2. ஒரு நடிகனின் ஆசைக் கனவு! பி.யு.சின்னப்பா 

சினிமா தொடங்கி நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதன் வளர்ச்சியை இந்தளவு முன்னெடுத்து வந்த நடிகர்களை தமிழ் திரை உலகும் ரசிகர்களும் ஒருபோதும் மறக்க முடியாது.
2. ஒரு நடிகனின் ஆசைக் கனவு! பி.யு.சின்னப்பா 

சினிமா தொடங்கி நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதன் வளர்ச்சியை இந்தளவு முன்னெடுத்து வந்த நடிகர்களை தமிழ் திரை உலகும் ரசிகர்களும் ஒருபோதும் மறக்க முடியாது. எத்தனையோ நடிகர்கள் தங்கள் இன்னுயிரை விட சினிமாவை அதிகம் நேசித்தார்கள் என்பதை அவர்கள் வாழ்க்கை சரிதத்தைப் படிக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நடிப்பை தொழிலாக அல்ல, வாழ்க்கையாக அல்ல, உயிராகவே மதித்து, அதற்கெனவே வாழ்ந்து மறைந்த கலைஞர்களை தமிழ் திரையுலகில் இருந்துள்ளார்கள். அத்தகைய உன்னதமான நடிகர்களுள் ஒருவர்தான் புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா (P. U. Chinnappa) தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் கொடி கட்டிப் பறந்தவர்.

மெளனப் படங்கள் எடுக்கப்பட்ட காலகட்டம் முடிவடைந்து சினிமா பேசும் பொற்சித்திரமாக மாறத் தொடங்கிய காலத்தில்தான் சினிமா எனும் ஊடகத்தின் மீதான மோகம் மக்களுக்கு அதிகரித்தது. இது என்ன மாயாஜாலம்! கண் கட்டு வித்தையா, கண்களைத் திறந்தால் எதிரே சொர்க்கம் போன்ற ஏதோ தெரிகிறதே என்று வியந்து திரையைப் பார்த்த நம் மூத்த குடி அதைக் கண்டு அதிசயித்தது. சினிமா பார்த்தால் கெட்டுப் போவார்கள் என்று சினிமாவை அறவே தவிர்த்த மக்களும் உண்டு. இருகூறாக அன்றைய ரசிகர்கள் பிளந்திருந்தாலும், நடிகர்களாலும் இயக்குநர்களாலும் தொழில்நுட்பக் கலைஞர்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் செழித்து வளரத் தொடங்கியது தமிழ் சினிமா. அந்த தனிப்பெரும் வானில் தன்னுடைய கொடியை பறக்க விட்டவர் பி. யு. சின்னப்பா.
 
அன்றைய காலகட்டத்தில் சினிமாவை விட நாடகங்களுக்கு அதிக மதிப்பு இருந்து வந்தாலும், நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிப்பதென்பது பெரும் கனவாகவே இருந்தது. அனேக திரைப்படங்கள் மேடை நாடகங்களை அடிப்படையாக வைத்துதான் உருவாக்கப்பட்டன. பி.யு.சின்னப்பாவின் தந்தை உலகநாதப் பிள்ளை நாடக நடிகராக இருந்ததால், தனது ஐந்தாவது வயதிலேயே தந்தையுடன் மேடை ஏறினார் சின்னப்பா. தாய் மீனாட்சி அம்மாளைத் தனது 12 வயதில் இழந்து தவித்தார். நாடகங்களில் நடித்து அதில் கிடைக்கும் பணத்தில் தனது சிறு வயது தங்கைகள் இருவரையும் வளர்த்து ஆளாக்கியவர் அவர். பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வயதில் மேடை நாடகங்களில் தோன்றி நடித்து தனது இனிய குரல் வளத்தால் மக்கள் மனதில் இடம்பிடித்து புகழ் பெற்றார். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக சபாவில் தன் நாடக வாழ்க்கையை துவக்கியவர், பின்னர் மதுரை ஒரினினல் பாய்ஸ் கம்பெனிக்கு இடம்பெயர்ந்தார்.

