திங்கள்கிழமை 22 ஜூலை 2019

22. புத்தகச் சிந்தை!

By ஜே.எஸ். ராகவன்.| Published: 17th January 2019 10:00 AM

 

சமுத்திரத்தில் விழுந்த பெருங்காயக் கட்டியாகக் கரைந்து, கடல் ஆமை வேகத்தில், புத்தகக் கண்காட்சி வளாகத்தில் பஞ்சாமி நகர்ந்துகொண்டிருந்தார். கண்ணுக்குப் புலனாகாத கைத்தடியாக உடன் சிவசாமி.

‘அடேய், சிவசாமி, துப்பறியும் நாவலிலே காணாமப்போன கடைசி பக்கமா நான் தொலஞ்சுபோயிட்டா என்னடா செய்வே?’

‘அண்ணா, கண்குத்திப் பாம்பா கவனிச்சிண்டு, நங்கையர் மலர் இலவச இணைப்பா ஒட்டிண்டு வரேன். கவலைப்படாதீங்கோ.’

‘ஏண்டா, இந்த கும்பலிலே எப்படிடா ஸ்டாலுக்குள்ளே நொழஞ்சு பொஸ்தகத்தைப் பாத்து வாங்கறது? மாமாங்கம்., அர்த்த கும்பமேளாக்குக்கூட இவ்வளவு கும்பல் வராது போலிருக்கே.’

மோத வந்த ஒரு மீசையனிடமிருந்து பஞ்சாமியை சிவசாமி சட்டென்று திசை திருப்பிவிட்டபோது, ‘பஞ்சு அங்கிள், பஞ்சு அங்கிள்’ என்ற பஞ்சு மிட்டாய் இனிப்புக் குரல் கேட்டது.

யாரு? யாரு? என்று பஞ்சாமி சில கேள்விக் குறிகளுடன் திரும்பிப் பார்த்தார்.

‘அங்கிள், நான்தான் சுகு.’

‘சுகுவா? சுகுன்னா? ரகுன்னா தெரியும். ரகுநாதனோட சுருக்கம். வசுன்னா தெரியும் வாசுதேவனோட சுருக்கம். சுகுவும் தெரியும். ஆனா, அது சுகுமாரனைக் கூப்பிடற ஆம்பளைப் பெயர்னா? அநேகமா, ஓ! ஒரு சேச்சனோடதா இருக்கும்!’

சிவசாமி விளக்கம் கொடுக்க முன் வந்தான். ‘அண்ணா, சுகு! அதாவது, சுகந்தப் ப்ரியாவின் கையடக்கப் பிரதின்னு வெச்சுக்கோங்களேன். விஸ்காம் படிச்சவ. வயலின் வாசிப்பா. நம்ம அடையாறு ஆனந்த பவனோட.. சாரி, உளறிட்டேன். ஆனந்த குமாரசாமியோட பொண்ணு. கல்யாணம் ஆயிடுத்து. மாப்பிள்ளை அனந்து. லைப்ரரியன் லட்சுமணனோட பையன். ஏதோ விதேசி கம்பெனியிலே இருக்கார். அடிக்கடி நம்ம மோடி மாதிரி சார்க் நாடுகளிலே சுத்துவார். பயோ டேட்டா சரிதானேம்மா?’

‘அங்கிள்? இவர்தான் ஃபேமஸ் சிவசாமியா? தியேட்டர் காம்ப்ளெக்ஸ் கோனிலிருந்து கொட்டின பாப்கார்னா என்னைப் பத்திய விவரங்களைப் பொல பொலன்னு கொட்டறாரே?’

சிவசாமி, ஒரு புன்னகைக் கீற்றை பதில் மரியாதையாகப் பூத்தான்.

‘அங்கிள், உங்களையும் சிவசாமி சாரையும் பாத்தது நல்லதாப் போச்சு. ஒரு சின்ன ப்ராப்ளம். அதை நீங்கதான் சரி பண்ணணும். உங்களுக்குத்தான் என்னோட மாமனாரைத் தெரியுமே?’

