வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

7. நடனத்திலிருந்து நடிப்புக்கு! புகழ் வெளிச்சம் பெற்ற சி.ஐ.டி.சகுந்தலா!

By உமா ஷக்தி.| Published: 23rd August 2019 12:22 PM

 

நல்ல உயரம், கட்டைக் குரல், சற்று தடிமனான உடல்வாகு இப்படியொரு நடிகையை தமிழ்த் திரை கண்டுள்ளது. அவர்தான் சி.ஐ.டி சகுந்தலா. இவருக்கு இப்படி இந்தப் பெயர் வந்தது? மாடர்ன் திடேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சி.ஐ.டி.சங்கர் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய்சங்கருடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார். அதன் பின்னர்தான்அவரது பெயருடன் அடைமொழியாக சி.ஐ.டி இணைந்தது. அதற்குப் பின்தான் சகுந்தலா சற்று பிரபலமடைந்தார். அதற்கு முன் திரைப்படங்களில் நடனக் காட்சிகளில் பின் வரிசையில் நடனமாடியவர், ஒரு சில படங்களில் கதாநாயகியின் தோழியாக நடித்தவர். சிறு வேடங்கள் நடித்த பின் கதாநாயகியாக பிரகாசித்தவர்கள் வெகு சிலர். ஏ.சகுந்தலா அத்தகைய ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் அனைத்திலும் நடித்து தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் சகுந்தலா. 600–க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும், குணசித்திரக் கதாபாத்திரங்களிலும், நடனத்தில் மற்றும் வில்லியாகவும் நடித்துப் புகழ் பெற்றவர்.  

பன்முகத் திறமை கொண்ட சி.ஐ.டி சகுந்தலா, அந்நாட்களில், 'சூரியன் மேற்கேயும் உதிக்கும்' என்ற நாடகத்தில் நடித்துள்ளார். நான்கு அண்ணன், தம்பிகள், இரண்டு தங்கைகள் என இவருக்கு பெரிய குடும்பம். சேலம், அரிசிபாளையம் பகுதி அவரது சொந்த ஊர். சிறு வயதிலேயே சென்னையில் லலிதா - பத்மினி - ராகினி நடத்திய நடன நிகழ்ச்சியில் சேர்ந்து, நடனம் கற்றுக் கொண்டார். அதன்பிறகுதான் படிப்படியாக நுழைந்தார்.

தவப்புதல்வன் என்ற படத்தில் வில்லியாக நடித்த சகுந்தலாவின் நடிப்பு அந்நாட்களில் அவரைப் பார்த்து பயப்படும் அளவிற்கு ரசிகர்களிடையே புகழ் பெற்றது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பார்வையற்றவராக நடித்த அப்படத்தில் அவருக்கு எதிராக சதி செய்யும் அவரைப் பழி வாங்கு ஒரு கொடூர வில்லியாக அற்புதமாக நடித்திருப்பார். சிவாஜியுடன் அவர் நடித்த படிக்காத மேதை, கிரகப்பிரவேசம், வசந்த மாளிகை, தில்லானா மோகனாம்பாள், எங்க மாமா ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

தரிசனம், எதிர்காலம், என் அண்ணன், என் மகன், கல்யாண ஊர்வலம், கட்டிலா தொட்டிலா, தேடி வந்த லெட்சுமி, ரோஷக்காரி, நாடகமே உலகம், பொன்னூஞ்சல், அதிர்ஷ்டக்காரன், கருந்தேள் கண்ணாயிரம், மஞ்சள் குங்குமம், திருமலை தென்குமரி, தெய்வக் குழந்தைகள் உள்ளிட்ட படங்கள் வெற்றி வாகை சூடின. சிவாஜி, எம்.ஜி.ஆர், போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். 

முந்தைய கால படத்தில் தெளிவான கதைகளும், பாடல்களும் இருந்தது. நவீன தொழில் நுட்பங்கள் புகுந்ததால் கதைக்கு யாரும் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று ஒரு பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சகுந்தலா.

சகுந்தலாவின் நடனத்துக்கு அன்றைய காலகட்டத்தில் பல ரசிகர்கள் இருந்தனர்.  சினிமாவில் கதாநாயகிகள் க்ளாமராக நடனம் ஆடுவதற்கு முந்தைய காலகட்டத்தில், நடனக் காட்சிகளில் வெளுத்து வாங்கிய நடிகைகளுள் முக்கியமானவர் சகுந்தலா. நடிப்பிலும் சரி நடனத்திலும் சரி தனித்தன்மையுடன் விளங்கியவர் அவர் என்றால் மிகையில்லை. உதாரணமாக பாரத விலாஸ் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசுடன் திரையில் தோன்றும் இந்தப் பாடல் காட்சியில் அவரது அனாயசமான நடனமும் அலட்சியமான நடிப்பும் அன்றைய ரசிகர்களை மட்டுமல்லாமல் இன்றைய ரசிகர்களையும் கவர்ந்துவிடும்வகையில் அமைந்துள்ளது. 

 

திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பின்னர், தற்போது சகுந்தலா சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்தவர் அவர். ஈரோட்டில், கவிதாலயம் இசை பயிற்சி பள்ளி சார்பில், நடிகை சி.ஐ.டி. சகுந்தலாவுக்கு 'வாழ் நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. 

தொடரும்

காணொளி நன்றி - Rajshri Tamil

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Cinema kollywood films old movies

More from the section

8. அசலான நகைச்சுவைக்கு முன்னோடி இவர்தான்! என்.எஸ்.கிருஷ்ணன்
6. கவுண்டமணி, வடிவேலுவிற்கு முன்னோடி இவர்தான்! சுருளி ராஜன்!
5. அதான் எனக்குத் தெரியுமே! நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்த டி. பி. முத்துலட்சுமி! 
4. திரைத்துறையில் ஒரு நல்முத்து! ராமகிருஷ்ணன் தேவர் முத்துராமன்
3. ஓராயிரம் முகங்களிடையே ஒரு முகம்! டி.ஆர்.ராஜகுமாரி