நாடக மேடையில் சின்னப்பா நடிப்பது மட்டுமின்றி இனிமையான குரலில் பாடும் திறனையும் கொண்டிருந்தார் என்பதால் அவருக்கென தனி ரசிகர்கள் திரண்டு வந்தனர். அவர் ஒவ்வொரு முறை மேடையில் தோன்றும் போதெல்லாம்,  'பக்தி கொண்டாடுவோம்' என்ற பாடலைத்தான் முதலில் ராக தாளத்துடன் பாடுவார் சின்னப்பா. அவர் பாடி முடித்ததும் ரசிகர்கள் பெரிதும் ஆரவாரம் செய்து மீண்டும் ஒரு முறை பாடச் சொல்லிக் கேட்பார்கள். அந்த காலகட்டத்தில்தான் நாடக நடிகர்கள் சினிமாவிலும் தோன்றி புகழ் பெற்றனர். இந்நிலையில்தான் பி.யு.சின்னப்பாவிற்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திரகாந்தா எனும் நாடகத்தில் இளவரசன் வேடம் ஏற்ற சின்னப்பா அதில் அற்புதமாக நடித்ததைக் கண்ட ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம், அந்த நாடகத்தை படமாக்க முடிவு செய்து பி.யு. சின்னப்பாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்கள். இவ்வாறு தனது 19 வயதில் திரைத் துறைக்கு வந்த பி.யு.சின்னப்பா, 15 ஆண்டுகளில்  25 படங்கள் மட்டுமே நடித்திருந்தார். 