‘நம்ம லட்சுமணன்தானே? உ.வே. சாமிநாதய்யரோட விசுவாசி ஆச்சே. சின்ன வயசிலேருந்து தெரியுமே.’

‘நெஜமாவா? யாரை? தமிழ் தாத்தாவையா?’

‘விளையாடாதேம்மா. லட்சமணனைத் தெரியும்னு சொன்னேன். அது சரி, ஏதோ ப்ராப்ளம்னியே, என்ன ப்ராப்ளம்? உங்கிட்டே சொன்னாளாடா, சிவசாமி?’

‘இல்லேண்ணா, எனக்குத் தெரிஞ்சவரையிலே சின்ன ப்ராப்ளம்னு ஒரு அடைமொழியை சேத்துத்தான் மேடம் சொன்னாங்களே தவிர, வேற விவரம் தரலே, எப்ப தரப்போறாங்கன்னும் தெரியலே. ஆகையினாலே..’

சுகு கையை உயர்த்தி, சிவசாமியின் பேச்சின் வீச்சை நிறுத்தினாள்.

‘சிவசாமி, சார், என்னை சுகுன்னே கூப்பிடலாம். மேடம், மோடம் எல்லாம் வேணாம். ப்ராப்ளம் இதான்னு..’ சொல்லி விவரித்தாள். அதன் சாராம்சம் -

‘எவ்வளவுக்கு எவ்வளவு சுகுவுக்குப் புஸ்தகங்களைப் படிக்கிறது பிடிக்குமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மாமனார் லட்சுமணனுக்கு அதுங்கள பாதுகாக்க பிடிக்குமாம். ஆனா, சுகு படிக்கும்போது, பாதியில புஸ்தகத்தை அப்படியே ‘அதோமுக ஸ்வானாஸனா’ செய்யற யோகா போஸில் குப்புறப் படுக்கவைத்துவிட்டுப் போய்விடுவாளாம். பக்க ஓரங்களை அடிக்கடி சின்னதா நாய்க் காதா மடக்கிவிடறதும் உண்டு. புஸ்தகத்திலே அடையாளமா, சின்ன சீப்பு, ஹேர்பின், அப்பளத் துண்டு, டெட்ராபேக் ஸ்ட்ரான்னு கையில் அகப்பட்டதை வைப்பது வழக்கமாம். அலமாரியில புத்தகங்களை முதுகைக் காட்டாமல் திருப்பி நிற்க வைத்துவிடுவாளாம். பக்கத்தில் எந்தப் புத்தகத்தை நிக்க வைக்கிறதுங்கிற விதரணையும் கிடையாதாம். தமிழ்த் தாத்தாவின் நல்லுரைக் கோவைக்குப் பக்கத்தில், ஆல்பர்ட்டோ மொரோவியோவின் பலான புத்தகம் ஏதாவது ஒன்று இருக்குமாம். லைப்ரரியனான மாமனார் லட்சுமணனுக்கு கோவம் பொத்துண்டு வந்துடுமாம். இருந்தாலும் அதை அடக்கிண்டு, தானே சரி செய்வாராம்.’

அரக்கப் பரக்க ஓடிவந்த ஒருவர், பஞ்சாமியைப் பார்த்து, ‘ஐயா! இங்கே எங்கேய்யா வந்தீகன்னு?’ கேட்டுவிட்டு அசட்டுச் சிரிப்புடன் நின்றார்.

‘ம்? பரமபத சோபான பட ஷீட் வாங்கத்தான். இல்லையாடா, சிவசாமி?’

‘அதோட, விளம்பி வருஷ 28-ம் நெம்பர் பாம்பு பஞ்சாங்கமும் வாங்கணும்னு வந்தோம்’னு சிவசாமியும் வாங்கி வாசிச்சான்.

‘அப்போ டெய்லி ஷீட் காலண்டர் வாங்க வரலியா?’ என்று சுகுவும் கேட்டுச் சிரித்தாள்.

கேட்டவர், தலையைச் சொறிந்துகொண்டு கழண்டுகொண்டார்.

