மறக்க முடியாத திரை முகங்கள்!

8. அசலான நகைச்சுவைக்கு முன்னோடி இவர்தான்! என்.எஸ்.கிருஷ்ணன்

13th Sep 2019 10:00 AM | உமா ஷக்தி.

ADVERTISEMENT

திரைப்படங்களில் நகைச்சுவை தேவையா இல்லையா எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினால் பேச அவ்வளவு விஷயம் இருக்கிறது. காரணம் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை ஒரு திரைப்படத்துக்கு எந்தளவுக்கு பக்கபலமாகவும் அத்திரைப்படத்தின் தரத்தை உயர்த்தும் வண்ணம் இருந்ததோ அதற்கு நேர்மாறாக இன்றைய காலகட்டத்தில் அவை படத்தில் ஒட்டாமலும், இரட்டை அர்த்த வசனம் அல்லது வசைமொழியாகவும் மாறி இருப்பது காலக்கொடுமை. எல்லா படங்களையும் அப்படி வரையறுத்துவிட முடியாது என்றபோதிலும் கடந்த சில ஆண்டுகளாக நகைச்சுவை படங்களில் கூட மருந்துக்கும் அந்தச் சுவை இல்லாதது வருந்தத்தக்கதே.

கருப்பு வெள்ளை படங்களில் நகைச்சுவைக் காட்சிகளை இன்றும் சிந்தைக் கவரும் வண்ணம் இருக்கக் காரணம் அவை கருத்துக் கருவூலங்களாக இருந்தது மட்டும் காரணமில்லை. அவை சிரிக்கவும் வைத்தன.  பைத்தியக்காரன் (1947), நல்ல தம்பி (1949), அமரகவி (1952), பணம் (1952), டாக்டர் சாவித்திரி (1955), நம் குழந்தை (1955), முதல் தேதி (1955), காவேரி (1955), மதுரை வீரன் (1956)

நன்நம்பிக்கை (1956), கண்ணின் மணிகள் (1956), ஆசை (1956), சக்கரவர்த்தி திருமகள் (1957), புது வாழ்வு (1957), அம்பிகாபதி (1957), தங்கப்பதுமை (1959), தோழன் (1960) உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு வாழ்வில் குறிப்பிடத்தகுந்தவை.

**

ADVERTISEMENT

கலைவாணர் என்று ரசிகர்களால் போற்றப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் குமரி மாவட்டத்திலுள்ள ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ஆம் நாள் பிறந்தார். இளம் வயதிலிருந்து மிகவும் சூட்டிகையாக இருந்தவர். குடும்ப வறுமை காரணமாக படிப்பைத் தொடர இயலாமல், மளிகைக் கடையில் பணி புரிந்தார். அந்தப் பகுதியில் இருக்கும் நாடகக் கொட்டகையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதால், அங்கு சென்று சோடா மற்றும் தின்பண்டகளை விற்கும் சாக்கில் அந்த மாய உலகை வேடிக்கைப் பார்க்கும் சிறுவனாக மாறினார். அங்கு பார்த்த காட்சிகளை தன் நண்பர்களிடையே நடித்துக் காட்டுவார். இப்படித் தொடங்கியதுதான் அவரது நடிப்புப் பயிற்சி. அவரது நாடக ஆசையை அறிந்த அவரது தந்தை 1924-ம் ஆண்டு நாகர்கோயிலில் உள்ள பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்து விடுகிறார்.

அங்கு அவர் கற்றுக் கொண்டவைதான் வாழ்நாள் முழுவதும் அவரது சாதனைகளுக்கு வித்திட்டது. அங்கு நடிப்பு மட்டுமல்லாது, பாடவும், வில்லுப்பாட்டும் கற்றுக் கொண்டு ஒரு முழுமையான கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். அதன் பின்னர் நாடக துறையில் தீவிரமாக இயங்கத் தொடங்கினார்.