நடிப்பில், இசையில் மட்டுமல்ல பி.யு.சின்னப்பா பல கலைகளில் சிறந்து விளங்கினார்.  திரைத்துறையில் அவரது எட்டுக்கால் பாய்ச்சல் சாத்தியமானது சாதாரணமாக நடந்ததல்ல. நடிப்புத் திறன், பாடும் திறமை, சண்டைப் பயிற்சி, தெளிவான வசன உச்சரிப்பு, சிருங்கார ரச நடிப்பு இவை அனைத்தையும் ஒருங்கே பெற்றவர் பி.யூ.சின்னப்பா. தனது பேராற்றலால் தமிழ் திரைத் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றார் என்றால் மிகையில்லை. சங்கீதத்தையும் சாதகத்தையும் மட்டும் நம்பியிராமல், பி.யு.சின்னப்பா உடலை பேணவும் அதன் சாத்தியங்களை அறியவும் முனைந்தார். இன்றைய நடிகர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த அவர் தீவிர உடற்பயிற்சி, எடை தூக்கும் வித்தை என பலவற்றையும் கற்றார். மல்யுத்தம், குத்துச் சண்டை போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார். புதுக்கோட்டையில் ராமநாத ஆசாரியிடம், கத்திச் சண்டை, கம்புச்சண்டை, போன்றவைகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றார். இவை தவிர சுருள் பட்டா கத்தி வீச்சையும் சின்னப்பா அனாயசமாகக் கற்றுத் தேர்ந்தார். காரைக்குடியில் சாண்டோ சோம சுந்தரம் செட்டியார் என்பவர் உடற்பயிற்சி நிலையம் ஒன்றினை நடத்தி வந்தார். அதில் சேர்ந்த சின்னப்பா, ஸ்ரீசத்தியா பிள்ளை என்பவரிடம் அவர் குஸ்தி கற்றுக் கொண்டார். இது மட்டுமின்றி அன்றைய காலகட்டத்தில் வீர தீர சாகசங்கள் எதுவாக இருந்தாலும் அதில் பங்கெடுத்து தன் இருப்பை வெற்றி வாகையாக்கி நியாயப்படுத்திக் கொண்டவர் பி.யூ.சின்னப்பா. திரை உலகில் மட்டுமல்லாமல் திரைக்கு வெளியிலும் வீரனாக வாழ்ந்து பெரும் புகழ் பெற்றவர் அவர். ஒரு முறை அன்றைய புதுக்கோட்டை நீதிபதி ஸ்ரீ ரகுநாதய்யர் முன்னிலையில் வீர சாகசம் ஒன்றினை நிகழ்த்தினார் சின்னப்பா. தமது உடல் முழுவதும் பிரம்பு வளையங்களை மாட்டிக் கொண்டு தீப்பந்தங்கள் செருகப்பட்ட கம்புகளை கையில் ஏந்தி விதவிதமான சாகஸங்களைச் செய்து காட்டி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்திவிட்டார். அன்றைய தினத்தில் அச்சாதனைக்காக நீதிபதியிடம் சிறப்பு பரிசுகளை சின்னப்பா பெற்றார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் திரைப்படங்கள் பற்றி முதன்முதலில் பேச வைத்தவர் பி.யு.சின்னப்பாதான். அவர் நடித்த முதல் படமான 'சவுக்கடி சந்திரகாந்தா’ முற்றிலும் வித்யாசமான கதைக் களனைக் கொண்டது. இந்தப் படத்தில் அவரது இயற்பெயரான சின்னசாமி என்றே திரையில் காண்பிக்கப்பட்டது. அதற்கு அடுத்தடுத்த படங்களில் சின்னசாமி என்ற பெயர் சின்னப்பாவாக மாறியது. அதன்பின் வரிசையாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். பி.யு.சின்னப்பா நடிப்பில் வெளியான படங்கள் கால வரிசையின்படி : சந்திரகாந்தா (1936), ராஜமோகன் (1937), பஞ்சாப் கேசரி (1938), யயாதி (1968), அனாதைப் பெண் (1938), மாத்ரு பூமி (1939) உத்தம புத்திரன் (1940), ஆரியமாலா (1941), தர்மவீரன் (1941) தயாளன் (1941), கண்ணகி (1942), பிருதிவிராஜன் (1942), மனோன்மணி (1942), குபேர குசேலா (1943), மஹா மாயா (1945), ஜெகதல ப்ரதாபன் (1944), ஹரிச்சந்திரா (1944), அர்த்தநாரி (1946), விகடயோகி (1946), துளஸி ஜலந்தர் (1947), பங்கஜ வல்லி (1947), கிருஷ்ண பக்தி (1948), மங்கையர்க்கரசி (1949), ரத்னகுமார் (1949), வனசுந்தரி (1951) சுதர்சன் (1951). பி.யூ. சின்னப்பா நடிக்கத் தொடங்கி முடிவடையாத படம் கட்டபொம்மு (1948). இதில் சுதர்சன் அவர் இயற்கை எய்திய பிறகு வெளிவந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு படங்களுக்குப் பிறகு சின்னப்பா பஞ்சாப் கேசரி, ராஜ மோகன், அனாதைப் பெண், யயாதி, மாத்ரு பூமி ஆகிய ஐந்து படங்களில் நடித்தார். ஆனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு இப்படங்கள் வெற்றியடையவில்லை. இதனால் மனம் துவண்டு, சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார் சின்னப்பா. இந்த காலகட்டத்தில்தான், அதாவது 1939-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்திரம் சின்னப்பாவைப் பார்க்க புதுக்கோட்டைக்கு வந்தார். திறமையான நடிகரான பி.யு. சின்னப்பாவைத் தேடிப் பிடித்து தனது 'உத்தம புத்திரன்' படத்தில் இரட்டை வேடம் அளித்து, மீண்டும் பி.யு. சின்னப்பாவின் திரை வாழ்க்கையை ஒளிரச் செய்தார். அனாயசமான அவரது நடிப்பு ரசிகர்களை மீண்டும் ஈர்த்தது. உத்தம புத்திரன் எல்லா வகையிலும் புகழ் அடைந்து, வணிகரீதியாகவும் சாதனை பெற்றது. தொடர்ந்து பி.யு. சின்னப்பா தயாளன், தர்ம வீரன், பிருதிவிராஜன், மனோன்மணி ஆகிய படங்களில் நடித்தார். மற்ற படங்கள் சற்றே சறுக்கினாலும், மனோன்மணி அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. கண்ணகி அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

பாகவதர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் சகலகலா வல்லவர் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட பி.யூ.சின்னப்பா ரசிகர்களும் கருத்து மோதல்கள் உருவாகின. சில இடங்களில் சண்டைகளும் நடந்தன. தமிழ் சினிமாவின் இரட்டையர் மோதல்கள் அப்போதிலிருந்து தோன்றியது எனலாம். துணிவே துணை என்ற மனோபாவம் கொண்டவர் அவர். அரிய பெரிய கலைகள் அவரிடம் இருந்தாலும் எளிதில் உணர்ச்சிவசப்படுவது, மற்றும் கோபம் கொள்வது மட்டுமே ஒரு சிறு குறையாக இருந்தது. ஆனால் வந்த சுவடின்றி அந்தக் கோப தாபங்கள் மறைந்துவிடும் என்று சக நடிகர்கள் அவரைப் பற்றி சிலாகித்திருக்கிறார்கள். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் படங்கள் குறித்த பத்திரிகை விமரிசனங்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் மரியாதை செலுத்துபவராக இருந்தார் பி.யு.சின்னப்பா. 