‘அவரை விடு. சுகு உன்னோட குறைகள்தான் உனக்கே தெரிஞ்சிருக்கே. நீயே உன்னை திருத்திக்க வேண்டியதுதானே? என்னடா சொல்றே சிவசாமி?’

‘அண்ணா, இதுக்கு ஆஞ்சநேயரை உவமானமா சொல்லலாம். ஆனா, அது சுகு விஷயத்திலே சரியா வராது. சுகு தனக்கு வெளியிலே நின்னுண்டு தன்னைத்தானே பார்த்துக்கறா. இது பெரிய விஷயம் அண்ணா.’

‘சிவசாமி, நீ யாரோ சொல்வியே தி.ஜ.ராவோ, லா.ச.ராவோ அவர் எழுதற மாதிரி..’

‘லா.ச.ராமாமிருதம் அண்ணா. அவரைப் படிக்க, புரிஞ்சிக்க, ரசிக்க, திருப்பதி காளி கோபுரப் படிகளா செங்குத்தா ஏறிப் போகணும்.’

‘நமக்கு அந்த தொட்டபெட்டா உசரமெல்லாம் வேண்டாம்டா. உனக்கே தெரியும். நான் அதிகமா விரும்பிப் படிக்கிறது பைண்டு பண்ணின பழைய அம்புலிமாமா புஸ்தகங்கள்தான். அதிகம் படுத்தாது. ஏதோ, வீரசிம்மன், சூரசிம்மன், விக்ரமசிம்மன்னு மூணு ராஜகுமாரங்க இருப்பாங்க. அதிலே மூத்தவன் மக்கு..’

‘அண்ணா! சுகுக்கு இதெல்லாம் போரடிக்கும். சுகு வெளிலே நின்னு தன்னையே பாத்துக்கறான்னு சொன்னேன். அதை SELF AUDIT-னுகூட சொல்லலாம். எப்போ அவளுக்கே தன்னோட ப்ராப்ளங்கள் எல்லாம் தெரிஞ்சுபோச்சோ, அப்போ திருத்திக்கிறது ரொம்ப சுளு, ஈசி அண்ணா.’

‘அங்கிள், அதோ என் ப்ரெண்டு இந்துரு வரா..’

‘என்னது? இந்துருவா? இந்துருன்னா? சந்துருன்னா தெரியும் சந்திரசேகரன். த்ருவுன்னா தெரியும் துருவன். இந்துருன்னா?’

‘அண்ணா, இந்துருங்கிறது இந்திராவோட சுருக்கம். சரியா சுகு?’

‘கரெக்ட் சார்! டைம் ஆறது. நான் இந்துருவோட போகணும். சிவசாமி சார் என்னோட ப்ராப்ளத்தை சால்வ் பண்ணனும்.’

‘பாக்கலாம்மா.’

‘பாக்கலாமா? கலாம் இங்கே எங்கே வந்தார்? பாக்கறேன்னு சொல்லுங்கோ. நீங்கதான் சால்வ் பண்ணணும்.’

*

ஒரு மாதம் கழித்து, ஓய்வுபெற்ற லைப்ரரியன் லட்சுமணன், பஞ்சாமி வீட்டுக்கு வந்தார்.

‘முன்னாடியே வந்திருக்கணும். ரொம்ப நாளா ட்யூ ஆயிடுத்து.’

‘லைப்ரரியனே ட்யூ வெச்சுக்கலாமா? இதோ ஃபைன் போடறேன். சிவசாமி காபி கொண்டாடா.’

‘இதோ வந்தாச்சு. அண்ணா.’

‘சிவசாமியோட காபி ஃபைன் இல்லே சார். ஃபைன், அதாவது சூப்பர்.’

