வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

28. மார்டின் கப்டிலின் வாழ்க்கையில் நிகழ்ந்த கோர விபத்து என்ன? 

By ராம் முரளி.| Published: 30th November 2018 10:00 AM

 

குளிர் நிறைந்த கடற்காற்றின் வீச்சு எப்போதும் படர்ந்து வியாபித்திருக்கும் தீவு நிலமான ஆக்லாண்டில் 1986 செப்டம்பர் 30-ம் தேதியில் பிறந்தார் மார்ட்டின் கப்டில். இவரது முன்னோர்கள் பொருட்களை இடம் மாற்றம் செய்ய உதவி புரியும் போக்குவரத்து துறையில் பணி செய்துக் கொண்டிருந்தனர். கப்டிலின் தந்தை பீட்டர் உள்ளூரில் சிறந்த கிரிக்கெட்டர் என பெயரெடுத்தவர். எனினும், குடும்ப பொருளாதார சூழல்களினால் அவரால் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட இயலாமல் போனது. கிளப் கிரிக்கெட் அளவில் சிற்சில வருடங்களில், அவர் விளையாடிய போட்டிகளில் 12,000 குவித்து தனது கிரிக்கெட் திறனை அப்பகுதியில் வெளிப்படுத்தியிருக்கிறார். பின் காலங்களில், தந்தையின் இந்த இலக்கை வெற்றி கொள்ள வேண்டுமென்பது மார்ட்டின் கப்டிலின் பெரும் கனவுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.

மார்ட்டின் கப்டிலின் மூத்த சகோதரர் பென்னுக்கும் கிரிக்கெட் விளையாட்டின் மீது மிகுதியான விருப்பமிருந்தது. இருவரும் சமயம் வாய்க்கும் போதெல்லாம் ஒன்றாக விளையாட கிளம்பிவிடுவார்கள். இருவரும் ஒன்றாக இணைந்திருக்கும் தருணங்களில் எல்லாம் பெரும் தொந்திரவும், சிரமங்களும் அவர்களது பெற்றோருக்கு உண்டாகிவிடும். அந்தளவிற்கு துடுக்குத்தனங்கள் நிரம்பிய சிறுவர்களாக இருவரும் வளர்ந்து வந்தார்கள். இயல்பிலேயே கிரிக்கெட் விளையாட்டின் மீது பெரும் நேசிப்பு பீட்டருக்கு இருந்ததால், தனது பிள்ளைகளை எந்தவிதமான விளையாட்டுகளிலும் ஈடுபட உற்சாகப்படுத்தியபடியே இருந்தார். அதனால் மார்ட்டின் கப்டில் வளரும் பருவத்தில் கால் பந்தாட்டம், ரக்பி போன்ற பிற விளையாட்டுகளிலும் கெட்டிக்காரராக இருந்தார். எனினும், கிரிக்கெட் அவருடன் ஆழமான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டது.

‘நமது உலகத்தில், பிள்ளைகளுக்கு நாம் பாரபட்சமின்றி பல்வேறு விளையாட்டுகளை சிறுவயதில் அறிமுகம் செய்து வைப்போம். அது வெகு இயல்பானதுதானே அன்றி, அவர்கள் பிரபல விளையாட்டாளர்களாக உருவெடுக்கப் போகிறார்கள் என்றெல்லாம் நாம் எண்ணியிருக்க மாட்டோம். மார்ட்டின் கப்டிலும் பல்வேறு விளையாட்டுகளில் கைத் தேர்ந்தவனாக வளர்ந்தான். ஹாக்கி, கால்பந்தாட்டம், ரக்பி என எந்தவொரு விளையாட்டையும் அவன் மீதம் வைத்திருக்கவில்லை. 5 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறான். எப்போதும் அவனுடன் ஒன்றிரண்டு வயது மூத்தவர்கள் இணைந்து விளையாடுவது வழக்கம். அது அவனது திறனை வளர்த்தெடுக்க பெரிதும் உதவியிருக்கும் என்று இப்போது கருதுகிறேன்’ என்கிறார் கப்டிலின் தந்தை பீட்டர்.