ஆரவாரமான புகழ், அதளபாதளமான தோல்வி, ஏற்றம் இறக்கம், இளம் வயதிலேயே மரணம் என்ற அந்த உன்னதக் கலைஞனின் வாழ்க்கை பெரும் அலைக்கழிப்புக்களுடன் தான் பயணித்தது. தமிழ் திரை உலகின் முதல் சகலகலா வல்லவரான பி.யு. சின்னப்பா,  அந்தக் காலத்திலேயே பல பரிசோதனை முயற்சிகளை முன்னெடுத்து புதிய சாதனைகளை தன் குறுகிய கால திரை வாழ்க்கையில் நிகழ்த்தி காட்டினார். ஒரு திரைப்படம் தான் எதிர்ப்பார்த்த அளவு இல்லாமல் தோல்வியடைந்து விட்டால், கவலைப் படுவாரே, தவிர மனம் உடைந்து போக மாட்டார். அத்தகைய ஒரு படமாகிவிட்ட மாத்ரூபூமிக்கு பின் அவர் சில காலம் நடிக்காமல் இருந்தார். காரணம் எதை விடவும் சுயமரியாதையை போற்றியதால்தான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேளாமல் வாளாயிருந்தார். பொறுமையுடன் காத்திருந்தார். அப்போது அவர் வீடு தேடி வந்த வாய்ப்புதான் டி.ஆர்.சுந்தரத்தின் உத்தம புத்திரன் திரைப்படம். இரட்டை வேடத்தில் முதன் முதலில் தோன்றிய தமிழ் கதாநாயகன் என்ற பெருமை அவருக்கு அப்படித்தான் வந்து சேர்ந்தது. பெரும் வெற்றி பெற்ற அத்திரைப்படம் ரசிகர்களிடையே நீண்ட காலம் பாராட்டுதல்களை பெற்றுத் தந்தது. வெற்றி தோல்விகளில் மனம் துவண்டுவிடாமல் தன் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும், சாகச மனப்பான்மையாலும் தன்னிகரற்ற திரை நட்சத்திரமாக ஜொலித்தார் பி.யு. சின்னப்பா. அவருடைய சாதனையை மீண்டும் அவரே தான் முறிக்க வேண்டியிருந்தது. ஆம்! இரட்டை வேடத்தைக் கண்டே வியந்து கிடந்த திரை ரசிகர்களை, பட்சிராஜா பிலிம்ஸ் தயாரிப்பான ஆர்யமாலா எனும் படத்தில் தசாவதாரம் (பத்து வேடங்கள்) எடுத்து பெரும் ஆச்சரியத்தை விளைவித்தார். மீண்டும் சில ஆண்டுகள் கழித்து மங்கையர்கரசி என்ற திரைப்படத்தில் மதுராந்தகன், காந்தரூபன், சுதாமன் என்ற பெயர் கொண்ட மூன்று கதாபாத்திரங்கள் அவர் ஒருவரே தோன்றி மீண்டும் மீண்டும் ரசிகர்களின் ஆர்வத்திற்கு விருந்தளித்தார் இந்த வித்தகர்.