பல மேடைகள் ஏறி, மக்களின் மனங்களை வெற்றிக் கொள்ளத் தொடங்கிய என்.எஸ்.கே, ஒரு கட்டத்தில் சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936-களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும்.இதில் அவருடன் நடித்தவர் எம்.ஜி.ஆர். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.

இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி  பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வழங்கியவர்.

காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

கலைவாணரின் சிறப்பைக் கூற ஒரு கட்டுரைப் போதாது. ஒரு புத்தகமே எழுதினாலும் கூட காணாது. அவரைப் போற்ற அவர் நடித்த ஒரு சில படங்களைப் பார்த்தாலே போதும். உதாரணமாக, ராஜாதேசிங்கு என்ற படத்தில் கலைவாணர் நாட்டு மருத்துவராக நடித்திருப்பார். அவரைக் காண ஒரு பாடகன் வருவான். தன்னால் பாட முடியவில்லை குணப்படுத்தும்படி  கேட்கிறான். அவனிடம் பேசியபடி, தனது பீவியை (மனைவி) அழைத்து முதலில் தண்ணீர் கொடு வரச் சொல்வார். டி.ஏ.மதுரம் அதைக் கையில் எடுத்து அவர் இருக்கும்  அறைக்குள் வருவதற்கு முன்னால், அவரது குரல் அப்படியே கண்ணாடியை எடுத்து வா என்க, தண்ணீர் ஜாடியை ஓரிடத்தில் வைத்துவிட்டு கண்ணாடியை எடுக்கப் போக,  அவர் மீண்டும் ஒரு பொருளைக் கேட்க, மதுரம் கையில் ஏழெட்டுப் பொருள்கள் சேர்ந்துவிட அங்கு வந்த வேலைக்காரச் சிறுமியின் தலையில் பொருட்களை ஏற்றி அறைக்கு எடுத்துச் செல்கிறார். அறையில் அவர் பாடகனிடம் பேசிக் கொண்டே தனது வேலையாளிடம் வெளியே எத்தனை நோயாளிகள் காத்திருக்கிறார்கள் என்று கேட்க, அவன் எட்டு பேர் உள்ளார்கள் என்கிறான். நேற்று பத்து பேர் வந்திருந்தாங்களே என்று கலைவாணம் ஏற்றி முழுக்க, அதற்கு வேலையாள் அதுல ரெண்டு பேர் போயிருப்பாங்க என்க, பாடகர் பீதியில் உறைந்து போய் இருவரையும் பார்க்க, அடப் பாவி எங்க போயிருப்பாங்க என்று கலைவாணர் கேட்க, அவங்க குணமாகிப் போயிருப்பாங்க என்று சமாளிக்க அதற்குள் அந்தப் பாடகரிடம் அதி மதுரம் கொடுத்து அனுப்புவார். அப்போது பொருட்களுடனும் சிறுமியுடன் உள்ளே வந்த மதுரத்திடன் தேநீர் கேட்பார். அவர் முதலில் எடுத்து வந்த பொருட்களை எல்லாம் அடுக்கி வைக்கத் தொடங்க இதெல்லாம் என்ன என்று அவர் பதறுவார். எல்லாமே நீங்க கேட்டது, இனிமே கேட்கப்போறது என்று வெட்டி பதில் சொல்வார் மதுரம். விளையாடறயா நீ என்று அவர் ஆச்சரியத்துடன் கேட்க, மதுரம் அசால்டாக 'நான் அடுப்பைப் பாக்கறதா உங்களைப் பாக்கறதா' என்று குடும்பக்  கவலையை அவரிடம் பேசத் தொடங்குவார். தங்கள் மகனுக்கு திருமணம் நடத்த வேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, 'நடக்காது’ என்று சொல்லியபடி வேலையாள் உள்ளே வருவான். என்னடா நடக்காது என்க, அங்க ஒருத்தன் குழந்தைக்கு பச்சை வாதம், அவன் இப்பவே நடக்கணும்ங்கறான் அதான் நடக்காதுன்னு நான் சொன்னேன் என்று பதில் சொல்ல, கடுப்பாகிவிடுவார்கள் தம்பதியர். கலைவாணர் அவனிடம், போடா நோயாளியோட நீயும் உட்காரு என்று செல்லமாக கடிந்து கொள்வார்.