தந்தை கிளப் கிரிக்கெட்டில் விளையாடும்போது மார்ட்டின் காப்டிலும், பென்னும் உடன் செல்வதும் வழக்கமாக இருந்திருக்கிறது. அதே போல, பள்ளி காலங்களில் அவருக்கு வாய்த்திருந்த பயிற்சியாளரான கிட் பெராராவும் கப்டிலின் இன்றைய நிலை உயர்வுக்கு துவக்க காலங்களில் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமானவர். கப்டில் பெராரா தலைமை கீழ் இணைவதற்கு முன்னதாகவே பெரிதளவில் கிரிக்கெட் விளையாட்டில் அனுபவமிக்கவராக இருந்திருக்கிறார் என்றாலும், அவரது ஆட்ட வெளிப்பாட்டுத் திறனில் நேர்த்தியையும், பக்குவத்தையும் கை கொள்வதற்கு பெராரா பெரிதளவில் உதவியிருக்கிறார். மிக எளிதில் சோர்ந்து விடாமல் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபாடு செலுத்தும் கப்டிலை வியந்து போற்றுகிறார் பெராரா.

‘அவனுக்குள் ஏதோவொன்று எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. நாம் எக்ஸ் பேக்டர் என்று குறிப்பிடுவது அல்லது அசாதாரணத் தன்மையிலான விளாசும் பண்பு. கப்டிலின் திறன்கள் நாளுக்கு நாள் வளர்ச்சியுற்றபடியே இருந்தது. அவனுக்கு துளியும் பயமோ அல்லது பின் வாங்கும் பண்போ இருக்கவில்லை. பேட்டிங் பயிற்சியில் மட்டுமல்ல, பீல்டிங் பயிற்சியிலும் மணிக்கணக்காக ஈடுபாடு செலுத்துவான். கிட்டதட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நான் பந்துகளை உயரத்தில் தூக்கி அடிக்க வேண்டும். அவன் அதனை கேட்ச் பிடித்துக் கொண்டிருப்பான். பல தருணங்களில் நான் முற்றிலுமாக சோர்வடைந்தாலும், அவன் என்னை எளிதில் விட்டுவிட மாட்டான். உங்கள் வலது கை உடைந்து விழுந்தாலும் அவனுக்கு கவலையில்லை. அவன் பந்துகளை கேட்ச் பிடிக்க வேண்டும்’ என்கிறார் பெராரா.

கிரிக்கெட்டின் மீதான தீவிரமான நேசிப்பும், திறனும் வளர்ந்து கொண்டே இருந்த நிலையில் ஒரு கோர சம்பவம் மாட்ர்டின் கப்டிலுக்கு ஏற்பட்டது. அது வரையிலான அவரது குடும்பத்தினரின் மகிழ்வை உருக்குலைத்து, ஒரு நெடுங்கால துயர நிகழ்வாக நிலைபெற்றிருக்கிறது அந்த சம்பவம். குறிப்பிட்ட காலத்திற்கு குடும்பத்துக்குள் ஒரு சூன்யத்தை பின்னிய அகோரம் அது. பொதுவாக, கிரிக்கெட் விளையாட்டு மற்றும் பள்ளி கல்வி தவிர்த்த நேரங்களில் மார்ட்டின் கப்டிலும், அவரது சகோதரர் பென்னும் தந்தைக்கு உதவிகரமாக சிலப்பல வேலைகள் செய்வது வழக்கம். சிறிய சிறிய டிரக்குகளை ஓட்டிச் சென்று பொருட்களை பல்வேறு இடங்களில் இறக்குமதி செய்யும் வேலை அது. சமயங்களில் இருவரும் நெடுந்தூரம் வரையிலும் கூடச் செல்வதுண்டு. சிறுவர்கள் இருவருமே அந்த பணியினை மிக விருப்பத்துடன் ஆர்வமாக செய்து வந்தார்கள்.