மெளனப் படமாக இருந்த சினிமா, டாக்கீஸ் என்று பெயரெடுத்து பேசும் படமாகி பின்னர் பாடும் படங்களாக உருமாறின. ஆனால் பி.யு. சின்னப்பாவைப் பொருத்தவரையில் இவை மட்டுமே சினிமா அல்ல. அதற்கு மேலும் இதில் வித்தைகள் செய்யலாம் என்று மனதார நம்பினார். அதன் பயனாக தனது நீண்ட கால சண்டைப் பயிற்சியை திரைப்படங்களில் புகுத்தி அன்றைய ரசிகனை மெய்சிலிர்க்கச் செய்தார். அவரது தாரக மந்திரம் வேகம் வேகம் அசாத்திய வேகம். மெதுவாக அசைந்து கொண்டிருந்த திரையை சற்று துரிதப்படுத்தியவர் அவர்தான் எனலாம். தனது எண்ணத்தில், சொல்லில் மற்றும் செயலில் அதீத வேகம் காட்டியவர் என்பதற்கு உத்தம புத்திரன் படத்தின் சண்டைக் காட்சிகளே சாட்சி. இரட்டை வேட சின்னப்பாவைப் பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்களுக்கு, 1944-ம் ஆண்டு வெளியான ஜகதலப் பிரதாபன் பேரதியசமாக த் திகழ்ந்தது. அதில் ஒரு பாடல் காட்சியில் ஐந்து பி.யூ சின்னப்பாக்கள் தோன்றுவார்கள். அக்காட்சி மிகவும் சுவாரஸ்யமானது. தேவேந்திரனின் மருமகனான ஜகதலப் பிரதாபன் (பி.யு. சின்னப்பா) மனைவி சசிரேகா கோபித்துக் கொண்டு தன்னிடம் சொல்லாமல் இந்திரலோகத்திற்கு சென்றுவிட்டதால், அவளைத் தேடி இந்திரலோகம் வருகிறான். பூலோகவாசியான பிரதாபனின் திறமைகளை சோதிக்க இந்திரன் ஒரு போட்டியை அறிவிக்கிறான். சகல கலைகளிலும் வல்லவன் என்று ஜகதலப் பிரதாபன் நிரூபித்தால்தான் சசிரேகாவை சந்திக்க முடியும் என்று கூறவே, 'தாயை பணிவேன்' என்று பாடத் தொடங்குவான் பிரதாபன்.  

ஐந்து சின்னப்பாக்களை ஒரே திரையில் கண்டவர்கள் எல்லாம், இவருக்கு மட்டும் இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என வியப்பில் ஆழ்ந்தனர் அவர்களுக்கான பதில் ஒன்றுதான் இருந்தது சின்னப்பாவிடம், அது சினிமா மீதான தீராத காதல். தமிழ் சினிமாவில் இன்று நிகழும் வளர்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடி அவர்தான். பி.யு.சின்னப்பா நடித்த ஹரிச்சந்திராதான் தமிழின் முதல் டப்பிங் படம். கன்னடத்தில் இருந்து இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. போலவே, 1951-ல் வெளியான வனசுந்தரி என்ற படத்தில் சின்னப்பாவிற்கு ஜோடியாக நடித்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. அந்தக் காலத்தில் பெரிதும் ரசிக்கப்பட்ட இணையர் இவர்கள்தான். இந்தப் படத்தில்தான் முன்னணி நாயகர்களுக்கு முதன்முதலில் பின்ணனி குரல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் சொந்தமாகப் பாடும் திறமை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இன்றைய பல பரிசோதனை முயற்சிகளுக்கும் பால பாடம் அவர் தொடங்கி வைத்ததுதான். அன்றைய காலகட்டத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடலை தனது திரைப்படத்தில் முதன் முதலாகப் பாடியவர் பி.யூ.சின்னப்பா. பாரதிக்கும், தமிழ் திரைத்துறைக்கும் அவர் அழியாப் பெருமை சேர்த்தார். 

பிருதிவிராஜன் எனும் படத்தில் சம்யுக்தையாக நடித்த நடிகை ஏ.சகுந்தலாவை நிஜ வாழ்க்கையிலும் காதலித்தார் சின்னப்பா. ஏ.சகுந்தலாவை 1944-ம் ஆண்டு சட்டப்படி திருமணம் செய்துக் கொண்டார் பி.யு.சின்னப்பா. இத்தம்பதியரின் ஒரே மகன் பி.யு.சி.ராஜபகதூர். தம் வாழ்நாள் முழுவதும் பல சாதனைகள் நிகழ்த்திய அவர், ஏனோ பொது விழாக்களில் ஆர்வம் காட்டியதில்லை. தாமரை இலை தண்ணீராய் எல்லாவற்றிலிருந்தும் விலகியே இருந்தார். சிறு வயது முதலே நடிப்பைத் தவிர வேறு எதிலும் அதிகப் பற்று அற்றவராக இருந்த சின்னப்பா, ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையவராக இருந்தார். 

தமிழ் திரையுகில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த பி.யு. சின்னப்பா 1951-ம் ஆண்டு தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் காலமானார். தவ நடிக பூபதி என்று புகழப்பட்ட அந்த உன்னத கலைஞனை இழந்த திரை உலகம் பேரிழப்பிற்கு உள்ளானது.

நன்றி : வெம்பார் மணிவண்ணன், யூட்யூப் சானல் காணொளி

தொடரும்...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com