அப்போது டி எஸ் பாலையாவை சிலர் கை தாங்கலாக அழைத்து (கிட்டத்தட்ட இழுத்து) வருவார்கள். அவர் உடல் நடுக்கத்தில் இருக்கும். அவர் ஏதேதோ உளரத் தொடங்க, ஜன்னி என்று முடிவு செய்கிறார் கலைவாணர். எப்படி வந்தது ஜுரம் என்று அவரை அழைத்து வந்தவர்களிடம் கேட்க, அவர்கள் தானாக வந்தது என்கிறார்கள். மழையில் நனைந்தாரா என்பதற்கும் இல்லை என்று பதில் உரைத்தனர். அவர் ஆற்காடு நவாப்புக்கு வேண்டியவர் என்று தெரிய வர, அவரை பகடி செய்ய முடிவெடுக்கிறார் கலைவாணர். இந்த ஜன்னிக்கு ஒரே மருந்து புலிப் பால் தான் என்க, அதிர்ச்சி அடைகிறார் பாலையா. வேண்டாம் என்று உடன் வந்தவர் மறுக்க, ஒரு வேர் கொண்டு வந்த தரேன் என்றபடி எழுந்து ஏய் எங்கடா அந்தப் புலி என்று கத்த, அய்யோ புலியா என்ற கோஷ்டியினர் அதிர, அதற்குள் கயிறால் கட்டப்பட்ட புலியை அழைத்துக் வர, அது பாய்ந்து வந்து அங்கிருந்த தலையணையை கடித்துக் குதறுகிறது. பதறி அடித்து வாசல் பக்கம் ஓடிய பாலையாவும் அவருடன் வந்தவர்களும் பயந்தபடி என்னடா இப்படி தலைகாணியைக் கடிச்சு குதறுது என்க, ஆகாரம் எதுவும் போடலை போலிருக்க என்று அடியாள் சொல்ல, மனுஷன் கிடைச்சா என்ன ஆகும் என்று பயத்தில் பாலையா நடுநடுங்கி முணுமுணுக்க. அவர்கள் அருகில் வந்த கலைவாணர் 'என்ன, எப்படி இருக்கு? ஜுரம் போச்சா, நடுக்கம் போச்சா என்று கேலியாகக் கேட்பார். எல்லாம் சரியாகிடுச்சு என்று புலி அதிர்ச்சியிலிருந்து மீளாத அவர் நடுங்கிக் கொண்டிருக்க, அப்ப நோய் ஒண்ணும் இல்லை உனக்கு வேறு ஏதோ என்றபடி வேர் ஒன்றை தந்து சாப்பிடச் சொல்கிறார். இது வேறா விறகு மாதிரி இருக்கே என்று பாலையா அதைப் பார்த்துக் கூற, உனக்கு குறும்பும் இருக்கு போல, முதல்ல அதுக்கும் மருந்து தரணும் என்கிறார். எனக்கு நோய் இல்லை ஆனா கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு இருக்கேன் இப்படி போகும் இந்த நகைச்சுவை காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. ராஜாதேசிங்கு படத்தின் கதை திரைக்கதையை கவிஞர் கண்ணதாசன் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைவாணரின் திறமைக்குச் சான்றாக ஒன்றா இரண்டா எடுத்துக் காட்டுக்கள்? அவர் நடித்த எல்லா படங்களிலும் அவரது இயல்பான நகைச்சுவையும் உடல்மொழியும், வார்த்தை பிரயோகமும் முகபாவமும் அவரை சிரிப்பு டாக்டர் எல்லா காலங்களிலும் ரசிகர்கள் போற்றிப் புகழ்கிறார்கள். 

தொடரும்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT