மறக்க முடியாத திரை முகங்கள்!

11. உடல்மொழியால் உருட்டும் விழியால் ரசிகர்களை ஈர்த்த டி.ஆர்.ராமச்சந்திரன்

1st Nov 2019 10:00 AM | உமா ஷக்தி.

ADVERTISEMENT

பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நமக்கு பிடித்த படங்கள் என்று பட்டியல் எடுத்தால் நிச்சயம் நகைச்சுவை படங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும். தரமான நகைச்சுவை என்றால் அது பழைய படங்களில் மட்டும்தான் காணக் கிடைக்கும். சிரிப்புக்கு மட்டுமல்லாமல் சிந்தனையை தூண்டும் விதமாக அவை அமைந்திருக்கும்.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர். ராமச்சந்திரன், கே.ஏ.தங்கவேலு, நாகேஷ் என்று அந்தக் கால நகைச்சுவை நடிகர்களுக்கு தனியே ரசிகர்கள் இருந்தனர். அதிலும் டி.ஆர்.ராமச்சந்திரன் வித்யாசமான உடல்மொழியாலும் நகைச்சுவை பேச்சுத்திறனாலும், அப்பாவியான முகபாவத்தாலும் அன்றைய ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார்.

1949-ம் ஆண்டு வெளியான வாழ்க்கை என்ற படத்துக்கு பல சிறப்புக்கள் உண்டு. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனில், அதில் அகில இந்தியப் புகழ் பெற்ற நடிகை வைஜெயிந்திமாலா அறிமுகமாகிய படம் அது. இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் டி.ஆர்.ராமச்சந்திரன்.

டி.ஆர்.ராமச்சந்திரன் நாடகம் வழியாகத் திரைத்துறைக்கு வந்தவர். 25 படங்களில் கதாநாயகனாகவும், பின்னர் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் 30 ஆண்டு காலம் திரைத்துறையில் ஜொலித்தவர். கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

'உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் ...டடடா டடடா’

1949-ம் ஆண்டு வெளியான வாழ்க்கை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் வைஜயிந்திமாலாவின் பெயர் மோகனா. பெயருக்கு ஏற்றாற்போல மோகனப் புன்னகையுடன், துணிச்சலான இளம் பெண்ணாக நடித்திருப்பார். கதாநாயகனாக நடித்த டி.ஆர்.ராமச்சந்திரனின் பெயர் நாதன். நாகநாதன் என்ற பெயரை நாதன் என்று சுருக்கியிருப்பார். வங்கியில் பணிபுரியும் நாதன் எப்போதும் கோட் சூட் உடையில் கச்சிதமாகக் காணப்படுவார். புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வும், அதே சமயம் அப்பாவித்தனமுமான நாதன், துடுக்கான, துணிச்சலான கதாநாயகியான மோகனாவை எப்படி கரம்பிடிப்பார் என்பதே இப்படத்தின் கதை.

யாருமற்ற வீதியில் காரில் வந்து  கொண்டிருப்பார் நாதன். எதிரில் இன்னொரு காரில் வந்த மோகனாவின் கார் இவரின் காரில் மோதிவிடும். இருவரின் வேலைக்காரர்களும் சர்ச்சையில் இறங்க, இவர்கள் காரை எடுத்துக் கொண்டு அவர்களை விட்டுவிட்டு கிளம்பிச் சென்றுவிடுவார்கள்.

மோகனாவின் எதிர்வீட்டில்தான் அவர் தங்கியிருப்பார். இரவு பத்து மணிக்கு மோகனா ஒரு புதினத்தை வாசித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று மிருந்தங்கச் சத்தம் கேட்கும். அவருடைய வாசிப்புக்கு அது இடைஞ்சலாக இருக்கவே, எரிச்சல் அடைந்த அவர் பால்கனிக்கு வந்து, ‘மிஸ்டர், மிஸ்டர்’ என்று நாதனை அழைக்க, திரு திரு முழியுடன் வெளியே வந்த நாதன், எதிரில் அழகான பெண் கோபத்துடன் நிற்பதைப் பார்த்து என்ன விஷயம் என்று வினவ, அதற்கு அவள், பத்து மணிக்கு மேல் மிருதங்கம் வாசிப்பதை சுட்டிக் காட்டி நிறுத்தச் சொல்கிறார். அழகான பெண்ணின் வேண்டுகோளை மறுக்க முடியுமா. அவரும் ஒப்புக் கொள்கிறார். கலைமகள் இதழை ஒரே மூச்சில் படித்து முடித்த மோகனா, மகிழ்ச்சி அடைந்து, கிராமஃபோன் ரெக்கார்டரில் தனக்கு பிடித்த இசையை சுழலவிடுகிறார். இசைக்கேற்ப வளைந்து நெளிந்து அழகாக ஆட்டமும் ஆட, சத்தம் கேட்டு பால்கனிக்கு வந்த நாதன் எதிர்வீட்டை பார்த்து மெய்மறந்து ரசிக்கிறார். நடனம் முடிந்தபின் தன்னை மீறி கைதட்டிவிடவே, சற்று அதிர்ச்சியான மோகனா அவரை முறைத்து, என்ன தொந்திரவு செய்கிறீர்கள் என்று வினவ, அதற்கு அவர் அது நான் கேட்க வேண்டிய கேள்வி, பத்து மணிக்கு நான் மிருதங்கம் வாசித்த போது நிறுத்த சொன்னே, நியாயம் என்று நிறுத்தினேன், இப்படி 12 மணிக்கு அர்த்த ராத்திரில பாட்டு போட்டு டான்ஸ் வேற ஆடினா அது என்ன நியாயம் என்று கோபம் இல்லாமல் சாந்தமாக கேட்க, கோபத்தில் தன் கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தை அவர் மீது வீசி எறிந்துவிட்டு வீட்டினுள் சென்றுவிடுவார் மோகனா.

காதல் பரிசு என்ற புத்தகத்தைத்தான் அவர் தூக்கி எறிந்திருப்பார். சிரித்துக் கொண்டே ராமச்சந்திரன் அந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்வார். அதன் பின் அடுத்த நாள் மோகனாவின் வீட்டுக்கு வருவார் நாதன். நாதனின் மறைந்த தந்தை மோகனாவின் தந்தையின் நண்பர் என்று அறிந்தபின் அவர் வீட்டில் ஒரு நபரைப் போலாகிவிடுவார்.

கல்லூரிக்குச் செல்ல தயாரான மோகனா சீனி என்ற வேலையாளை அழைக்க, அவன் காரில் பெட்ரோல் இல்லை என்று கூறுவான். அப்போது நாதன் மோகனாவின் தந்தையிடம், பெட்ரோல் பி.எம்.ல கிடைக்குதாமே என்று கேட்க அவர் தனக்கு ப்ளாக் மார்க்கெட்டில் எல்லாம் பெட்ரோல் வாங்கும் பழக்கம் இல்லை என்பார்.

ஒரு முறை அவர்கள் வீட்டில் காப்பி குடிக்கும் போது முகம் சுளித்த நாதனைப் பார்த்து என்ன ஆச்சு என்று மோகனா கேட்க, ‘சீனிக்கு (வேலையாள்) என் மேலா அபார அன்பு. சீனி பஞ்சம் இருக்கும் இந்தக் காலத்துல சீனியை அளவுக்கு அதிகமா போட்டு இருக்கான்’ என்பார். மோகனா அதை ரசித்து, ‘அப்பா இவர் எப்பவும் ஹாஸ்யமா பேசறார் என்று பாராட்டுவார். அதற்கு அவர், ‘அந்த காலத்துல நான் காலேஜ் படிக்கறப்ப….’ என்று ஆரம்பிப்பார்.

மற்றொரு காட்சியில் பார்க்கில் நடந்து கொண்டிருந்த நாதனை வழிமறித்த ஒரு இளைஞன் அவரிடம், நீதானே நாதன் என்க அவர் தயக்கத்துடன் ஆமாம் என்க, என்னைத் தெரியலையா நான் உன் நண்பன் என்று ஆண் உடையில் மாறுவேடத்தில் வந்த வைஜெயிந்திமாலா அவரிடம் கலாட்டா செய்வார்.

