத்தை நாம் உருவாக்கவில்லை என்றால், நாம் அதை பயன்படுத்துபவர்களாக மட்டுமே இருப்போம். நம்மை ஆள்பவர்கள், நமது படித்த இளஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தேவையான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கவில்லை என்பதால், நமது வாழ்க்கையைத் தீர்மானிப்பது, தொடர்ந்து மாற்றத்தைச் சிந்தித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதை செயல்படுத்தும் வளர்ந்த நாடுகளே.

2050-இல் உலகத்தின் மக்கள் தொகை 900 கோடியாக மாறும்போது, இந்த உலகத்திற்கு உணவளிக்கும் தேசம் சீனாவும், இந்தியாவும்தான். ஆனால் சீனா 2002-இல் ஆரம்பித்து 2015-இல் 2000 கி.மீ. தொலைவு யாங்ட்ஸ் நதியை வடக்கில் இருந்து தெற்காக இணைத்துவிட்டது. நீடித்த நிலைத்த விவசாயக் கொள்கையை அறிவித்து உலகத்திற்கு உணவளிக்கும் தேசத்தில் நாங்கள்தான் முதலிடம் என்று அறிவித்திருக்கிறது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உழைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியா இன்றைக்கும் நதி நீர் இணைப்பை பற்றி சிந்தனைகூட இல்லாமல் இருக்கிறது. 2002-இல் நதி நீர் இணைப்பு செயல்பாட்டு குழு அமைத்தார்கள். 2019-லும் ஆணையம் அமைப்பேன் என்கிறார்கள். ஆனால் நதிகள் இணைப்பு மட்டும் கனவாகப் போய்விட்டது.

சீனாவின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தி திறன் 1 ஹெக்டேருக்கு 6 டன் நெல். இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தி திறன் 1 ஹெக்டேருக்கு 3 டன் நெல் உற்பத்தி. ஆனால் யார் தொடர்ந்து மாற்றி சிந்தித்து முயற்சி செய்கிறார்களோ அவர்களால்தான் வித்தியாசமான முடிவுகளைப் பெற முடியும். 1998-இல் பிகாரில் 2500 ஹெக்டேர் நிலத்தில் 500 விவசாயிகளை வைத்து அறிவியல் சார்ந்த, இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து 1 ஹெக்டேரில் 2.5 டன் நெல் விளைந்த இடத்தில் 6 டன் நெல்லையும். 1.5 டன் கோதுமை விளைந்த இடத்தில் 5 டன் கோதுமையும் உருவாக்கி காண்பித்தார் மாற்றி யோசித்த டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். இன்றைக்கு தமிழகத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் மாற்றி யோசித்த விவசாயிகள் 1 ஹெக்டேரில் 7 டன் நெல் விளைவித்தார்கள். சில விவசாயிகள் 24 டன் நெல் விளைவித்து சரித்திர சாதனை படைத்துள்ளார்கள். ஆனால் இதெல்லாம் வெற்றிபெற்ற தனித்தீவுகளாக இருக்கின்றனவே தவிர, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட வெற்றியாக மாறவில்லை. ஆனால் இன்றைக்கும் வருடம்தோறும் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு அரிசி, கோதுமை, தானியங்கள் போன்ற விவசாய உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. 3,78,000 மெட்ரிக் டன் தூர், உராட், மசூர், சன்னாவை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறது இந்தியா. இந்தியா முழுவதும் விவசாயிகள் நட்டப்பட்டு துயரத்தில் இருக்கிறார்கள்.

ஆனால், ஒரு சில பேரின் தொடர்ந்த மாற்று சிந்தனையால் விவசாயத்தில் சரித்திர சாதனை படைக்க முடியும். இந்தியாவின் நதிகள் இணைக்கப்பட்டால், அதி திறன் நீர் வழிச்சாலைகள் மூலம் வெள்ளநீரைச் சேமித்தால், இந்தியா நீடித்த நிலைத்த விவசாயப் புரட்சியை, அறிவியல் சார்ந்த இயற்கை வேளாண்மையால் கண்டிப்பாக உருவாக்க முடியும். இந்த இரண்டு திட்டங்களும் இந்தியாவை உலகிற்கு உணவளிக்கும் முதல் தேசமாக சீனாவை முந்தி முதலிடத்திற்கு வரச் செய்யும். அதுமட்டுமல்ல, படித்த அத்தனை இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பு தொழில் துறையில், உற்பத்தித் துறையில், சேவைத் துறையில் கிடைக்கும்.

ஒரே மாதிரி முயற்சியை முன்னெடுத்து தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துவிட்டு விதியின் மேல் பழியைப் போடுபவர்கள் சாதாரண மனிதர்கள். வித்தியாசமாகச் சிந்தித்து வெற்றியை பெறுவதுதான் இன்றைய தேவை.

உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com