‘லட்சுமணன்! உங்க சுகு, புஸ்தகங்கள் மேலே உங்களுக்கு இருக்கிற வாஞ்சையைப் பத்திச் சொல்லி, எப்படி அவளாலே அவ செய்யற தப்பை எல்லாம் நீக்க முடியலேன்னு சொன்னா. ஆனா, நீங்க எங்கிட்டே போன்லே, இப்போ சுகு ஒரே வாரத்திலே மாறிட்டான்னு சொன்னேள். எப்படின்னு கேட்டதுக்கு, நேர வந்து சொல்றேன்னு வந்திருக்கேள். துப்பறியும் நாவலிலே கடைசி பக்கத்தைப் புரட்டறதுக்கு ரெடியா இருக்கேன்.’

லட்சுமணன், சிவசாமி பக்கம் கையைக் காட்டினார். ‘எல்லாம் இவர் செஞ்ச வேலைதான். என்னோட பிள்ளை அனந்துவுக்கு ஒரு வழக்கம். என்னப் பொருத்தவரையில் கெட்ட வழக்கம். சில பேரு இதைச் செய்தாலும், எப்படி அதைத் திருத்தறதுன்னு தெரியாம இருந்தேன். ரொம்ப வருஷம் ஹாஸ்டல், அமெரிக்கான்னு என்னை விட்டு தள்ளி இருந்ததாலே, என்னாலே செக் பண்ண முடியிலே.’

‘அப்படி என்ன கெட்ட பழக்கம்?’

‘அது ஒண்ணுமில்லே ரெஸ்ட் ரூமுக்குப் போறச்சே, கையில் ஒரு புஸ்தகத்தைக் கட்டாயம் எடுத்துண்டு போவான். அங்கே உக்காந்து மேட்டரை முடிக்கும்போதுதான், அவனுக்குப் படிக்கிறது சுவாரஸ்யமாம். ‘அப்னாக்-ஷஸ்’ உங்கள் பிள்ளயை அந்த மாதிரி படிக்கிறதை நிறுத்தச் சொல்லுங்கோ. நானும் பதிலுக்கு, புஸ்தகங்களை ஜாக்கிரதையா ஹேண்டில் பண்றேன்னு சுகு சொன்னாள். இந்த டீல் ஓகேயா இருந்தது.’

‘அது சரி, உங்க பையனை எப்படி மாத்தினேள்?’

‘சிவசாமி குடுத்த ஐடியாலேதான். அனந்து படிக்கிற புஸ்தகத்துக்கு மேலே எல்லாம், அம்சமா, மாடர்னா இருக்கிற பிள்ளையார் ஸ்டிக்கர்களை அவரே வாங்கித் தந்து ஒட்டச் சொன்னார். ஒட்டினோம். ‘இனிமே பாருங்கோ’ன்னு சொன்னார். அனந்துக்கு அப்புறம் அங்கே எடுத்துண்டு போக மனசில்லே. மேட்டர் சால்வ் ஆயிடுத்து. கோவில் சுவத்து மேலே எல்லாம் சுவாமி படங்களை வரைஞ்சு, அது மேலே நம்பர் ஒன்னை ரிலீஸ் பண்ண முடியாம தடுக்கிற மாதிரிதான்.’

லட்சுமணன் கிளம்பினவுடன், சிவசாமியை பஞ்சாமி ஆச்சரியத்துடன் பார்த்தார். ‘அடேய், சிவசாமி இதை எல்லாம் எப்படி யோசிக்கிறே? எப்போ யோசிக்கிறே? எங்கே யோசிக்கிறேடா?’

சிவசாமி நெளிந்தான்.

‘அண்ணா, ரெஸ்ட் ரூமிலேதான். ராடின் செதுக்கின சிற்பப் போஸிலே மோவாயில் கையை வெச்சிண்டு உக்காந்து சிந்திச்சிண்டு இருக்கும்போதுதான்.’

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ஜே.எஸ். ராகவன் சிவசாமி பஞ்சாமி ஜீவ்ஸ் புத்தகக் காட்சி புத்தகம் jews sivasami panchami j.s. raghavan books book fair

More from the section

26. சுறுசுறுப்பானந்தா!
25. வெடுக்! வெடுக்!
24. பெங் ‘குளுரு’
23. குழம்பி-அகம்!
21. பெண்களோ! பெண்கள்!