அவர் குழப்பத்தில் இருக்கும் போதே மோகனான்னு ஒரு பொண்ணு. உனக்கு தெரியுமா என்று கேட்க. தெரியுமே என்று அவன் சொல்ல, அவளை திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறுவான். அதற்கு அவர் மோகனா ஒப்புக் கொண்டாளா என்று கேட்க, ஏன் இவ்வளவு பதற்றம், மோகனாகிட்டதான் பேசிட்டு இருந்தேன் என்று கூற, மோகனாவா இங்கேயே எங்க என்று அப்பாவியாகக் கேட்க அதோ இங்க, அங்கே என்று அவரை அலைக்கழித்து அவர் கோபத்துடன் ஓரிடத்தில் நின்றுவிடவே அருகில் வந்தவளிடம், கெட் அவுட் என்று சொல்வார். போகட்டுமா என்க போய் தொலை என்று கத்துவார். அதன் பின் தன் ஒட்டு மீசையை எடுத்துவிட்டு இப்பவும் போகட்டா என்று புன்னகைத்தபடி கேட்க,

நீயா மோகனா...என்று திகைப்பில் அப்படியே நின்றுவிடுவார். ஆனாலும் வீம்புக்காக கோபத்துடன் இருப்பதாக காட்டிக் கொள்ள அப்போதுதான் அந்த பாடல் இடம்பெறும். ‘உன் கண் உன்னை ஏமாற்றினால், என் மேல் கோபம் உண்டாவதேன்’ எத்தனை அழகான வரிகள். அந்தக் காலத்திலேயே நவீனமும் புதுமையும் இழைந்தோட காதலும் நகைச்சுவையும் கருத்துமாக வாழ்க்கை படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஆண் பெண் சமுத்துவத்தை முன் வைத்த திரைப்படம் அது. அதன் பின் டி.ஆர்.ராமச்சந்திரனின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. 

1938-ம் ஆண்டு நந்தகுமார் என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ராமச்சந்திரன், தொடர்ந்து சபாபதி, வாயாடி, திவான் பகதூர், ஸ்ரீ வள்ளி, நாம் இருவர், அடுத்த வீட்டுப் பெண், வாழ்க்கை, மாப்பிள்ளை, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, வண்ணக்கிளி, கள்வனின் காதலி, பாக்தாத் திருடன், விடி வெள்ளி, அன்பே வா, சாது மிரண்டால், தில்லானா மோகனாம்பாள், வாழையடி வாழை, மருமகள், படிக்காத மேதை, அறிவாளி, சிங்காரி, அன்பளிப்பு, என்ன முதலாளி சவுக்கியமா, அனுபவம் புதுமை, முயலுக்கு மூணு கால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

அவரது படங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமைந்த படங்கள், அடுத்த வீட்டுப் பெண் மற்றும் சபாபதி. இந்த இரண்டு படங்களின் நகைச்சுவையும் காலத்தால் அழியாதது. 1941-ம் ஆண்டு வெளியான சபாபதி படத்தில் நடித்து வெகுஜன ரசிகர்களை தன் வசப்படுத்தி விட்டார் டிஆர்.ராமச்சந்திரன். ஏ. டி. கிருஷ்ணசாமி மற்றும் ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அந்தக் காலத்தில் பணக்கார இளைஞனை பிரதிபலிக்கும் வண்ணம் அவரது கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும். அப்பாவியான முகபாவம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் கலவையாக தனது வித்யாசமான உடல்மொழியால் ரசிகர்களைக் கவர்ந்தவர் அவர். பாடகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை உடையவர்.

தமிழ்திரையில் மறுக்க முடியாத ஒரு நகைச்சுவை நடிகர் அவர். பல முன்னணிக் கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். கதாநாயகனாக, படத்தயாரிப்பாளராக, பின்னணி பாடகராக என பன்முகத் திறமை கொண்டவர் ராமச்சந்திரன். கோமதியின் காதலன் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களை அவர் தயாரித்துள்ளார். 

டி.ஆர். ராமச்சந்திரனின் சொந்த ஊர் கரூர் மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூர். அங்கு விவசாயியாக இருந்த ரங்காராவ், ரங்கம்மாள் ஆகியோருக்கு 1917 ஜனவரி 9 தேதி பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். நான்கு வயதிலேயே தாய் இறக்கவே தந்தை மறுமணம் செய்து கொண்டார். ராமச்சந்திரன் பாட்டியாரின் ஊரான குளித்தலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தார்.