அப்போது மார்ட்டின் கப்டிலுக்கு வயது 13. அதற்குள்ளாக குடும்ப பொறுப்புகளை உணர்ந்தவராகவும், கிரிக்கெட் விளையாட்டில் மிகுதியான திறன் மிக்கவராகவும் பரிணமித்துக் கொண்டிருந்த சூழலில், ஒரு நாள் பென் வழக்கமாக தாங்கள் கையாளுகின்ற டிரக் ஒன்றை ஓட்டிக் கொண்டிருந்தார். முழு கவனத்துடன் டிரக்கை இயக்கிக் கொண்டிருந்த பென், எதிர்புறத்தில் அதனை கவனிக்காமல் வேகமாக வந்த கப்டிலை பார்த்திருக்கவில்லை. டிரக்கின் வேகம் உடனடியாக கட்டுப்படுத்தவியலாததாக இருந்தது. அதனால், விரைந்து வந்த பென்னின் டிரக் கப்டிலின் மீது மோதிவிட்டது. ஒரு நொடிப் பொழுதில் அந்த விபத்து நிகழ்ந்தேறிவிட்டது. என்ன நிகழ்கிறதென்று புரிந்து கொள்ள சிறிது அவகாசம் கூட இல்லை. மார்ட்டின் கப்டில் தூக்கி எறியப்பட்டார். அவரது உடலில் பலமாக காயம் உண்டாகியது. டிரக்கை நிறுத்தி விட்டு, தரையில் விழுந்து கிடந்த மார்ட்டின் கப்டிலை பதற்றத்துடன் நெருங்கி ஓடினார் பென். வலியில் துடித்துக் கொண்டிருந்த கப்டிலின் கால் விரல்களில் இருந்து ரத்தம் பீய்த்துக் கொண்டு தரை முழுக்க விரவியிருந்தது. அரற்றிக் கொண்டிருந்த கப்டிலை அருகில் இருந்தவர்கள் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் மற்றொரு துரதிர்ஷ்டவசமான செய்தி என்னவென்றால், அன்றிலிருந்து ஒருவார காலத்தில் நடைபெறவிருந்த பள்ளி அளவிலான மிக முக்கியமான கிரிக்கெட் தொடர் ஒன்றில் கப்டில் பங்கேற்பதாக இருந்தது. அந்த தொடர் கப்டிலின் வருங்கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு நல்லதொரு துவக்கத்தை அமைத்துக் கொடுக்கும் என பீட்டர் கருதியிருந்தார். ஆனால், நிகழ்ந்தேறிய சிறு விபத்து அவரது கனவை சிதைத்து, அவரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களை நிலைகுலையச் செய்துவிட்டது. பென் அன்றிலிருந்து பல வருடங்களுக்கு அந்த விபத்து ஏற்பட்டதற்கு தானே முழு காரணம் என உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார். இன்றளவும் அந்த குற்ற உணர்ச்சி அவரிடமிருந்து விலகியிருக்கவில்லை. மார்ட்டின் கப்டிலை விடவும் இந்த துயர சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது பென்தான் என அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கப்டிலுக்கு அளிக்கப்பட்டது என்றாலும், அவரது இடது கால் விரல்களில் உண்டாகியிருந்த சிதைவை அவர்களால் சரி செய்ய முடியவில்லை. ஒட்டுமொத்தமாக மூன்று விரல்கள் நொருங்கி சிதைந்துப் போயிருந்தது. பலமணி நேர ஆலோசனைக்கு பின்னர், மூன்று விரல்களையும் காலில் இருந்து அகற்றுவது என்று மருத்துவர்கள் முடிவெடுத்தார்கள். பென் உட்பட முழு குடும்பமும் கலங்கித்தான் போயிருந்தது.

‘இப்போதும் அந்த சம்பவத்தை நினைத்தாலும் உள்ளுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வு உண்டாகிறது. எங்களால் என்றென்றென்றும் மறக்க முடியாத கறுப்பு தினம் அது. பதிமூன்றே வயதான எங்களது மகன் மார்ட்டின் கப்டிலின் இடது காலில் மூன்று விரல்கள் நொருங்கிவிட்டன. முதலில், அந்த விரல்களை மீண்டும் இயங்கச் செய்ய மருத்துவர்கள் தங்களால் இயன்றவரையில் முயற்சித்துப் பார்த்தார்கள். எனினும், இரண்டு மூன்று வாரங்களை கடந்த பிறகும், விரல்கள் அசைய மறுத்துவிட்டன. அதனால், அவைகளை நீக்குவது என்று மருத்துவர்கள் முடிவு எடுத்தனர். நாங்கள் மருத்துவமனையிலேயே கதறிவிட்டோம். எங்களால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், மார்ட்டின் கப்டில் அந்த அசாத்திய சூழலிலும் சிறிதும் கண்ணீர் சிந்தாமல், உறுதியுடன் இருந்தான். ஒரு பாறையைப் போல உறுதிமிக்க மனிதனாக அன்று அவன் எங்களுக்கு தோன்றினான்’ என்று அன்றைய தினத்தை நினைவுகூருகிறார் பீட்டர்.

பீட்டர் அன்றைய தினங்களில் கிரிக்கெட் வட்டாரத்தில் பல தொடர்புகள் இருந்ததால், மார்ட்டின் கப்டிலை உத்வேகமூட்ட ஒரு ஏற்பாட்டை செய்தார்.  நியூசிலாந்து அணியின் மேனேஜரின் மூலமாக, அன்றைய நியூசிலாந்து அணியின் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங்கை மருத்துவமனைக்கு வரவழைத்தார். ஸ்டீபன் பிளெமிங் தன்னம்பிக்கை பெருகும் வார்த்தைகளை சொல்லி கப்டிலை உற்சாகமூட்டினார். பின்காலங்களில், தான் செய்திருக்கும் சாதனைகளை முறியடிக்கூடிய சிறுவன் இவன் என்பதை அக்கணத்தில் பிளெமிங் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. எனினும், அன்றைய தினத்தில் பிளெமிங் தன்னை சந்திக்க வந்தது குறித்து கப்டிலுக்கு மிகுதியான உற்சாகம் உண்டாகியது.

இந்த கோர நிகழ்வின் பின்பாக, கப்டில் குறித்து அவர்களது குடும்பம் பெரிதும் கவலையில் ஆழ்ந்திருந்தது. ஆனால், எதுவொன்றும் கப்டிலை அசைக்கவில்லை. அவர் சரியாக இரண்டே மாதங்களில் மீண்டுவிட்டார். மீண்டும் கிரிக்கெட் விளையாட துவங்கினார். எல்லோருக்கும் வியப்பும், ஆச்சர்யமும் உண்டாக, பள்ளி கல்வியையும் துறந்து விட்டு, ஓட்டுனருக்கான பயிற்சியை மேற்கொண்டார். அதன் மூலமாக, தனக்கென தனித்ததொரு பணியினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பது அவரது எண்ணம். பயிற்சியை முடித்துவிட்டு ஓட்டுனர் உரிமத்தையும் பெற்றுவிட்டார். ஆனால் அவருக்கு காலம் வேறொரு களத்தை உருவாக்கிக் கொடுக்க காத்திருந்தது. சாலைகளில் வாகனங்களை ஓட்டிக் கொண்டிருப்பது எனும் எண்ணத்தை கொண்டிருந்த மார்ட்டின் கப்டில் இன்றைய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தன்னிகரற்ற விளையாட்டாளராக உருவாகியிருக்கிறார் என்றால் அதற்கு அவரது அசாத்தியமான துணிச்சலும், உள்வெறியும்தான் காரணமாக இருக்க முடியும்.

அவரது தந்தைச் சொல்வதைப் போல, ‘தனது அதீத தன்னம்பிக்கையின் மூலமாக கப்டில் எல்லோரையும் வியப்புக்குள்ளாகி இருக்கிறார். துவக்க காலங்களில், பெரும் வலியுடன் போராட வேண்டியிருந்தது என்றாலும், சிறிது சிறிதாக கப்டில் மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார்.

மீண்டும் கிரிக்கெட் விளையாட போவதாக அவர் தெரிவித்தபோது, எல்லோருக்கும் பெரியளவில் ஆச்சர்யம் உண்டாகியிருக்கிறது. ஆனால், கப்டில் தான் சொன்னபடி கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். அதன்பிறகு, அவர் ஒருபோதும் அந்த விளையாட்டை கைவிடவில்லை. கப்டில் கிரிக்கெட்டின் கரங்களை ஆழப் பற்றிக் கொண்டார். கிரிக்கெட் அவரது வாழ்க்கையாகிப்போனது’.

(சிக்ஸர் பறக்கும்)  

Tags : Cricket martin guptill New Zealand மார்டின் கப்டில் கிரிக்கெட்

More from the section

38. நான் நிகழ்காலத்தில் வாழ்ந்திட ஆசைப்படுகிறேன்! தோனியின் வெற்றியின் ரகசியம்!
37. கேப்டன் தோனிதான் எனது நாயகன்! இப்படிச் சொன்ன முன்னாள் இந்திய கேப்டன் யார்?
36. ஒரு கிரிக்கெட் வீரருக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு திறமைகள்!
35. கிரிக்கெட் உலகின் இரண்டு நண்பர்களின் சுவாரஸ்யமான கதை இது!
34. தோனி தலைமையின் கீழ் விளையாடிய அனுபவம்தான் ஒரு கேப்டனாக எனக்கு கை கொடுத்தது! இப்படி சொன்னவர் யார்?