சிறு வயதில் ராமச்சந்திரனுக்குப் படிப்பில் அதிக ஈடுபாடு இருக்கவில்லை. குடும்ப நண்பர் ராகவேந்திரராவ் என்பவரின் உதவியுடன் பல நாடகங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார் ராமச்சந்திரன். அதன்பின் எஸ். வி. வெங்கட்ராமன் புதிதாகத் தொடங்கிய நாடகக் கம்பெனி ஒன்றில் ராமச்சந்திரனும் அவரது நண்பர்களும் சேர்ந்தனர். கர்நாடகத்தில் கோலார் நகரில் தங்கியிருந்து நாடகங்களை நடத்தினர். அங்கும் அவர்களுக்கு கவனம் கிடைக்காமல் போகவே, வெங்கட்ராமன் திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து பெங்களூர் சென்றார்.

வெங்கட்ராமன் பெங்களூரில் ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரை சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனம் நந்தகுமார் என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தது. இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு வெங்கட்ராமனின் நாடகக் கம்பெனி நடிகர்கள் அனைவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். டி. ஆர். ராமச்சந்திரன் டி. ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார்.

1938-ல் வெளிவந்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் அவருக்கு சினிமா வாய்ப்பும் இல்லாமல் காலத்தைக் கழித்தார். அதன்பின் வாயாடி என்ற திரைப்படத்தில் மாதுரி தேவியுடன் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் நவீன மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை, ஆகிய படங்களில் நடித்தார். 1941-ல், மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில் வெளியான சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் டி. ஆர். ராமச்சந்திரனின் புகழும் பரவியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த ராமச்சந்திரன், ஏவி.எம். ஸ்டூடியோ முதன் முதலாக 1947-ல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949) என்ற வெற்றிப் படத்தில் வைஜயந்தி மாலாவுக்கு ஜோடியாக நடித்தார். பி. ஆர். பந்துலு தயாரித்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்தார். சிவாஜி கணேசன் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார்.

மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’, அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார். ஒரு படத்தின் கதாநாயகன் என்றால், நல்ல பலசாலியாக, வாள்வீச்சு தெரிந்திருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகளை எல்லாம் தகர்த்து எறிந்தவர் டி.ஆர். ராமச்சந்திரன். ஒல்லியான உடல்வாகு, உருட்டு விழிகள், வித்யாசமான உடல்மொழி என்று களம் இறங்கிய டி.ஆர்.ராமசந்திரனுக்கு சபாபதி படத்திற்காக 140 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட இப்படம் வெற்றிப் படமாகி பெரும் புகழ் தந்தது. இந்தப் படத்தில் 5 பாடல்களை சொந்தக் குரலில் பாடி அசத்தினார் டி.ஆர். ராமச்சந்திரன். 

சபாபதி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். ராமச்சந்திரனின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்த ராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.  

டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்களில் இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல் படமாக அமைந்தது. வாழ்க்கை (1949) படத்தில் நடித்த வைஜெயந்திமாலாவுக்கு அதுவே முதல் படமாக அமைந்தது. வானம்பாடி (1963) படத்தில் 'யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என்ற பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம் ஜோதிலட்சுமி, தனது முதல் திரைப்பயணத்தை துவங்கினார். வித்யாபதி (1946) படத்தில்தான் முதன் முதலாக எம்.என்.நம்பியார் அறிமுகமானார். சகடயோகம் படமே வி.என்.ஜானகி நாயகியாக நடித்த முதல் படம். பொன்வயல் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில் பாடினார். தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்கிய முதல் படம் சபாபதி (1941) (செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர் ஏ.டி.கிருஷ்ணசாமி).

டி. ஆர். ராமச்சந்திரனின் திருமணம் 1948-ல் நடந்தது. ஜெயந்தி, வசந்தி என்று 2 மகள்கள். ராமச்சந்திரன் 1954 ஆம் ஆண்டில் சொந்தத்தில் படக்கம்பெனி தொடங்கி ‘பொன் வயல்’ என்ற படத்தைத் தயாரித்தார். இதில், ராமச்சந்திரனின் ஜோடியாக அஞ்சலிதேவி நடித்தார். இத்திரைப்படத்திலேயே சீர்காழி கோவிந்தராஜன் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். எழுத்தாளர் தேவன் எழுதிய கோமதியின் காதலன் என்ற கதையை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரித்து, சாவித்திரியுடன் ஜோடியாக நடித்தார்.

நீண்ட காலம் மகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்த டி.ஆர்.ராமச்சந்திரன் தமது 73-ம் வயதில் நவம்பர் 30-ம் தேதி 1990-ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

தொடரும்

ADVERTISEMENT
ADVERTISEMENT